நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 30 Second

யானை மேல் ஏற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு தைரியமும், பயிற்சியும், வழிகாட்டலும் தேவையல்லவா? கடந்த அத்தியாயத்தில் தொழிலதிபர் ஆவதற்கான அடிப்படை விசயங்கள் குறித்துப் பார்த்தோம். தற்போது தொழிலதிபராக நினைக்கும் ஒருவரின் மனநிலை, அதாவது வேலை செய்வதற்கும் தொழில் செய்வதற்கும் இடையிலான சாதக பாதகங்கள் குறித்து பார்ப்போம்…

‘‘ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்து, மும்பையில் வளர்ந்த அந்த பெண்ணின் வீட்டில் பிசினஸ் என்பது எப்போதைக்குமான விவாத தலைப்பாக இருந்தது. இதனாலேயோ என்னவோ, அவரும் சின்ன வயதில் இருந்தே பிசினஸ் தான் தனக்கான அழைப்பு என்று முடிவு செய்துவிட்டார்.

ஆனால், கல்லூரி படிப்பை முடித்த பிறகு தொடர்ந்து பத்தொன்பது வருடங்கள் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக ஒரு பெரிய வங்கியில் வேலை செய்தார். 2005 ஆம் ஆண்டு அதே வங்கியின் மேனேஜிங் டைரக்டராகவும் ஆனார். 2012 ஆம் ஆண்டில், தன்னுடைய 50-வது வயதில் அந்த வேலையை ராஜினாமா செய்தார்.

காரணம், அவருக்குள் இருந்த வேட்கை, தொழில் முனைவு எனும் பாதையில் பயணிக்க வேண்டும் என்னும் விருப்பம். இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் நைகா (Nykaa) என்ற காஸ்மெடிக் விற்பனை நிறுவனத்தின் துணை நிறுவனராக உள்ளார் ஃபால்குனி நய்யர். இது ஒன்றும் புதிய கதை கிடையாது. வழக்கமாக தொழில் முனைவுக்குள் காலடி எடுத்து வைப்பவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் பின்னால் இதே போன்ற கதைகள் இருக்கும். ‘உங்களால் ஒரு தலைமைக்கு கீழே வேலை செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் தொழில் முனைவுக்காகவே பிறந்தவர்கள்’ என்பது அவர்களுக்கு தெய்வ வாக்காக இருக்கும்.

கூடவே, படைப்பாற்றல் ஊற்றெடுத்து ஓடும் நபர்களுக்கு, ஒரு பெட்டிக்குள் இருந்து வேலை செய்வது என்பது சிக்கலான காரியம். அதற்காக, அத்தனை பேரும் வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்யுங்கள் என சொல்லிவிட முடியாது. வேலையை ராஜினாமா செய்து பிசினஸ் தொடங்கி, அதில் கோட்டைவிட்டவர்கள் கதைகளையும் நாம் கடந்து வருகிறோம்.தொழில் முனைவிற்கான ஊக்கம் இருப்பவர்களை இந்தத் தோல்வி கதைகள் பாதிக்காது, வெற்றிக் கதைகளை மட்டுமே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அவர்கள் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். வழக்கமான 9-5 வேலை எப்படி உங்கள் தொழில் முனைவு கனவை சிதைக்கும் என்பதை விளக்குவதற்கு முன், 9-5 வேலையில் இருக்கும் சில நன்மைகளையும் பேசுவோம்.

நிலையான வருமானம் என்னதான் படைப்பாற்றல், உத்வேகம் எல்லாம் இருந்தாலும், இந்த உலகில் வாழ்வதற்கு பணம் அவசியமாக இருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்னடையாமல் வாழ்வதே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறபோது, அந்த வெற்றியை அடைய ஒரு நிலையான வருமானம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்தத் தடங்கலும் இல்லாமல் மாதம் பிறந்தால் சம்பளம் கிடைக்கும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைகாலை ஒன்பது மணிக்கு ஆஃபீஸுக்குள் நுழைந்தால், மாலை ஆறு மணி அடித்ததும் நீங்கள் வீட்டுக்கு கிளம்பிவிடலாம். அதற்குப் பிறகான நேரம் உங்களுக்கே உங்களுக்கானதாக இருக்கும். வேலை டென்ஷன்களை தூரம் தள்ளிவிட்டு, படம் பார்க்கவோ, விளையாடவோ போய்விடலாம். தொழில் முனைவு பாதையை தேர்ந்தெடுத்தால், ஆபீஸில் இல்லாத நேரமும் கூட, உங்களுக்கு தொழில் சார்ந்த வேலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.

