உள்ளூராட்சித் தேர்தல்: மீண்டும் வீசும் தி.மு.க அலை !! (கட்டுரை)
தமிழகத்தின் அரசியல் களம், மீண்டும் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் மட்டுமே என்பதை, உள்ளூராட்சித் தேர்தல் நிரூபணம் செய்திருக்கிறது.
டிசெம்பர் 27, 30 ஆகிய திகதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் இந்த நிரூபணம் வெளிப்பட்டுள்ளது. 91,975 உள்ளூராட்சிப் பதவிகளுக்கான தேர்தலில், 5,605 மாவட்ட உள்ளூராட்சி, உள்ளூராட்சி ஒன்றிய வட்டாரங்களுக்கு மட்டுமே, அரசியல் சின்னத்தின் அடிப்படையிலான தேர்தல் நடைபெற்றது. கட்சிகள் இங்குதான் காரசாரமாக மோதிக் கொண்டன.
மீதியுள்ள 86,370 பதவிகளுக்கு, எவ்வித அரசியல் சின்னமும் கிடையாது. அவர்கள் எல்லாம், கட்சி சார்பற்ற முறையில் போட்டியிட்டு, உள்ளூராட்சி மன்றத் தலைவர், உள்ளூராட்சி மன்ற வட்டார உறுப்பினர் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற 5,605 வட்டாரங்களுக்கான தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க அதிக இடங்களைப் பிடித்து, வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க அடுத்தபடியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்குப் பிறகு, விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அடைந்த தோல்வி, அ.தி.மு.கவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருக்கிறது என்ற செய்தியைச் சொல்லியது.
அதனால்தான், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தி.மு.க நடத்திய மாபெரும் பேரணியைப் பார்த்து, “செல்வாக்கு இல்லாத கட்சிகள் நடத்திய பேரணி” என்று முதலமைச்சர் பழனிசாமி கடுமையான விமர்சனம் செய்தார்.
அதற்குப் பதிலடியாக, “சொந்தத் தொகுதியில், அதிக வாக்குகள் வாங்க முடியாத எடப்பாடி பழனிசாமி, செல்வாக்குப் பற்றி பேசலாமா” என்று தி.மு.க தலைவர் பதிலடி கொடுத்தார்.
செல்வாக்கு இல்லாத கட்சிகள், தி.மு.கவுடன் இருக்கின்றன என்று பேட்டியளித்த ஒரு வாரத்துக்குள், உள்ளூராட்சித் தேர்தலில் தி.மு.கவுக்குக் கிடைத்துள்ள வெற்றி, தமிழக அரசியலில் ‘தி.மு.க அலை’ பலமாக வீசுகிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்குப் பிரதான காரணம், அ.தி.மு.க அரசாங்கத்தின் மீது, மக்களுக்கு இருக்கும் அதிருப்தி ஆகும். வெறும் விளம்பரங்கள் மூலம் மட்டுமே, மக்களை நம்ப வைக்க முடியாது என்பதற்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு பாலபாடமாக அமைந்திருக்கிறது.
அ.தி.மு.க மீதுள்ள அதிருப்தி ஒருபுறமிருக்க, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகள், சிறுபான்மையின சமுதாயத்தினரின் போராட்டத்துக்கும் கோபத்துக்கும் உள்ளான பா.ஜ.கவுடன் அ.தி.மு.க அமைத்துள்ள ‘உள்ளூராட்சிக் கூட்டணி’, அக்கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது.
அதிகார பலம், ஆங்காங்கே உள்ள தேர்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு என்று எல்லாவித ஆதரவுகளையும் பெற்றிருந்தும்கூட அ.தி.மு.க, உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியில் முதலிடத்துக்கு வர முடியவில்லை.
வழக்கமாக, ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிக்கு, உள்ளூராட்சித் தேர்தல் சாதகமாக அமையும். தி.மு.கவோ அ.தி.மு.கவோ எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் அதுதான் நிலைமை.
ஒரேயொரு முறை, 1980களில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போது மட்டுமே, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, அதிக இடங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. அதை தவிர்த்து விட்டுப் பார்த்தால், தி.மு.க ஆட்சியில் இருந்தால், உள்ளூராட்சித் தேர்தலில் அக்கட்சி 85 முதல் 90 சதவீத வெற்றியைப் பெறும்.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால் அந்தக் கட்சியும் அதே மாதிரி வெற்றி பெறும். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த காலகட்டங்களில், இப்படித்தான் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இந்தமுறை தேர்தல், அ.தி.மு.க ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் நடைபெற்றது.
ஆகவே, அந்தப் ‘பழைய வெற்றி’ இப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கின்ற நேரத்தில், அ.தி.மு.கவுக்குக் கிட்டவில்லை. தேர்தல் வெற்றி கிட்டாதது ஒரு புறம் என்றால், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க முதலிடத்துக்கு வந்து விட்டது.
இந்தமுறை 27 மாவட்டங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல், அ.தி.மு.க ஆட்சியின் மீதான வாக்கெடுப்புக்குச் சமம் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், இவை அனைத்தும் கிராமப்புறப் பகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தல் ஆகும்.
அ.தி.மு.கவுக்குக் கிராமப்புற வாக்கு வங்கி மிகப்பெரிய அசையாச் சொத்தாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அடுத்து, ஜெயலலிதா ஆட்சியிலிருந்த காலத்தில், இந்த வாக்கு வங்கிக்கு ஒரு சில நேரங்களில் சேதாரம் ஏற்பட்டாலும் பெரும்பான்மையான சதவீதத்தை அ.தி.மு.க தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வந்தது.
