டாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 12 Second

அன்புத் தோழி, எனக்கு வயது 42. அவர் தூரத்து சொந்தம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்டனர். எனக்கும் பிடித்ததால் காதலால் கசிந்துருகி திருமணம் செய்தேன். கசிந்த அன்பினால் ஆரம்பத்தில் இனிமையாகத்தான் போனது வாழ்க்கை. நாங்கள் இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலையில் இருந்தோம். எங்களுக்கு அதிகம் ஆசைப்படும் பழக்கம் இல்லை என்பதால் வந்த வருமானம் போதுமானதாக இருந்தது. ஊருக்கு செல்ல, பண்டிகைகளுக்கு என்று கொஞ்சம் மிச்சமும் பிடித்து வைப்போம்.

அவருக்கு ‘சிகரெட், தண்ணீ’ என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வாழ்க்கையும் அதன் போக்கில் போய் கொண்டு இருந்தது. நண்பருக்கு திருமணம் என்று ஒருமுறை வெளியூருக்கு போனார். திரும்பி வந்தவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், ‘எதற்கு’ என்று கேட்டேன். அதற்கு, நண்பர்கள் வற்புறுத்தியதால் ‘சரக்கு சாப்பிட்டுவிட்டேன்’ என்றார். அவர் அத்தனை உண்மையாக நடந்து கொண்டதால் அதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை. ‘பரவாயில்லை’ என்று சொன்னேன். ஆனால் அந்த ‘பரவாயில்லை’ என் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது.

அதன் பிறகு அடிக்கடி மன்னிப்பு கேட்கும் நிலையானது. சில நாட்கள் மன்னிப்பு கேட்க முடியாத அளவுக்கு போதையில் வருவார். நொந்துப்போனேன். கேட்டால் ‘இனிமேல் நிச்சயமாக குடிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்வார். மன்னிப்பு போல சத்தியமும் அவர் அடிக்கடி உச்சரிக்கும் சொல்லாக மாறிப்போனது. போதைக்கு அடிமையானார். காலையில் எழுந்ததும் ஷாப்பை தேடி போயிடுவார். இரவில் யாராவது தூக்கி வந்து போடுவார்கள். ஒழுங்காக வேலைக்கு போகாததால் அவருக்கு வேலையும் போய்விட்டது. எனது வருமானத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலைமை. அதற்கும் அவர் அடிக்கடி வேட்டு வைத்து விடுவார்.

செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை ‘திருடி’ச் சென்று குடித்து விடுவார். ஒருமுறை எனது பெரிய பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. வீட்டில் இருந்த காசு போதவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். அன்றுதான் அவரும் குடிக்கப் போகாமல் பிள்ளை பக்கத்தில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தார். காசு இல்லாததால் அரசு மருத்துவமனையில் பிள்ளையை சேர்த்து சரியாக்கினோம். அந்த 2, 3 நாட்கள் எங்களுடனேயே இருந்தார்.

அப்போதுதான் சொன்னார், ‘நான் குடிக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்று எனக்கு நல்லா தெரிகிறது. ஆனால் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால் வேறு எதுவும் பெரிதாக தெரிவதில்ைல’ என்று சொல்லி அழுதார். அதன்பிறகு எனது அப்பாவின் ஆலோசனையின்படி குடிமறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்தோம். அங்கு 3 மாதங்கள் இருந்தார். சரியாகித்தான் வந்தார். ஆனால் அத்தனையும் சில நாட்கள்தான். மீண்டும் மதுவை தேட தொடங்கி விட்டார். பழைய பிரச்னைகள் வழக்கம் போல் தலை தூக்கி விட்டன.

கையில் இருக்கும் காசை பிடுங்கிக் கொண்டு சென்று விடுகிறார். சில நேரங்களில் வீட்டில் இருக்கும் பொருட்கள் காணாமல் போய்விடுகின்றன. என்ன செய்வது… எத்தனை சண்டைப் போட்டும் பலனில்லை. என் சம்பளத் தேதியன்று நேராக அலுவலகத்துக்கு வந்து விடுகிறார். காசு கொடுக்கவில்லை என்றால் தகராறுதான். எல்லோர் முன்னிலையிலும் அசிங்கமாக பேசுகிறார். அப்படியே கூனிகுறுகிப் போகிறேன். எதுவும் பேச முடியாமல் கையில் இருக்கும் காசை எடுத்து கொடுக்க வேண்டிய நிலை.

