கம்பீரக் குரலுக்குச் சொந்தக்கார அம்மா பி.எஸ்.சீதாலட்சுமி!! (மகளிர் பக்கம்)
கணீரென்று அதிர்வலைகளைப் பரவ விடும் கம்பீரமான குரல். நாடக அரங்கின் இறுதி வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் தெளிவாகக் கேட்கும் வண்ணம் ஒலிப்பதுடன் அழுத்தம் திருத்தமான தமிழ் வசன உச்சரிப்பும் கேட்பவர்களைப் பரவசப்படுத்தும். அழகான சிரிப்புக்கும் சொந்தக்காரர்.
அம்மா, அக்கா, அண்ணி, பாட்டி என்று பல்வேறு வேடங்களை நாம் அவரைத் திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். பெரும்பாலான படங்களில் வில்லியாக நடித்து அசரடித்தவர். குணச்சித்திர நடிகைகளுக்கே உரிய நடை, உடை, பாவனை, கூந்தல் அலங்காரம் (பெரும்பாலும் அள்ளிச் செருகிய கூந்தல்) என்று தோன்றியவர்.
சில படங்களில் அம்மா வேடங்களில் கண்ணாம்பாவுக்கே சவால் விடும் வகையில் இவரது நடிப்பு அமைந்திருக்கும். ஒரு திரைப்படம் என்றால், அதில் நாயக, நாயகி, நகைச்சுவை நடிகர்களைக் கடந்து சிறு சிறு வேடங்கள், படத்தின் அச்சாணியாக, திருப்புமுனையாக விளங்கும் கதாபாத்திரங்கள் என ஏராளம் உண்டு. அப்படியான சிறிய குணச்சித்திர வேடங்களை ஏற்பவர்களும் பலர் உண்டு. அவர்களையும் அவர்களின் நடிப்பையும் பல படங்களில் பார்த்து ரசித்திருந்தாலும் பலரது பெயர் கூட ரசிகர்களுக்குத் தெரியாது என்பதுதான் நிதர்சனம். அப்படியான நடிகைகளில் ஒருவர்தான் பி.எஸ். சீதாலட்சுமியும். பல நடிக நடிகையருக்கும் ஒருவிதத்தில் அது சாபக்கேடும் கூட.
வறுமையும் நாடக அறிமுகமும் அளித்த கொடைசீதா லட்சுமியின் பூர்வீகம் ராமநாதபுரம். 1932ல் பிறந்தவர். பதினொரு குழந்தைகளைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம். வளமான குடும்பம் எல்லாம் இல்லை. இத்தனை குழந்தைகள் இருந்தால் வறுமை தாண்டவமாடாமல் என்ன செய்யும்? தன்னை நம்பியிருக்கும் மனைவி, குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக தகப்பனார் குடும்பத்துடன் வேலை தேடி பர்மாவுக்குச் சென்றார்.
அங்கு அவருக்குக் கிடைத்தது அச்சகப் பணி. 6 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகளையும் பராமரித்து வளர்க்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு தாயார் பொன்னம்மாளின் கடமையானது. குழந்தைகளும் வளர்ந்த பின் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பணியைச் செய்து வருமானம் ஈட்டினார்கள்.
மிகச் சிறு வயதில், அதாவது எட்டு வயதிலேயே குடும்பத்தின் கஷ்ட நிலை போக்க நாடகத்தை வாழ்வாக்கிக் கொண்டவர் சீதா லட்சுமி. அப்போது தொடங்கிய நாடக மேடையேற்றமும் நடிப்புமே வாழ்க்கையும் உலகமும் என வாழ்ந்தவர்.
மற்ற எவருக்கும் இல்லாத ஒரு சிறப்பும் அனுபவமும் சீதா லட்சுமியின் வாழ்க்கையில் அதிலும் மிக இளம் வயதில் அவருக்குக் கிடைத்தது. பர்மாவில் இந்திய தேசிய ராணுவப் படையை அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அங்கு உள்ளவர்களின் பொழுதுபோக்குக்காக நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்திருந்தார். அப்படைப்பிரிவில் தமிழர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது.
