கொரோனா வைரஸ் – 3,700 பேர் நடுக்கடலில் தவிப்பு!! (உலக செய்தி)

Read Time:5 Minute, 54 Second

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய உயிர்க் கொல்லி நோயான கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மேலும் சீனாவுக்கு வெளியிலும் கொரோனா வைரஸ் 2 உயிர்களை பறித்துள்ளது. தைவானிலும், ஹாங்காங்கிலும் தலா ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். மேலும் இந்தியா உள்பட 26 நாடுகளில் 150 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்த வகையில் ஜப்பானில் தற்போது வரை 20 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, டொக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர். இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்த நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி (அதாவது கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்பு) ஜப்பானின் 2 வது மிகப்பெரிய நகரமான யோகோஹாமாவில் இருந்து சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கு டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் சென்றது.

இந்த கப்பலில் சுமார் 2,700 பயணிகளும், 1,045 ஊழியர்களும் பயணித்தனர். இந்த கப்பல் கடந்த 25 ஆம் திகதி ஹொங்கொங் சென்றடைந்தது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஹொங்கொங்கை சேர்ந்த 80 வயது முதியவர் தரையில் இறங்கினார். ஆனால் பின்னர் அவர் கப்பலுக்கு திரும்பவில்லை. அதன் பின்னர் அந்த சொகுசு கப்பல் ஹொங்கொங்கில் இருந்து மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டது. இதற்கிடையில் ஹொங்கொங்கில் கப்பலில் இருந்து இறங்கிய 80 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 30 ஆம் திகதி தெரியவந்தது.

இது குறித்து அவர் பயணம் செய்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருக்கும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு கடந்த 1 ஆம் திகதி இந்த தகவல் கிடைத்தது. அப்போது இந்த கப்பல் ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தை வந்தடைந்திருந்தது. இதுபற்றி ஜப்பான் அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் மாகாண தலைநகரான நாகாவில் உள்ள துறைமுகத்துக்கு அருகே கப்பலை தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தினர். எனினும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கப்பலில் இருக்கும் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்கள் அனைவரும் தரையில் இறங்கலாம் என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

அதன்பிறகு டைமண்ட் பிரின்சஸ் கப்பல் அங்கிருந்து யோகோஹாமா நகருக்கு புறப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை யோகோஹாமா துறைமுகத்துக்கு கப்பல் வந்து சேர்ந்தது. அப்போது கப்பலில் இருந்த 8 பேருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் கப்பலில் உள்ள 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்களை தரையில் இறங்குவதற்கு தடை விதித்த ஜப்பான் அரசு, கப்பலை துறைமுகத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

கப்பலில் இருக்கும் 3,711 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி காட்சுனோபு காதோ தெரிவித்துள்ளார். அவர்களின் மருத்துவ அறிக்கை மூலம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை அவர்கள் ஜப்பான் மண்ணில் கால்பதிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், இதற்கு 10 நாட்கள் வரை ஆகலாம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கடந்த வாரம் இதே போல் இத்தாலி தலைநகர் ரோமுக்கு 7 ஆயிரம் பேருடன் சென்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக துறைமுகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !! (உலக செய்தி)
Next post ‘நிர்பயா’ தூக்கும் டெல்லி தேர்தலும்!! (கட்டுரை)