உண்மையில் திருத்த வேண்டியது!! (கட்டுரை)
இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாகப் புதிய புதிய வடிவில் பிரச்சினைகளும் சவால்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும், இதில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை என்பதே நமது பட்டறியும் யதார்த்தமுமாக இருக்கின்றது. ‘இஸ்லாமியபோபியா’ மாதிரி, முஸ்லிம் விரோத மனநிலையும் இனவெறுப்பும் நமது நாட்டில் வியாபித்துள்ளது.
பெருந்தேசியத்தின் கொல்லைப்புறத்தில், வயிறுபுடைக்க வளர்ந்திருக்கின்ற இனவாத சக்திகள், எவ்வழியிலேனும் முஸ்லிம் சமூகத்தை, நெருக்குவாரப்படுத்துவதற்காகவே, தமது முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன.
‘பப்ஜி’ போன்ற அலைபேசி விளையாட்டுகளுக்குச் சிறுவர்கள் அடிமையாகி இருப்பதைப் போல, முஸ்லிம்களை வைத்துப் பெருந்தேசியமும் பேரினவாதமும் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
இந்த வரிசையில், முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து விடயங்களை உள்ளடக்கிய, முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற குரல்கள், மீண்டும் மேலெழுந்துள்ளன. இதற்கு ஒருபடி மேலாகச் சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், தனிநபர் பிரேரணை ஒன்றை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
முன்னதாக, சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுதல் என்ற கோதாவில், முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளாலும், இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளாலும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டுள்ளன.
நாம் வாயைத் திறந்தால், நமக்குப் பிரச்சினை இன்னும் அதிகமாகிவிடுமோ என்ற அச்ச மனோநிலை, அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர், எதிர்க்கட்சிப் பக்கம் இருக்கின்ற சூழலில், ஆளும் கட்சிப் பக்கம் உள்ள அரசியல்வாதிகளுக்கும், வரண்முறைகள் போடப்பட்டுள்ளதாவே தெரிகின்றது.
இனவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து, அரசியல் செய்வது ஆபத்தானது என்றாலும், அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில், அது இலகுவானது என்றே கூற வேண்டும்.
தென்னாசிய நாடுகள் பலவற்றின் அனுபவமும், அதுவாகவே இருக்கின்றது. இந்தியாவின் மோடி ஆட்சி, இதற்கு முதன்மையான உதாரணமாக எடுத்தாளப்படலாம்.
இலங்கைச் சூழலில் இனவாதம் என்பது, எல்லாக் காலத்திலும் இருந்திருக்கின்றது. இதற்குப் பின்னால், அரசியல்வாதிகள் மட்டுமன்றி, காவியுடை உடுத்தவர்கள், பௌத்த மறுமலர்ச்சி, தேசப்பற்று என்ற கோஷங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வந்த பலரும் இருந்திருக்கின்றார்கள், இருக்கின்றார்கள். இனவாத சிந்தனை அரசியலுக்குள் மூக்கை நுழைத்து, ஆட்டுவித்த ஆரம்பகால காய் நகர்த்தலாக, தனிச்சிங்களச் சட்டத்தைக் குறிப்பிடலாம்.
பெருந்தேசியவாத சிந்தனை, இனவாத சக்திகளின் செயற்பாடுகள் மட்டுமன்றி, தமிழ் ஆயுதப் போராட்டம், ஆயுத இயக்கங்களின் நாசகாரச் செயல்கள், யுத்த வெற்றி தந்த மமதை, அதாவது, இனங்களை ஒடுக்குவதற்கான தைரியத்தை அது கொடுத்தமை, சமயம்சார் அடிப்படைவாத இயக்கங்களின் ஊடுருவல், துறவிகளின் அரசியல் பிரவேசம், முஸ்லிம் பெயர்தாங்கிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் எனப் பல காரணிகள், இந்நாட்டில் இனவாதம் மேலும் வளர்வதற்குத் தீனிபோட்டுள்ளன.
இலங்கையில், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டுபண்ணியதிலும் அதன்மூலம் இனவாதம் வளர்வதற்கு ஏதுவான களநிலையைத் தோற்றுவித்ததிலும் உள்நாட்டு அரசியலுக்குப் பெரும் பங்கிருக்கின்றது. பெரும்பான்மை அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் பலர், இதை திட்டமிட்டு மேற்கொண்ட சமகாலத்தில், தாம் அறிந்தோ அறியாமலோ, பிரித்தாளும் அரசியலை முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கொண்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இலங்கை ஒரு பல்லின நாடென்று சொல்லப்படுவதை விட, ஒரு பௌத்த நாடு என்று சொல்லப்படுகின்ற போக்கை இன்றும் காண முடிகின்றது. இங்கிருக்கின்ற இன, மத, குல பன்மைத்துவங்களை, ஆட்சியாளர்கள் சரிவரக் கையாளாத காரணத்தால், கணிசமான மக்களும் இன, மத சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் பன்மைத்துவம், பல்வகைமையை விளங்கிக் கொள்ளாதவர்களாகவும் மாறியிருக்கின்றனர்.
