மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் சிங்களத் தலைமைகள் !! (கட்டுரை)
கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், கடைசியில் தாம் நினைத்தது போலவே, தேசிய சுதந்திர தின நிகழ்வில் இருந்து, தமிழ் மொழியை நீக்கி விட்டது.
தேசிய சுதந்திர தின நிகழ்வில், சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்தபோதே, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற உறுதியான முடிவை அரசாங்கம் எடுத்து விட்டது.
ஆனால், இந்த விவகாரம் சர்ச்சையாகக் கிளம்பியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சரி, அவரது அமைச்சர்களும் சரி, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை, என்று கூறிச் சமாளித்திருந்தனர்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் கருத்துகள் எல்லாம், அரசாங்கத்தின் முடிவுகளாக இருக்க முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கூட, தமிழ் ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது கூறியிருந்தார்.
ஆனால், கடைசியில், எதை அரசாங்கம் முடிவாக எடுக்கவில்லை என்று கூறிச் சமாளித்ததோ, அதையே தான், தனது இறுதி முடிவாக எடுத்து, செயற்படுத்திக் காண்பித்திருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எடுத்துள்ள மிக முக்கியமானதொரு முடிவாக இது பார்க்கப்படுகிறது.
1949ஆம் ஆண்டு நடந்த தேசிய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.
அதுபோலவே, 2015ஆம் ஆண்டு தொடக்கம், 2019ஆம் ஆண்டு வரை தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில், தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
எனினும், இந்த ஆண்டு தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 1956ஆம் ஆண்டு, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, அரசாங்கம் தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தது.
தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக வெளிப்படுத்தியது அந்த சட்டம். அந்தச் சட்டம், இலங்கையில் பெரும் அழிவுக்குக் காரணமாக அமைந்தது.
‘நாங்கள் இலங்கையர்கள் அல்ல’ என்ற உணர்வைத் தமிழர்கள் மத்தியில் விதைப்பதற்கு, அந்தச் சட்டமே காரணமாக அமைந்தது. அந்தத் தவறைத் திருத்துவதற்கு, சில அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதும், இன்றுவரை அது வெற்றி பெறவில்லை. இலங்கையின் சுதந்திர தினத்தை, இன்று வரை தமிழர்கள் தமக்கான சுதந்திர தினமாகக் கொண்டாடும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை.
ஆயினும், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம், இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில், தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழிக்கு இடமளிக்க முன்வந்தது.
அதற்குச் சாதகமான நல்லெண்ண சமிக்கை வழிகாட்டும் வகையில், முதல் முறையாகத் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கு பற்றியிருந்தார்.
அதற்குப் பின்னர், அவர் அல்லது அவரது பிரதிநிதியாக எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தொடர்ச்சியாகச் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்குபற்றி வந்தனர். இந்த முறை இரா.சம்பந்தனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வேறு எவரோ, சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
“தமிழர்களையும் தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது. தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலேயே கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் செயற்படுகின்றது.
“ஜனாதிபதித் தேர்தலில், தனக்கு வாக்களிக்காத தமிழ் மக்களைப் பழிவாங்கும் வகையிலேயே அவர் செயற்படுகின்றார். இதன் காரணமாகத் தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை” என்று, இரா.சம்பந்தன் பி.பி.சியிடம் கூறியிருக்கிறார்.
இலங்கையின் வரலாற்றில், தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் இருந்து பல தசாப்தங்களாக ஒதுங்கி இருந்து வந்த தமிழர்கள் அல்லது தமிழ்த் தலைவர்கள், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரே, அதனுடன் நெருங்கி வந்த நிலையில், அவர்களையும் தூர விலகி நிற்க வைத்திருக்கிறது தற்போதைய அரசாங்கம்.
தேசிய கீதம் என்பது எல்லா மக்களும் புரிந்து கொள்ளக் கூடியதாக, மதிப்பளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலை இலங்கையில் இல்லை என்பதே உண்மை. சிங்கள மொழியில் பாடப்படும் தேசிய கீதத்தை, தமிழ் மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமல் போனதால், தமிழர்களுக்கு நட்டம் என்று எதுவுமில்லை.
