தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய தாய்!! (மகளிர் பக்கம்)
கேரளாவில் பசியால் தவித்த குடும்பம் ஒன்று தனது பசியை போக்க மண்ணை தின்று உயிர்பிழைத்த சம்பவம் நடந்தது. இதே போன்ற மற்றொரு சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது. கடன் கொடுமையால் கணவர் இறந்ததால் பசியை போக்க வழியின்றி தவித்த அந்த இளம்பெண் நீண்டநாட்களாக வளர்த்து வந்த தனது தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கியுள்ளார். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சையை மாற்றிய மேட்டூர் அணை உள்ள சேலம் மாவட்டத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சேலம் வீமனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு தர்மலிங்கம், காளியப்பன் மற்றும் குணசேகரன் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, தனது நண்பருடன் சேர்ந்து செங்கல் சூளை ஒன்றை தொடங்கிய செல்வம், இதற்காக பல லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால், கடன் தொல்லை தாங்காத செல்வம், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். கணவனை இழந்த சோகம், கடன் தொல்லை என்று சிக்கித் தவித்த அவரது மனைவி பிரேமா, தனது மூன்று குழந்தைகளுடன் செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். கணவருக்கு கடன் கொடுத்தவர்கள் தினமும் பணம் கேட்டு பிரேமாவை தொல்லை கொடுத்து வந்தநிலையில், குழந்தைகளின் பசியை கூட போக்க முடியாத சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார்.
இந்தநிலையில் மூன்று குழந்தைகளும் தினம் தினம் பசியால் துடிப்பதை தாங்கிக்கொள்ள முடியாத பிரேமா, தெருவில் தலைமுடியை வாங்கும் நபர் வந்தபோது அவரிடம் தன் தலைமுடியை மொட்டை அடித்து 150 ரூபாய்க்கு விற்று, அதன் மூலமாக குழந்தைகளின் அன்றைய நாள் பசியைப் போக்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முதல் அனைவரும் விழித்துக்கொண்டு ஆதரவு கரம் நீ்ட்டினர். குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொள்ள விஷத்தையும் வாங்கியுள்ளார். பிரேமாவின் வறுமை குறித்து அறிந்த செங்கல் சூளை உரிமையாளர் பிரபு மற்றும் அவரது நண்பர்கள், இந்த சோகத்தை சமூக வலை தளங்களில் பரப்பி உதவி கோரியுள்ளனர்.
இதனையடுத்து, அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை உதவி கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட நிர்வாகம், அவருக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்க வழிவகை செய்துள்ளது. மேலும் புதியதாக குடும்ப அட்டையும் வழங்கி மாதந்தோறும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. கணவன் இறந்தால் அரசு வழங்கும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், தற்காலிகமாக அரசு வேலை வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தேசிய பெண்கள் ஆணையம் தமிழக சமூகநலத்துறை மற்றும் ஊட்டச்சத்து துறை செயலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்கு நிகழ்ந்த கொடூரம் தமிழகத்தை அதிர செய்துள்ளது.
Average Rating