இலங்கை அரசுடன், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை விடுதலைப்புலிகள் சம்மதம்
இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகள் சம்மதம் தெரிவித்து உள்ளனர். நார்வே நாட்டின் சமரச முயற்சியின் பேரில், கடந்த 2002-ம் ஆண்டில், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்றுவந்த அமைதி பேச்சுவார்த்தையில் கடந்த 2003-ம் ஆண்டில் தடை ஏற்பட்டது.
பின்னர், மீண்டும் பிப்ரவரி மாதம் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், கடந்த ஜுலை மாதம் போர் மூண்டதை தொடர்ந்து அமைதி பேச்சில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மோதலில் இருதரப்பிலும் 1000-க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.
மீண்டும் பேச்சு
இந்த நிலையில், நார்வே நாட்டின் முயற்சியினால் மீண்டும் சமரச பேச்சை தொடங்க இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, நார்வேயின் சிறப்பு தூதர் ஜான் ஹன்சன்-பாயர் விடுதலைப்புலிகளின் தலைமையகமான கிளிநொச்சிக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
அங்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை அவர் சந்தித்து பேசினார். முன்னதாக நார்வே தூதர் பாயர், நேற்று முன்தினம் இலங்கையில் அரசு அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து பேச்சு நடத்தினார்.
விடுதலைப்புலிகள் சம்மதம்
இதற்கிடையில், விடுதலைப்புலிகளுடன் மீண்டும் சமரச பேச்சு தொடங்குவதற்கான தேதியை இலங்கை அரசு நேற்று அறிவித்தது. வருகிற 30 அல்லது, நவம்பர் 10-ந் தேதி விடுதலைப்புலிகளுடன் பேச தயாராக இருப்பதாக, இலங்கை மந்திரி ரம்புக்வெல்லா கூறினார்.
விடுதலைப்புலிகளும் இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்து உள்ளனர். தமிழ்ச்செல்வனுடன் நார்வே தூதர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எச்சரிக்கை
அதே நேரத்தில், ராணுவ தாக்குதல் தொடருமானால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வோம் என்றும் அவர் எச்சரித்தார். நார்வே தூதருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தமிழ்ச்செல்வன் இதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் தயா மாஸ்டர் கூறினார்.
சமீபத்தில் நடந்த மோதலில் திரிகோணமலை கடற்படை தளத்தின் அருகில் உள்ள முக்கிய கேந்திரமான சம்பூரை விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக, விடுதலைப்புலிகள் பெரிய அளவில் தாக்குதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவகாசம்?
ஆனால், அதற்கு மாறாக பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் சம்மதம் தெரிவித்து இருப்பது அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. சமீபத்தில் இலங்கை விமானப்படையின் சரமாரி குண்டுவீச்சு உள்பட முப்படைகளின் தீவிர தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த சரிவில் இருந்து மீள்வதற்கு சற்று அவகாசம் எடுத்துக்கொள்ளவே, அவர்கள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பேச்சுவார்த்தையின்போது தங்களை பலப்படுத்திக்கொண்டு மீண்டும் புதிய வேகத்துடன் தாக்குதலை தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
பேச்சு நடந்தபோதே குண்டு வீச்சு
நேற்று கிளிநொச்சியில் விடுதலைப்புலி தலைவர்களுடன் நார்வே தூதர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தபோதே, அங்கிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூநகரியில் 3 இடங்களில் உள்ள விடுதலைப்புலிகளின் பீரங்கி படைப்பிரிவுகளின் மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஆனால், விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் இந்த குண்டு வீச்சு நடந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமரச பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த விடுதலைப்புலிகள், ராணுவம் தாக்கினால் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோம் என்று அறிவித்தனர்.