ரீனாஸ் வென்யூ 600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்!! (மகளிர் பக்கம்)
சென்னையின் பரபரப்பான இயந்திர வாழ்க்கையும், போக்குவரத்து நெரிசலையும், அலை போன்ற மக்கள் கூட்டத்தையும் தாண்டி, நம் கிழக்கு கடற்கரை சாலையில், இஸ்கான் கோவிலுக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்க்கும் நடுவே, 6000 சதுர அடி நிலப்பரப்பில் ரம்மியமாக காட்சி தருகிறது ரீனாஸ் வென்யூ. இதில் அறநூறுக்கும் அதிகமான திருமண நிகழ்ச்சிகளும், நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.
செட்டிநாட்டின் பாரம்பரியமும், கேரளாவின் கலைச்சுவையும் ஒருங்கே இணைந்து, இந்த அழகிய இல்லத்தை உருவாக்கியிருக்கிறார் 62 வயதான ரீனா வேணுகோபால். கொள்ளுப்பாட்டியிடமிருந்து தனக்கு வந்து சேர்ந்த பித்தலை விளக்குகள், தொங்கு விளக்குகள் முதல் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் வரை வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அழகாக அலங்கரித்திருக்கிறார். வீட்டிற்கு முன் நின்றாலே, முற்றத்தை தாண்டிய பூஜை அறை தெரிகிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும் வீணாகாமல் ஏதோ ஒரு வகையில் அழகாக அலங்கரிக்கப்பட்டு, திரும்பும் இடமெல்லாம் நம்மை ரசிக்க வைக்கிறது.
2006ம் ஆண்டு, தன் மகன் விக்கிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும் போது, சரியான திருமண மண்டபம் அமையாமல் குடும்பமே குழம்பியது. அப்போது ரீனா, ‘நம் வீட்டில் இவ்வளவு இடம் இருக்கும் போது, வெளியில் ஏன் அலையவேண்டும்’ என்று, தன் வீட்டையே அழகாக அலங்கரித்து, பிரம்மாண்டமாக மாற்றியிருக்கிறார். இந்த அழகிய மாற்றத்தைப் பார்த்து வியந்து போன உறவினர்கள், தொடர்ந்து சில குடும்ப நிகழ்ச்சிகளை ரீனாவின் இல்லத்திலேயே ஏற்பாடு செய்திருக்கின்றனர். அன்றிலிருந்து இதைக் கேரளா வீடு என்று சுற்றியிருப்பவர்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். சில ஆண்டுகளில் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கும், கேரளா வீடுதான் வேண்டும் என்று அடம்பிடித்தனர். மகன் விக்கியும் வெளிநாட்டில் செட்டிலாக, ரீனா அடிக்கடி வெளிநாட்டிற்கு போகும் சூழல் உருவானது.
சரி என்று 2010 முதல் தன் இல்லத்தை திருமணங்கள் நடத்தும் வென்யூவாக மாற்றிவிட்டார் ரீனா. இதில் தனக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்று கூறும் ரீனா, “இது நான் ரசித்துக் கட்டிய வீடு. குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கட்டிய வீடு. எங்களுடைய நினைவுகளையும் கனவுகளையும் மட்டுமே சுமக்க வேண்டிய வீடு, இப்போது பல நூறு பேரின் மறக்க முடியாத அழகான நினைவுகளையும் சுமந்து நிற்கிறது. இங்கு திருமணமான ஒவ்வொரு குடும்பமும், இதை தங்கள் வீடாகத்தான் பார்க்கின்றனர். முதலில் நான் முதல் மாடியில் இருக்கும் அறையில் தங்கினேன். ஆனால் அது ஒரே இடத்தில் அடைந்திருப்பது போல தோன்றியதால், பக்கத்திலேயே எளிமையான புதுவீட்டை உருவாக்கி, அதில் வசித்து வருகிறோம்” என்று கூறும் ரீனாவின் பூர்வீகம் கேரளா.
ரீனா திருமணங்களை ஒருங்கிணைக்கும் வெட்டிங் ப்ளானரும் கூட. அதனால், ரீனாஸ் வென்யூவிற்கு இருக்கும் அதே ரசிகர்கள், ரீனாவிற்கும் உண்டு. ரீனாஸ் வென்யூவில், தன் மகளுக்கு திருமணம் செய்த சத்யா ராவ், “ரீனாஸ் வென்யூவில் திருமணம் செய்தது எங்கள் சொந்த வீட்டில் திருமணம் செய்தது போன்ற நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்தது. திருமணத்திற்கான மொத்த பொறுப்பையும் ரீனாவே எடுத்துக்கொண்டார். என்னுடைய வேலையெல்லாம், விருந்தினர்களுடன் பேசி மகிழ்ச்சியாக என் மகளின் திருமணத்தை அருகிலிருந்து பார்த்தது மட்டும்தான். கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவருமே வியந்துபோய்விட்டனர்.
