கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி!! (மகளிர் பக்கம்)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். 74 ரன்கள் எடுத்த மந்தனா, தனது 51வது போட்டியில் இந்த மைல்கல்லை அடைந்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த, உலகின் 3வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதிவேக 2000 ரன்களை கடந்த வீராங்கனைகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் Belinda Clark (41 போட்டிகள்) மற்றும் Meg Lanning (45 போட்டிகள்) ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை மந்தனா பிடித்துள்ளார். இச்சாதனையை படைக்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மந்தனா பெற்றிருக்கிறார். இந்திய அளவில் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட்டர்களை சேர்த்து ஷிகர் தவானுக்கு அடுத்ததாக மந்தனா உள்ளார். தவான் 48 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை கடந்துள்ளார். அதே நேரத்தில் விராட் கோலி தனது 53வது போட்டியிலேயே 2000 ரன்களை கடந்தார்.
யார் இந்த ஸ்மிருதி மந்தனா?
ஸ்ரீபெண் சேவாக்’. இப்படித்தான் ரசிகர்கள் இவரை அழைக்கின்றனர். ஆனால், அதற்கு சேவாக்கே எதிர்ப்பு தெரிவித்து ஸ்மிருதியை பாராட்டி இருந்தார். பொதுவாக, பெண்கள் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை அடிக்கடி காண முடியாது. இந்திய அணியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனைகளே அதிகம். இந்நிலையில் சேவாக் பாணியில் ஆரம்பத்திலிருந்தே பெளண்டரியும், சிக்ஸரும் விளாசி வருகிறார் ஸ்மிருதி மந்தனா.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதிக்கு, வயது 23. ஸ்மிருதியின் அண்ணன் ஷ்ரவணன், கிரிக்கெட்டர். அண்ணன் மகாராஷ்டிரா அணிக்காக ஆடும்போது கிடைத்த புகழைப் பார்த்த பிறகு, ஸ்மிருதிக்கும் கிரிக்கெட் ஆசை வந்தது. ஏழு வயதில் பேட் பிடிக்க ஆரம்பித்த ஸ்மிருதி, ஒன்பது வயதில் மகாராஷ்டிரா அணிக்குள் நுழைந்தார். பதினாறு வயதில் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஸ்மிருதி, இயல்பிலேயே வலதுகை ஆட்டக்காரர். ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனின் பேட்டிங் ஸ்டைல் பிடித்துப்போக லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்வுமனாக தன்னை மாற்றிக் கொண்டார்.
2013 ஆம் ஆண்டில் குஜராத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் ஸ்மிருதி இரட்டைச்சதம் விளாசியிருந்தார். உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச்சதம் அடித்த வீராங்கனை இவர்தான். மூட்டில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்மிருதியால் விளையாட முடியவில்லை. இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் ஆடுவதே என் கனவு. அது மிஸ்ஸாகப்போகிறது” எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர், வேகமாக குணமடையவே உலகக்கோப்பைக்கான அணியில் விளையாட இடம் கிடைத்தது.
2014 ஆம் ஆண்டு இந்திய அணியில் நுழைந்த தருணத்தில், இங்கிலாந்து, பக்கிங்காம்ஷைரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இரு அணி வீரர்களும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் எடுத்தது. அந்த இன்னிங்ஸில் இரண்டாவது அதிகபட்சம் ஸ்மிருதிதான். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களைக் குவித்தது.
ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் இந்தியாவுக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது இங்கிலாந்து அணி. பதினெட்டு வயது ஸ்மிருதி அருமையாக ஆடி அரைசதம் அடித்து அணி வெற்றிபெற உதவினார். அந்தப் போட்டியிலிருந்து ஸ்மிருதி மீது கவனம் திரும்பியது. அன்று முதல் இன்று வரை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் ஸ்மிருதி மந்தனா.
Average Rating