வாழ்க்கையில் சினிமாவுக்கும் பங்குள்ளது!! (மகளிர் பக்கம்)
ரியலிச சினிமா புதிதாக உருவான மொழியோ தத்துவமோ இல்லை. 1940களில் தொடங்கி இத்தாலிய நியோ-ரியலிச சினிமாக்களும், 80கள் தொடங்கி ஈரானிய சினிமாக்களும் உருவாக்கிய ஒரு பாணிதான். ஆனால், அது இன்று சற்றே மாற்றமடைந்து மிகுந்த நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகிறது. கதை நடக்கும் இடம், கதாபாத்திரங்கள் அவர்களின் மனச்சிக்கல்கள், முரண்கள் இவை இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் அருகில் அமைந்திருக்கும்.
ரசிகனின் மனதில் அந்த கதை உண்மைதான் என்பது போன்ற ஒரு நம்பிக்கையை விதைக்கும். அதன் மூலமாக படத்தின் உணர்வுகளை சுலபமாக கடத்தி விட முடியும். சிந்தனை தளத்திலும் அரசியல் தளத்திலும் இயல்பான மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வரும் போக்கும் கூட தற்கால சினிமாவை இவ்வாறு தகவமைத்துக்கொள்ள காரணமாக இருந்துள்ளது. அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் சில திரைப்படங்கள் இந்த வரிசையில் இடம்பெற்று கொண்டிருக்கிறது. அதில் தனி முத்திரை பதித்திருக்கிறது இயக்குநர் ஹலிதா ஷமிமின் ‘சில்லுக் கருப்பட்டி’. ஒரு படத்துக்குள் நான்கு கதைகளைச் சொல்லி, அந்த நான்கிலும் இழையோடும் மையப்புள்ளி அன்புதான் என தனது சில்லுக் கருப்பட்டி படத்தின் மூலம் உணர வைத்துள்ளார் ஹலிதா.
மூன்று சிறுவர்களை மையமாக வைத்து வெளியான இவரது முதல் படமான ‘பூவரசம் பீப்பி’ அனைவரது மத்தியிலும் பெறும் வரவேற்பை பெற்றது. இவ்விரு படங்களின் அனுபவம், வெளியாகவிருக்கும் படங்கள், தன் வாழ்வின் பக்கங்கள் போன்றவைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். ‘‘எழுத்து என்று ஒன்று தெரிந்த உடனே கதை எழுதுவது, கவிதை எழுதுவதுமாக இருந்தேன். அப்படி கவிதை என்று சொல்லி நான் எழுதியதை எட்டாம் வகுப்பு படிக்கும் போது அப்பா அதை தொகுத்தார். சிறு வயதிலிருந்தே திரைப்படம் சம்மந்தமாக இயங்கி கொண்டிருந்ததால், 12ம் வகுப்பு முடிச்சதுமே பி.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படிச்சேன். படிப்பு முடித்த உடனே, திரைத்துறையில் அப்போது தெரிந்த ஒரே நபராக இருந்த கார்த்திக் ராஜா சார் மூலமாக, ‘நெறஞ்ச மனசு’ என்ற படத்திற்காக சமுத்திரகனி சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.
அதன் பின் புஸ்கர் காயத்திரி, மிஸ்கின் சார் என்று ஏழாண்டுகளுக்கு மேலாக உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். ‘ஓரம் போ’ படத்துக்காக மூன்று ஆண்டு காலம் வேலை பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. தயாரிப்பு சம்மந்தமாகவும், இண்டிபெண்டண்டா எப்படி படம் பண்ணலாம் என்பதெல்லாம் அதை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இவ்வாறு திரைப்படத் துறையிலும், அதைத்தாண்டி சந்தித்த நபர்கள், பார்த்த இடங்கள், படங்கள், படித்த புத்தகங்கள் எல்லாம் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கையில் தான் ‘பூவரசம் பீப்பீ’ படத்தை இயக்க முடிந்தது” என்று கூறும் ஹலிதா அப்படம் இயக்கிய அனுபவங்களை கூறினார்.
