மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் !! (கட்டுரை)
மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது.
அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். இந்த மதிப்பு, எதுவரைக்கும் என்றால், அவர்கள் தமது மதக் கடமைகளையும் போதனைகளையும் முன்மாதிரியாகவும் கண்ணியமாகவும் முறையாகவும் செய்வது வரைக்குமானதாக இருக்கும்.
ஆனால், இலங்கையில் மத போதகர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரில் சிலர், செய்கின்ற அபத்தமான காரியங்களின் காரணமாக, அவ்வாறனவர்கள் மீதான விமர்சனப் பார்வையொன்று, எழுந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அதாவது, துறவிகள் அரசியலில் நுழைவதும், அரசியல்வாதியாக இல்லாத துறவிகள் சிலர், அதிகாரம் உள்ளவர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பதும் இப்போது, விசனத்துடன் பார்க்கப்படுவதாகச் சொல்ல முடியும்.
இதன் காரணமாகத் துறவிகள், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள், மேலெழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மல்வத்து பௌத்த பீடத்தின் அநுநாயக்க தேரர் ஒருவர் கூட, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், அரசியல் கட்சிகள், பௌத்த தேரர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்ற தொனியில் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மல்வத்து பௌத்த பீடத்தின் அநுநாயக்க தேரரின் கருத்துப்படி, “அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட, பௌத்த பிக்குகளுக்கு அரசியல் கட்சிகள், இடம் கொடுக்கக் கூடாது. அவ்வாறான துறவிகள், அரசியலுக்குள் நுழையாமல், அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தி, தமது பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கத்தோலிக்க மதத்தின் மதத் தலைவர் ஒருவரும் முன்னொரு முறை, இதுபோன்ற கருத்தொன்றை தெரிவித்திருந்தார். ‘இவர்கள்’ அரசியலில் இருந்து விலகும்போது, சுபீட்சம் உண்டாகும் என்ற கருத்துப்பட அவர் ஒரு நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.
இது போன்ற கருத்துகளை மேலும் பல பௌத்த பிக்குகளும் முக்கியஸ்தர்களும் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தனர்.
பெருமளவிலான பௌத்த மத துறவிகள், பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லா இன மக்களுக்கும், இந்த நாடு சொந்தமானது என்பதை உணர்ந்த அவர்கள், மிகவும் பொறுப்புடன் இன ஐக்கியத்துக்காகப் பணியாற்றுகின்றனர். ஆனால், பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில பௌத்த துறவிகளின் செயற்பாடுகள், இவ்விதம் இல்லை.
பௌத்தநெறி தவறிப் போகும், பௌத்த துறவிகள் சிலரின் செயற்பாடுகளை மனதில் வைத்தே, துறவிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இருந்தபோதிலும், உண்மையில் இது பௌத்த பிக்குகளுக்கு மட்டுமானதல்ல; இவ்விதம், வேறுவேறு நிகழ்ச்சி நிரல்களோடு செயற்படுகின்ற இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மத போதகர்களுக்கும் குருக்களுக்கும் பொருந்தும்.
ஏனெனில், உதாரணத்துக்கு, ‘ஏப்ரல் 21’ தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரானை, ஒரு மதபோதகர் (மௌலவி) என்று, முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை, அவ்வாறான அங்கிகாரம் ஒன்றை வழங்குவார்களாயின், இதற்கு முன்னர், மத போதகர்களுடன் சம்பந்தப்பட்டதாக, நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் எல்லாவற்றையும் விட, மிகவும் கேவலமான, மிலேச்சத்தனமான தாக்கத்தை, சஹ்ரான் குழுவினரே ஏற்படுத்தி இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
பௌத்த துறவிகளில் ஒருவகையைச் சார்ந்தோர், நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்றனர். சிலர், அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட முனைவார்கள் எனத் தெரிகின்றது.
இன்னுமொரு வகையான மத போதகர்கள், எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். அவர்கள், தாம் ஒரு மதகுரு என்கின்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு, அரசியல்வாதிகளின் துணையைப் பெற்றுக் கொண்டு, ஆட்டம் போடுகின்ற பேர்வழிகள். அதாவது, நிழல் அதிகாரத்துக்குச் சொந்தக்காரர்கள். எனவே, அவ்வாறான ஆட்கள், நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுவது மட்டுமன்றி, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகச் செயற்படுவதும் தடுக்கப்பட வேண்டியுள்ளது.
