மறக்கப்படும் தீர்வு !! (கட்டுரை)
ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலில் சில விடயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கும். சமகால அரசியல் என்பது, அந்த விடயங்களைச் சுற்றியே கட்டமைக்கப்படும். அரசியல் வாதப்பிரதிவாதங்கள் எல்லாம், அது தொடர்பாகவே அமையும். அந்த விடயங்களே அரசியல்வாதிகளின் மூலதனமுமாகும்.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், 1956 ‘தனிச்சிங்களம்’ சட்டத்தின் பின்னரிலிருந்து, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு’ என்பது, மிக முக்கியமானதும் மய்யமானதுமான பேசுபொருளாக இருந்து வருகிறது.
இலங்கை அரசியல் என்பது, அன்றிலிருந்து இனப்பிரச்சினையைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இனப்பிரச்சினையை மய்யப்படுத்தியே, தமது அரசியலை முன்னெடுத்தனர். இது அனைத்துத் தரப்புக்கும் பொருந்தும்.
குறிப்பாக, 1983 இற்குப் பின்னரான இலங்கை அரசியலின் மிக முக்கிய பேசுபொருள் இனப்பிரச்சினையாகும். இனப்பிரச்சினையும் அதற்கான தீர்வும் இலங்கை அரசியலின் உயிர்நாடி எனலாம்.
ஒரு வகையில் யோசித்தால், இனப்பிரச்சினையைத் தவிர்த்து விட்டால், இங்குள்ள பலருக்கு அரசியல் செய்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கும்.
நாட்டைப் பிளவுபடாது பாதுகாத்தல்; தமிழருக்குத் தன்னாட்சி வழங்கமுடியாது; தமிழருக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது; இது ‘சிங்கள-பௌத்த’ நாடு போன்ற பகட்டாரவாரங்கள், பேரினவாத அரசியலின் அடிநாதம் ஆகும்.
மறுபுறத்தில், தனிநாடு பெறுவோம், பிரிவினை பெறுவோம் என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் அடிநாதம் ஆகும்.
இனப்பிரச்சினை நீடிக்கின்ற வரை, இந்தப் பிரிவினையை வைத்து, ‘நாம்’ எதிர் ‘அவர்கள்’ என்ற அடிப்படையில், தமது அரசியல் மூலதனத்தைக் கட்டமைத்து அரசியல் செய்வதில், இலங்கை அரசியல் தலைமைகள் உருசிகண்டு விட்டன.
ஆகவே, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதைவிட, அது தொடர்வதே அரசியல்வாதிகளுக்குத் தமது அரசியலை, இலகுவாக முன்னெடுப்பதற்கு வழிவகுப்பதாக அமைகிறது. நிற்க!
தமிழர்களைப் பொறுத்தவரையில், ‘தமிழ்த் தேசியத்துக்காக’ அவர்கள் செய்த தியாகங்கள் தொடர்ச்சியானதும் அளப்பரியதுமாகும். ‘தமிழ்த் தேசியத்துக்கான’ அங்கிகாரத்துக்காகத் தமிழ் மக்கள், தமது முன்னேற்றம், அபிவிருத்தி என்பவற்றை விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள்.
வடக்கை விட, கிழக்கில் இது மிகவும் தெட்டத் தௌிவாக, அனைவருக்கும் புலப்படத்தக்க ஓர் உதாரணமாக இருக்கிறது. கொள்கைக்காகவே தொடர்ந்து வாக்களித்து, சலுகை அரசியலுக்கு விலைபோகாது, தமது முன்னேற்றம் முட்டுக்கட்டை நிலையை எய்தினாலும் பரவாயில்லை; ஆனால், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமது அடிப்படை அரசியல் அபிலாசைகளை, அவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை, 1956 முதல், தமிழ்மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்திருக்கிறார்கள்.
மறுபுறத்தில், தமிழ்த் தலைமைகளும் தமது பதவிகளைத் தக்கவைப்பதற்கு, தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி, பகட்டாரவாரப் பேச்சுகளால் தூபமிட்டு, தமிழ் மக்களின் வாக்குகளைக் கைப்பற்றி வந்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தலைமைகள், அரசியல் நேர்மையுடன் செயற்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. பண்டா-செல்வா, டட்லி-செல்வா, ஜே.ஆர்-அமிர் என, ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்த் தலைமைகள் இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளுடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை இணக்கபூர்வமாக நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பெரும் விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய சமரசத்துக்குக் கடும் முயற்சிகளை நேர்மையுடன் முன்னெடுத்திருந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1950களில் தமிழ்த் தலைமைகளிடையே போட்டியிருந்தது. அதாவது, தமிழ் மக்களிடையே கட்சிப் பிளவுகள் இருந்தன. குறிப்பாக, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி பிரிவினை, தமிழ் மக்களிடையே இருந்தது.