நாம், இந்த மதசகிப்புத்தன்மை இன்மை, இனவெறுப்பு, இனவாதம் ஆகியவற்றாலும் இவற்றை வைத்து, அரசியல் இலாபம் தேடும் சக்திகளாலும் நாம், பள்ளிவாசல்கள் தாக்குப்பட்டது தொடக்கம், விகாரைகளில் குண்டு வைக்கப்பட்டது தொட்டு, தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டவை எனப் பாரதூரமான சம்பவங்கள் வரையான, பல எதிர்விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். மாற்று இனங்களுக்கு எதிரான நெருக்குவாரங்களை, நியாயப்படுத்துவதற்கான அடிப்படையையும் மேற்சொன்ன மனோநிலைதான் ஏற்படுத்தி இருக்கின்றது.
குறிப்பாக, கடந்த பத்து வருடங்களுக்கு உட்பட்ட காலப் பகுதியில், முஸ்லிம்களுக்கு எதிரான இன, மத, அரசியல் நெருக்கடிகள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன. முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து, மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களில், தற்செயலாக நிகழ்ந்த சம்பவங்கள் மிகக் குறைவாகும். இதற்குப் பின்னால், பிராந்தியங்களில் கோலோச்சும் இனவாத, மதவாத சக்திகளும் உள்நாட்டு அரசியல் மறை கரங்களும் இருந்திருக்கின்றன.
இதனால், முஸ்லிம்கள், தங்களது இனம், மதம் போன்ற அடையாளங்களையும் அரசமைப்பின் ஊடாகக் கிடைக்கத் தக்கதாகவுள்ள வரப்பிரசாதங்களையும் தாரைவார்க்க வேண்டிய, இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகம் பொறுத்து, அடங்கிப் போக வேண்டும் என, இனவாத சிந்தனையில் ஊறித் திளைத்த, கடும்போக்குச் சக்திகள் நினைக்கின்றன. சில தமிழ்ச் சக்திகளும் தமது வசதிக்காக, இதைப் பாவித்துக் கொள்கின்றன.
ஹலால், அபாயா நெருக்கடி, தம்புள்ளை பள்ளி விவகாரம், அளுத்கம, பேருவளைக் கலவரங்கள், திகண, அம்பாறைக் கலவரங்கள், மினுவாங்கொடை வன்முறைகள் என, எத்தனையோ நெருக்கடிகளைக் கடந்த சில வருடங்களுக்குள் முஸ்லிம் சமூகம் சந்தித்து விட்டது. ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுகின்றனவே தவிர, கதை மாறுவதாகத் தெரியவில்லை.
அந்தவகையில், முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணையை, அத்துரலிய ரத்தன தேரர் எம்.பி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றார்.
நாடு இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், முஸ்லிம் ஒருவரைப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக பிரிகேடியர் சுரேஷ் ஸாலேஹ்வை என்ற முஸ்லிமை நியமித்தமை தவறு என்று, பொன்சேகா தெரிவித்திருந்தார். ஒன்பது வருடங்களுக்கு முன்னர், முஸ்லிம்களிடம் வாக்குப் பிச்சை கேட்ட பொன்சேகா, கடந்த தேர்தல் வரைக்கும் தன்னை முஸ்லிம்களின் நண்பனாகக் காட்டிக் கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி, தனது இன்னுமொரு முகத்தைக் காட்டியிருக்கின்றார்.
அதுமட்டுமன்றி, சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்குச் சாதகமான ஐந்து சதவீத வெட்டுப்புள்ளியை, 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முன்வைத்துள்ளார். இதன்மூலம், குறிப்பாக, முஸ்லிம்களினதும் மாவட்ட ரீதியான பிரதிநிதித்துவங்களைக் குறைத்து, பெருந்தேசியக் கட்சிகளுக்குள் முஸ்லிம் கட்சிகளை மூழ்கடிப்பதற்கான மிகப் பெரிய காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் சில நாள்களில் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தனிநபர் பிரேரணைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு, விவாதத்துக்கு வருவதென்பது, சாத்தியமற்றது என்றே கருதப்படுகின்றது. ஆனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த நகர்வுகளை, இலேசுப்பட்டவையாகக் கருதி வாழாவிருக்க முடியாது.