எல்லா மதங்களிலும் மதகுருமார், மதபோதகர்கள் என்போர், தமது மார்க்கத்தைப் பற்றிய தெளிவான புரிதலை, மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான பொறுப்பைச் சுமந்தவர்கள்தாம். இலங்கையின் இறைமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட, எத்தனையோ மூவின மதகுருக்களையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கின்றது.
குறிப்பாக, இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அநியாயம் இழைக்கப்படும் போது, குரல்கொடுத்த பௌத்த துறவிகளை ஒருபோதும் மறந்துவிட முடியாது.
இவ்வாறு, இன ஐக்கியத்துக்காகக் குரல் கொடுக்கக் கூடிய துறவிகள், பௌத்த பீடங்களிலும் அதற்கு வெளியிலும் நிறையவே இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்து, பல எதிர்விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ‘காவியுடை துறவிகள்’ இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
எனவே, இந்தப் பத்தியால் இவ்வாறான முன்மாதிரியான துறவிகளின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதுடன், உண்மையில், தமது இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அதிகாரத்தைப் பெறுவதற்காக, அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நுழைகின்ற துறவிகள், செல்வாக்குடன் இருந்து கொண்டு, இனமத வெறுப்பைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய துறவிகளும் போதகர்களும் குருக்களும் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றியே இப் பத்தி பேசுகின்றது.
மதத் தலைவர்கள், போதகர்கள், துறவிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கருத்துநிலை, முன்னைய காலங்களில் காணப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
ஜாதிக ஹெல உறுமய உருவாக்கப்பட்டு, அதனூடாகப் பல பௌத்த பிக்குகள் நேரடியாகப் பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைந்தனர். ஆனால், சில துறவிகள் முற்போக்காகச் செயற்பட்டாலும், பலர் முகம் சுழிக்கும் வகையில் அரசியல் செய்தனர்.
குறிப்பாக, ஓமல்பே சோபித்த தேரர், அத்துரலிய ரத்தன தேரர் எனப் பலரது நடவடிக்கைகள், பௌத்த துறவிகள் என்று சொல்லக்கூடிய வகையில், முன்மாதிரிகளாக அமையவில்லை.
அதிலும் குறிப்பாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவர் பதவி விலகவேண்டும் என்று, ரத்தன தேரர் கண்டியில் உண்ணாவிரதம் இருந்தார். கல்முனையில் நடந்த சத்தியாக்கிரகத்திலும் அரசியல் செய்தார்.
முஸ்லிம்களுக்குள்ளும், பெயரளவில் மதபோதகர்களினால் கட்சி உருவாக்கப்பட்ட போதும், பிரதிநிதித்துவ அரசியலில், பெரும்வீச்சில் அக்கட்சி ஈடுபடவில்லை. அதேபோன்று இந்து, கிறிஸ்தவ மதப் பிரிவினரிடையேயும் கட்சிக்கு சமமான அமைப்புகள் செல்வாக்குடன் இயங்குகின்ற போதிலும், நேரடி பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழையவில்லை.
ஆனால், அநேகமான பௌத்த தேரர்களின் அரசியல் செயற்பாடுகள், கணிசமான சிங்கள மக்களுக்கே, இன்று மனவெறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் பின்னணியிலேயே, துறவிகள் அரசியலுக்குள் நுழையக் கூடாது; அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, பிரதிநிதித்துவ அரசியலில் அங்கத்துவம் வகிக்காமலேயே, வெளியே இருந்து கொண்டு, அரசியல்வாதிகளின் வலது கரங்களாகவும் அழுத்தக் குழுக்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் செயற்படும் மத போதகர்கள், குருக்கள், துறவிகள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் கூட, அநேக சந்தர்ப்பங்களில், இன ஐக்கியத்தை ஊக்குவிப்பவையாக அமைவதில்லை என்பதே, இலங்கை மக்களின் அனுபவமாக இருக்கின்றது.
