நகுறாஸ்!! (மகளிர் பக்கம்)
ப்ளாட்பாரத்தில் விற்கப்பட்டு வந்த நரிக்குறவர் இன மக்களின் ஊசி மணி, பாசி மணி நகுறாஸ்.காம் (nakuras.com) எனும் பெயரில்
இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது…? ‘இன்னைக்கு சந்தோசமா இருக்கோமா அது போதும்… நாளைய பற்றிய கவலை எமக்கில்லை’ எனத் தங்கள் நாடோடித் தன்மையை இழக்காத நரிக்குறவர் சமூகத்து மக்களைப் பார்த்தால் முகம் சுளிக்கும் நிலையே நிதர்சனம். ரோடு, சிக்னல், பேருந்து நிறுத்தம் என அனைத்து இடங்களிலும் அவர்களைப் பார்த்து கடந்திருப்போம். கையில் மணியால் செய்யப்பட்ட ஆபரணங்கள், விலங்குகளின் முடிகளில் உருவாக்கிய ஆபரணம், வேட்டையாடப்பட்ட நரியின் பல், மூலிகை மருந்துகளின் டப்பாக்கள் என குழுவாக இருப்பார்கள்.
விலங்கு, பறவையென வேட்டையாடும் சமூகத்தைச் சேர்ந்த இவர்களை வேட்டையாடுவதற்கு அரசு தடை செய்ய, பாசிமணிக விற்பனைக்காக நடைபாதையில் கடை விரிப்பதை காவல்துறையும் தடை செய்தது. அவர்களின் வாழ்வாதாரத்திற்காக நான்கு மாணவர்கள் ஒன்றாய் இணைந்து, அணிகலன் தயாரிப்பில் அவர்களை உயர்த்த முடிவு செய்து, தொழில்நுட்ப உதவியோடு இணையத்தில் அவர்களுக்காக கடை விரித்திருக்கிறார்கள். ‘‘வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற சிந்தனையே எங்களை ஒரே புள்ளியில் இணைத்தது’’ எனும் தேவகுமார், சிவரஞ்சனி, சிரவியா, ரித்திகா ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க்’ கல்லூரியின் (MSSW) எம்.ஏ. சோஷியல் எண்டர்பிரீனியர் (social entrepreneur) படிக்கும் மாணவர்கள்.
‘‘மாற்றம் என்பது இரண்டு பக்கமும் இருந்தால் மட்டுமே சாத்தியம். கோயில் திருவிழா, நடைபாதை எனக் கடை விரிக்கும் இவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கேயே குழந்தைகளோடு கூட்டமாகத் தங்கிவிடுவார்கள். குழந்தைகளைப் படிக்க வைக்கும் எண்ணம் சுத்தமாக இவர்களிடத்தில் இல்லை. சகஜமாகப் பழகாமல் அனைவரும் ஒதுக்குவதால் தாழ்வு மனப்பான்மையில் இவர்கள் ஒதுங்கியே இருக்கிறார்கள். எந்த வேலைக்கும் இவர்கள் தயாராக இருந்தாலும், இவர்களை ஏற்கும் மனோநிலை நம்மிடம்தான் இல்லை. இவர்களில் 150 குடும்பங்கள் கோட்டூர்புரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார்கள். ஆறு மாதம் தொடர்ச்சியாக அவர்களோடு நெருங்கிப் பழகியதில் ஓரளவு அவர்களைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அவர்களின் கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு என முதலில் சர்வே எடுத்தோம். ஆண்களில் 5ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் இல்லை. பெண்கள் சுத்தமாகப் படிக்கவே இல்லை. அவர்களது ஆரோக்கியமும் மோசமாக இருந்தது. சாப்பாட்டிற்காக குப்பைகளைப் பொறுக்கி கடைகளில் போட்டு குடும்பம் நடத்துகிறார்கள். இரவு 3 மணிக்கு ஆண்களும் பெண்களுமாக குழந்தைகளோடு கோட்டூர்புரத்தில் துவங்கி சிறுசேரி வரை சென்று குப்பை சேகரிக்கிறார்கள். அவற்றை 7 லேயராகப் பிரித்து கடையில் போட்டு வருமானம் பார்க்கிறார்கள். ஆண்களுக்கு சமமாக பெண்களும் இதில் இருக்கிறார்கள். ஒருநாள் குப்பை பொறுக்கச் செல்லவில்லை என்றால் மறுநாள் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலை.
