2020 இன் திசைவழி: சோசலிசத்தின் மீள்வருகை!! (கட்டுரை)
காலத்தின் திசைவழிகளைக் காலமே தீர்மானிக்கும் பொழுதுகளில், வரலாறு திருப்பித் தாக்கும்.
எதுவெல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவானதோ, அது மீண்டும் புத்தெழுச்சியோடு எழுந்து மீண்டும் வரும். அது முன்பிலும் வலுவாக, உறுதியாக மீளும்.
2020ஆம் ஆண்டு, அவ்வகையான எதிர்பார்ப்போடு தொடங்கி இருக்கின்றது. பேச விரும்பாத பொருளைப் பற்றி, பேச விரும்பாதவர்கள் பேச வேண்டிய கட்டாயத்துக்குக் காலம் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.
“அவர்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றிப் பேசுகிறார்கள். அப்படியென்றால், ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே?” இவ்வாறானதொரு கேள்வியை பிடல் காஸ்ரோ, 20 வருடங்களுக்கு முன்னர் கேட்டிருந்தார்.
இன்று, சோசலிசத்தின் முடிவு அறிவிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சோசலிசத்தின் மீள்வருகை பேசுபொருளாகி இருக்கின்றது.
இதில் விந்தை யாதெனில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரசாரப் பீரங்கியாகவும் அமெரிக்காவைத் தாண்டி, மேற்குலகில் அரசியல் ரீதியாக, மிகவும் மதிப்புக்குரிய இதழாகவும் திகழும் Foreign Policy சஞ்சிகையின் 2020ஆம் ஆண்டுக்கான முதலாவது இதழ், சோசலிசத்தைத் தலைப்பிட்டு வௌிவந்துள்ளது.
‘சோசலிசம்: ஏன் மீண்டுள்ளது; இதன் விளைவுகள் என்ன?’ (Socialism: Why it is back and what it means) என்பதாக அமைந்துள்ளது. முதலாளித்து வத்தையும் உலக மயமாக்கலையும் முன்மொழியும், ஆதரிக்கும் ஒரு தீவிர வலதுசாரி இதழ், இவ்வாறான தலைப்பொன்றை வழங்கி, அதைப் பேசுபொருளாக்கி இருக்கின்றது என்றால், அதற்கு வலுவான காரணங்கள் உண்டு.
இன்று, மேற்குலக நாடுகளில் குறிப்பாக, அமெரிக்காவில் புதிய இளந்தலைமுறை யினரிடையே சோசலிசத்துக்கும் சோசலிச சிந்தனைகளுக்கும் வலுவான ஆதரவு உண்டு. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் செல்வாக்குப் பெற்றுள்ள சோசலிசம், இப்போது முதலாளித்துவத்தின் தொட்டில் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்காவிலும் பாரிய செல்வாக்கைப் பெற்றுள்ளது.
இது முதலாளித்துவத்தின் தோல்வியின் விளைவிலானது; உலகமயமாக்கலின் துர்விளைவின் பயனானது.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறியதும், நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் உலகமயமாதலும் மூலதனத்தின் அசைவாற்றலும் 1980களிலிருந்து ஓர் அரசியல் சக்தியாக, நவதாராளவாதம் கண்ட எழுச்சியுடன் சேர்ந்து கொண்டன. அவை, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமான அரசு ஆற்றிய பங்குக்குக் குழி பறித்தன.
மூன்றாம் உலகில், அவற்றின் விளைவுகள் மேலும் கடுமையானவை. அரசின் மீது ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களின் காரணமாக, அரசு தனது சமூகப் பொறுப்பைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது.
அதன் விளைவாக அரசு வழங்கி வந்த சொற்ப சமூகப் பாதுகாப்பு நிவாரணம் மட்டுமன்றி, அரசு பொறுப்பெடுத்து இருந்த கல்வி, உடல்நலன், பொதுசனப் போக்குவரத்து, நீர் வழங்கல் ஆகிய அத்தியாவசிய சேவைகள் மெல்லச் சிதைந்து இல்லாமல் போயின.
சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்வது, அரசின் கடமையன்று என்ற கருத்தாக்கம் வலுப்பெற்றது. சமூகப் பாதுகாப்பை வழங்கும் ஓர் அமைப்பு எனும் வகையில், அரசின் வகிபாகம் தொடர்ச்சியாகக் குறைந்தது. சந்தைகளும் சந்தைப் போட்டிகளும் அனைத்தையும் தீர்மானிக்கத் தொடங்கின.
