பதக்கம் மட்டுமே ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்காது!! (மகளிர் பக்கம்)
உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 2-வது தமிழர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த அர்ச்சனா கடந்த மாதம் லக்னோவில் நடந்த தேசிய தடகள போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 23.39 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். முதல் ஓப்பனிங் அத்லெடிக்ஸில் மூன்று பதக்கம் வென்ற தடகள வீராங்கனை இவரே ஆவார்.
‘‘இங்கே உள்ள ஒவ்வொருவருக்கும், போட்டியில் தங்கம் வெல்லும் போது பெரிய உலக சாதனை படைத்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். அது ஒரு புதிய முன்னேற்றம் தான். அதே சமயம் சாதனையும் உடன் நிகழ்த்த வேண்டும். என்னுடைய வெறியும் இலக்கும் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் என்னுடைய அந்த இலக்கை அடைய இங்கு யாரும் நம்மை உற்சாகப்படுத்துவதில்லை’’ என்ற அர்ச்சனாவின் வார்த்தைகளில் மனக்குறைவும், ஆதங்கமும் வெளிப்படுவதை அவரைப் பார்க்கையில் உணர முடிந்தது. சென்னையில் சமீபத்தில் நடந்த ஓப்பன் அத்லெடிக்கில் மூன்று பதக்கங்கள் வென்ற தமிழ்ப் பெண். தடைகளைத் தகர்த்து தன் சாதனையை சரித்திரம் படைக்க வேண்டும் என்ற தீராத ஆசையும் வெறியும் இவருக்குள் பூகம்ப குழம்பு போல் கொழுந்து எரிந்து கொண்டு இருந்தது.
சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய ஓப்பன் அத்லெடிக்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றில் 11.86 விநாடியில் இலக்கை அடைந்தார். அரை இறுதியில் 11.89 ஃபைனலில் இன்னும் சிறப்பாக 11.78. அந்த மூன்று சுற்றுகளில் அர்ச்சனாவின் அதிகபட்ச நேரம் 11.89- என்பதால் அவர் தங்கப்பதக்கத்தை தன்னுடன் தக்க வைத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து நடைப்பெற்ற 200 மீட்டர் மற்றும் அரை இறுதிப் போட்டியிலும் தன் லட்சியங்களை நோக்கிப் பயணித்தது, அவருடைய பாதங்கள்!
‘‘என் அப்பாவின் லட்சிய கனவே எங்களில் ஒருவர் தடகள சாம்பியனாக உருவாக வேண்டும் என்பதுதான். அவரின் கனவை நான் நினைவாக்கி இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே நான் பள்ளியில் ஓட்டப் போட்டியில் பங்கு பெற ஆரம்பிச்சேன். அதில் பல பரிசுகளையும் பெற்றேன். அப்பாவும் அவரின் பங்குக்கு தடகள போட்டி மேல் எனக்கு இருந்த ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தினார். என்னுடன் கைகோர்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். என்னுடைய முதல் பயிற்சியாளர் அவர்தான்னு சொல்லணும். அதன் பிறகு தடகளப் பயிற்சிக்காக திருநெல்வேலி, ஈரோடு என இடங்களில் மாவட்ட அளவில் நடைப்பெற்ற போட்டிகளில் பங்கு பெற ஆரம்பித்தேன்.
அந்த பயணங்கள் என்னை தாய்லாந்தில் நடைப்பெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் 4×100 தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றேன். அதன் பின் SAF தொடரில், 100, 200 இரண்டிலுமே தங்கம் வென்றேன். அப்போது எனக்கு 19 வயசு தான்’’ என்றார். அர்ச்சனாவின் வெற்றிக்கு முக்கியமானவர் அவரது பயிற்சியாளர் ரியாஸ். ராயல் அத்லெடிக்ஸ் கிளப்பை நடத்தி வரும் அவர், அர்ச்சனாவின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். ‘‘என் தந்தையைப் போலவே என்னை ஒரு சாம்பியனாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டவர் என் பயிற்சியாளர். அவரின் ஊக்கம் மற்றும் உற்சாகம் தான் அத்லெடிக்ஸில் உயரம் தொட முடிந்தது’’ என்று கூறும் அர்ச்சனா
தற்போது கஸ்டம்ஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர். எப்பவும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அப்பா ரொம்ப கண்டிஷன் போடுவார். யாரையும் இன்ஸ்பிரேஷனா வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி ரோல்மாடல்னு யாராவது இருந்தால் அது வேண்டாம் என்பார். உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கணும். அப்பதான் நீ மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருக்க முடியும். எனக்கு ரோல் மாடல், இன்ஸ்பிரேஷன் யாருமே கிடையாது” என்று அவர் சொல்லும்போதே அவர் தந்தையின் கனவினை நிஜத்தில் கொண்டு வந்த அவரின் வைராக்கியத்தை உணரமுடிந்தது.
‘‘ஒரு தடகள வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் ஜெயித்துவிட்டால் போதும்ன்னு நினைக்கிறாங்க. மேலும் நம்மையும் அதைத் தாண்டி யோசிக்கவும் விடுவதில்லை. ஒருவர் செய்த சாதனையை முறியடி, நீ புதிய சாதனையை உருவாக்குன்னு யாரும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் தான் தங்கப் பதக்கங்களை தாண்டி யோசிக்க ஆரம்பிப்போம். சாதனையை தேடிப் பயணிப்போம். ஏன்? எங்களால் ரெக்கார்ட் பிரேக் செய்ய முடியாதா? மற்றவர்களை விட இன்னும் பெட்டரா செய்ய முடியும் என்று உற்சாகப்படுத்தணும். உதாரணமாக, ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவின் அரை இறுதியின்போது இருந்த எதிர்பார்ப்பு, கொஞ்சம் குறைவாகவே இருந்தது. காரணம், அரை இறுதி வெற்றிப் பதக்கத்தை உறுதி செய்துவிட்டது.
நமக்குத் தேவை ஒரு பதக்கம். அது உறுதியானதும் நிம்மதியாகிவிட்டோம். தங்கத்தை எதிர்பார்த்தோம் தான். ஆனால், அரை இறுதியோடு திருப்தியாகிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு பொண்ணு, இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம்’ என நாம் திருப்திப்படும்போது அந்த எண்ணம் அவளது அடுத்த வெற்றிக்கு தடையாக அமைய வாய்ப்புள்ளது. அவளால் இவ்வளவுதான் முடியும் என வகுக்க வேண்டாம். அவள் வேகத்தைத் தாண்டி போகிறவள். அவள் எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அதுவரை போகட்டும். குதிரையின் வேகத்தை விட அவள் உயரே எழுவாள்’’ என்றார்.
Average Rating