கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா? (மருத்துவம்)
அண்மையில் சென்னை நகரில் 600க்கும் அதிக கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒன்றுகூடி, கடுமையான கல்லீரல் செயலிழப்பு (Acute liver failure) நோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். ‘கல்லீரல் பாதித்த நோயாளிகளுக்கு அடிக்கடி கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்றும், அது தேவையற்றது… 30 சதவிகித நோயாளிகளுக்கே அந்த அறுவை சிகிச்சை அவசியம்… மற்றவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையே போதுமானது’ என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இது பற்றி பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும் சென்னை லிவர் ஃபவுண்டேஷனுடைய நிர்வாக அறங்காவலருமான டாக்டர் விவேகானந்தனிடம் பேசினோம்…
‘‘கடுமையான செயலிழப்பு மற்றும் நீண்ட நாள் செயலிழப்பு (Acute failure and Chronic failure) என இருவகை கல்லீரல் செயலிழப்புகள் உள்ளன. பாரசிட்டமால், டி.பி. மாத்திரை களை நீண்டநாட்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கும், எலிக்கொல்லி விஷம் உடலில் செல்லும்போதும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. ஹெபடைட்டிஸ் ஏ, பி, இ (Hepatitis) வைரஸ்கள் கல்லீரலை தாக்குவதால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் மற்றும் கல்லீரல் புற்று நோய் போன்றவற்றாலும் கல்லீரல் செல்கள் சேதமடைந்து செயல்படாநிலையை அடையும் போது கடுமையான கல்லீரல் செயலிழப்பு (Acute failure) ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை நோய், ரத்தம் உறைதல் மற்றும் மூளைக்குழப்பம் (Encephalopathy) போன்றவை கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கான 32அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரிந்த ஒரு வாரத்துக்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது அறுவை சிகிச்சையின்றி சாதாரண நிலையை விரைவில் அடையலாம்.
ரத்தம் உறைதல், ரத்தவாந்தி எடுத்தல், அடிக்கடி ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரகச் செயலிழப்பு போன்றவை மிக மோசமான நிலையைக் காட்டும் அறிகுறிகள். இந்த நிலையை அடையும்போதுதான் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் ஆகிறது. கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு லண்டன் கிங்க்ஸ் கல்லூரி
முக்கியமாக 5 காரணிகளை வகுத்துள்ளது. அதன்படி,
1. 10 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் செயலிழப்பு.
2. ஹெபடைட்டிஸ் B, C வைரஸ் அல்லாத மற்ற வைரஸ் தாக்குதலால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்தால்…
3. மஞ்சள் காமாலையைத் தொடர்ந்து 7 நாட்களுக்கு மேல் நோயாளி கோமா நிலையில் இருந்தால்…
4. ரத்தம் உறையும் தன்மை (INR level) 4.5க்கு மேல் இருந்தால்…
5. மஞ்சள் காமாலை அளவு 17க்கு மேல் தாண்டும்போது…
இந்த 5ல் 3 காரணிகள் இருந்தால், அவருக்கு கட்டாயம் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுப்போம். காலம் தாழ்த்தியோ, முன்னதாகவோ இல்லாமல், சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யும்போது விரைவிலேயே அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிடலாம்.அடுத்ததாக, நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு (Chronic liver failure) ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ்கள் தாக்குவதால் ஏற்படும் கல்லீரல் தொற்று நோய், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு, கல்லீரல் புற்றுநோய், நீண்ட கால மதுப்பழக்கம் மற்றும் பருமனால் கல்லீரலில் படியும் கொழுப்பு, காப்பர், இரும்பு, அமோனியா போன்ற உலோகங்கள் திசுக்களில் படிதல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
அடிக்கடி ஏற்படும் ரத்தவாந்தி, தொடர்ந்து ஏற்படும் பாக்டீரியா தொற்றுநோய், அடிவயிறு வீக்கம், மூளைக்குழப்பம், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய், நீண்ட கால மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட கடுமையான மஞ்சள் காமாலை நோய் மற்றும் கடுமையான ரத்த உறைவு போன்றவை மோசமான நிலையைக் காட்டும் அறிகுறிகள். இவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர வேறு தீர்வு இல்லை’’ என்கிற டாக்டர் விவேகானந்தன், ‘‘முறையான தடுப்பூசி, மதுப்பழக்கத்தை விடுவது, மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி மற்றும் ரெகுலர் செக்கப் போன்றவற்றை கடைப்பிடித்தாலே, கல்லீரல் நோய் வராமல் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்’’ என்றும் அறிவுறுத்துகிறார்.
Average Rating