இதன் மறுபுறம், சொத்துக் குவிப்பு ஆகும். ஒரு சதவீதத்தினரைப் பெருஞ் செல்வந்தர்களாகவும் ஏனைய 99 சதவீதத்தினரை ஏழைகளாகவும் வைத்திருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் அரசுகள், செல்வந்தர்களின் காவலர்களாக மாறின. அரசாங்கங்களும் ஆள்வோரும் ஒரு சதவீதத்தித்தினரின் பிரதிநிதிகளாயினர்.
முதலாளித்துவத்தினதும் அதன் வழிவந்த சுரண்டலையும் தக்கவைத்துப் பாதுகாக்கும் செயலை அரசுகள் முழுமூச்சுடன் செய்யத் தொடங்கியவுடன், மக்களுக்கு அரசின் மீதிருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது.
முதலாளித்துவத்தின் மோசமான விளைவுகளை, மக்கள் மென்மேலும் உணரத் தொடங்கியதன் பின்னணியில், சோசலிசம் பேசுபொருளாக உள்ளது.
இன்று, இளையோர் மத்தியில் சோசலிசத்தின் மீதான கவனமும் ஆர்வமும் அதிகரித்துள்ளன. முதலாளித்துவத்தின் கோர விளைவுகளை அனுபவிக்கும் தலைமுறைகள், சமூக நலன்களை அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அரசுகள் சமூக நல அரசுகளாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதைச் சோசலிசமே சாத்தியமாக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், சோசலிச முகாம் உருவானது; அது சோவியத் ஒன்றியத்தை மய்யப்படுத்தி அமைந்தது. முதலாளித்துவ முகாம், அமெரிக்காவை மய்யப்படுத்தி அமைந்தது.
இரண்டாம் உலகப் போரின் பின்பு, மாறிமாறி எங்காவது பேரழிவு மிக்க போர்கள் நடைபெற்றவாறே இருந்தன. கொலனிய மேலாதிக்கத்துக்கு எதிரான போர்களும் அந்நிய ஆக்கிரமிப்புக்கும் மேலாதிக்கத்துக்கும் எதிரான போர்களும் அவற்றில் முக்கியமான ஒரு பகுதியாவன. உள்நாட்டுப் போர்களும் அதேயளவு முக்கியமானவையாக இருந்துள்ளன. இவற்றிலெல்லாம் ஏகாதிபத்தியம், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம், ஏதோ வகையில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.
அக்காலத்தில் வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியாக இருந்த சோவியத் ஒன்றியம், மக்கள் ஆட்சி பலவற்றுக்கு ஆதரவளித்ததன் மூலம், அவற்றைத் தக்கவைக்கவும் அவை கவிழாமல் இருக்கவும் வழி செய்தது.
பிற்காலத்தில், வலிமையில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு நிகரான உலக வல்லரசாக, சோவியத் ஒன்றியத்தை நிலைநிறுத்தும் முனைப்புடன் மூன்றாம் உலகத்தின் மீது மேலாதிக்கப் போக்கில் நடந்தமை, சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான, அமெரிக்கக் குழிபறிப்பு வேலைகளை வலுப்படுத்தியது.
அந்த நோக்கத்துடன், சோசலிச ஆட்சிகள் நிலவிய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆட்சிகள் இருந்த நாடுகளிலும் பலவாறான குறுக்கீடுகள் நிகழ்ந்தன. இவற்றில் பல தேசிய இனங்களினதும் தேசங்களினதும் விடுதலைக்கான போராட்டங்களுக்கு ஆதரவு என்ற தோற்றத்தைக் காட்டின.
விடுதலைப் போராட்டங்களுக்குக் குழிபறிக்குமாறும் தேசிய சிறுபான்மையினங்கள் தூண்டிவிடப்பட்டன. இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஏகாதிபத்தியத்துக்குச் சவால் விடும் நிலையிலிருந்த சோவியத் ஒன்றியத்தின் உடைவு, சோசலிசத்தின் சரிவுக்கு வழி கோலியது.
அமெரிக்கா, தனிப்பெரும் உலக வல்லரசாக மாறிய அவ்வேளை, பிரான்சிஸ் புக்குயாமா சோசலிசத்தின் மரணத்தை ‘வரலாற்றின் முடிவு’ என்று அறிவித்தார்; இது கவர்ச்சிகரமான ஒரு கோஷமானது.