முத்துசாமி நாடார் என்பவரது நாடகக்குழு தொடர்ச்சியாக நாடகங்களை நடத்தி வந்தது. அக்குழுவில் 8 வயது சிறுமியான சீதா லட்சுமியும் இணைந்து நடிப்பைக் கற்றுக் கொண்டு நாடகங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார். அந்தக் குழுவினர் ஐ.என்.ஏ. ராணுவப்படை முகாமிலும் சில நாடகங்களை நடத்தினார்கள். அப்போது சீதா லட்சுமிக்கு நேதாஜியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரை மட்டுமல்லாமல், முகாமில் அவ்வப்போது வந்து சென்ற பல தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் விளைவாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணமும் அந்தப் பிஞ்சு வயதில் சீதா லட்சுமிக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு வாரமும் நாடகங்களின் மூலம் வசூலான நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை விடுதலைப் போராட்ட நிதியாக ஐ.என்.ஏ.வுக்கு அந்த நாடகக்குழு அளித்து வந்துள்ளது. ஒவ்வொரு முறை நிதியளிக்கச் செல்லும்போதும், அவர்களில் ஒருவராக சீதா லட்சுமியும் கையில் கொடி ஏந்திச் சென்றுள்ளார்.
மறுக்கப்பட்ட கல்வி வாய்ப்பும்தாயாரின் ஆதரவும் சிறு வயதிலேயே குடும்பச் சூழல் காரணமாக நாடகங்களில் நடிக்கச் சென்றதால், முறையாகப் பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பு சீதா லட்சுமிக்கு வாய்க்கவில்லை. ஆனாலும், நாடகக் குழுக்களில் முறையாக வாத்தியார் மூலம் நடிப்பு, பாடல், நடனம் சொல்லிக் கொடுக்கப்பட்டதைப் போலவே எழுத்தறிவும் அடிப்படை ஆரம்பக் கல்வியும் சேர்த்தே கற்றுக் கொடுக்கப்பட்டது. சீதா லட்சுமியின் தாயார் பொன்னம்மாள், மகளுக்கு மிகுந்த ஆதரவளிப்பவராகவும் ஊக்குவிப்பவராகவும் இருந்ததால், சீதா லட்சுமி நாடகங்களில் சிறந்த நடிகை என்று பெயரெடுத்தார். அதற்கு அவருடைய தாயாரே முக்கியமான காரணகர்த்தா எனலாம். நாடகங்களில் மட்டுமல்லாமல், பின்னர் திரைப்படங்களில் நடிப்பதற்கும் கூட அவரே ஊக்க சக்தியாக விளங்கினார்.
பெரிய நாடகக் குழுக்களில் கிடைத்த வாய்ப்பு இந்தியா விடுதலை பெற்ற பிறகே, குடும்பம் மீண்டும் 1951ல் தாய்நாடு திரும்பியது. சொந்த ஊருக்குத் திரும்பியவுடனேயே சென்னைக்குத் திரும்பி தங்கள் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். சென்னையில் ஏராளமான அமெச்சூர் நாடகங்களில் பங்கேற்று வந்தார் சீதா லட்சுமி.
நாடகங்களிலும் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களே அதிகம் கிடைத்தன. மிகக் குறைந்த வருமானம் கிடைத்தபோதும், எந்த வாய்ப்பையும் புறக்கணிக்காமல் ஏற்று நடித்தார். அவரது நடிப்புத் திறனைப் பார்த்த பிற பெரிய நாடகக் குழுக்களில் சற்றுத் தாமதமாகவே நடிப்பதற்கான வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அப்படித்தான் அவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, எம்.ஜி.ஆர் நாடக மன்றம், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற பிரபலங்களின் நாடகக் குழுக்களில் பங்கு பெறும் நடிகையாகவும் மாறினார்.
எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் மிகப் புகழ் பெற்ற நாடகங்களான ‘அட்வகேட் அமரன்’, ‘இன்பக் கனவு’ போன்ற நாடகங்களில் அம்மா வேடமேற்று நடித்துப் பெரும் புகழை அறுவடை செய்தவர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து, அறிஞர் அண்ணாதுரை எழுதிய பிரபல நாடகங்களான ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ நாடகங்களில் நடித்தவர். இந்த வரிசையில் ஏ.எஸ்.ஏ. சாமி எழுதிய ‘துளி விஷம்’ நாடகத்தையும் இணைத்துக் கொள்ளலாம். தமிழகம் மட்டுமல்லாமல், இந்த நாடகக் குழுவினருடன் இலங்கை, மலேசியா போன்ற அயல் நாடுகளுக்கும் சென்று நாடகங்களில் நடித்துப் பெருமை சேர்த்தவர் சீதா லட்சுமி. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால் போன்ற நகைச்சுவை நடிகர்களின் இணையாகவும் நாடகங்களில் நடித்துப் பேர் வாங்கியவர்.
சிவாஜி நாடக மன்றம் நடத்திய பிரபல நாடகங்களான ‘வேங்கையின் மைந்தன்’, ‘தேன் கூடு’, ‘நீதியின் நிழல்’, ‘களம் கண்ட கவிஞன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘ஜஹாங்கீர்’ போன்ற நாடகங்களில் நல்ல வேடங்கள் இவருக்குக் கிடைத்தன.
கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் ‘உதய சூரியன்’ நாடகம் மிகப் பெரும் புகழ் பெற்ற நாடகம். காவல்துறையை விமர்சிக்கும் ஒரு தாலாட்டுப் பாடல் அந்த நாடகத்தில் இடம் பெற்றது. அந்தப் பாடலைத் தன் கம்பீரமான கணீர் குரலில் பாடி நடித்தவர் சீதா லட்சுமி. நாடகம் தொடர்ந்து நடந்தாலும் அந்தப் பாடல் மட்டும் பலமுறை காவல் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அந்தப் பாடலின் வலிமையை.
திரைப்படங்களில் சீதா லட்சுமியின் பங்களிப்புநாடகங்களில் நடித்துப் பிரபலமாகியிருந்த அதே காலகட்டத்தில் திரைப்படங்களிலும் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார். ஆரம்ப காலத்தில் அவருக்குக் கிடைத்தவை பெரும்பாலும் சிறு சிறு வேடங்களே. அதே வேளையில் தன் நாடக உலக வாழ்க்கையும் வாய்ப்புகளும் பாதிக்காதவாறும் பார்த்துக் கொண்டார். அதனால் நாடகங்களில்
நடிப்பதை நிறுத்தவேயில்லை.
ஏறக்குறைய 200 படங்கள் வரை நடித்திருந்தபோதிலும் ஒரு சில படங்களில் மிகுந்த அழுத்தமான நடிப்பை வழங்கியவர். ஆண்டவன் கட்டளை, அன்புக் கரங்கள், எங்க வீட்டுப் பிள்ளை, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், பெற்றால்தான் பிள்ளையா, நான் பெத்த மகனே போன்ற படங்களில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. அசர வைத்த அம்மாக்கள்மனநிலை பாதிக்கப்பட்ட தாயாக, நீண்ட காலம் தன் பிள்ளைகளைப் பிரிந்து மனநல விடுதியில் தங்கியிருந்து குணமடைந்த பின் வீடு திரும்பும் ஒரு தாயாக சீதா லட்சுமி நடித்திருப்பார்.
