தனியார்மயமாகிறதா அரசு மருத்துவமனைகள்?! (மருத்துவம்)
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு ‘நிதி ஆயோக்’. சமீபத்தில் இந்த நிதி ஆயோக் அமைப்பு, மத்திய அரசிடம் ஒரு பரிந்துரையை முன் வைத்திருக்கிறது. மருத்துவமனைகளை நடத்துவதில் அரசின் சுமையைக் குறைக்கும் வகையில், ‘மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து விடலாம்’ என்று பரிந்துரை செய்திருக்கிறது.
‘அரசு மாவட்ட மருத்துவமனைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைத்தல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள 250 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தில் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு வழங்குவது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிறைவேற்றும் அளவுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் போதிய நிதி உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லை என்றும் அத்தகைய சூழலில் அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தனியாரை அனுமதிக்கலாம் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது.
நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ள இந்த பொது-தனியார் பங்கேற்பு திட்டத்திற்கான வழிகாட்டும் கொள்கைகள் சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சலுகைக் கட்டணத்தில் மருத்துவக் கல்லூரியை வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாவட்ட மருத்துவமனையை இயக்கும் மற்றும் பராமரிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வழிகாட்டுதல்களை ஆர்வமுள்ள மாநிலங்கள் அல்லது குறிப்பாக, சுகாதாரத் துறையில் நிதி திரட்ட போராடும் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளை குறிக்கோளாக கொள்ளாத மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்படலாம்’ என்று சொல்கின்றனர்.
பரந்த கலந்தாலோசிப்புகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த வரைவு, மருத்துவக் கல்லூரிகளின் பற்றாக்குறை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் மேம்பாடு போன்ற பிரச்னைகளை தீர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது அரசின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒரு திட்டம் என்றே கருத வேண்டியிருக்கிறது. இதற்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர். தற்போது, அரசு மருத்துவர்களும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
‘அரசியலமைப்பில் மக்களின் சுகாதாரம் மத்திய, மாநில அரசுகளால்தான் காக்கப்பட வேண்டும் என்றிருக்கிறது. நிதி ஆயோக் முன்வைத்துள்ள இந்த யோசனை மக்களின் சமூக நீதியையும், சமூக பாதுகாப்பையும் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகும். மாவட்ட அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அந்த மருத்துவமனைகளில் உள்ள மொத்தப் படுக்கைகளில் பாதியளவு கட்டண படுக்கைகளாகவும், மீதமுள்ளவை இலவச படுக்கைகளாகவும் மாற்றப்படும். கட்டணப் படுக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, ஏழைகளுக்கு இலவசப் படுக்கைகளில் இலவசமாக மருத்துவம் அளிக்கப்படும் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது.
இது நடைமுறை சாத்தியமில்லை. அரசு மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளிலும் இலவசமாக மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் பாதியை கட்டண படுக்கைகளாக மாற்றுவது எந்த வகையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும். அதுமட்டுமின்றி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே இருக்கும் விதி, பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்த சூழலில் தனியார் நிர்வாகத்தில் நடக்கும் அரசு மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளில் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இது ஏழைகளுக்கு கிடைக்கும் இலவச மருத்துவத்தை தடுத்துவிடும்.
நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரை இன்றைய சூழலில் தேவையற்றதாகும். மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. நாட்டிலேயே அதிக மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 159 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து, அவர்கள் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன?
மாவட்ட அரசு மருத்துவமனைகளையும், சுகாதார மையங்களையும் சார்ந்தே தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் இருக்கின்றனர். நிதிச்சுமையை காரணமாக வைத்து மாவட்ட மருத்துவமனைகளை தனியாருக்கு விட்டால், பல்வேறு எதிர்வினைகள் ஏற்படும். இத்தனை காலமாக மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மருத்துவச் சேவைகளை இனிவரும் காலங்களில் உறுதி செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், இது வரி செலுத்திய மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
ஏற்கனவே கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக அதிகம் செலவழிப்பதால்தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடனாளி ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக நீரிழிவு, இதயம், புற்றுநோய் போன்ற வாழ்வியல் நோய்களுக்காக நம் நாட்டு மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தில் முக்கால்வாசியை செலவழித்து வருகிறார்கள். பல உலக நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் சூழலில், ஏற்கனவே அதிக பளுவை தாங்கும் நம் மக்களை மேலும் சுமைக்கு உள்ளாக்குவது எவ்விதத்தில் நியாயம்?
ஏற்கனவே கார்ப்பரேட் மருத்துவமனைகள் வணிக ரீதியாக கொழித்துக் கொண்டிருக்கும் மருத்துவத்துறையில், இந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டால், ஏழை மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும். அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகள் இரண்டிலுமே எந்த விதிமுறைகளும் வரைமுறைப்படுத்தவில்லை என்கிறபோது, தரமான சிகிச்சைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
எனவே, தனியாருக்கு மட்டும் பயனளிக்கக்கூடிய நிதி ஆயோக்கின் யோசனையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, மாவட்ட மருத்துவமனைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்துவதும், விரைவுபடுத்துவதும் அவசியம்.
Average Rating