இதன் பின்புலத்தில், முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் காவிச் செல்லும் கருவியாக, உலகமயமாக்கல் மாறியது. உலகமயமாக்கல், சந்தைகளை ஒன்றிணைத்து மனிதர்களைப் பிரித்தது; ஏனெனில், மனிதர்கள் ஒன்றுபடாமல் அவர்கள் தனித் தனியான நுகர்வோராக இருக்கும்போதுதான், அவர்களை உலகச் சந்தையின் நோக்கத்துக்காகச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.
சமத்துவ அரசியலை அகற்றி, அந்த இடத்தில் வேற்றுமை அரசியலை உருவாக்கும் போர்க் கருவிகளாக, உலக அளவில் எல்லையற்ற போட்டிகளும் சமூகத்தில் உருவாக்கப்பட்டன.
மூலதனத்தின் நேரடி ஆதிக்கத்திலிருந்து இந்த உலகின் எந்தவொரு முக்கிய இடமும் தப்பவில்லை என்கிற வகையில், சோவியத் ஒன்றியம் கலைந்து போனதும், சீனா உலகச் சந்தையோடு முழுமையாக ஐக்கியமடைந்ததும், எல்லைகளற்ற வகையில் இந்த உலகமயமாக்கல் உலகம் முழுவதும் விரிந்து பரவ வழிவகுத்தது.
எனவே, முன்னாள் கொலனிகள் ஓளரவு தொழில்மயமாவதும், உலகின் பெரும்பகுதி விவசாயம், பணப் பொருளாதார அடிப்படையில் மாறுவதும் பணச்சந்தைக்கு அல்லாத விவசாய உற்பத்தி உலகில் குறைந்து வருவதும் உலகம் முழுவதும் ஒரே வித மதிப்பு விதியின் கீழ் திறமையாக கொண்டு வரப்பட்டதைக் குறிக்கிறது.
இது காலப்போக்கில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும் ஏழைகள் பரம ஏழைகளாகவும் வழிசெய்தது.
இன்று மேற்குலகெங்கும், குறிப்பாக அமெரிக்காவில் இந்தப் பொருளாதார அமைப்பு முறையை, இளந்தலைமுறையினர் வெறுக்கிறார்கள்.
Foreign Policy இதழின்படி, அமெரிக்காவில் 45 வயதுக்குக் குறைந்தோரில் 40 சதவீதமானவர்கள், சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். 30 வயதுக்குக் குறைந்தோரில் 65 சதவீதமானவர்கள் சோசலிசத்தைத் தீர்வாகக் காண்கிறார்கள்.
அமெரிக்க அதிகார அடுக்கு, பேர்னி சாண்டர்ஸ் போன்ற சோசலிசவாதி, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வந்து விடுவாரோ என்று அஞ்சுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளவும் சோசலிசத்தை வீழ்த்தவும் தயாராக இருக்க வேண்டும் என்று கோருகிறது.
இனிவரும் காலத்துக்கான போராட்டக்களங்களும் பிரிகோடும் தெளிவானவை. அதிகாரத்தில் இருந்து சுரண்டலை ஆதரித்து நிகழ்த்தும் அதிகாரத்துக்கும் அன்றாட வாழ்வுக்குப் போராடும் எளிமையான மக்களுக்கும் இடையிலான போராட்டங்கள் தவிர்க்கவியலாதவை. இதை, மேற்குலகின் எந்தவோர் அரசும் புரிந்து கொள்ளப் போவதில்லை.
கடந்த சில ஆண்டுகளில் ‘வோல்ஸ்ரீட்’ முற்றுகை, மஞ்சள் மேற்சட்டைக்காரர்கள், ஆசிரியர்கள், ரயில்வே ஊழியர்கள் எனக் களங்கள் விரிந்துள்ளன. உண்மை யாதெனில், இனிவரும் காலத்தில் இந்தப் போராட்டங்கள் வெறும் தேர்தல் களங்களுக்குள் மட்டும் நின்றுவிடாது. அதையும் தாண்டி, அவை பயணிக்கும்.
இன்று, புதிய தலைமுறை, போராட்டக் குணத்தோடு களத்தில் நிற்கிறது. இது உலக அரங்கின் திசைவழியில் மாற்றங்களை நிகழ்த்தும். அவற்றில் சில ஆச்சரியமான மாற்றங்களாக இருக்கும்.
Average Rating