இலங்கையின் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் தான், தமிழர்களிடமிருந்து தூர விலகிச் செல்லும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
இதனால்தான், “அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடு, பிரிவினைவாதத்தைப் பலப்படுத்தி இருக்கிறது” என்று மனோ கணேசன் விசனத்துடன் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்த் தலைவர்கள் பலரும், தேசிய கீதம் தமிழில் பாடப்படாமை குறித்து ஆதங்கத்தை, ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருப்பினும், இதன் விளைவுகள் என்னவோ தமிழர்களுக்குச் சாதகமான ஒன்றாகவே இருக்கப் போகிறது.
ஏனென்றால், தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களே என்ற பிரகடனத்தை அரசாங்கமே வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாறானதொரு முட்டாள்தனமான முடிவால், சர்வதேச அளவில் இலங்கை தனது நன்மதிப்பை இழக்கும் நிலையைச் சந்திக்கப் போகிறது.
ஜனாதிபதி கோட்டாபய, தனக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை வஞ்சிக்கிறார், பழிவாங்குகிறார் என்ற கருத்தே இப்போது மேலோங்கியிருக்கிறது. இரா.சம்பந்தன் பி.பி.சிக்கு வெளியிட்ட கருத்திலும் இதனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற போதும், அதற்குப் பின்னரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்காத போதும், எல்லா மக்களினதும் ஜனாதிபதியாகத் தான் செயற்படுவேன் என்று உறுதியளித்திருந்தார்.
அவர், அந்த வாக்குறுதியை மூன்று மாதங்களுக்குள்ளாகவே மீறிவிட்டார். தாம், பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஜனாதிபதி மாத்திரமே என்பதை அவர் வெளிப்படுத்தி விட்டார்.
அரசியல் தீர்வு விடயத்தில் குறிப்பாக, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், பெரும்பான்மைச் சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாகத் தன்னால் செயற்பட முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய கூறியிருந்தார்.
அந்த விடயத்தில் மாத்திரமன்றி, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுகின்ற விடயத்தில் கூட அவர், சிங்கள மக்களின் நிலையிலிருந்து மாத்திரமே சிந்தித்தாரேயன்றி, தமிழ் மக்களின் நிலையிலிருந்து சிந்திக்கவோ, செயற்படவோ இல்லை.
எல்லா விடயங்களிலும் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களையும் நலன்களையும் மாத்திரம் நிறைவேற்றும் ஓர் அரசாங்கமாக இருந்தால், சிறுபான்மை இன மக்களின் நலன்களை, அதனால் ஒரு போதுமே நிறைவேற்ற முடியாது. அதைவிட, சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று, ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணை கொடுக்கவில்லை. அவ்வாறான ஓர் ஆணையைத் தற்போதைய அரசாங்கம் கோரவும் இல்லை.
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளுக்காக, அவர்களைக் கவருவதற்காக என்ற போர்வையில், தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்களிடமிருந்து தூர விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
சிங்கள பௌத்த அரசாங்கமொன்றை உருவாக்கி விட்ட கோட்டாபய ராஜபக்ஷவும், அவரது அரசாங்கமும், தமது இருப்பை நிலைப்படுத்துவதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரசாங்கத்தில், தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடமில்லை என்பது, தேசிய சுதந்திர தின நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “எல்லா மக்களினதும் உரிமைகள், பாதுகாக்கப்படும்” என்று உறுதியளித்திருந்தார். ஆனால், தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமை, அந்த நிகழ்விலேயே மீறப்பட்டிருக்கிறது.
வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாத எவரும், வரலாற்றைப் படைக்க முடியாது. இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினை வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள சிங்களத் தலைமைகள் தவறிவிட்டன.
இவ்வாறான நிலையில், மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து கொள்ளும் பேரினவாதத் தலைமைகள், வரலாற்றுத் தவறுகளை இழைப்பதில் கவனம் செலுத்துகின்றன தவிர, அவற்றிலிருந்து மீள்வதில் அக்கறை காண்பிக்கவில்லை. அதனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
Average Rating