என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் தலைமைகள்? (கட்டுரை)

Read Time:18 Minute, 29 Second

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பத்திகளில், 2015 தோல்விக்குப் பின்னரான, மீண்டெழும் படலத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றி குறிப்பிடும் போது, இந்தத் தேர்தலில், ‘ராஜபக்‌ஷ என்ற ஆளுமையும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத வாக்குவங்கியும் தான் அவர்களது அரசியல் மூலதனம்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதன்படியே ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் இலகுவான வெற்றியை ஈட்டியிருந்தார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தௌிவாக, ‘இந்த தேர்தலின் பிரதான செய்தியானது, பெரும்பான்மை சிங்கள வாக்குகளே, நான் ஜனாதிபதியாக வெற்றி பெறக் காரணம்’ என்று வௌிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில், தேசியக் கட்சிகள் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத நிகழ்ச்சி நிரலில் இயங்கினாலும், ஓரளவுக்கேனும் அவை சிறுபான்மையினரை மகிழ்வூட்டும் (minority appeasing) என்ற நோக்கில், சின்னச் சின்ன விடயங்களைச் செய்வதுண்டு.

ஆனால், கோட்டாபயவையும் ஆளும் பொதுஜன பெரமுனவையும் பொறுத்தவரையில், “இதெல்லாம் தேவையில்லை; இந்தநாட்டின் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ‘சிங்கள-பௌத்தர்கள்’. அவர்களில் மிகப்பெரும்பான்மையினரைத் திருப்திசெய்தால், அதுவே தமது ஆட்சியைத் தக்கவைக்கப் போதுமானது” என்பதே, அணுகுமுறையாகத் தெரிகிறது.

அதனால்தான், ஒப்புக்கேனும் சிறுபான்மையினருக்கு மகிழ்வூட்டும் காரியங்களையும் கைங்கரியங்களையும் கூட, கோட்டா தலைமையிலான அரசாங்கம் இதுவரை செய்யவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என்ற பேச்சு, வலுப்பெற்றது இதற்கு ஓர் உதாரணம்.

தமிழில் தேசிய கீதம் பாடுதல் என்பது, தமிழ் மக்களின் எந்தவோர் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யப்போவதில்லை. அது, இலங்கையை ஒரு ‘சிவில் தேசமாக’க் கட்டியெழுப்பும் நிகழ்ச்சிநிரலின் ஓர் அங்கம் மட்டுமே.

அது, நல்லெண்ணத்தை வௌிப்படுத்தும் வகையிலான, நல்லிணக்க நடவடிக்கையின் ஒரு சிறு படி மட்டுமே. ஆனால், அதைக்கூட ராஜபக்‌ஷக்கள் செய்ய விரும்பவில்லை.

இதற்குக் காரணம், ராஜபக்‌ஷக்கள் இன்று முன்னெடுத்துவரும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியல் சித்தாந்தம் ஆகும். தமது வாக்குவங்கி எது என்பதில், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷக்கள் மிகத்தௌிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். அதுவே, மாற்றுச் சக்திகளால் அசைக்க முடியாத வாக்குவங்கி என்பதிலும் அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்.

எனவே, அவர்களுடைய முழு எண்ணமும் திட்டமும் நிகழ்ச்சிநிரலும் தம்முடைய வாக்குவங்கியைப் பலப்படுத்துவதிலேயே இருக்கிறது.

அதற்கு ‘சிங்கள-பௌத்த’ இனத்தேசியவாதத்தை, பெருந்திரள்வாத (populism) வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, தமது அரசியல் தந்திரோபாயத்தை முன்னெடுக்கிறார்கள். இனத்தேசிய பெருந்திரள்வாதத்தின் சுருக்கமான அடிப்படை, ‘நாம் – எதிர் அவர்கள்’ என்பதாகும்.

பெருந்திரள்வாதத்தை வரையறுக்க முயலும் அல்பெடட்ஸியும் மக்டொன்னெலும், பெருந்திரள்வாத சிந்தாந்தம் என்பது, ஒன்றுபட்ட தன்மைகளையுடைய ஒரு மக்கள் கூட்டத்தை, அந்த இறைமையுள்ள மக்கள் கூட்டத்தின் அதிகாரங்கள், விழுமியங்கள், சௌபாக்கியம், அடையாளம், குரல் ஆகியவற்றை இல்லாதுசெய்யும், இல்லாதுசெய்ய முயற்சிக்கும் ஆபத்தான ‘மற்றையவர்களுக்கு’ எதிராகக் குழிபறிக்கச்செய்யும் என்று குறிப்பிடுகிறார்கள்.