நாங்கள் நான்கு நாட்கள் ஆங்கிலோ- இந்தியன் முறையில் திருமணம் செய்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன், ஒரே இடத்தை இப்படி ஒவ்வொரு முறையும் புதுமையாக மாற்ற முடியுமா என்று ஆச்சரியப்படுத்தினார் ரீனா” என்கிறார். ரீனாவுக்கு உதவியாய், சினிமா-திருமணங்கள்-விளம்பர படங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆல்-இன் ஆலாய் இருப்பது நாச்சியப்பன்தான். ‘‘ரீனாஸ் வென்யூவில் காலடி வைக்காத தமிழ் நடிகர்கள், இயக்குநர்களே இல்லை. காஞ்சனா-3, சிறுத்தை, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின், கமலின் மன்மதன் அம்பு படப்பாடல் காட்சி, பெங்களூர் நாட்களின் தொடக்கம் மாங்கல்யம் பாடல், சென்னை 28 (2ஆம் பாகம்) எனப் பல படங்கள், பாடல் காட்சிகள், சீரியல்கள் எடுக்கப்பட்டுள்ளன. கமல், விஜய், அஜீத், முருகதாஸ், அட்லீ, ஷங்கர், லாரன்ஸ், ஜெய், நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, ராதிகா எனப் பல பிரபலங்கள் இங்கு அடிக்கடி வருவார்கள்.
லாரன்ஸ் மாஸ்டருக்கு இது அதிர்ஷ்டமான வீடு. அதனால் அவர் படத்திற்கான பூஜையை இங்குதான் நடத்துவார். நடிகர் சாந்தனு பாக்யராஜ் திருமணமும் இங்குதான் நடந்தது. வீட்டின் நடு முற்றத்தில் மணமக்களை உட்கார வைத்து, சுற்றி திவான்கள் அமைத்து, வெளியில் பெரிய ப்ரொஜெக்டர் அமைத்து, உள்ளே உட்கார முடியாதவர்களுக்கு வெளியில் திருமணத்தை திரையிட்டு காட்டினோம். திருமணங்கள், சினிமா ஷூட்டிங் தவிர மார்கழி மாதங்களில் இங்கு சிறப்பு கச்சேரிகளும் நடக்கும். இந்த வீட்டின் சிறப்பே, நம் வசதிக்கேற்ப இதில் அலங்காரம் செய்து மாற்றிவிட முடியும். வீட்டைத் தாண்டி, வெளியிலும் நிறைய இடங்கள் இருப்பதால், திறந்த வெளியிலும் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
இங்கு ஷூட் செய்யப்படும் விளம்பர படங்களின் அலங்காரங்களை பார்த்து அதை சில சமயம் திருமணங்களின் போது அமைப்போம். வீட்டின் நடு முற்றத்தில், தண்ணீர் நிரப்பி பூக்களில் அலங்கரிப்பதும் விளம்பர படங்களில் பார்த்து, தோன்றிய ஐடியாதான்” என்கிறார். அலங்காரம், லைட்டிங், பர்னிச்சர் இந்த மூன்றும் கண்டிப்பாக ரீனாஸ் வென்யூ குழுவுடன் இருப்பவர்களே பார்த்துக்கொள்வார்கள். மணமக்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் அலங்காரம் அமைத்து தரப்படும். தான் ரசித்து கட்டிய வீட்டை பாதுகாக்கத்தான், ரீனாவே இந்த பொறுப்பை அருகிலிருந்து பார்த்துக்
கொள்கிறார்.
இங்கு தன் திருமணத்திற்கான சங்கீத் நிகழ்ச்சியை நடத்திய தன்வி, ரீனாவை சந்திக்க வந்தார். உடன் வந்திருந்த அவரது சகோதரர், கூடிய விரைவில், தன் திருமணத்திற்கும் இங்குதான் வரப்போவதாக தெரிவித்தார். இப்படி இங்கு ஒருமுறை திருமணம் ஆகும் குடும்பம், தொடர்ந்து தங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு ரீனாஸ் வென்யூவையே தேர்ந்தெடுக்கின்றனர்.
Average Rating