கத்தி மேல் நடக்கும் பயணம் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 13 Second

சீனப் பயணத்துக்கான ஒழுங்குகள் முடிவு செய்யப்பட்ட சூழலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து, புதன்கிழமை (01) தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

2020 புத்தாண்டு தினமான அன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடனும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்.
சம்பிரதாயபூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட பின்னர், அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவர் மென்போக்காகப் பேசியிருக்கிறார்.

குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்வரும் 14ஆம் திகதி, சீனாவுக்கான பயணத்துக்கு நாள் குறித்து விட்டுக் காத்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, இது ஒரு செய்தியைக் கூறியிருப்பதாகவே தெரிகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அல்லது வேறெந்த நாடுகளின் தலைவர்களும், இலங்கைத் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்லும் பழக்கத்தை, இதுவரை கொண்டிருந்ததில்லை.

இந்த ஆண்டில்தான், முதல்முறையாக இவ்வாறான ஒரு சம்பிரதாயம், இந்தியப் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இலங்கைத் தலைவர்களுக்கு மாத்திரமன்றி, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்களுடனும், அவர் தொலைபேசியில் வாழ்த்துகளைப் பரிமாறி இருக்கிறார்.

‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில், இந்த வாழ்த்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டாலும், இதற்குப் பின்னால், ஒரு புவிசார் அரசியல் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், அயல்நாடுகளில் பாகிஸ்தானுடன் இப்போது உறவுகள் இல்லை என்ற நிலையில் இருக்கிறது. ஏனைய நாடுகளில், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு ஆகியன, இந்தியாவுக்குச் சார்பான நிலையிலேயே இருக்கின்றன.

நேபாளம், இலங்கை விவகாரங்களில் தான், இந்தியா கவனமாக நடந்து கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறது.

இந்தியாவுக்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள இந்த இரண்டு நாடுகளிலும், சீனாவின் செல்வாக்கு அதிகம் உள்ளது.

இரண்டு நாடுகளிலுமே சீனா அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது. ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றதை அடுத்து, இலங்கை விவகாரத்தில் இந்தியா மிகக் கவனமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாமல் ஆட்சி செய்வதற்கு, கோட்டாபய ராஜபக்‌ஷ எவ்வாறு விரும்புகிறாரோ, இலங்கையைச் சீனாவின் பக்கம் சென்று விடாதபடி பார்த்துக் கொள்வதற்கும் இந்தியாவும் விரும்புகிறது.

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகள், சீனாவின் பக்கம் சார்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும், கத்தி மேல் நடக்கின்ற காரியத்தையே, இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கம் மேற்கொள்கிறது.

சீனாவுடன் 1,414 கி.மீ நீளமான தரைவழி எல்லையைக் கொண்டுள்ள நாடு நேபாளம் ஆகும். ஆனாலும், இந்தியாவின் உறுமலுக்கு அடங்கி விடக்கூடியது.

ஆனால், இலங்கை அப்படியல்ல! இலங்கையின் புவிசார் அமைவிட முக்கியத்துவம் காரணமாக, இந்தியாவால் அவ்வாறு அடக்கி வைத்திருக்க முடியாது; அடங்கிப் போகக் கூடிய ஆட்சியாளர்களாகவும் தற்போதைய அரசாங்கம் இல்லை.

எனவே, இலங்கையைக் கைக்குள் வைத்திருக்க வேண்டுமாயின், நுட்பமான ஓர் உறவைப் பேண வேண்டியிருக்கிறது. மிகவும் கவனத்துடன் தான், கையாள வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான், புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதில் இருந்து தொடங்கியிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. தனியே இலங்கை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாத்திரம் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறமுடியாது. அவ்வாறு கூறினால், ஏனைய அண்டை நாடுகள், தம்மை இந்தியப் பிரதமர் புறக்கணித்து விட்டார் என்று கருதி விடும்.