சுருங்கக்கூறின், ஏதோவோர் அடிப்படையில், தம்மை ஒரு மக்களாக அடையாளங்காணும் மனிதக்கூட்டமொன்றைத் தம்மில் வேறுபட்ட ‘மற்றையவர்களுக்கு’ எதிராக நிறுத்தும் சித்தாந்தமே பெருந்திரள்வாதமாகும்.

உலகெங்கும் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுவரும் இந்தப் பெருந்திரள்வாத எழுச்சி அலையின் ஓர் அங்கமாகவே, ராஜபக்‌ஷக்களின் மீளெழுச்சியையும் நாம் பார்க்கலாம்.

இந்துத்துவ தேசியவாத மோடி, கிறிஸ்தவ-ஹங்கேரிய தேசியவாத விக்டர் ஓபான், அமெரிக்க தேசியவாத ட்ரம்ப், துருக்கி தேசியவாத ஏர்டோகான், பிரித்தானிய தேசியவாத – ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புவாத பொறிஸ் ஜோன்ஸன் எனப் பெருந்திரள்வாதிகளின் வெற்றிப்பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

இந்த அடிப்படையில், நாம் இலங்கையில் ராஜபக்‌ஷகளையும் இந்தப் பட்டியலில் இணைத்துக்கொள்ள முடியும். பெருந்திரள்வாதிகள், ‘மக்கள்’ என்று அடையாளப்படுத்தும் மக்கள் கூட்டத்தை மய்யமாகக் கொண்டு மட்டுமே, தமது அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

தமது மக்களுக்கு எதிராக, இன்னொரு கூட்டம் (அதனை தொழில்நுட்ப ரீதியில் ‘உயர்குழாம்’ என்று சுட்டுவார்கள்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறது; ஆகவே அவர்களின் சதியைத் தோற்கடித்து, உண்மையான தமது ‘மக்களின்’ ‘மக்களாட்சி’ ஏற்படுத்தப்பட்டு, தமது ‘மக்களின்’ இறைமையும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சூளுரையுடன்தான் இந்தப் பெருந்திரள்வாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பெருந்திரள்வாதத்துடன், இனத்தேசியம் ஒன்றிணையும்போது அல்லது இந்தப் பெருந்திரள்வாத வாகனத்திலேறி, இனத்தேசியம் பயணிக்கும்போது, ஓரினம் மற்றைய இனத்தை ‘அந்நியர்களாகவும்’ தமது இறைமையை, உரிமைகளைச் சவாலுக்கு உட்படுத்துவபவர்களாகவும் பார்க்கச்செய்யப்படுவதுடன், மற்றைய இனத்தின் இந்தச் சதியைத் தோற்கடிப்பதே, தமது இனத்தின் அரசியல் நோக்கமாகக் கட்டமைக்கப்படுகிறது.

இந்தச் சிந்தனையை மக்களிடம் விதைப்பதன் மூலம், தமது வாக்குவங்கியை அரசியல்வாதிகள் இலகுவாகப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.

ராஜபக்‌ஷக்கள் இந்த வழியில் தொடர்வதில், தௌிவாக இருக்கிறார்கள் என்பதே, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னருமான அவர்களது நடவடிக்கைகள் சுட்டிநிற்கின்றன.
இந்த நிலையில், தமிழ்த் தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான், இன்று தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் முக்கிய கேள்வி ஆகும்.

முன்னைய ஒன்றிரண்டு பத்திகளில், சுட்டிக்காட்டி இருந்ததைப் போலவே, இன்றைய தமிழ்த் தலைமைகளின் முதல் பிரச்சினை, அவர்களுக்கு இடையிலான குழாயடிச் சண்டைகளாகவே இருக்கின்றன.

தமிழ் அரசியலின் பெருமளவு சக்தி, அதற்காகவே செலவிடப்படுகிறது. இதனால், தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அபிலாசைகளுக்கோ, தமிழ்த் தேசியத்துக்கோ, தமிழ் மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த நலன்களுக்கோ, எந்த நன்மையும் விளையப்போவதில்லை.