இவர்கள் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் என எல்லாவற்றுக்கும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். இவர்களது வருமானம் மாறினால்தான் வாழ்க்கை மாறும். இல்லையெனில் குழந்தைகளும் குப்பை பொறுக்கும் தொழிலுக்கே செல்வார்கள் என யோசித்தோம். இவர்களை வைத்து வேஸ்ட் மேனேஜ்மென்டில் ஏதாவது செய்ய முடியுமா என்ற யோசனையும், பிளாஸ்டிக் ரீசைக்கிளிங்கிற்கு இவர்களை பயன்படுத்த முடியுமா என்ற யோசனையும் உள்ளது. மேலும் இவர்களை கவனித்ததில் பெண்கள் ஊசி மணி, பாசி மணிகளை கோர்ப்பதில் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள். பெண்களுக்கு லேட்டஸ்ட் டிரண்ட், டிசைன், கலர் காம்பினேஷன், பினிஷிங் இவற்றுக்கு முறையாகப் பயிற்சி கொடுத்து, அவர்களின் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவெடுத்தோம்.
குவாலிட்டியாக ஆபரணங்களை தயாரிக்க நிஃப்ட் ஃபேஷன் டிசைனிங் கல்லூரி மாணவர்கள், ஜெய்பூரில் உள்ள ஆர்ட் அண்ட் கல்ச்சர் மாணவர்கள், மும்பையில் உள்ள ஃபேஷன் டிசைனர்ஸ் மற்றும் ஃபேஷன் ஐடியாலஜி உள்ளவர்களை இவர்களோடு இணைத்தோம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இவர்களின் இடத்திற்கே சென்று, பயிற்சி வழங்குவதோடு, தரமான மணிகள், விலை உயர்ந்த நூல், அதற்கென உள்ள முறையான கட்டர் கொண்டு லேட்டஸ்ட் நுட்பத்தை ஆர்வமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களின் டிரெடிஸ்னலோடு இப்போதைய டிரென்டையும் கலந்து, புதுவிதமான டிசைன்களை உருவாக்க வைக்கிறோம்.
லைட்டா அவர்களை டியூன் செய்து, இந்த மணிகளைக் கொண்டு, இது மாதிரி செய்து எடுத்து வாருங்கள் என்றால், அட்டகாசமான டிசைன்களை அவர்களாகவே உருவாக்கி எடுத்து வருகிறார்கள். தேவையான மூலப் பொருட்களை நாங்களே வாங்கிக் கொடுத்து செய்ய வைக்கிறோம். ஒரு டிசைனை உருவாக்க ஃபேஷன் டிசைனிங் படித்த மாணவர் 5 மணி நேரம் எடுத்தால், இவர்கள் இரண்டே மணி நேரத்தில் முடிக்கும் திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். சில தயாரிப்புகளுக்கு அவர்களே ஆலோசனையும் சொல்கிறார்கள். 13 வயதில் தொடங்கி 45 வயது பெண்கள்வரை இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
மிகச் சமீபத்தில் 35 நாடுகள் கலந்து கொண்ட தமிழ் டிரைப்ஸ் மாநாடு, எங்களின் கல்லூரியின் வளாகம், ஆர்ட் கேலரிஸ் என எங்கெல்லாம் அவர்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிதோ அங்கெல்லாம் காட்சிப்படுத்துகிறோம். டிசைன் மற்றும் குவாலிட்டி பார்வையாளர்களுக்குப் பிடித்துப்போகவே, அவர்களது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கிறது. ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய இ-காமர்ஸ் இணைய விற்பனை தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். முகநூலிலும் பக்கங்களை உருவாக்கி வைத்துள்ளோம். இவர்களின் டிசைன்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பார்வையாளர்களிடம் இருந்து ஆர்டர்களும் வருகிறது.
அவர்களது வருமானத்திற்கான ஒரு பகுதிதான் இது. அவர்கள் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், ஆண்களுக்கான வேலை வாய்ப்பிற்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். துவக்கத்தில் அவர்கள் எங்களை நம்பத் தயாராக இல்லைதான். தினமும் பொறுமையாக அவர்களை அணுகி, அவர்களது இடத்திற்கு தினமும் சென்று வந்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் துவங்கினர். அவர்களைப் பற்றி எங்களிடம் பேசத் தொடங்கினர். இதற்கே எங்களுக்கு 6 மாதம் எடுத்தது. பண்டிகை, திருவிழா நேரங்களில் அவர்கள் விற்கும் பாசி மணிகளில் வரும் லாபம் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம். நீங்கள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்கள் கடைவிரித்தால் தயவு செய்து பேரம் பேசாதீர்கள்’’ என முடித்தனர்.
Average Rating