பிரசவம் ஆகும் நேரம் இது! ( மருத்துவம்)
தாம்பத்தியம் இல்லாமலும், உயிரணுவே இல்லாமலும், உடலில் உள்ள ஒரு செல் மூலம் ‘குளோனிங்’ முறையில் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற அளவில் நவீன மருத்துவம் முன்னேறிவிட்டது. செயற்கைக் கருத்தரிப்பில் தொடங்கி, வாடகைத்தாய் வரை பல நவீன தொழில் நுட்பங்கள் புகுந்து, பிரசவத்தில் ஆச்சரிய அற்புதங்களை அரங்கேற்றும் காலம் இது.
ஆனாலும், எத்தனை தொழில்நுட்பங்கள் புதிதாக வந்தாலும், தரமான தாம்பத்தியத்தில், தனக்குள் ஒரு குழந்தை இயற்கையாக உருவாகி, அதை அனுபவித்துப் பிரசவிக்கும் பெண்களின் தனித்த சந்தோஷத்தை எந்த ஒரு விஞ்ஞானத்தாலும் தரமுடியாது என்பதுதான் உண்மை!
* தனித்துவமானது!
பிரசவம் என்பது இதுவரை தாயின் கருப்பையில் சுகமாக வளர்ந்து வந்த குழந்தை, கருப்பையை விட்டு விலகி, தாய்மண்ணுக்குத் தாவும் ஓர் அற்புத நிகழ்வு; மருத்துவர்களுக்கு ஒரு பூ மலர்வதை அருகிலிருந்து பார்ப்பதுபோல் ஒரு பிரமிப்பு தரக்கூடியது.பிரசவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்துவமானது.
உண்மையான பிரசவ வலி எப்போது ஆரம்பிக்கும், அது எத்தனை மணி நேரம் நீடிக்கும், அது எப்படி அதிகரிக்கும், பிரசவம் எப்போது நிகழும் என்பதெல்லாமே பெண்ணுக்குப் பெண் மாறுபடும். ஏன், ஒரே பெண்ணுக்கே பிரசவத்துக்குப் பிரசவம் வேறுபடும். ஆனாலும், சில பொதுவான வழிமுறைகளால் குழந்தையின் பிரசவப் பயணம் சரியான பாதையில் செல்கிறதா என்பதை மகப்பேறு மருத்துவர்களால் கணித்துக்கொள்ள முடியும்.
* பிரசவத்தைத் தூண்டுவது எது?
பிரசவத்தை எது, எப்போது தூண்டுகிறது என்று சொல்வதற்குப் பலதரப்பட்ட அறிவியல் தரவுகள் இருக்கின்றன. ஆனாலும், புரோஸ்டோகிளான்டின், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள்தான் பிரசவத்தைத் தூண்டுகின்றன என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.
குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததும், கர்ப்பிணியின் பிட்யூட்டரி சுரப்பிகள் தூண்டப்பட்டு, ஆக்ஸிடோசினைச் சுரக்கின்றன. அது கருப்பையைச் சுருக்கி, பிரசவத்துக்கு ஏற்பாடு செய்கிறது.
* பிரசவத்தில் மூன்று கட்டங்கள்
கர்ப்பமடைந்த பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிந்துகொண்டே வந்த கருப்பையானது, ஒரு கட்டத்தில் சுருங்கி, குழந்தையை வெளியில் தள்ளுகிறது. இதையே ‘சுகப்பிரசவம்’ என்கிறோம். உண்மையான பிரசவ வலி தொடங்கியதும், ஒரு கர்ப்பிணியானவர் பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போது நிகழும் அந்த பரபரப்பான க்ளைமாக்ஸ் காட்சிகளை மூன்று கட்டங்களாகப் பிரித்துச் சொல்கிறது மருத்துவம். கருப்பையின் வாய்ப்பகுதி மெலிதாவது, விரிவடைவது, குழந்தை பிறப்பது, நச்சுக்கொடி பிரிந்து வெளிவருவது என பல அற்புதங்கள் இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்ப்போம்.
* முதல் கட்டம்
பிரசவ வலி தொடங்கியதிலிருந்து, கருப்பையின் வாய் முழுவதுமாகத் திறந்து, குழந்தையின் தலை வெளியில் தெரியும் வரையிலான காலகட்டம் இது. இதுதான் பிரசவத்தில் மிக நீண்டது. ஏற்கெனவே தாயானவர்களுக்கு இது சுமாராக ஆறு மணி நேரம் வரை நீடிக்கலாம். முதன்
முறையாக கர்ப்பமடையும் பெண்ணுக்கு இது 12 மணி நேரம்கூட நீடிக்கும். இந்த நேரத்தில் சில கர்ப்பிணிகளைப் பிரசவ அறைக்குள் நடக்கச் சொல்வதும் உண்டு.