அநகாரிக தர்மபால காலத்தில் இருந்து, மதத்தை முன்னிலைப்படுத்திய முன்னெடுப்புகள், பிற்காலத்தில் இன, மதவாத சிந்தனைகளுக்கு வித்திட்டன.
பின்னர் பொதுபல சேனா, ராவண பலய, சிங்கள ராவய உள்ளிட்ட பல அமைப்புகள் உருவானதுடன், நாட்டின் இயல்பு வாழ்க்கையில், பெரும் செல்வாக்குச் செலுத்தும் அமைப்புகளாகவும் மாறியிருக்கின்றன.
பொது பலசேனாவின் ஞானசார தேரர், ராவண பலய, சிங்கள ராவய அமைப்புகளின் தேரர்கள், கடந்த காலங்களில், முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை நாடறியும்.
முஸ்லிம்களின் சமய அடையாளங்களைக் கேலிக்கு உள்ளாக்கியதுடன், கடந்த ஆறேழு வருடங்களில், நாட்டில் இடம்பெற்ற சிறிய, பெரிய இனக் கலவரங்களின் பின்னணியிலும் காவியுடைதாரிகளும் இருந்திருக்கின்றார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இப்போது, இந்நிலைமை சற்று அடங்கி இருந்தாலும், கிறிஸ்தவ மத அடையாளத்தை இலக்கு வைத்து, அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் போன்றோர், அநாகரிகமாக நடந்து கொள்வதைக் காணொளிகள் ஊடாக, இப்போதும் இந்த உலகமே அவதானித்து வருகின்றது. இது துறவிகள் மீதான மரியாதையைச் சீர்குலைத்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
மதத்தை வளர்ப்பதற்காகவும் அதனை நிலைநிறுத்துவதற்காகவும் தம்மை அர்ப்பணித்து முன்னிலைப்படுத்துவோர், அவர்கள் பௌத்த துறவிகளாக இருந்தாலும் இந்துக் குருமாராக இருந்தாலும் இஸ்லாமிய மௌலவிகளாக இருந்தாலும், கிறிஸ்தவக் குருக்களாக இருந்தாலும் அவர்களது தலையாய கடமை என்பது, மற்றைய மதங்கள் பற்றிய சகிப்புத் தன்மையுடன், தமது மதத்தின் ஒழுக்க விழுமியங்களை போதிப்பதும், அந்த மார்க்கத்தை தமது மக்கள் முழுமையாகப் பின்பற்றச் செய்வதுமாக இருக்க வேண்டும்.
இதற்கு மேலதிகமாக, அவர்களுக்கு இருக்கின்ற சமூகப் பொறுப்பின் அடிப்படையில் சமூக, அரசியல் விடயங்களில், மத துறவிகள் கவனம் செலுத்துவதும், அது தொடர்பில் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அறிவுறுத்துவதும் அவர்களது தார்மிகக் கடமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைப் பலர் மீறிச் செயற்படுகின்றனர் என்பதே யதார்த்தமானதும் கவலைக்குரியதும் ஆகும்.
மதத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் இலகுவானது. இந்த அடிப்படையில், தாம் மத போதகர்கள் என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு, துறவிகளும் குருக்களும் போதகர்களும் அளவுக்கதிகமாகவே, நாட்டின் அரசியலில் மூக்கை நுழைப்பதும் இன நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படுவதும் நீண்டகாலமாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.
இவற்றை எல்லாம் கடந்து, துறவிகள் அரசியலுக்குள் வந்தால், ‘ஏதாவது நல்லது நடக்கலாம்’ என்ற நப்பாசையில், அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட அநேகரின் செயற்பாடுகளும் சிறுபான்மைச் சமூகங்களின் மனங்கவரும் வகையில் இல்லை. அதுமட்டுமன்றி, அவர்கள் சார்ந்த மக்களின் கௌரவத்தையும் மதத்தின் மதிப்பையும் குறைப்பதாகவும் அமைந்து விடுவதுண்டு.
இதன் காரணமாகவே, பௌத்த துறவிகள் தேர்தலின் ஊடாக பிரதிநிதித்துவ அரசியலுக்குள் வருவது தடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மேலெழுந்துள்ளன.