முஸ்லிம்கள், இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை என்ற பரப்புரைகளைப் பரவலாக மேற்கொள்ளப்பட்டு, முஸ்லிம் சமூகம், உளரீதியாக நலிவடைந்துள்ளது. அத்துடன், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு, வாய்ப்பூட்டுப் போடும் வேலையும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, இந்தப் பூதங்கள் எல்லாம் வெளிக்கிளம்பி இருக்கின்றன.
முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து விடயங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை விதந்துரைக்கும் தனியார் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று, ஆரம்பத்தில் நினைத்தவர்கள் முஸ்லிம்கள்தாம். அந்தவகையில், கடந்த காலங்களில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ள, பல வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என, மூன்று பிரத்தியேகச் சட்டங்கள் உள்ளன. இதில் முதலிரு சட்டங்களும் முறையே கண்டி, யாழ்ப்பாண மக்களுக்கானது என்பதுடன், இன்று ஒரு சில வரையறுக்கப்பட்ட விடயங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் உள்ள 21 இலட்சம் மக்களால் பயன்படுத்தப்படுகின்ற சட்டம், முஸ்லிம் தனியார் சட்டமே ஆகும்.
இந்தச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிபாரிசுகளை முன்வைக்கும் பொருட்டு, 2009ஆம் ஆண்டு, அப்போது நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொறகொடவால் உயர்நீதிமன்ற நீதியரசராகக் கடமைபுரிந்த சலீம் மர்சூப் தலைமையில் 17 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு, சுமார் ஒன்பது வருடங்களாகக் கலந்துரையாடல்களை நடத்தியது. முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து நடைமுறைகள், இதில் பிரதான இடம்பிடிக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், ஆண்களின் திருமண வயது, பலதார மணம், தாபரிப்புக்கான கொடுப்பனவு, காழி நீதிபதிகளாகப் பெண்களை நியமித்தல், வலியுறுத்தல் கட்டளை உள்ளடக்கங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயப் பரப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், முஸ்லிம் சமூகத்தில் எல்லா விடயங்களிலும் இருக்கின்ற முரண்படு நிலை, கருத்து வேற்றுமை போல, இச்சட்டத் திருத்த யோசனைகளிலும் சில மாற்றுக் கருத்துகள் உருவாகி, அந்தக் குழு இரண்டு அணிகளாகின.
இரு சிபாரிசு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில், இன்றுவரை இவ்விவகாரத்தைத் தீர்த்து, சட்டத்தைத் திருத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதாவது, உரிய காலத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மதத் தலைவர்களின் ஆலோசனையைப் பெற்று, இதைத் தாமாகத் திருத்தாமல், காலத்தை இழுத்தடித்தமையால் இன்று மாற்று மத குருக்கள், இவ்விடயத்தைக் கையில் எடுத்திருக்கின்றனர்.
அதுவும் திருத்த வேண்டும் என்ற நிலையை தாண்டி, நீக்க வேண்டும் என்ற மட்டத்துக்கு அவர்களது பிற்போக்குத்தனமான தேசப்பற்று முன்னேறியுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. எவ்வாறிருப்பினும், ஒரு சமூகத்துக்கான பிரத்தியேக விவகாரங்களில், வெளித்தரப்பினர் மூக்கை நுழைத்து, நாட்டாண்மை வேலை பார்ப்பதற்கு, இடமளிக்க முடியாது.
முஸ்லிம்களைப் பற்றியே, சதாவும் சிந்தித்துக் கொண்டிருக்காமல், இனவாதிகளும் கடும்போக்கு அரசியல்வாதிகளும் வரலாற்றைப் படிக்க வேண்டும். இலங்கைச் சரித்திரத்தில், முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதையும் பன்மைத்துவ நாடாக இருந்தமையால், இலங்கை அடைந்த நன்மைகளையும் அறிய வேண்டும். அன்று முதல் இன்று வரை, ஒவ்வோர் இனத்துக்கும் உரித்தாகவுள்ள வரப்பிரசாதங்கள், பிரத்தியேக சட்டங்கள் என்பவற்றை மதிக்கப்பழக வேண்டும்.
உண்மையில், இலங்கையைப் பொறுத்தமட்டில், இங்கு இருக்கின்ற பிரச்சினை சட்டம் அல்ல; சட்டத்தின் ஆட்சி என்பதை, முஸ்லிம்களின் விவகாரங்களுக்குள் மூக்கை நுழைக்க நினைக்கின்ற அரசியல்வாதிகளும் இயக்கங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். எல்லாம் சட்டத்தில் இருக்கின்றது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைதான் சீர்கெட்டுப் போயுள்ளது.
எனவே, முஸ்லிம்களின் சட்டங்களை விமர்சிப்பதை விடுத்து, இருக்கின்ற சட்டத்தைச் சரியாக அமுல்படுத்துவதற்கும், நாட்டின் பொதுவான சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் இவ்வாறானவர்கள் முயற்சி எடுப்பார்களாயின் அது இன்னும் சிறந்ததாக அமையும்.