முதல்முறையாக கர்ப்பமடையும் பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் ஒரு செ.மீ. வீதமும், ஏற்கனவே தாயானவர்களுக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு செ.மீ. வீதமும் கருப்பை வாய் விரியும். இது 10 செ.மீ. அளவுக்கு விரிந்துவிட்டது என்றால், முழுவதும் விரிந்துவிட்டது என்று பொருள். இந்த நேரத்தில் ‘ஷோ’ எனும் சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து கசியும். பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறும்.
தாயின் உடல்நிலையோடு குழந்தையின் இதயத்துடிப்பும் கண்காணிக்கப்படும். சமயங்களில், குழந்தையின் இதயத்துடிப்பு முதல் எல்லாமே சரியாக இருந்து, இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், பிரசவ வலியை அதிகப்படுத்த ‘ஆக்ஸிடோசின்’ மருந்தை குளுக்கோஸில் கலந்து கர்ப்பிணிக்கு ஏற்றுவதுண்டு. இதுவும் பலன் தரவில்லை எனும்போது மருத்துவரே பனிக்குடத்தை உடைத்துவிட்டுப் பிரசவம் சுலபமாக நிகழக் காத்திருப்பதும் உண்டு.
* இரண்டாம் கட்டம்
குழந்தை பிறக்கிற பரபரப்பான நேரம் இது. கருப்பையின் வாய் திறந்து, குழந்தையின் தலை தெரிந்ததும், பிரசவத்துக்கென்றே உள்ள கட்டிலில் கர்ப்பிணியைப் படுக்கச் சொல்கிறார்கள். இந்தப் பூமியில் உதிக்கப்போகும் அந்தப் புதிய உயிர் வருகின்ற ‘ஜனனப் பாதை’யை முதலில் சுத்தப்படுத்துகிறார்கள். பிறகு வயிறு உட்பட அந்தப் பகுதி முழுவதையும் சுத்தப்படுத்துகிறார்கள்.
கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் சிறிய அளவில் ‘வலி மரப்பு ஊசி’ (Local anaesthesia) செலுத்தப்படுவதும் உண்டு. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஒருவேளை குழந்தை வெளியில் வர முயற்சிக்கும்போது, பிறப்புறுப்புத் துவாரம் குழந்தையின் தலை அளவுக்குப் போதவில்லை என்றால், பிறப்புறுப்பைக் கொஞ்சம் கத்தரித்து, துவாரத்தைப் பெரிதுபடுத்தி, குழந்தைக்கு வழிவிடச் செய்வதுண்டு. இதற்கு ‘பிறப்புறுப்புக் கீறல்’ (Episiotomy) என்று பெயர்.
பொதுவாக, முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு இது அவசியப்படும். அளவுக்கு அதிகமாக குழந்தையின் தலை இருந்து, அது பிறக்கும்போது, கர்ப்பிணியின் பிறப்புறுப்பு கன்னாபின்னாவென்று கிழிந்துவிடாமல் இருக்கவே, இந்த ஏற்பாடு. பிறப்புறுப்பின் கீழ்ப்புறத்தில் சிறிய கோடுபோல் கிழித்து, பிரசவம் நிகழ்ந்ததும், அதைத் தைத்து மூடிவிடுகிறார்கள்.
இரண்டாவது கட்டத்துக்குரிய நேரம் 30 நிமிடங்கள்தான். அதற்குள் பிரசவம் நிகழ்ந்துவிட வேண்டும். முதல் முறையாக கர்ப்பமடையும் பெண்ணுக்கு இந்தக் காலகட்டம் அதிகமாகலாம். இதில் பிரசவ வலி குறைந்துவிடுகிறது. ஆனால், குழந்தையை வெளித்தள்ளிவிட வேண்டும் எனும் மனநிலை தீவிரமாகிறது.
கர்ப்பிணி கஷ்டப்பட்டு முக்கி, முனகி குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறார். இப்படி முக்கி உதவினால்தான் பிரசவம் சுலபமாகும். இந்த ஒத்துழைப்பு கொடுக்காத கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் தாமதமாகும். அதனால்தான் சமயங்களில் அருகில் உள்ள மருத்துவர்கள் அல்லது செவிலியர் உள்ளிட்ட உதவியாளர்கள் அவரின் வயிற்றை மேலிருந்து கீழாக மிருதுவாக அழுத்திவிடுகின்றனர்.