‘‘முதலில் அந்த படத்தை எங்கள் ஊரிலேயே, நானே தயாரித்து, கேமரா எல்லாம் பண்ணலாம் என்று ஆயத்தமானேன். படத்தின் கதை பிடித்து போகவே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவோடு, தயாரிக்கவும் முன் வந்தார். அவரோடு, அதில் நடித்திருக்கும் சிறுவனின் தந்தை ஒருவரும் இணைத் தயாரிப்பாளரானார். இவ்வாறாக முடிந்த பூவரசம் பீப்பி-யிலிருந்து என்னுடைய எல்லா படங்களுக்கும் நான் தான் படத்தொகுப்பாளர். படிக்கும் போதும், நண்பர்களுடைய சின்ன சின்ன புராஜெக்ட் பண்ணும் போதும் கேமரா, எடிட்டிங் பற்றி தெரிந்து கொண்டேன். தற்போது ‘ஏழை’, ‘மின்மினி பார்ட்-1’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளேன்” என்றார்.
உங்கள் படத்தயாரிப்பில் எந்த இடத்தில் அதிக நேரம் செலவிடுவீர்கள்? ஏன்?
ஒரு படம் உருவாகுவதற்கு, முன் தயாரிப்பு (post production), தயாரிப்பு (production), பின் தயாரிப்பு (pre production) என மூன்று நிலைகள் உள்ளது. அதில் முன் தயாரிப்புக்குதான் அதிக நேரம் செலவிடுவேன். அங்கு சரியாக திட்டமிட்டு, நுணுக்கமாக எல்லா விஷயமும் செய்தாலே ஷூட்டிங்கில் நிம்மதியாக இருக்கலாம். அதில் தவறு ஏற்பட்டாலும், அதை குறைந்த அளவாக இருக்கும்படி முன் கூட்டியே திட்டமிடுதல் நல்லது.
‘சில்லு கருப்பட்டியின்’ நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒற்றுமை அன்பு. இந்த அன்பு உங்கள் பார்வையில்.
அம்மா, அப்பா, அக்கா… என்று உறவு முறையினால் மட்டும் அன்பு செலுத்துவது, ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து அன்பு செலுத்துவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. கொடுத்தல் வாங்கல் இல்லாததுதான் அன்பு. எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால்தான் இந்த பூமியிலேயே இருக்க தகுதி உள்ளது என்று நினைக்கிறேன். நம்மைச் சுற்றிலும் பல காதல்களைப் பார்க்கிறோம். அதுமட்டுமில்லாமல் இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற என்னுடைய ஆசையும் இந்தப் படத்தில் இருக்கிறது. காதல், அன்பு, துணை எந்த ஒரு உறவுக்கும் அடித்தளம் அன்பு. எது இருந்தாலும், இல்லை என்றாலும் பொதுவாக அன்பின் மூலமாகவே அனைத்தும் இயங்குகிறது. காதல் கிடைத்தால் பாக்கியம். சரியான துணை அமைவது வரம். காதலும், துணையும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அன்பு பிரதானம்.
தமிழ் சினிமாவின் சூழல்?
இந்த ஆண்டு கொஞ்சம் பிராமசிங்கா இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் தொழில் நுட்ப வளர்ச்சியினால், எல்லோருமே சினிமா எடுத்துவிடலாம் என்பது, ஒரு வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் அது தரமில்லாமல், மலிவாக இருந்தது. மலிவு என்பது சிந்தனையை தான் சொல்கிறேன். அந்த சிந்தனைகளிலிருந்து வெளியாகும் படங்கள் குறைய வேண்டும். யார் சினிமாவிற்கும், அதை பார்க்க வரும் மக்களுக்கும் உண்மையாக இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு எளிமையாக தெரிந்துவிடும். விவசாயம், பெண்ணியம் என்று பேசும் படங்கள் கூட வெறும் பஞ்ச் டயலாக் பேசுவதாகவும், பில்டப்பாக மட்டுமே இருக்கிறது. இதெல்லாம் மாறும்.
உதவி இயக்குநராக இருப்பது அவசியமா?