இதைவிட முக்கியமாக, தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக வேண்டி நிற்கும் அரசியல் தீர்வு தொடர்பிலும், எந்த முன்னகர்வும் ஏற்படப்போவதில்லை.

தமிழ் அரசியல் ஒரு குட்டைக்குள் தேங்கிக்கொண்டு வருகிறது என்பதுடன், அது உள்ளுக்குள் அழுகிக்கொண்டு வருவதும் அதிலிருந்து வரும் நாற்றத்தைக் கொண்டு உணரக்கூடியதாக உள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, ஆரம்பகாலத்தில் இடதுசாரிகளின் தேசியவாத விழுமியங்களைப் பற்றிக்கொண்டிருந்ததை நாம் அவதானிக்கலாம்.

போராட்டகாலத் தமிழ்த்தேசியம் என்பது கூட, ஸ்ராலினிய தேசியவாத வரையறையின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இடதுசாரிய அணுகுமுறை என்பது, ஒரு வகையில் தமிழ்த் தேசியத்தை, சாதி, மத, பிரதேச, பிராந்திய வேறுபாடுகளை ஓரளவுக்கேனும் கடந்து, ஒரு குடையின் கீழ், தமிழ் மக்களை இணைக்க வழிசமைத்தது எனலாம்.

ஆனால், அதனைத்தாண்டித் தமிழ்த் தேசியம், பரிணாமவளர்ச்சி அடையாமையானது, தமிழ்த் தேசிய அரசியல் முட்டுச் சந்திக்குள் முடங்கிய நிலையையே சுட்டிக்காட்டி நிற்கிறது.

சமகாலத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடானது, இந்தப் பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகளுக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் ஆயுதப் போராட்டம் நீடித்த காலம் வரை முக்கியத்துவம் பெறமுடியாது போன, 2009இன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலைபெற்ற ‘தாராளவாதிகளுக்கும்’ இடையிலான முரண்பாடாகும்.

சிந்தாந்தக் கண்கொண்டு பார்த்தால், சமகால தமிழ்த் தேசிய அரசியலின் உள்முரண்பாடு என்பது, பாரம்பரிய தேசியவாதிகளுக்கும் தற்போது புதுப்பலம் பெற்றிருக்கும், தாராளவாதத் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடாகும்.

போராட்ட காலத்தில், ஆயுதப் போராட்டக் குழுக்களால், ‘துரோகிகள்’ என்று முத்திரை குத்தப்பட்ட, தமிழ்த் தேசிய அரசியலின் தாராளவாதிகள், 2009இன் பின்னர், மீளெழுச்சி கண்டார்கள்.

மேற்கின் தாராளவாத அரசாங்கங்களும் பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகளோடு இயங்குவது கடினம் என்று கருதிய இந்தியாவும், தமிழ் அரசியலில் தாராளவாத தலைமைகளைப் பலப்படுத்த உதவிசெய்தன.

‘மென்வலு’ அரசியல், விட்டுக்கொடுப்புகளுடனான பேச்சுவார்த்தை முன்னகர்வுகள், சிறிது சிறிதான அடைவுகள், சகிப்புத்தன்மை என இந்தத் தாராளவாதத் தமிழ்த் தலைமைகளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருந்தது.

தமிழ் மக்களிடையே, ஆரம்பத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழ் மக்களின் கணிசமானவர்கள், இந்தப் புதிய அணுகுமுறையை வெறுக்கவில்லை.

2015இல் ஏற்பட்ட அரசியல் மாற்றம், ஒப்பீட்டளவில் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டமைந்த இலங்கை அரசாங்கம், அந்த அரசாங்கத்தோடு இந்தத் தாராளவாத தமிழ்த் தலைமைகள் கொண்டிருந்த நல்லுறவு என்பவை, தாராளவாதத் தமிழ்த் தலைமைகள், தமது காய்நகர்த்தல்களை ஓரளவு வெற்றிகரமாக முன்னெடுக்க வழிசமைத்தது.

ஆனால், மறுபுறத்தில் ஆளும் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் தாராளவாத முகமும், தமிழ்த்தேசிய அரசியலின் தாராளவாத முகமும் ‘சிங்கள-பௌத்த’ தமிழ்த் தேசியவாதிகளையும் ‘தமிழ்த் தேசியவாதிகளையும்’ அவர்களிலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டு வந்தது.