இது உண்மையில், பௌத்த துறவிகளுக்கு மட்டுமானதல்ல; மாறாக இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மத குருக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
அதேபோன்று, அரசியலுக்கு வெளியே இருந்து கொண்டு தேவையற்ற குழப்பங்களை உண்டு பண்ணும் மதகுருக்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை முற்போக்கு அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
மதபோதகர்களின் அரசியல் பிரவேசம், இலங்கையில் எதிர்பார்த்த பலாபலனைத் தராமல், தேவையற்ற வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றால், மதகுருக்களின் அரசியல் பிரவேசத்துக்குக் கதவடைப்புச் செய்வதே நல்லதாக அமையும்.
இல்லாவிட்டால், எல்லா மதங்களைச் சேர்ந்த மதகுருக்களும் அரசியலுக்குள் வருவதும், மத அடையாள அரசியல் செய்து, ஐக்கிய இலங்கை மக்களை, மேலும் துருவப்படுத்துவதையும் தடுக்க முடியாமல் போய்விடும்.
சட்டத்தை நிலைநிறுத்த உதவிய நபரின் நிலை
கேகாலை மாவட்டம், நெலுந்தெனிய உடுகும்புற பிரதேசத்தில் அமைந்துள்ள, ஒரு நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலின் முன்னால், திடீரெனப் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர், மாவனல்லைப் பகுதியில், புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீதான விசாரணைகள், இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவையெல்லாம் நாம் பரவலாக அறிந்த செய்திகள்தான். ஆனால், நம்மால் பொதுவாக அறியப்படாத ஒரு விடயம், அண்மையில் ஊடகங்களில் வெளியாகிக் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலே குறிப்பிட்ட, மாவனல்லைப் பிரதேச சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு உதவியதன் மூலம், இனமுரண்பாடு ஏற்படுவதைத் தடுக்க முன்வந்த ராசிக் முஹம்மது தஸ்லீம் (வயது 38) பற்றிய துயர்மிகு செய்திதான் அது.
நாட்டில், இனங்களுக்கு இடையில் சண்டை மூட்டி விடுவதற்காக, அடிப்படைவாதிகள் அல்லது பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிலை உடைப்பு நாசகாரச் செயல் தொடர்பில், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு உதவிய இந்த நபர், இன்று நிலைகுலைந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளார்.
2018 டிசெம்பர் மாதம், மாவனல்லைப் பிரதேசத்தில் ஒரு குழுவினர், சில புத்தர் சிலைகளை உடைத்தனர். இதனால், இனக்கலவரம் ஏற்படும் அபாய சூழல் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, முன்மாதிரி முஸ்லிமாகச் செயற்பட்டு, பொலிஸார் சம்பந்தப்பட்ட சமூக விரோத பேர் வழிகளைக் கைது செய்வதற்கு உதவிய நபராக, தஸ்லீம் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
இதற்குப் பழிதீர்க்கும் நடவடிக்கையாகவே, சஹ்ரான் குழுவினர் இவரது வீட்டுக்குள் புகுந்து, இரவு வேளையில் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஸ்லிம் இதனை முறைப்பாடாகப் பதிவுசெய்துள்ளார்.
வைத்தியர்களின் கடின முயற்சியால், இவரது உயிர் காப்பாற்றப்பட்ட போதும், தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால், இடதுபக்கம் செயலிழந்துள்ளது. இதனால் எழுந்து நடமாட முடியாமல், இவர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது, அனைவரின் மனங்களையும் நெகிழ வைப்பதாக இருக்கின்றது.
சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கு, பொது மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகும். அந்த வகையில், பாதுகாப்புத் தரப்பினருக்கு உதவுவோர், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வருவோர், அரசாங்கத்தாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் பாதுகாக்கப்படுவது அவசியமாகும்.
அதுமட்டுமன்றி, அதன்மூலம் அவர்கள் ஏதேனும் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் பட்சத்தில், அதற்கு நிவாரணமளிக்கும் நலனோம்பு பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால், யாரும் குற்றவாளிகளைக் காட்டிக் கொடுப்பதற்கு முன்வர மாட்டார்கள்.
Average Rating