ஆனால் இந்த முறை, கிராமப்புற வாக்கு வங்கியைக் கோட்டை விட்டு நிற்கிறது அ.தி.மு.க; இடைத்தேர்தல் வெற்றி மூலம் கிடைத்த சாதகமான சூழலையும் தொலைத்து விட்டு நிற்கிறது. ஸ்டாலினா, எடப்பாடி பழனிசாமியா என்ற போட்டியில், மக்களிடம் நடைபெற்ற வாக்கெடுப்பில், முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற அ.தி.மு.க, இப்போது உள்ளூராட்சித் தேர்தலிலும் தோல்வி அடைந்துள்ளது. தலைமை போட்டியில் மட்டுமின்றி, இரு கட்சிகளிலும் தி.மு.கதான் பெரிதும் செல்வாக்குப் பெற்ற கட்சி என்பதும் உறுதியாகியுள்ளது. இதன் அரசியல் விளைவுகள், எந்தத் திசையில் போகும் என்பதே, இப்போதைய எதிர்பார்ப்பு ஆகும்.
அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ‘இரட்டைத் தலைமை தோல்விகரமான முயற்சி’ என்று எழுந்த குற்றச்சாட்டு, மீண்டும் எழலாம். அ.தி.மு.கவை, வெற்றிப் பாதைக்கு முன்னெடுத்துச் செல்ல, ‘இரட்டைத் தலைமையால்’ முடியாது என்று தொண்டர்கள் நினைக்கலாம்.
துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், “மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறேன்” என்று பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அக்கட்சிக்குள் ‘இரட்டைத் தலைமை’ கட்சிப் பதிவேடுகளில் இருக்கிறதே தவிர, செயற்பாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றை தலைமையின் கீழ், அ.தி.மு.க இயங்குவதாகத் தோற்றம் உருவாக்கப்படுகிறது.
முதலமைச்சர் பதவியில் இருக்கும் பழனிசாமி, ஜெயலலிதா போலவே “நான் ஆணையிட்டுள்ளேன், எனது உத்தரவுப்படி” என்று தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறார்.துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் போன்ற தகுதியில்தான் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் தொடருகிறார்.
“நான் குறுக்கு வழியில், முதலமைச்சராக மாட்டேன்” என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, சொந்தக் கட்சிக் காரர்களிடமிருந்தும் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்திடமிருந்தும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சோதனைகளுக்குத் தடுப்பு அரணாக அமைந்துள்ளது.
அதனால், தேர்தல் என்ற அஸ்திரம் பழனிசாமி கையில் இருப்பதால், ஆட்சிக்கு இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால், கட்சிக்குள் அதேநிலை நீடிக்கும் என்று கூற முடியாது. மக்களைச் சந்திக்கும் இரண்டாவது தேர்தலில் பெற்ற தோல்வி, முதலில் அ.தி.மு.கவை நம்பி வந்த கூட்டணிக் கட்சிகள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கும்.
அடுத்து, அ.தி.மு.கவுக்கு, ஒற்றைத் தலைமை தேவை, மக்கள் செல்வாக்குள்ள தலைவர் தேவை என்ற சர்ச்சையை எழுப்பும். அந்த மக்கள் செல்வாக்குள்ள தலைவர் ஓ.பன்னீர்செல்வமா, ரஜினியா, ரஜினியின் துணையோடு ஓ. பன்னீர்செல்வமா? என்று பல்வேறு வியூகங்கள் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் முன் வைக்கப்படுகிறது.
இந்த உள்ளூராட்சித் தேர்தல் தோல்வி, இவற்றில் ஏதாவது ஒரு வியூகத்தில் அ.தி.மு.கவைச் சிக்க வைக்கும் என்பதே இப்போதுள்ள தெளிவான காட்சி.
தி.மு.கவுக்கு ‘முதற் கட்சி’ என்ற அந்தஸ்தை, இந்தத் தேர்தல் மூலம் பெற்றுக் கொடுத்துள்ள ஸ்டாலின், தனது கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் புதிய கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு வருவதற்கும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உதவிகரமாக அமையும்.
ஸ்டாலின் தலைமையில், மக்களைச் சந்தித்துப் பெற்ற முதல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி. இப்போது மக்களைச் சந்தித்துப் பெற்ற இரண்டாவது வெற்றி உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி. கட்சிக்குள் தனது தலைமையின் அந்தஸ்தை இரட்டிப்பு பலமாக்கிக் கொண்டுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டில் ‘வெற்றிக் கூட்டணி’ அமைக்கும் ஒரு தலைவராக காட்சியளிக்கிறார். தமிழகத்தில் கிடைக்கும் இந்தத் தொடர் வெற்றி, தேசிய அளவில் உள்ள பல தலைவர்களையும் ஸ்டாலினைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் பயணத்தில் இன்னும் ஒரு வருடமே இருக்கின்ற நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி, அதிலும் குறிப்பாகக் கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் இந்த ஆதரவு, சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க அலை வீசும் என்ற நம்பிக்கையை, ஸ்டாலினுக்கும் மற்றக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் கொடுத்துள்ளது.
அது மட்டுமின்றி, தமிழக அரசியலில் ‘தி.மு.க- அ.தி.மு.க’ மட்டுமே பிரதானம் என்ற செய்தியை, அழுத்தம் திருத்தமாக கிராமப்புற வாக்காளர்கள் உரக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
Average Rating