பி.எஃப், இ.எஸ்.ஐ போன்ற சலுகைகள் பெரும் நிறுவனங்களில் வேலை செய்வதன் முக்கிய நன்மைகள் இதுதான். இன்சூரன்ஸ், ப்ராவிடெண்ட் ஃபண்ட் போன்ற சலுகைகள். இந்த பொருளாதார ரீதியான பலம் பல சமயங்களில் கைக்கு உதவியாக இருக்கும்.ஆபீஸ் நண்பர்கள்வீட்டில் இருந்து எதையாவது திரும்ப திரும்ப யோசித்து டார்ச்சராவதைவிட ஆபீஸுக்கு போய் கொஞ்சம் தெரிந்த ஆட்களின் முகங்களை பார்க்கலாம் என நினைக்கும் நேரமும் வாழ்வில் வரும்.

அந்த நேரத்தில் ஆபீஸ் நண்பர்கள் ஆறுதலே! அதுவும் ஆரோக்கியமான வேலைச் சூழல் இருக்கும் பட்சத்தில், உங்களை உற்சாகமூட்டி, உங்கள் சுமைகளை பகிர்ந்துகொள்ளும் கருவிகளாக நண்பர்கள் அமைவார்கள்!இந்த காரணங்களை எல்லாம் வைத்து என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், ஒரு 9-5 வேலைக்குள் என்னால் இருக்கவே முடியவில்லை எனும் திறமைசாலிகளுக்கு கீழ் இருக்கும் பட்டியல்.

உங்களுக்கு 9-5 வேலை டார்ச்சராக இருப்பதற்கு இவையே காரணங்கள்…

வேறு ஒருவரின் நிறுவனத்தை கட்டி எழுப்புகிறோம் எனும் சிந்தனை…என்னால் தனியே ஒரு நிறுவனத்தை இதைவிட சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும் எனும்போது, ‘இந்த சாதாரண கம்பெனியை வளர்க்க எதற்கு நான் வியர்வை சிந்த வேண்டும்’ எனும் நினைப்பு வருகிறதா? வேலை மேல் பற்றில்லாமல் இருக்கிறதா? ஒரு பொருளாதார செக்யூரிட்டிக்காக கொஞ்சம் காசு சேர்த்து வைத்துக்கொண்டு, வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள்!

உங்கள் திறமைக்கு ஏற்ற சம்பளம் இல்லை…

உண்மையில், உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதுமே சாதாரணம் ஆக்கப்பட்டிருக்கிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாதபோது, அந்த வேலையின் மீது சலிப்பு வரத்தானே செய்யும்?
உங்கள் படைப்பாற்றலுக்கு இடம் இல்லை…நம் கனவுகள் எல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ் போலவோ, ஜெஃப் பீஸாஸ் போலவோ இருக்கும்போது, அதை எல்லாம் அப்படியே ரப்பர் வைத்து அழித்து, ஒரு சின்னக் கட்டத்திற்குள் நம்மை அடைக்கப் பார்ப்பது போன்ற வேதனை வேறு எதுவுமே இல்லை!
வேலை போரடிக்கிறதுசவால்களை சந்திக்க பிறந்தவர்களுக்கு, திரும்ப திரும்ப ஒரே நாளை வாழ்வது போரடிக்கும்.

இயந்திரத்தனமாக ஒரு வேலையை செய்துகொண்டே இருப்பதற்காகவா பிறந்தோம் என யோசிக்கத் தோன்றும். அதற்கான பதில், நிச்சயமாக இல்லை! உங்களுக்கான சவால்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள் என்று இந்த பிரம்மாண்டம் குறிப்பு கொடுக்கிறது என்று அர்த்தம்!

நிரந்தரமின்மைவேலையும், சம்பளமும் எவ்வளவு தற்காலிகமானது என்பதை உணர்த்தும்படி மேலிடத்தில் இருந்து பேச்சுகள் வந்து கொண்டிருந்தால், வேலை வாழ்க்கையில் ஒரு நெருடல் ஏற்படும். அதே பயத்தில் வேலை செய்யும்போது ஏற்படும் நடுக்கம், வேலையை வெறுக்க வைக்கும்!