தமிழ் மக்களின் பிரதான கட்சியை, தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுதான், இந்தத் தாராளவாத தமிழ்த் தலைமைகளின் முக்கிய வெற்றி எனலாம். இது தமிழ் அரசியலைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, அவர்களுக்கு உதவி செய்தது.

ராஜபக்‌ஷக்கள் உருவாக்கியது போன்ற ஒரு மாற்றுச் சக்தியை, பாரம்பரிய தமிழ்த் தலைமைகளால் உருவாக்க முடியாது போனதற்கு, முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன.
ஒன்று, ராஜபக்‌ஷவை ஒத்த ஒரு வலுவான ஆளுமை, அவர்களிடம் இல்லை.

இரண்டு, தாராளவாதிகளை எதிர்க்கும் பாரம்பரிய தேசியவாதிகளிடம் ஒற்றுமை இல்லை.
தாரளவாதத் தமிழ்த் தலைமைகளை, நாம் ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லிவிட முடியாது. நல்லாட்சி அரசாங்கம் இருந்தபோது, சிலபல சாதகமான அடைவுகளை அவர்கள் பெற்றிருந்தார்கள்.

ஆனால், ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் களம் மாறியுள்ளது. மாறியுள்ள இந்தக் களத்தில், அவர்களால் ஒரு காய்நகர்த்தலையும் செய்ய முடியாது போயுள்ளது என்பதுதான் உண்மை.

இலங்கையின் வௌிநாட்டுக் கொள்கை அணுகுமுறையை, ராஜபக்‌ஷக்கள் யாரையும் பகைத்துக்கொள்ளாத, எல்லாச் சர்வதேச சக்திகளையும் முடிந்தவரை அரவணைக்கும் அடிப்படையில், கொண்டு நகர்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

தமது நலன்கள் பாதிக்காத வரை, எந்தச் சர்வதேச சக்தியும் இந்த அரசாங்கத்துடன் முரண்படாது. ராஜபக்‌ஷக்கள் 2015இல் இருந்ததை விட, தற்போது இன்னும் பலம்பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.

ராஜபக்‌ஷக்கள் எதோவொரு பலமான சர்வதேச சக்தியுடன் முரண்படும் வரை, சர்வதேசத்தின் அர்த்தம்மிக்க ஆதரவை, தமிழ்த் தலைமைகள் எதிர்பார்க்க முடியாது.

மறுபுறத்தில், ராஜபக்‌ஷக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும் தமிழ்த் தலைமைகளிடம் எதுவிதப் பிடியும் இல்லை.

எந்த வகையிலான பேரம் பேசும் சக்தி, தமிழ்த் தலைமகளிடம் இன்று இருக்கிறது என்பதும் கேள்விக்குறியே. அப்படியே, பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், விட்டுக்கொடுப்புகள் எதையும் செய்ய வேண்டிய நிலையில் ராஜபக்‌ஷக்கள் இல்லை.

ஏனென்றால், அவர்கள் விட்டுக்கொடுத்தால், அவர்களது ‘சிங்கள-பௌத்த’ பெருந்திரள்-தேசியவாத வாக்குவங்கி பாதிக்கப்படும்; அவர்கள் விட்டுக்கொடுக்காதவரை, அவர்களுடைய அந்த வாக்குவங்கியும் பாதுகாப்பாக இருக்கும்.

இந்தச் சந்தியில்தான், அடுத்த காய்நகர்த்தல் என்னவென்று அறியாது தமிழ்த் தலைமைகள் ‘செக்’ நிலையில் நிற்கின்றன.

கடந்த மாதங்களாகத் தமிழ்த் தலைமைகள் அமைதி காப்பதற்கும், வெறுமனே தம்மிடையேயான கட்சிச் சண்டைகளில் மட்டும் கவனம் செலுத்துவதற்கும், இதுவே காரணம் எனலாம்.

ஏப்ரல் மாதத்தில், பொதுத்தேர்தல் வரலாம் என்ற பேச்சுகள் உள்ள நிலையில், அடுத்த தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் எப்படிச் சந்திக்கப் போகிறார்கள்?

தமிழ் மக்களிடம் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதுதான், இன்று தொக்கி நிற்கும் கேள்வி ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Xi Jinping – “புதிய வைரஸ் வேகமாக பரவுகிறது”!! (வீடியோ)
Next post துணையை கவரும் மசாஜ் விளையாட்டு!! (அவ்வப்போது கிளாமர்)