கர்ப்ப கால முதுகுவலி!! ( மருத்துவம்)
கர்ப்ப காலத்தில் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களிலும் மாறுதல்களை உணர்வார்கள் கர்ப்பிணிப் பெண்கள். அப்படி மாற்றத்துக்குள்ளாகும் உறுப்புகளில் அவர்களது எலும்பு மற்றும் தசைகளும் விதிவிலக்கல்ல.
கர்ப்பம் வளர வளர வயிற்றுப்பகுதி பெரிதாகும். அதன் எடை அதிகரிக்கும். அதிகரிக்கும் அந்த எடையானது முதுகு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அழுத்தம் சேர்க்கும். கர்ப்பத்தின் 12 வாரங்களில் அடிமுதுகு வலி சகஜமாக இருக்கும். உடலின் பாஸ்ச்சர் மாறும். அடி முதுகு தசைகளில் அழுத்தம் அதிகரிக்கும்.
வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகளும் பலவீனமாக இருப்பதால் அதுவும் முதுகுவலிக்கு காரணமாகும். அடிமுதுகுப் பகுதியில் உள்ள சயாடிக்கா நரம்பின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக சயாட்டிகா வலி ஏற்படக்கூடும். இந்த வலி பிட்டப் பகுதி யில் தொடங்கி கால் வரை இருக்கும்.
கர்ப்பகால முதுகுவலியை எப்படி தவிர்ப்பது?
40 முதல் 60 சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் முதுகுவலியை உணர்கிறார்கள். ஆனால், சரியான நேரத்தில் கண்டறிந்தால் அதிலிருந்து விலகி வாழவும் அவர்களுக்கு வழிகள் உண்டு. அப்படி சில வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்….
உடற்பயிற்சி
கர்ப்பம் தரிக்கிற முயற்சியில் இருக்கும்போதிலிருந்தே வயிற்றுப் பகுதிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு முதுகுப் பகுதியை பலப்படுத்தும் பயிற்சிகளை கர்ப்ப காலம் முழுவதுமே செய்து வரலாம். அந்தப் பயிற்சிகள் வலியிலிருந்தும் ஓரளவுக்கு நிவாரணம் தரும். நீச்சல் பயிற்சி முதுகு வலியிலிருந்து நிவாரணம் தரக்கூடிய அருமையான பயிற்சி. ஆனால் மருத்துவரிடம் கேட்டுக்கொண்டே கர்ப்ப கால பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாஸ்ச்சர்
கர்ப்பத்தின் போது நாளாக ஆக வயிற்றின் எடை அதிகரிப்பதால் உங்களையும் அறியாமல் முதுகை முன்னோக்கி வளைத்தபடி நிற்பீர்கள். அது தவறு. எப்போதும் போல நிமிர்ந்த நிலையில் நிற்கவே முயற்சியுங்கள்.உட்காரும்போது உங்கள் முதுகு பகுதியானது இருக்கையின் பின் பக்கத்தில் அல்லது குஷனில் சப்போர்ட் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
குறிப்பாக, பொருட்களை கீழிருந்து தூக்கும்போது அப்படியே முன்னோக்கி வளையாதீர்கள். முட்டிகளை மடக்கி பாதி கீழே உட்கார்ந்த நிலையில் பொருளை தூக்கி மார்போடு அணைத்தபடி வைத்துக்கொண்டு பிறகு எழுந்திருக்கவும்.
சப்போர்ட்
முதுகுப் பகுதிக்கு நல்ல சப்போர்ட் தரும்படியான உறுதியான படுக்கையில் தூங்கவும். வலி அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?
* தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்தால் வெந்நீர் பை அல்லது வெந்நீர் நிரப்பிய பாட்டிலை டவலில் சுற்றி வலியுள்ள இடத்தில் இதமாக வைத்துக்கொள்ளலாம். மிதமான மசாஜ் கூட ஓரளவு வலியை குறைக்கும்.
* கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவது சகஜம். பிரசவ நேரம் நெருங்க நெருங்க இந்த தசைப்பிடிப்பு அதிகரிக்கும். அடிக்கடி வரும். ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாகவோ அல்லது கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுச்சத்துக்கள் குறைபாட்டின் காரணமாகவோகூட இது ஏற்படலாம். உடலில் நீர் கோர்த்துக்கொள்வதன் காரணமாகவும் கர்ப்ப காலத்தில் கை, கால்களில் பெண்கள் வலியை உணர்வார்கள். சத்தான சாப்பாடுதான் இதற்கான முதல் தீர்வு.
* கர்ப்ப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை அதிகரிக்கும். கடைசி 3 மாதங்களில் இது தீவிரமாக இருக்கும். கர்ப்பத்தின்போது மொத்தமாக 11 முதல் 16 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். முதல் 3 மாதங்களில் 1 முதல் 2 கிலோ, அடுத்தடுத்த 6 மாதங்களில் மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை அதிகரிக்கலாம். எனவே, முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியதும் அவசியம்.
* முதல் 3 மாதங்களில் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தியும், குமட்டலும் இருக்கும் என்பதால் சரிவிகித உணவை உட்கொள்வதில் சிரமம் இருக்கும். வாந்தி அதிகமுள்ள பெண்களுக்கு அதன் விளைவாக எடை குறைவு ஏற்படும். வாந்தி உணர்வுள்ள பெண்கள் அளவை குறைத்து சின்னச் சின்ன இடைவெளிகளில் சாப்பிடுவதன் மூலம் சத்து இழப்பை சரி செய்யலாம். வாந்தியும் கட்டுப்
படும்.
* கர்ப்பிணிப் பெண்களின் உடலுக்கு மட்டுமின்றி உள்ளே வளரும் கருவுக்கும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களின் தேவை அதிகரிக்கும். நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் இதை பெறலாம். இவை மட்டுமே போதாது. கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் மருத்துவரின் ஆலோசனையுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
*உணவின் மூலம் போதுமான ஊட்டங்கள் கிடைக்கவில்லை என நினைக்கிற கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவரிடம் கேட்டு சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உணவின் மூலம் கிடைக்கும் முழுமையான சத்துக்களுக்கு சப்ளிமென்ட்டுகள் இணையாகாது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
*கர்ப்பத்தின் உள்ளே இருக்கும் கருவானது, தன் எலும்புக்கூட்டின் அமைப்பை முழுமையாக வளர்த்துக் கொள்ள அதிகளவு கால்சியத்தை உறிஞ்சிக்கொள்ளும். கடைசி 3 மாதங்களில் இந்த தேவை அதிகமாக இருக்கும். கர்ப்பிணி பெண் அதற்கேற்ப அதிகளவு கால்சியம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாவிட்டால் குழந்தையானது தன் தாயின் எலும்புகளில் இருந்து அதை உறிஞ்சிக்கொள்ளும்.
*ஓரளவுக்கு கர்ப்பிணிப் பெண்ணின் உடலானது உணவின் மூலம் அதிக கால்சியத்தை உறிஞ்சியும், சிறுநீரில் அதை குறைவாக வெளியேற்றியும் சமாளித்துக்கொள்ளும். ஆனால் முற்றிலும் அப்படி சமாளிக்க முடியாது.
இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்காவிட்டால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தசோகை நோய் வரவும், பின்னாளில் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் வலுவிழப்பு பிரச்னை வரவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பால், பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், நட்ஸ் போன்றவை கால்சியம் அதிகமுள்ளவை என்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
Average Rating