சக ஊழியர்கள்உங்கள் மன வளர்ச்சிக்கு ஏற்றபடியான சக ஊழியர்கள் கிடைக்கவில்லை என்றால், வேலை நேரம் நரகமாகவே இருக்கும்! புரளி பேசுவது, அரசியல் செய்வது, கேங்க் அமைப்பது என முழு நேரமும் உங்களை துன்புறுத்தவே ஒரு கூட்டம் இயங்கிக்கொண்டிருப்பதாக தோன்றும்.
தொழில்முனைவால் என்ன சாதகம்?

நம் டைம்டேபிள் நம் கையில்!

நாம் எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். எப்போது வேலையைத் தொடங்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பதையெல்லாம் நாமேதான் கணக்குப் போடுகிறோம். சுத்தமாக முடியாவிட்டால், யாரிடமும் கேட்காமலேயே விடுமுறை கூட எடுத்துக் கொள்ளலாம்!

நோ டிரெஸ் கோட்!

இஸ்திரி போட்ட சட்டை அணிந்து, அதை இன் செய்துகொண்டு போக வேண்டும் என்றோ, மடிப்பு கலையாத சேலை அல்லது சுடிதார் அணிந்து ஷால் பின் போட்டு போக வேண்டும் என்ற அவசியமோ இல்லை. நம் தொழில் என்பதால், நமக்குப் பிடித்தமான உடையை, நமக்குப் பிடித்ததைப் போல அணிந்து கொண்டு போகலாம்.

எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம்சமையலறையில் தோசை சுட்டு சாப்பிட்டுக் கொண்டே அல்லது வீட்டை சுத்தம் செய்துகொண்டே லேப்டாப்பில் வேலை செய்யலாம். எங்காவது வெளியூர் போக நேர்ந்தாலும், வேலையில் எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

உதவி பெறுவதில் தவறில்லை இன்றைய சூழலில் அதிகமான மனச்சோர்வு ஏற்படுகிறது. சிலரால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போவதும் இயல்பு. அவ்வேளைகளில், நமது நண்பரோ, நம்பிக்கையானவரையோ சில நாட்கள் அல்லது சில மணி நேரம் நமது வேலையை கவனித்துக்கொள்ள
சொல்லலாம். யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை.

‘போர் அடிக்குது!’ என்பதற்கே இடமில்லை நம் வேலை, நாம் தொடங்கியது என்பதால் ஒவ்வொரு நாளும் புது அனுபவமாகவே இருக்கும். எனவே, போர் அடிக்குது என்று சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அப்படியே போர் அடித்தாலும், உடனடி மாற்றங்களை நாமே செய்து கொள்ளலாம்.
கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாமே!வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்காமல் எதுவுமே சாத்தியம் இல்லை!

கொஞ்சம் ரிஸ்க் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். நாமே தொழில்முனைவு செய்யும்போது பல சவால்களும், சிரமங்களும் வந்தாலும், அதைக் கடந்துவிட்டு, அனைத்தும் நம்மால்தான் நடந்தது என்று நினைக்கும்போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். அதற்காகவே ரிஸ்க் எடுக்கலாம்!எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்!

நாம் தொழில்முனைவு செய்வதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று, பணம் சம்பாதிப்பது. தொழில்முனைவில் நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. ‘ஸ்மார்ட் வொர்க்’ செய்து அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது! எல்லாம் நம் கையில்தான். மேலும், எவ்வளவு சம்பாதித்தாலும், அதை மீண்டும் முதலீடு செய்வது, செலவு செய்வது எல்லாமே நம் கையில்தான்.

மேற்சொன்ன கருத்துக்களை எல்லாம் ஒப்பிட்டு பார்த்து, உங்களுக்கு எது பொருந்திப்போகும் என முடிவுக்கு வருவது உங்கள் சாமர்த்தியம்! உயரத்திற்கு பயந்து நதியில் குதிக்காமல் மேலேயே நிற்க போகிறீர்களா அல்லது கீழ் இருக்கும் நதியில் குதித்து நன்றாக முங்கி ஒரு குளியல் போடப் போகிறீர்களா?தொழில்முனைவு செய்வதற்கான மனோநிலை நம்மிடம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு சின்ன டெஸ்ட்! அடுத்த இதழில்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்!! (மகளிர் பக்கம்)
Next post இவ்வளோ பெரிய கப்பல் எப்படி பெயிண்ட் பண்ணுவது? (வீடியோ)