என்ன செய்வது என்று தெரியவில்லை. என் கணவரை என்ன செய்வது என்று புரியவில்லை. எவ்வளவு நாளைக்கு அவரிடம் கஷ்டப்படுவது என்றும் தெரியவில்லை. என் வீட்டில் ‘அவரை விவாகரத்து செய்து விடு’ என்கிறார்கள். வீட்டில் பார்த்த திருமணம் என்றாலும் விரும்பி தான் அவரை திருமணம் செய்தேன். அவரும் என்னிடம் அன்பாகத்தான் இருந்தார். ஆனால் ‘குடி’ எங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டது. எங்காவது ‘டாஸ்மாக்’ கடைகளை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. கோபம் வருகிறது.

ஒருமுறை தோழியின் திருமணத்துக்கு சென்று விட்டு வீடு திரும்ப நேரமாகி விட்டது. டாஸ்மாக் கடை இருக்கும் தெரு வழியாகத்தான் வீட்டுக்கு செல்ல வேண்டும். நான் வீடு திரும்பிய நேரத்தில் தெருவில் யாரும் இல்லை. கீழே இருந்த கற்களை எடுத்து டாஸ்மாக் கடை மீது வீசினேன். அதன் பிறகு பயம் வரவே திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். ஆனாலும் அடுத்த முறை அந்த கடையை பார்க்கும் போது ‘என் வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டீயே’ என்று கோபம் வருகிறது.

அதனால் ஆளில்லாத இரவு நேரங்களில் அந்தப் பக்கம் வரும் போது பலமுறை கடை மீது கற்களை வீசியிருக்கிறேன். ஒருமுறை ‘டாஸ்மாக் கடை மீது மர்மநபர்கள் கல்வீச்சு’ என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. அதன்பிறகு அங்கு போலீஸ் போட்டு விட்டனர். நான் செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளை அழித்து விட்டால் என் கணவர் சரியாகி விடுவார். என் பிரச்னை சரியாகிவிடும்தானே தோழி. யோசித்து யோசித்து திசை தெரியாமல் நிற்கிறேன். அலுவலக வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. குழம்பி போயிருக்கிறேன். எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் குடும்பம் போல் மதுவால் அவலநிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களின் வேதனைச் சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கிறது. இந்த கடைகளால் பல குடும்பங்கள் சீரழிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கும் போது எனக்கும் மனம் உடைந்து போகிறது. மதுக்கடைகள் மீதான உங்கள் வெறுப்பில், கோபத்தில் உள்ள நியாயம் புரிகிறது. ஆனால் அதிலிருந்து நாம் மீள, நம்மை தற்காத்துக் கொள்ள பல்வேறு நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மக்கள் மனம் மாற வேண்டும். அவர்களின் ஆதரவு வேண்டும்.

கடைகள் மீது கற்கள் எறிவதால் எந்த பிரச்னையும் தீர்ந்து விடாது. மாறாக உங்களுக்குதான் பிரச்னைகள் அதிகமாகும். அதற்கு பதில் உங்களைப் போன்று மதுக்கடைகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து ஆலோசித்து சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும். உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

மதுக்கடைகளை உங்கள் ஒருவரால் அழித்து, ஒழித்து விட முடியாது. யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். எனவே மீண்டும் சொல்கிறேன் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகள்தான் சரியாக இருக்கும். இவற்றை விட இப்போது முக்கியமானது உங்களை நம்பியிருக்கும் உங்கள் பிள்ளைகள். உங்கள் குடும்பம் இருக்கும் சூழலில் உங்கள் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து எப்படி மீட்பது என்பது குறித்து யோசிப்பது தான் உடனடி தேவை. மற்ற நோய்களை போன்றதுதான் குடிநோயும். மற்ற போதைப் பொருட்களை போலவே மது பழக்கமும் சம்பந்தப்பட்டவர்களை குடி நோயாளிகளாக மாற்றி விடுகிறது. அவர்கள் அதிலிருந்து மீள முதலில் குடும்பத்தின் ஆதரவு அவசியம்.