ஆயினும், 1972இல் தமிழ்த் தேசியத்தின் நலன் கருதி, தமிழ் மக்களின் அரசியல் குரல் ஒன்றுபட்டதாக இருப்பதே, தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில், பிரிந்து நின்ற அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டன.
பின்னர் காலவோட்டத்தில், தனிநபர் முரண்பாடுகளால், அவை பிரிந்த துரதிர்ஷ்டமும் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய பாகமாகும். அதன் பின்னர், கட்சிகள், ஆயுதக் குழுக்கள் என தமிழர் அரசியல் கொத்துண்டு, சில்லறை சில்லறையாகச் சிதறிக் கிடந்த ஒரு காலகட்டமும் இருந்தது.
தமிழர் ஆயுதப் போராட்டம், விடுதலைப் புலிகள் என்ற ஒற்றைச் சக்தியின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர், அவர்களே தமிழ்த் தேசிய அரசியலின் கொண்டு நடத்துநரானார்கள்.
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது; அன்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ, எதிர்ப்பது என்ற, இரண்டு நிலைப்பாடுகளில் பிரிந்திருந்தார்கள்.
இந்த காலகட்டம் கூட, தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பலம் சேர்ப்பதாக இருக்கவில்லை. ஏனெனில், தமிழர் அரசியலுக்குள் இருந்த இந்தப் பிரிவும் உள்முரண்பாடும் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்தான், மீண்டும் பிரிவினையைக் கடந்து கட்சிகள் ஒன்றிணைந்தன; அவை விடுதலைப் புலிகளுடனும் கைகோர்த்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றைக் குரலில் பலமாக முன்னெடுத்தன. ஆனால் 2009 யுத்த நிறைவுக்குப் பின்னர், அரசியல் களம் முற்றாக மாற்றப்பட்டிருந்தது.
ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் என்பது முற்றாக, ஜனநாயக அரசியலின் கைகளிலேயே தங்கியிருந்தது. தமிழ்த் தேசியத்துக்காக இன்னும் பலமாகச் செயற்பட்டிருக்க வேண்டிய நிலையிலிருந்த தமிழ்த் தேசியத்தின் பெயரால், பதவிகளைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைகள், தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்கத் தொடங்கியதன் விளைவாக, தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் மீண்டும் பிளவுபடத் தொடங்கியது.
தமிழ்த் தேசிய நலனுக்காகச் செயற்பட வேண்டிய கட்சிகள், மீண்டும் உள்குத்துகளிலும் தனிநபர் தாக்குதல்களிலும் கட்சி முரண்பாடுகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கின.
தமிழ் அரசியல் பரப்பை, அதுவரை ஆக்கிரமித்திருந்த தாயகம், தேசியம் சுயநிர்ணயம் என்ற கோசங்கள் பின்னணிக்குச் சென்று, ‘நீயாநானா’ வகையறா, குழாயடிச் சண்டைகள், தமிழர் அரசியலின் முன்னரங்குக்கு வரத்தொடங்கின; கூட்டணியும் கட்சிகளும் பிரிவடையத் தொடங்கின.
இதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் தமிழ்த் தேசியத்தின் பெயரால், உதிரிக் கட்சிகள் பல உதயமாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியத்தின் தாற்பரியம் முற்றாக மறக்கப்பட்டு, அர்த்தம் தெரியாது உச்சரிக்கும் மந்திரம் போல, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பன பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமது செயற்பாடுகள், தமிழ்த் தேசிய அபிலாசைகளுக்கு ஆதரவாக இருந்தாலும் எதிராக இருந்தாலும், அதற்கு முரணாக அவர்களது பேச்சு, எப்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசிய மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு இருக்கிறது.
ஏனென்றால், தமிழ்த் தேசியம் என்பது, தேர்தலில் வெற்றிபெறவும், தமிழ் மக்களின் அங்கிகாரத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கும் மட்டுமானதொன்றாகவே, சமகாலத்
தமிழ்த் தேசிய நலனுக்காக, அவர்கள் ஆற்றும் பணி என்று ஒன்றையும் காணக்கிடைக்கவில்லை. வெறும் பகட்டாரவாரப் பேச்சாகவும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டித் தமது அரசியல் இருப்பைத் தக்கவைக்கும் ஒரு பலமான ஆயுதமாகவும் மட்டுமே, அவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கையாள்கிறார்கள்.
