வெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 31 Second

என்னதான் கல்வி அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி என்று உலகம் இயங்கி கொண்டிருந்தாலும், பாலின வேறுபாடுகள் குறைந்தபாடில்லை. அதிலும் ஒரு சில மத, சமய, சாதிய கட்டுப்பாடுகளில் முதல் பலிகடாவாகப் பெண்கள் இருப்பது அபத்தம். இதிலிருந்து சிலர் எரிமலைகளாக வெடித்து, அந்த இடங்களைப் பண்படுத்துகின்றனர். “நான் வீட்டினுள் இருந்திருந்தால் அப்படியே இருந்திருப்பேன். வெளியே வந்த பின் பல விஷயங்கள், அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொண்டேன். தைரியம் என்பதை உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்து இந்த உலகம் எப்படி இருக்கிறதென்று பாருங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஜிம் டிரைனர் நூர்ஜஹான் பேகம்.

“திருமணமாகி இரண்டு பசங்க இருக்காங்க. கணவர் பிரிண்டிங் பிரசில் வேலை பார்க்கிறார். ஆரம்பத்தில் எல்லோரும் போல் ஹவுஸ் ஒய்ப்பாக தான் இருந்தேன். இப்படியே இருந்தால் ஏதும் செய்ய முடியாது என்று, அண்ணன் ஜிம் துறையில் இருப்பதால் அவரிடம் சில ஆலோசனைகள் கேட்டேன். அப்போதுதான், ‘இந்த துறையில் பெண்களின் பங்கு குறைவாக இருக்கிறது, ஆனால் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கான பயிற்சி எடுத்தால், சம்பாதிப்பதோடு, ஏதோ மற்றவர்களுக்கு ஒரு விஷயம் கற்றுக் கொடுக்கிறோம் என்கிற மனநிம்மதி’ இருக்கும் என்றார். அதன்படி நானும் பயிற்சி எடுத்து, அண்ணனுடைய ஜிம்மிலே இரண்டாண்டுகள் வேலை பார்த்தேன்.

இதனையடுத்து தற்போது, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஜிம்மில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பயிற்சி கொடுத்து வருகிறேன். இங்கு ஜிம்மில் பயிற்சி கொடுப்பதை தவிர வெளியேயும் சிலருக்குக் கொடுத்து வருகிறேன்” என்று கூறும் நூர், ‘‘இந்த துறைக்கு வருவதற்கு எனது கணவரின் ஆதரவும் முக்கியம்” என்கிறார். “என்னுடைய பெரியம்மா பையனைத்தான் திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் இது போன்ற வேலைக்கு போறேன் என்று சொன்னதும், ‘பெண்கள் உள்ள ஜிம்மிற்கு மட்டும் போ’ என்றார். ஆனால், இது ஒருவரின் பிரச்னைக்கு மருத்துவம் பார்ப்பது போலத்தான் என்பதை நான் அவருக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்தேன். அவரும் அதைப் புரிந்து கொண்டார். தற்போது வரை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கான புரிதல் இங்கு முக்கியமாக இருந்தது.

குறிப்பாக எங்கள் சமூகத்திலிருந்து வெளியே வந்து இவ்வாறு இருப்பது கொஞ்சம் சவாலும், கேள்விக்குறியும் தான். காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு வரை போகும். வீட்டில் குழந்தைகளையும், என்னையும் பார்த்துக் கொள்ளும் அம்மா, அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர், நண்பர்கள் என எல்லோரும் ஆதரவாக இருக்கிறார்கள்” என்றார். “முறையாக ஜிம்மிலோ, அல்லது ஒரு பயிற்சியாளரையோ வைத்து கற்றுக் கொண்டு அதைப் பின்பற்றுவதுதான் சரி” என்று கூறும் நூர்ஜகான், ‘‘யூ டியூபிலோ அல்லது மற்றவர்கள் சொல்வதையோ கேட்டுச் செய்யும் போது கவனம் தேவை” என்கிறார்.

“ஒரு சிலர் யூ டியூபினை பார்த்துச் செய்கின்றனர். இது சரி தவறு என்று வாதிட முடியாது. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தேவைகள் இருக்கும். அதே போல் எந்த தசை வேலை செய்கிறது செய்யவில்லை என்பது தெரியாது. ஆனால், ஒரு பயிற்சியாளரிடம் கேட்டு அதை அணுகும் போது எளிமையாவதோடு, காயங்கள், தசைப் பிடிப்புகளிலிருந்தும் தப்பலாம். ஒவ்வொரு தசைக்கும் தனிப்பட்ட உடற்பயற்சி உள்ளது. அது ஆண், பெண் இருவருக்கும் வேறுபடும்.

ஜிம்மிற்கு போனால் உடல் நெகிழ்வுத் தன்மை குறையுமா என்று கேட்கிறார்கள். அதெல்லாம் கிடையாது. உங்கள் உடல் ஃபிட்டாக இருக்கும். செயற்கை முறையில் ஊசி, மாத்திரை போட்டுச் செய்யும் போது அதற்கான பின் விளைவுகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஜிம்மில் ஒர்க்கவுட் பண்ணுவதோடு, எடுத்துக் கொள்ளும் உணவும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு ஜிம் விட்ட பின் உடல் எடை கூடுகிறது. ஜிம்மிற்கு வரும் போது ரெகுலராக ஃபாலோஃப் பண்ணுவாங்க. அதை விடும் போது எடை அதிகரிக்கத் தான் செய்யும்” என்று கூறும் நூர்ஜஹான், பெண்கள் தங்கள் உடலினை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்வதற்கான வழிகளைச் சொல்கிறார்.

“சில பெண்களுக்கு உடல் எடை பிரச்சினையினால் கருத்தரிக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. அவர்களுக்குப் பயிற்சி கொடுத்ததில் சிலருக்கு கருத் தரிக்கும் வாய்ப்பு அமைந்ததைக் கண்டு மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்திருக்கிறேன். இன்றிருக்கும் வேலை சூழலில் பல பெண்கள் எந்த ஒரு உடலுழைப்பும் செய்யாமல் இருக்கின்றனர். அவர்கள் கட்டாயம் ஜிம்மிற்கு போனால் உடல் ஆரோக்கியமாக மட்டும் இல்லாமல், என்றும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அவ்வாறு ஜிம்மிற்கு செல்ல நேரம் இல்லாத போது, முறையாக கற்று வீட்டிலேயே செய்யலாம். யோகா, ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சி சார்ந்தவற்றை வீட்டிலேயே கற்றுக்கொண்டு செய்யலாம்.

நாம் வேலைகளோடு, உட்கொள்ளும் உணவு எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. அதனால் ஏதாவது உடல் உழைப்பில் நம்மை ஈடுபடுத்தியே ஆக வேண்டுமென்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். குறைந்தபட்சம் வீட்டிலிருக்கும் நம் வேலைகளைக் கூட மற்றவர்களைச் சாராமல் நாமே செய்தால் கூட போதும். பெண்கள் மற்றவர்களை நாடியிருக்காமல், தனியாக நிற்க வேண்டுமென்றால் கண்டிப்பா வெளியே வந்தால் மட்டும்தான் முடியும். வீட்டிலிருப்பது ஒரு பயனும் இல்லை. வெளியே வந்த பின்தான் தைரியம், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்பதையெல்லாம் உணர்ந்திருக்கிறேன்” என்கிறார் நூர்ஜஹான் பேகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை பலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள் ! (வீடியோ)
Next post சர்க்கரை நோயும் நரம்புகளும்…!! (மருத்துவம்)