இது சிக்-கல்!! (மருத்துவம்)
சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும். சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விலாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும்.
என்னென்ன அறிகுறி?
பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் அளவு அதிகரித்தல், சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், அடிவயிற்றில் வலி, வலியோடு சிறுநீர் கழித்தல், இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல், ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி, சிறுநீரின் நிறம் இயற்கைக்கு மாறாகக் காணப்படுதல் போன்றவை சிறுநீரகத்தில் கல் தோன்றியிருப்பதின் அறிகுறிகளாக இருக்கலாம்.
வகைகள்
கால்சியம் கற்கள் அதிகமாக ஏற்படக்கூடியவை, அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்ப ஏற்படும் தன்மையுடையது. கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸலேட் (மிக அதிகளவிலான பொருள்), பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.
* யூரிக் அமில கற்கள் – இவைகளும் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
* ஸ்ட்ருவைட் கற்கள்- (மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிகங்களால் ஏற்படும் கல்) என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.
எப்படி தடுக்கலாம்?
சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரக கற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின் படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்படுவதை தடுக்கலாம். வாழைத்தண்டு சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் கண்கண்ட மருந்து. அதனைப் பருகலாம்.
டாக்டரை பாருங்க!
சிறுநீர்கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ, சிறுநீரக கற்கள் திரும்பத்திரும்ப ஏற்படுவதற்கான அறிகுறிகளோ, சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது பிற புதிய அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்.
Average Rating