இது, ஒருவகையில் பேரினவாத தலைமைகளுக்கும் சாதகமாக அமைகிறது. அவர்களும் இதையே விரும்புகிறார்கள். தமிழர் அரசியல், அதன் மய்ய நோக்கமான தமிழ்த் தேசியத்தில் இருந்தும் அதன் அடிப்படை அபிலாசைகளான ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்பவற்றில் இருந்தும் விலகி, கட்சிகளிடையேயானதும் தனிநபரிடையேயானதுமான முரண்பாடுகளில் கவனம் செலுத்துவது நிச்சயமாக அவர்களுக்குச் சாதகமானதே.
2009இற்குப் பின்னர், 13ஆவது திருத்தம் 10 ஆகி, 13- ஆகி, இன்று, “அதிகாரப்பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை”: என்று பேரினவாதத் தலைமைகள் சொல்லும் நிலை வந்திருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழ்த் தேசிய அரசியல், நீர்த்தப் போனமையாகும்.
2015இல் மாற்றத்தைக் கொண்டு வந்ததில், தமிழ்த் தேசியம் ஒரு பங்காளிகள் என்று மார்தட்டும் அரசியல் தலைமைகள், 2015இன் பின்னர் கூட, காத்திரமானதோர் அரசியல் அடைவை, தமிழ்த் தேசத்துக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது போனது ஏன் என்ற கேள்விக்கும், தமிழ் மக்களுக்கு வகை சொல்ல வேண்டும்.
மேலும், 2015 முதல் 2019 வரை கிடைத்த சாதகமான காலப்பகுதியில், தமிழ் மக்களினதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளினதும் நலன் கருதி, தமிழ்த் தலைமைகள் முன்னெடுத்த காத்திரமான நடவடிக்கைகள் என்ன என்று சிந்தித்தால், அதற்கான தகுந்த விடையேதுமில்லை என்பதுதான் உண்மை.
2015இற்கு முன்னர், தமிழ் அரசியலில் முன்னரங்கு பெற்றிருந்த ‘தமிழ்த் தேசியம்’ 2015இன் பின்னர், நீர்த்துப் போயுள்ளது என்பதுதான் தெட்டத் தௌிவான உண்மை.
இன்று அரசியல் முன்னரங்கில், இனப்பிரச்சினை தீர்வு என்பது, ஓரங்கட்டப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. தென்னிலங்கை அரசியலை இன்று அவதானித்தால், இனப்பிரச்சினைத் தீர்வு என்பதற்கு, அந்த நிகழ்ச்சிநிரலில் இடமேயில்லை; அதைப்பற்றி அவர்கள் பேசுவது கூட இல்லை.
மறுபுறத்தில், அது பற்றிக் கட்டாயம் பேச வேண்டிய தமிழ்த் தலைமைகள், தம்மிடையேயான முரண்பாடுகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, இலங்கை அரசியலில் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.
சமகாலச் சூழலில், இனப்பிரச்சினைத் தீர்வு என்பது, தென்னிலங்கை அரசியலுக்கு மிக முக்கியமான ஒன்றல்ல. 2009 இற்கு முன்னர், ஆயுதப்போராட்டத்தின் அழுத்தம் தென்னிலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிச் சிந்திப்பதற்கான தேவையை உருவாக்கியிருந்தது.
2009இன் பின்னர், சர்வதேச அழுத்தம் அந்தத் தேவையை உருவாக்கியிருந்தது. ஆனால், 2015இன் பின்னர், சர்வதேச அழுத்தமும் மழுங்கிப்போனது; தீர்வுக்காகத் தமிழர் அரசியலும் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.
இன்று, தமிழர் அரசியல் தமக்குள் முரண்பட்டுக் கொண்டு, அந்த முரண்பாடுகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், சர்வதேச அரசியலை கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம், தந்திரோபாய ரீதியில் சமாளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசவோ, ஏன் சிந்திக்கவோ வேண்டிய எந்தத் தேவையும் அழுத்தமும் தென்னிலங்கை அரசியலில் இல்லை.
இனப்பிரச்சினைத் தீர்வு பற்றித் தொடர்ந்து பேச வேண்டியவர்கள், அதற்கான அழுத்தத்தை உருவாக்க வேண்டியவர்கள், தமிழ்த் தலைமைகளே. அதுவே அவர்களது அடிப்படைக் கடமை.
ஆனால் அவர்கள், தமது கடமையை மறந்ததன் விளைவுதான், இன்று இனப்பிரச்சினைத் தீர்வு என்பது பேசப்படாப் பொருளாக மாறியிருக்கிறது. இனியும் தமிழ்த் தலைமைகள் விழித்துக்கொள்ளவில்லை என்றால், தமிழ்த் தேசியம் அதனைக் காப்பாற்ற வேண்டியவர்களாலேயே அநாதையாக்கப்படும் நிலைதான் ஏற்படும்.
Average Rating