அவரது குடி பழக்கத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிந்து, மீண்டும் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது மிக அவசியம். அது பல கட்ட, நீண்ட கால சிகிச்சையாக இருக்கலாம். பொறுமையாக கையாளுங்கள். உங்களுக்கு , அவரை விட்டு விலக, விவகாரத்து செய்ய பல வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் நீங்கள் அவரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று உங்கள் கடிதத்தை படிக்கும் போதே புரிகிறது. குடி பழக்கத்திற்கு அடிமையான, உங்களை கஷ்டப்படுத்தும் கணவர் மீதான கோபத்தை விட மதுக்கடைகள் மீதுதான் உங்கள் கோபம் அதிகமாக இருக்கிறது. எனவே ஒரு மனநல மருத்துவரை சந்தித்து மனம் விட்டு பேசுங்கள். உங்கள் கணவரின் பிரச்னைகளை எப்படி அணுகுவது என்று அவர் வழிகாட்டுவார். எதுவும் ஒருநாளில் முடிந்து விடாது.

ஆனால் எல்லாவற்றுக்கும் கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும். இது உங்கள் ஒருவரின் பிரச்னை மட்டுமல்ல. தமிழகத்தில் பல பெண்களின் பிரச்னை. அதனால் எல்லோருக்கும் சொல்கிறேன்….. பிரச்னைகளை மேலும் பெரிதாக்கி கொள்ளாதீர்கள். பிரச்னைகளில் இருந்து எப்படி மீள்வது என்ற
வழிகளை மட்டும் பாருங்கள். நிச்சம் தீர்வு கிடைக்கும்.

சட்டம் என்ன செய்யும்?

மதுப் பழக்கத்துக்கு ஆளான பல குடும்பங்களின் மனநிலையை, கோபத்தை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளில் கல்லெறிவது, அவற்றை அழிக்க முற்படுவது எல்லாம் பிரச்னைகளை தீர்க்காது. மாறாக நீங்கள்தான் கடைகள் மீது கல்லெறிவது என்று தெரிந்தால், உங்களை காவல்துறை கைது செய்யும். சுருக்கமாக சொன்னால் உங்கள் செயல்கள் பிரச்னைகளை அதிகமாக்கும். சரி. சட்டப்படி நடவடிக்கை என்றால்…. முதலில் காவல்துறையில் புகார் கொடுக்கலாம்.

கோவில், பள்ளி அருகே அந்த கடை இருந்தால் அங்கிருந்து அகற்ற வேண்டுகோள் விடுக்கலாம். உங்கள் கணவர் குடிக்கிறார், அதனால் கடையை மூடச் சொல்லுங்கள் என்று கேட்க முடியாது. நீதிமன்றத்தை அணுகி நீண்ட சட்டப்போராட்டம் நடத்தலாம். சம்பந்தப்பட்ட கடையை மட்டும் மூடவோ அல்லது அகற்ற வைக்கலாம். ஆனால் அந்த கடையை வேறு இடத்தில் அரசு திறந்துகொள்ளும். தமிழகம் முழுவதும் கடைகளை மூட வைக்க முடியாது.

எனவே உங்கள் கணவருக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர் சரியாகும் வரை வீட்டில் உள்ள பணம், பொருட்களை பாதுகாப்பாக வையுங்கள். எதுவும் சரியாக விட்டால், உங்கள் பெற்றோர் சொல்வது போன்று, அவரிடம் விவாகரத்து பெற சட்டம் உதவும். ஆனால் அது உங்கள் முடிவை பொருத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் உள்ள 10 வித்தியாசமான மற்றும் அதிசய தாவரங்கள்!! (வீடியோ)
Next post ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)