கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்!! (மகளிர் பக்கம்)
பொருளாதார தாராளமய உலகில், எங்கும் நவீனம் மற்றும் எதிலும் நவீனம் என்று ஆகிவிட்ட நிலையில், உலகமே வணிகமயமாகிவிட்டது. இந்த வணிக உலகில், மாடலிங் துறையானது, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. இது ஒரு கவர்ச்சியான துறை என்றாலும், மலர் தூவிய படுக்கை என்று நினைத்துவிடக் கூடாது. இந்தத் துறையில் முன்னுக்கு வர, மாதக்கணக்கில் மற்றும் வருடக்கணக்கில் மிகக் கடுமையாக உழைப்பும், சுயக் கட்டுப்பாடும் வேண்டும். உணவுக்கட்டுப்பாடு முக்கியம். தோற்றத்தை மிக நேர்த்தியாகப் பராமரிக்க வேண்டியிருப்பதால், சமயத்தில் பட்டினியாகக்கூட இருக்க வேண்டிவரும்.
இது போன்ற பல அர்ப்பணிப்புகளோடு நம் கண் முன் தோன்றும் மாடல்களில் ஒருவரான நந்தினி, தன் துறையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
‘‘சொந்த ஊர் திருவாரூர். படித்தது எல்லாம் அங்கு தான். தனியார் நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளர் வேலைக்காகச் சென்னை வந்தேன். இந்த நிறுவனம் நடத்தும் நிகழ்வில் பல பிரபலமான முகங்களை அடிக்கடி பார்ப்பேன். இவர்களைப் பார்க்கும் போது எனது சிறு வயது கனவான சினிமாவில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இன்னும் அதிகமானது. நிகழ்வுகளை எப்படி நடத்த வேண்டும், வீடியோ எடிட்டிங் போன்ற விஷயங்களை இங்கு வேலை பார்க்கும் போது கற்றுக் கொண்டேன்.
இரண்டு முறை சிறந்த ஒருங்கிணைப்பாளருக்கான விருது பெற்றது என் வாழ்வில் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது” என்கிறார் நந்தினி.
ஒரு துறையில் பிரபலமாகவோ, புகழ்அடையவோ கடுமையான உழைப்பு தேவை. அதிலும் மாடலிங் போன்ற துறைகளில் இது இல்லை என்றால் கடினம்தான். சாதாரணமாக தொலைக்காட்சிகளில் பார்க்கும் அத்தனை விளம்பரங்களின் பின் பெரிய கதைகளே இருக்கிறது. அதில் சொல்லப்படாத அவமானங்களும், கடின உழைப்பும் இருப்பது தெரிவதில்லை. இது போன்ற துறையில் தன்னை ஓர் அங்கமாக்கிக் கொண்டிருக்கும் நந்தினி திரைப்படங்களிலும், குறும்படங்களிலும் நடிப்பது பற்றிப் பேசினார்.
“96- திரைப்படத்தில் பள்ளி காலத்து திரிஷாவின் தோழியாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் அதில் நடிக்க முடியாமல் போனது. மாடலிங் துறையில் முழு கவனம் செலுத்தினாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானே குறும்படங்களை இயக்கி நடித்தும் வருகிறேன். சில பாடல்களைக் கவர் சாங்காகவும் வெளியிட்டு வருகிறேன். இதனிடையே ‘green trends’, ‘naturals’ போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதிலும் நடிச்சேன்’’ என்று சொல்லும்நந்தினிதான் குடும்பத்தின் பொறுப்பு அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்.
‘‘அப்பா இல்லாமல், வெளியுலகமே தெரியாமல் வளர்ந்தவள் நான். அம்மா தனி ஆளாக என்னை ஆளாக்கியிருக்காங்க. தற்போது என் குடும்பத்தை முழுமையாகப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். சிறு வயதிலே சினிமா மீதான ஆசை இருந்தாலும், அதற்கு எப்படிப் போக வேண்டுமென்கிற சூழ்நிலையும், வழிமுறையும் அமையவில்லை. தற்போது அது மாடலிங் துறையின் மூலமாக நிறைவேறி வருகிறது.
நாயகி கதாபாத்திரத்தை விட வில்லி கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். ஹீரோயினா பல டயலாக் பேசுவதை விட வில்லியா ஒரே ஒரு டயலாக் பேசினால் போதும், வேற லெவல் ஹிட் ஆகிடலாம். சீக்கிரமா மக்கள் மனதிலும் இடம் பிடிக்கலாம்” என்கிறார்.
பள்ளி படிக்கும் போதிலிருந்தே எந்த ஒரு கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விளையாட்டு போட்டியானாலும் சரி அதில் பங்கேற்று பரிசு வாங்கி இருக்கும் நந்தினி, தான் எந்த துறையிலிருந்தாலும் அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்கிறார். “எனது கனவு திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே. இத்துறையில் பல பிரச்சனைகள் உண்டு. அதனைத் தாண்டி நான் போராடி வருகிறேன். போராடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. வாய்ப்புகள் சுலபமாகக் கிட்டவில்லை என்றாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வாழ்வில் சாதிக்கப் பல துறைகள் இருந்தாலும், அதற்காக வழியைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறேன். இதுவும் கடந்து போகும். போராடுங்கள் உங்கள் கனவை மெய்ப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்” என்கிறார் நந்தினி.
Average Rating