அப்சலை தூக்கிலிட ஏற்பாடுகள் தொடங்கின
இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் முகம்மது அப்சல் குரு, வரும் 20ம் தேதி தூக்கிலிடப்படுகிறார். அவரைத் தூக்கில் போடுவதற்காக மீரட்டிலிருந்து மம்மு என்பவர் திகார் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கல்லூரி பேராசிரியரான அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் இறுதி செய்துள்ளது.
இதையடுத்து அப்சலை வரும் 20ம் தேதி திகார் சிறையில் தூக்கிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவீந்தர் கௌர் மரண தண்டனையை நிறைவேற்றும் வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளார். 20ம் தேதி காலை 6 மணிக்கு அப்சல் தூக்கிலிடப்படவுள்ளார்.
அப்சலைத் தூக்கிலிடுவதற்காக இந்திய உ.பி. மாநிலம் மீரட்டிலிருந்து மம்மு என்பவர் வரவழøக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை முகலு என்பவரும் பல கைதிகளை தூக்கிலிட்ட அனுபவம் பெற்றவர். தந்தையின் வழியில் மம்முவும் தற்போது கைதிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
திகார் சிறையின் ஜெயிலர் பி.எஸ்.ஜரியால் முன்னிலையில் அப்சல் தூக்கிலிடப்படுவார். தற்போது சிறை எண் 1ல் ஜெயிலராக உள்ளார் ஜரியால். விரைவில் அப்சல் அடைக்கப்பட்டுள்ள சிறை எண் 3க்கு அவர் மாற்றப்படவுள்ளார்.
கடந்த 1981ம் ஆண்டு முதல் ஜரியால் திகார் சிறையில் ஜெயிலராக பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலத்தில் 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். பிரபலமான தாதாக்களான பில்லா மற்றும் ரங்கா ஆகிய இருவரும் 1982ம் ஆண்டு ஜரியால் முன்னிலையில்தான் தூக்கிலிடப்பட்டனர்.
இதேபோல 1984ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான மக்பூல் என்பவரும் ஜரியால் முன்னிலையில்தான் தூக்கிலிடப்பட்டனர்.
1989ம் ஆண்டு இந்திரா காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சத்வந்த் சிங்கும், கேஹர் சிங்கும், ஜரியால் முன்னிலையில்தான் தூக்கிலிடப்பட்டனர்.
இதற்கிடையே, அப்சல் சிறையில் மிகவும் அமைதியாகவும், ஆழ்ந்த சிந்தனையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது முதல் அவர் தினசரி ஐந்து வேளை தொழுகை நடத்தி வருகிறார்.
அப்சலின் சகோதரர் இஜாஸ் அகமது வெள்ளிக்கிழமை சிறையில் பார்த்துப் பேசினார். பகல் முழுவதும் இறை சிந்தனைகளில் இருக்கும் அப்சல், இரவில் நிம்மதியுடன் தூங்குவதாக இஜாஸ் தெரிவித்தார். விரைவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து, அப்சலுக்கு கருணை காட்டுமாறு கோரப் போவதாக இஜாஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணமாக அப்சலை தற்போது சிறை எண் 4க்கு மாற்றியுள்ளனர். மேலும், அப்சல் தற்கொலை செய்து கொண்டு விடக் கூடாது என்பதற்காக மிகவும் உன்னிப்பாக அவர் இருக்கும் அறை கண்காணிக்கப்பட்டு வருகிறது.அப்சல் அணிந்துள்ள துணியினால் ஆன பைஜாமாவைக் மாற்றி விட்டு எலாஸ்ட்டிக்கினால் ஆன பைஜாமாவை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.
விமானங்களை கடத்த திட்டம்:
இதற்கிடையே, அப்சல் தூக்கிலிடுவதைத் தடுக்க இந்தியாவின் முக்கிய நகரங்களில் விமானங்களைக் கடத்தி வெடிக்க வைக்க நான்கு தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நான்கு பேரும், நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளதாகவும், விமானங்களைக் கடத்தி அவற்றை வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திகார் சிறையின் மீதோ அல்லது தலைநகர் டெல்லியிலோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.