தேவைப்பட்டால், ‘ஃபோர்செப்ஸ்’(Forceps) எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துகின்றனர். முன்பிரசவக் காலத்தில் முறையான உடற்பயிற்சிகளையும் யோகப்பயிற்சிகளையும் மேற்கொண்டவர்கள் இந்தக் கட்டத்தை எளிதாகக் கடக்கின்றனர்.உடலையே முறுக்கிப் பிழிந்தது போன்ற கடுமையான வலி, அடித்துப்போட்டது போன்ற அயற்சி, தன் மேலிருக்கும் கழிவுகளின் கொசகொசப்பு… இப்படி எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அந்தக் கர்ப்பிணி மிகப் பெரிய சாதனைப் பெருமிதத்துடன் புன்னகை பூக்கும் நேரம் இதோ வந்துவிட்டது.
ஆம்! அவரின் செல்லக் குழந்தை, பத்து மாதம் குடியிருந்த ‘கோயிலை’விட்டு விலகி, மெதுவாக இந்தப் பூமிக்கு வருகிறது. ‘குவா குவா’ எனக் கூக்குரலிடுகிறது. சுகப்பிரசவம் ஆனதில் தாய்க்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சந்தோஷம் ஆர்ப்பரிக்கிறது.
குழந்தை முழுவதுமாக தாயிடமிருந்து வெளியில் வந்ததும் முதல் வேலையாக அதன் தலையைத் தொப்புள்கொடி சுற்றியுள்ளதா என்று பார்க்கிறார் மருத்துவர். அப்படி சுற்றியிருந்தால், அதை முறைப்படி விலக்கிவிடுகிறார். பிறகு, தொப்புள்கொடியைக் கத்தரித்து, குழந்தையையும் தாயையும் தனித்தனியே பிரிக்கிறார். இனி, இதுவரை கருப்பையையும் குழந்தையையும் இணைக்கும் பாலமாக இருந்த நச்சுக்கொடி பிரிந்து வெளியே வர வேண்டும். அதுதான் பிரசவத்தின் மூன்றாம் கட்டம்.
* மூன்றாம் கட்டம்
பெரும்பாலும் எல்லாப் பெண்களுக்கும் குழந்தை பிறந்த பிறகு கருப்பை சுருங்க ஆரம்பித்துவிடும். நச்சுக்கொடி தானாகவே வெளிவந்துவிடும். இதற்கு கால் மணி நேரம்தான் ஆகும். மிகச் சிலருக்கு மட்டும் இது சில பிரச்னைகளை ஏற்படுத்தும். கருப்பையின் உட்புற சுவருக்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் நச்சு, குழந்தை பிறந்து, தொப்புள்கொடி வெட்டப்பட்ட பிறகும், உட்புற சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
குழந்தை பிறந்த பிறகு அரை மணி நேரம்வரை காத்திருந்துவிட்டு, அதை வெளியில் எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் மருத்துவர். கருப்பையின் சுவர் நன்றாக சுருங்கிவிட்டதா, ரத்தப்போக்கு நின்றுவிட்டதா, பிறப்புறுப்பில் ஏதாவது காயம் இருக்கிறதா எனப் பலவற்றைப் பரிசோதித்து, திருப்தியானதும், அவருடைய சந்தோஷத்தைக் கர்ப்பிணியுடன் பகிர்ந்துகொள்கிறார்.
குழந்தை எப்போது அழும்?
பொதுவாக, தாயின் கதகதப்பிலிருந்து வெளிவந்த அடுத்தகணத்தில் எல்லாக் குழந்தைகளும் அழுவதில்லை. தாயின் வயிற்றில் இருந்தபோது, தன்னைச் சுற்றியிருந்த பனிக்குட நீரைக் குடித்துவிட்ட குழந்தைகள் உடனே அழாது. அப்போது திரவங்களை உறிஞ்சி எடுக்கும் கருவி மூலம் குழந்தையின் வாயைச் சுத்தப்படுத்திய பிறகு அது அழத் தொடங்கும்.
பிறக்கும் குழந்தைக்கும் மார்க் உண்டு!
பிறக்கும் குழந்தையின் நிறம், இதயத்துடிப்பு, அனிச்சைச் செயல், தசைகளின் இயக்கம், சுவாசம் ஆகியவற்றைக் கவனித்து ஒவ்வொன்றுக்கும் தனித் தனி மார்க் போட்டு மதிப்பிடும் வழக்கம் ஒன்று உண்டு. ‘அப்கார் அளவு’ (APGAR Score) என்று அதற்குப் பெயர். இதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா, புதிய சூழலுக்கு ஏற்றபடி சரியாக செயல்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதில் பத்துக்குப் பத்து மார்க் எடுத்தால், அது பூரண ஆரோக்கியக் குழந்தை. ஏழு எடுத்தாலும் குழந்தைக்குக் குறைவில்லைதான். மார்க் மிகவும் குறைவாக இருந்தால், குழந்தை புதிய சூழலுக்குச் சிரமப்படுகிறது என்று பொருள். அப்போது அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மருத்துவர் மேற்கொள்கிறார்.
Average Rating