இன்னும் சொல்லப் போனால், அடிப்படையில் இந்த நாட்டில் மாற்றப்பட வேண்டியது இனவாத, மதவாத சிந்தனையும், இன – மத ரீதியாக மக்களைப் பிரித்தாளுகின்ற அரசியலும் ஆகும். அதுபோல, உண்மையில் திருத்தப்பட வேண்டியது, இன முரண்பாட்டால் இத்தனை இழப்புகளைச் சந்தித்த பின்னரும் இன்னும் திருந்தாத ஜென்மங்கள்தான்!
‘காணாமல் போனவர்கள்’
தேர்தல் முடிவடைந்த பிற்பாடு, அரசியல்வாதிகள், மக்கள் மன்றத்தில் இருந்து காணாமல் போவது வாடிக்கைதான். ஆனால், இன்னும் அவர்கள், கூர்ப்படையாமல் அப்படியே இருக்கின்றார்கள் என்பதே கவலையாக உள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்களின் பெருமளவான வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாஸ, முஸ்லிம்களின் அரசியலரங்கில் இருந்து காணாமல் போயிருக்கின்றார். முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்காக அவரோ, அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ குரல் கொடுப்பதைக் காண முடியாதுள்ளது.
பெரும் எண்ணிக்கையாகத் தேர்தல்களில் வாக்களித்து, வெற்றி இலக்கை எட்டுவதற்கு உதவிய முஸ்லிம்ைகளை, இவர்களும் கிள்ளுக்கீரையாகவே பயன்படுத்துகின்றனர் என்பதற்கு, இதையும் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இதேவேளை, பெருந்தேசிய கட்சிகளின் பிரதான வேட்பாளர்களுக்கு, வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் செயற்பாட்டு அரசியல் களத்தில், கடந்த சில நாள்களாகக் காணக் கிடைக்கவில்லை.
ஒருவித மௌன விரதத்தைக் கடைப்பிடித்துக் கொண்டு ஒதுங்கியிருக்கின்றனர். ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல் தலைமைகள், அடக்கி வாசிக்கும் நிலைக்கு ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆளுந்தரப்பில் இருக்கின்ற அரசியல்வாதிகள் சிலரும், முஸ்லிம்கள் விடயத்தில் குரல்கொடுப்பதற்கு, சுய தணிக்கைகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது. எது எவ்வாறாயினும், இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
முஸ்லிம் சமூகம், தமது அரசியல்வாதிகளை நம்பியே, வாக்குகளை அளிக்கின்றனர். முஸ்லிம் கட்சித் தலைவர்களும் தளபதிகளும் பெரும் சாணக்கியர்கள், அரசியல் வித்தகர்கள், முற்றாகச் சமூக நலன் சார்ந்தவர்கள் என்று, கணிசமான முஸ்லிம் மக்கள் கருதவில்லை. ஆனால், தேசிய அரசியல் நீரோட்டத்தின் திசையைப் பொறுத்தும், நடப்பு விவகாரங்களை அவதானித்தும் தமது அரசியல் தலைமைகளால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளருக்கு, வாக்களிப்பதற்கான முடிவை முஸ்லிம் சமூகம் எடுக்கின்றது.
இந்த இடத்தில், தமது தலைவர்களின் முடிவு ‘சரி’ என்ற நிலைப்பாட்டைப் பெரும்பாலான முஸ்லிம்கள் எடுக்கின்றனர். இதன்மூலம், அசட்டுத்தனமான அல்லது கண்மூடித்தனமான நம்பிக்கை ஒன்றைச் சமூகம் அவர்கள் மீது வைக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் சஜித்தையே ஆதரித்தனர். சிலர் மாத்திரமே தற்போதைய ஜனாதிபதிக்காகக் களமிறங்கினர்.
இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியான பிறகு, சஜித்தை ஆதரித்த சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டு அரசியல் அரங்கில் இருந்து, கிட்டத்தட்ட காணாமல் போயிருக்கின்றனர். இவர்களுக்குள் தேசியத் தலைவர்களும் அடங்குவர்.
எங்கோ, தூரத்தில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்த பூனைக்குட்டி, சிலகாலத்தின் பின்னர், வீடு தேடி வருவது போல, அடுத்த தேர்தல் வரும்போது, இவர்கள் எல்லோரும் மீண்டும் மக்களின் வீட்டுக் கதவடிக்கு வருவார்கள். இதன்போது, மக்களின் இத்தகைய அரசியல்வாதிகள் மீதான கரிசனை அல்லது எதிர்வினை எவ்வாறு அமையும் என்பது குறித்து இத்தகைய அரசியல் வாதிகள் சிந்திப்பதே கிடையாது.
Average Rating