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருமாதிரி அமையலாம். சிலர் சீக்கிரமாகவே கற்றுக் கொள்வார்கள். நான் இவ்வளவு ஆண்டுகாலம் உதவி இயக்குநராக இருந்ததால், ஒரு திரைப்படம் இயக்குவதற்கு நிச்சயமாக உதவி இயக்குநர் அனுபவம் வேண்டுமென்கிறேன். மற்றொரு தரப்பு அனுபவம் இல்லை என்று சொல்லி ஜெயித்துட்டு பேசலாம். அதுவும் சரியானதாக இருக்கலாம். ஒரு விஷயத்தை படித்ததை வைத்தும், யூடியூப் வீடியோக்களை பார்த்தும், ஃபிலிம் ஸ்கூலில் படித்துவிட்டு வந்திருந்தாலும், யார் எப்படி ஸ்பாட்டில் இருப்பார்கள் என்பது தெரிந்திருக்காது. டக்கென்று நம் நம்பிக்கையை உடைப்பது மாதிரி ஏதாவது ஒன்று பண்ணிடுவாங்க. உதவி இயக்குநராக இல்லாமல் ஒரு படத்தில் தப்பித்தாலும் அடுத்த படத்தில் மாட்டுவாங்க. இது திரைத்துறை மட்டுமல்ல எல்லா துறைக்கும் அனுபவம் முக்கியம்.
உங்கள் பார்வையில் சினிமா
சினிமாக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. அதை வைத்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஏதாவது ஒரு நேரத்தில் நாம் பார்த்திருக்கும் படம், வாழ்வின் சில முடிவெடுக்க முடியாத தருணங்களில் அதிலிருந்து மீண்டு வரவும், சரியா முடிவெடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது. வாழ்வில் சந்திக்கும், பார்க்கும் நபர்கள், படிக்கும் புத்தகங்கள் போல் தான் சினிமாவும். உடனுக்குடன் அதன் தாக்கம் இல்லையென்றாலும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் அதன் பங்கு இருந்து கொண்டேதான் இருக்கும். ஒரு சில நேரங்களில் உடனடி மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்து செல்லலாம் என்று நம்புகிறேன். அதே மாதிரி ஒரு நல்ல சினிமா பார்க்கும் போது, வெறும் கைதட்டலுக்காக எடுக்கக் கூடிய சினிமாக்கள் காணாமல் போயிடும். ஒரு சில விஷயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அதை சொல்லாமலும் இருந்துவிட முடியாது.
உங்களின் திரைக்கதை செயலாக்கம்
நான் யோசித்ததை யாரிடமும் விவாதிப்பது கிடையாது. பல விவாதங்கள் ஒன்றுமே இல்லாமல்தான் ஆகியுள்ளது. அந்த கான்செப்ட்டை ஏன் பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை. பெரிய ஹீரோ படத்திற்கு பல பேர் சேர்ந்து பஞ்ச் டயலாக், ஹீரோ பில்டப் எழுதுவதற்கு வேண்டுமானால் உதவலாம். எனக்குள்ளேயே பல கோணத்தில் யோசித்து பார்த்துக்குவேன். நானே கேள்வி கேட்டு, அதற்கான பதிலையும் தேட முயற்சித்து எழுதுவது சவாலாகவும், இண்டர்ஸ்டிங்காகவும் இருக்கும். அதே போல் ஒரு சில விஷயங்களை ஃபிலிம் மேக்கராக, உடன்பாடில்லாத போதும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புகுத்த முடியும்.
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றபின் அவர்களை கொண்டாடுவது?
சினிமா மட்டுமல்ல, நீங்கள் எந்த தொழிலை காதலித்தாலும் அதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் வெற்றியாளராகவும், அதை கொண்டாடும் நபராகவும் இருக்க முடிகிறது. ‘பூவரசம் பீப்பி’ பண்ணேன். அதுவுமே என்னை பொறுத்தவரை கொண்டாட்டம்தான். ஒவ்வொரு முறை படம் டிவி-யில் திரையிட்டால், உடனே எனக்கு குறுஞ்செய்தி வரும். நாலு வருஷமா தொடர்ந்து மெசேஜ் வந்திட்டுதான் இருக்கிறது. ஆனால், ‘சில்லுக் கருப்பட்டி’ ஒரே நேரத்தில் சிதறாமல் கொண்டாடும் போது ஹிட் படமாகியுள்ளது.
Average Rating