சிறு குழந்தைகளாக விட்டுச் சென்ற மகனும் மகளும் வளர்ந்து இளமைப் பருவத்தில் இருக்கும்போது திரும்பும் தாய்க்கு அந்த நீண்ட இடைவெளியில் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் அல்லது தெரிவிக்கப்படாமல் இருக்க, மகள் யாரென்றே தெரியாமல், கைகாட்டும் வேறொரு பெண்ணை மகளென்று நம்புவதும் உண்மையிலேயே மகள் எங்கிருக்கிறாள் என்று தெரியாத நிலையில் அப்பாவித்தனமாக மகன் சொல்வதை நம்புபவராக, உண்மை நிலை தெரிய வரும்போது கொந்தளித்து மகனை அடித்துத் துவைத்துக் கண்டிக்கும் கறாரான ஒரு தாயாக திரையில் ஜொலிப்பார். உண்மையில் இம்மாதிரியான அம்மா வேடங்களை இதற்கு முன்னதாக ஏற்று நடித்தவர்கள் கண்ணாம்பா மற்றும் எம்.வி.ராஜம்மா இருவரும். அவர்களுக்குச் சற்றும் சளைக்காமல் இப்படத்தில் நடித்திருப்பார் சீதா லட்சுமி. அவரது திரையுலக வாழ்க்கையில் இப்படம் மிக முக்கியமானதொரு திரைப்படம் என்றால் மிகையில்லை.
இதே வரிசையில் வந்த மற்றொரு படம் ‘ஆண்டவன் கட்டளை’. தன் மகன் ஊர் போற்றும் நல்ல குணாதிசயமும் அறிவாளியுமான பேராசிரியர் என்று நெஞ்சு கொள்ளாத பெருமிதத்தில் அக மகிழ்ந்திருக்கும் அம்மாவுக்கு, மகன் அக்காள் மகளான முறைப்பெண்ணை மணக்க மறுப்பதுடன், தன் மாணவி ஒருத்தியையே காதலித்து மணந்து கொள்ளப் போகிறான் என்ற செய்தி இனிப்பாகவா இருக்கும்? மகன் மீது அத்தனை மனக்கசப்பு கொள்கிறாள் தாய்.
அடுத்த இடியாக தன் மகன் ஒரு கொலைகாரன் என்பதும் தெரிய வந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? மகனை சிறையில் வந்து பார்ப்பதுடன், மனம் கசந்து அவனைக் கடிந்து கொள்ளும் தாய், மன அழுத்தம் தாளாமல் சிறைக்குள்ளேயே விழுந்து மரணமடைகிறாள். இந்த இரு படங்களுமே 1964, 65 காலகட்டங்களில் வெளியானவை. அம்மாவாக நடிக்கும் வயதும் அப்போது அவருக்கில்லை. ஆனாலும் பிரமாதமான நடிப்பை வாரி வழங்கியிருப்பார். இவ்விரு படங்களிலும் அவருக்கு மகனாக நடித்தவர் சிவாஜி கணேசன்.
பணத்திமிரும் ஆணவமும் இந்தப் படங்களுக்கு நேர் மாறாக, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ யில் பணத்திமிரும் செருக்கும் கொண்டவராக, கொடூர வில்லனான நம்பியாரின் சகோதரியாக நடித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் என்றால், அது அவரது நடிப்புக்குக் கிடைத்த மரியாதை என்றே கொள்ள வேண்டும். நம்பியாரின் நடிப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் இவரது நடிப்பும் விளங்கியது.
குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவின் வெறுப்பையும் கூட படத்தில் சம்பாதித்துக் கொள்ளும் அளவு வெறுக்கத்தக்கதோர் பாத்திரம் சீதா லட்சுமியுடையது. கலை ரசனை மிக்க குடும்பத்தின் கலாபூர்வமான தாய் ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ படத்தின் கதையே மிக வித்தியாசமானது. அதில் வரும் சாவித்திரியின் குடும்பமோ வித்தியாசத்திலும் வித்தியாசம் நிறைந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பம்; குடும்பத்திலுள்ள அனைவரும் கலாரசனை மிக்கவர்கள். தாத்தா (முத்தையா) புல்லாங்குழல் இசைப்பார், அவ்வப்போது குழந்தைகளுக்குத் தன் கைகளாலேயே பட்டாசுகளையும் செய்து கொடுத்து மகிழ்விப்பார். மகள், (சீதாலட்சுமி) கைம்பெண் என்றாலும் நல்ல ஓவியர்.