அதைவிட, இதுவரையில்லாத ஒரு வழக்கமாக, இலங்கைத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் புத்தாண்டு வாழ்த்துச் சொல்கிறார் என்றால், அவர் புதிய அரசாங்கத்தைக் கண்டு மிரளத் தொடங்கியிருக்கிறார் என்ற அர்த்தமும் கற்பிக்கப்பட்டு விடும். எனவேதான், அயலில் உள்ள ஐந்து நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. அவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் நிறுத்தியிருக்கவில்லை. 2020ஆம் ஆண்டில், இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இரண்டு வாரங்களில் சீனாவுக்குப் புறப்படவுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் கூறியிருக்கின்ற இந்த விடயத்தில், உள்ளூர ஒரு விடயம் ஒளிந்திருக்கிறது,
2020இல், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியா எதிர்பார்த்திருக்கின்ற நிலையில், சீனப் பயணத்தின் போது, அந்த உறவுகளைக் குலைக்கின்ற வேலையில் இறங்கக்கூடாது என்பதே அந்த உட்பொருள்.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கின்றவர்கள், முதலில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது வழமை. அதுபோலவே, அடுத்த பயணத்தை சீனாவுக்கு மேற்கொள்வது இப்போதைய வழக்கமாக மாறியிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம், இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அடுத்து சீனாவுக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஏனென்றால், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பீஜிங்கிற்கான இந்தப் பயணம், டிசெம்பர் மாதத்திலேயே எதிர்பார்க்கப்பட்ட போதும் ஜனவரி மாதமே, இடம்பெறப் போகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சீனப் பயணத்தின் போது, முதலீடுகள், உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பேச்சுகளில், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான விடயங்கள் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும் என்பதே, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு உள்ள சிக்கல்.

பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில் இருந்தே, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக எதையும் செய்யமாட்டோம் என்று கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்து வந்திருக்கிறார். ஆனாலும், அவரது அந்த வாக்குறுதியை இந்தியா முன்னர் நம்பவில்லை. இப்போதாவது, அந்த வாக்குறுதி உண்மையானது தான் என்று நம்ப வைக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்.

அதேவேளை, இலங்கையில் சீனா அடைந்துள்ள நலன்கள் விடயத்தில், எந்த விட்டுக்கொடுப்புக்கும் பீஜிங் தயாராக இல்லை. குறிப்பாக, கொழும்புத் துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற விடயங்களில், எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குச் சீனா முன்வரவில்லை.

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் திருத்தம் செய்யப் போவதாகக் கூறிவந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இப்போது. அந்த முடிவை மாற்றிக் கொண்டிருப்பதன் பின்னணியும் அதுதான். அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனா வசம் இருப்பதால் மாத்திரமன்றி, இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரிப்பதால், தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்தியா கருதுகிறது.

இந்தியா, தனது பாதுகாப்பு, ஆராய்ச்சி மய்யங்கள், தளங்களை அண்மைக்காலமாக தெற்கு நோக்கி, குறிப்பாகத் தமிழ்நாட்டை நோக்கி நகர்த்தி வருகிறது.

வடக்கில் பாகிஸ்தான், சீனா என இரண்டு எதிரி நாடுகள் அல்லது போட்டி நாடுகள் இந்தியாவுக்கு உள்ளன. தெற்கில் அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை. இது ஒரு காரணம்.

இந்தியப் பெருங்கடல் வழியாக வரக்கூடிய ஆபத்துகளைச் சமாளிப்பதற்கும் இது உதவக் கூடும். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மய்யமான இஸ்‌ரோவும் கூட, தூத்துக்குடியில் ஒரு ரொக்கட் ஏவுதளத்தை அமைக்கவுள்ளது. அதற்காக, 2,300 ஏக்கர் நிலத்தைத் தருமாறு, தமிழக அரசிடம் கோரியிருக்கிறது,

ஏற்கெனவே கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது. தூத்துக்குடியில் ரொக்கட் ஏவுதளமும் வந்து விட்டால், தென்பகுதிப் பாதுகாப்பின் மீது, இந்தியா இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறான நிலையில், இலங்கையில் சீனாவின் தலையீடுகள், செல்வாக்குகள் இந்தியாவுக்கு கவலை தரக்கூடிய விடயமாக உள்ளன.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர், 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு குறித்து, இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். ஆனால், அவற்றைச் செய்ய முடியாது என்று, அங்கிருந்தே ஊடகங்களுக்கு பேட்டியளித்து விட்டுத் திரும்பினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.

ஆயினும், சீனா விடயத்தில் அவரால் அவ்வாறு பதிலளிக்க முடியாது. இலங்கைத் தமிழர் விவகாரத்தை விட, புதுடெல்லிக்கு அதன் பாதுகாப்புத் தான் முக்கியம்.

சீனா மூலம் வரக்கூடிய எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் புதுடெல்லி கண்டுகொள்ளாமல் விட்டு விடாது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குத் தெரியாத விடயமல்ல.

ஏற்கெனவே அவர், “வல்லமை மிக்க நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

அதனை, அவர் நிரூபிக்க வேண்டுமாயின், சீனப் பயணத்தை அவர் மிக அவதானத்துடன் தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கத்திமேல் நடக்கின்ற பயணம்; இந்தியாவுக்கு மாத்திரமல்ல, இலங்கைக்கும் தான்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்!! (மகளிர் பக்கம்)
Next post ஆச்சரியமான குடும்பங்கள்!! (வீடியோ)