வீட்டில் எல்லோரையும் ஒருவர் மாற்றி ஒருவராக மாடலாக நிற்க வைத்துப் படங்கள் வரைவது அவருக்குப் பொழுதுபோக்கு. பேத்தியோ (சாவித்திரி) இசை விற்பன்னர். பாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவள், மற்றொரு பேத்தியோ நாட்டியம் கற்றுக் கொள்பவள். இப்படி ஒரு குடும்பத்தைக் கற்பனை செய்து பாருங்கள். நினைவே சுகமாக இனிக்கும். ஒரு நாள், பேத்தியைப் பார்ப்பதற்காக ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்
(டி.எஸ்.பாலையா) தன் மனைவியை (ரமணி) அழைத்துக் கொண்டு வருகிறார்.
வீட்டில் செய்த இனிப்பை வந்தவர்களுக்காகக் கொண்டு வருகிறார் மகள் சீதா லட்சுமி. வந்தவர்கள் இவர்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்பதால், கொண்டு வந்த இனிப்பை அருவறுப்பாகப் பார்ப்பதுடன் அதைப் புறக்கணிக்கிறார்கள். சீதாலட்சுமி கொஞ்சமும் அதற்காகக் கவலையே படாமல், அவர்கள் கண்ணெதிரிலேயே கொண்டு வந்த பலகாரத்தை எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டு நகர்ந்து போய்க்கொண்டே இருப்பார். அந்தக் கதாபாத்திரத்தின் அலட்டிக் கொள்ளாத தன்மை அனைவரையும் வெகுவாக ஈர்க்கக் கூடியது.
இவை தவிர பல படங்களில் சிறு சிறு வேடமேற்றபோதும் தன் நடிப்புக்கு ஒருபோதும் குந்தகம் செய்தவரில்லை. ‘நவராத்திரி’ படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை வைத்துத் தொழில் செய்யும் பெண் வேடம். நடுத்தெருவில் சந்திக்கும் சாவித்திரியிடம், நைச்சியமாகப் பேசி தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்து வருவதும் அதே கனிவுடன் பேசி அவரை ஏமாற்ற நினைப்பதுமாக அழகாக நடித்திருப்பார். சிறு வேடம் என்றபோதும், மறக்க
முடியாததாக ஆக்கியிருப்பார்.
வயதான காலத்தில் அவர் நடித்த ‘நான் பெத்த மகனே’ திரைப்படத்தில் ஒப்பனை இல்லாமல் அவர் தோன்றும் காட்சிகளில் அச்சு அசலாக நம் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பெண்களையே தன் நடிப்பால் நினைவூட்டினார். இவ்வளவுக்கும் அப்படத்தில் ஏராளமான பெண்கள், அதிலும் வயதான பெண்கள் நடித்திருந்தார்கள். அனைவரின் நடிப்புமே மிக யதார்த்தமானது.
2005 ஆம் ஆண்டு கலைமாமணி விருது, தமிழக அரசின் பெரியார் விருது போன்றவை சீதாலட்சுமியின் நீண்ட நெடிய திரையுலக வாழ்க்கையில் அவருக்கான அங்கீகாரங்கள். துயரும் நோயும் நிறைந்த இறுதிக் காலம் திரைப்படங்களில் கொடூர குணம் படைத்த வில்லியாக அவர் தோன்றிய போதெல்லாம் பெண் ரசிகைகளைக் கலங்க வைத்தார்.
ஆனால், அசல் வாழ்க்கையில் வாயில்லாப்பூச்சியாக அதிகம் பேசாதவராக அவர் இருந்ததாகவே அவருடைய பழைய திரைப்பட சகாக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தனுஷ் நடித்த ’சீடன்’ வரை அவரின் திரையுலக வாழ்வு தொடர்ந்திருக்கிறது. 8 வயது தொடங்கி 80 வயது வரை நடித்து விட்டார்.
மிகை ரத்த அழுத்தம், கடுமையான நீரிழிவு நோய், ஆர்த்தரைட்டிஸ் எனும் கடுமையான மூட்டு வலி என முதிர்ந்த வயதில் மிகுந்த அவதிக்கு ஆளாகி இருக்கிறார் சீதா லட்சுமி. 11 நபர்களைக் கொண்ட மிகப் பெரிய குடும்பத்தின் ஆதார சுருதியாக இருந்தவர் இவர். உடல் வலிமையுடன் இருந்தபோது நாடகங்கள், திரைப்படங்களில் பங்காற்றிய காலத்திலும் கூட மிகப் பெரிய வருமானம் என்று சொல்வதற்கில்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் பொருளாதார நிலையை அவர் தாண்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், இவருடைய உழைப்புதான் குடும்பத்தில் பலரையும் கரையேற்ற உதவியது என்றால் மிகையில்லை.
நடிகர் விஷால் நடிகர் சங்கப் பொறுப்பேற்ற பின், மாதந்தோறும் 1500 ரூபாயும், பென்ஷனாக 1000 ரூபாயும் அளித்து வந்துள்ளார். நடிகர் சிவகுமார் தனிப்பட்ட முறையில் பொருளாதார உதவிகளைச் செய்துள்ளார். ஆனால், இவை யாவும் சீதாலட்சுமியின் மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்துள்ளது. மரணத் தருவாயில் தன் சகோதரியின் மகளும் நடன இயக்குநருமான ராதிகாவின் இல்லத்தில் பிப்ரவரி 28, 2019 அன்று 87 வயதில் காலமானார் சீதாலட்சுமி.
எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியவர் பெருமாள். 1956ல் சீதா லட்சுமிக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றதாகச் செய்திகள் உண்டு. ஆனால், தனக்குத் திருமணம் ஆகவில்லை என தன் இறுதிக் காலத்தில் சீதா லட்சுமி குறிப்பிட்டுள்ளார். அதுவும் கூட கையறு நிலையில் ஏற்பட்ட ஒருவித விரக்தியின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
இறுதியாக ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நான் எதற்காக இன்னும் வாழ்கிறேன் என்று தெரியவில்லை. 11 பேருடன் பிறந்திருந்தாலும், குடும்பத்துக்காகப் பொருளாதார ரீதியாக அதிகம் உழைத்தவள் நான். எல்லோர் மீதும் அக்கறை செலுத்தினேன்; இப்போது எனக்கு யாருமில்லை. நானும் என் ஒரே தம்பியும் மட்டும்தான் இருக்கிறோம். வேறு எந்த உறவுகளுமில்லை. என்னிடம் பணமும் இல்லை. எதுவுமே இல்லை’ என்ற ஒவ்வொரு சொல்லும் மிகுந்த வலியை ஏற்படுத்துபவை.
சீதாலட்சுமி நடித்த திரைப்படங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்தக் கண்ணீர், நீதிபதி, திலகம், டாக்டர் சாவித்திரி, தாயில்லாப் பிள்ளை, பாலும் பழமும், பாவ மன்னிப்பு, மாடப்புறா, நல்லவன் வாழ்வான், துளசி மாடம், எதையும் தாங்கும் இதயம், நினைப்பதற்கு நேரமில்லை, ஆண்டவன் கட்டளை, அன்புக் கரங்கள், தாயின் கருணை, எங்க வீட்டுப் பிள்ளை, கர்ணன், இரும்புத்திரை, கல்யாணியின் கணவன், குமுதம், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், கவிதா, நவராத்திரி, கலாட்டா கல்யாணம், பந்தயம், நான் யார் தெரியுமா?, ஒளி விளக்கு, உயர்ந்த மனிதன், அடிமைப்பெண், பத்தாம்பசலி, அனாதை ஆனந்தன், சாந்தி நிலையம், திருமலை தென்குமரி, காரைக்கால் அம்மையார், அகத்தியர், தேனும் பாலும், அன்னமிட்ட கை, ராஜ ராஜ சோழன், ராஜபார்ட் ரங்கதுரை, தங்க கோபுரம், உரிமைக்குரல், தென்னங்கீற்று, உன்னைச் சுற்றும் உலகம், நட்சத்திரம், தியாக உள்ளம், சத்திய சுந்தரம், நாடகமே உலகம், தாய் மேல் ஆணை, அன்புக்கு நான் அடிமை, நான் பெத்த மகனே, சீடன்.
Average Rating