ஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்!! (மகளிர் பக்கம்)
‘அண்ணா பல்கலைக் கழகத்தில் நான் பி.இ.கோல்ட் மெடலிஸ்ட்’’ எனப் பேசத் தொடங்கிய நளினியின் சொந்த ஊர் சென்னை. இவர் ஆன்லைனில் AR BIO எனும் பெயரில் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகளை கடை விரித்திருக்கிறார். ‘‘என் கணவரின் ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. திருமணம் ஆன புதிதில், யு.எஸ். நிறுவனம் ஒன்றின் மெடிக்கல் பில்லிங் வேலைகளை அவர்களின் நேரப்படி முடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததில் அவர்களின் நேரம் எனக்கு ஒத்துவரவில்லை.
வேறு தொழில் செய்வது குறித்து யோசித்தபோது, எங்கள் குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலைக் கையிலெடுக்கும் எண்ணம் வந்தது’’ என்ற நளினி AR BIO விற்பனையை இணையத்தில் முதல் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் . ‘‘அருப்புக் கோட்டையில் அவர் குடும்பம் மொத்தமும், வீட்டிலே தறிபோட்டு சாயம் ஏற்றுவது, பாவு போடுவது, ராட்டு சுற்றுவது, கையால் நெய்தல், பவர் லூம், டெலிவரி என மூன்று தலைமுறை கடந்து காட்டன் சேலை தயாரிப்பு தொழில் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்க நானும் என் கணவரும் ஆன்லைன் வழியாக விற்பனையை மேம்படுத்தும் முயற்சியைக் கையிலெடுத்தோம்.
செட்டிநாடு கலெக் ஷன் சேலைகள் எங்களிடம் ரொம்பவே ஸ்பெஷல். தரமான நூல்களை சேலத்தில் இருந்து வாங்கி அருப்புக்கோட்டையில் சாயம் ஏற்றி அங்கேயே தறி போடுகிறோம். எங்களின் தயாரிப்புகள் செட்டிநாட்டுத் தரத்தில் அப்படியே இருப்பதால், எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஒரு வாடிக்கையாளர் எங்கள் தயாரிப்பினை வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், மீண்டும் இணையத்தில் தேடி வந்து
வாங்குகின்றனர். தரத்தின் அடிப்படையிலே வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு இருக்கிறோம்’’ என நம்பிக்கை மிளிர புன்னகைத்தார்.
‘‘மொத்த வியாபாரிகள் கேட்கும் கஸ்டமைஸ்ட் டிசைன்களையும் நாங்களே செய்து வழங்குகிறோம். புதிய டிசைன்களை தறியில் ஏற்ற ஏற்ற பழைய டிசைன்கள் அப்போதே காலியாகி விடும். ஒரு டிசைன் நன்றாக இருக்கிறது என ஒரு வாரத்தில் வந்து கேட்டால் கூட திரும்ப கிடைக்காது. அந்த அளவுக்கு புதிது புதிதாய் நிறைய டிசைன்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். கடைகளுக்குச் சென்று உடைகளைத் தேர்வு செய்பவர்களைவிட ஆன்லைனில் வாங்குபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி இருக்கிறது. எனவே அமேசான், ஃபிலிப்காட், ஷாப்பிஃபை, இந்தியா மார்ட் போன்ற மேஜர் இ-காமெர்ஸ் வெப் சைட்டுகளில் எங்கள் தயாரிப்பை புரொமோட் செய்திருக்கிறோம்.
எங்களது டிசைன், கலர், தரம் என எல்லாமே சிறப்பு என்கிற கமெண்ட்ஸ்கள் தொடர்ச்சியாக எங்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது. ஏ ஆர் பயோ சாரிஸ்(AR BIO) என டைப் செய்தாலே எங்கள் தயாரிப்பு இணையத்தில் பல வண்ணங்களில், பல டிசைன்களில் கிடைக்கும்.
ஆன்லைனில் தேர்வு செய்வதால் பிரித்துப் போடும் வேலை எங்களுக்கு இல்லை. வாடிக்கையாளரை நேரில் எதிர்கொள்ளும் வேலையும் மிச்சம். 100 சேலையோ 200 சேலையோ புகைப்படங்களை பதிவேற்றிவிட்டால், எந்த டிசைனில் எந்த கலர் பிடித்திருக்கிறதோ அதை தேர்ந்து எடுத்து ஆன்லைனிலே ஆர்டர் செய்து விடுகிறார்கள்.
நமக்கு இதில் நிறைய டிஜிட்டல் வேலைகள் தொடர்ச்சியாக இருக்கும். சேலைகளை புகைப்படம் எடுப்பது, எடிட் செய்து கேட்லாக்கில் ஏற்றுவது, அன்றைய தின ஆர்டர்களை எடுத்து பேக் செய்து டெலிவரிக்கு ரெடியாக வைப்பது என வேலைகள் இதிலும் உண்டு. வாடிக்கையாளர் எங்களிடத்தில் நேரில் வந்து தேர்வு செய்ய விரும்பினால், முன்கூட்டியே அவரின் மொபைலுக்கு புகைப்படங்களை அனுப்பிவிடுகிறேன். சேலையை புகைப்படத்தில் தேர்வு செய்த பிறகு, எங்களிடம் வந்து விரும்பியதை பார்த்து வாங்கிக் கொள்ளலாம். எங்கள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் ஒடிஷா, ஜம்மு-காஷ்மீர், அந்தமான் வரை பரவி இருக்கிறார்கள். வட மாநிலங்களிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் வாடிக்கையாளர் வாரத்திற்கு 4 சேலைகளையாவது தொடர்ச்சியாக ஆர்டர் செய்து விடுகிறார். அந்த அளவுக்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நமது காட்டன் சேலைகளை விரும்பி வாங்குகிறார்கள். நமது தயாரிப்புகள் வட மாநிலம்வரை பரவி இருக்கிறது என்றால் இ-காமர்ஸ் இணைய சேவைகளே முக்கிய காரணம். விவசாயத்திற்கு அடுத்ததாக நெசவு என்பார்கள். நெசவாளிகளின் வாழ்க்கை இதில் உள்ளது. எங்கள் ஊர் நெசவாளிகள் நிறைந்த ஊர். ஒரு வீட்டில் கட்டாயம் இரண்டு தறியாவது இருக்கும். கையால் தறி போட்டால் ஒரு நாளைக்கு ஒரு சேலை மட்டுமே எடுக்க முடியும்.
அதுவே பவர் லூம் என்றால் ஒரு நாளைக்கு மூன்று சேலைகளை நெய்யலாம்.இதனால் நெசவாளர்கள் பெரும்பாலும் பவர் லூமிற்கு மாறிவிட்டார்கள்.
காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7:30 மணி வரை வேலை செய்வார்கள். கிட்டதட்ட 12 மணி நேரம். எந்த வீட்டில் தறி போடுகிறார்களோ அந்த வீடு தூசிகள் நிறைந்திருக்கும். தூசிகளுக்கு மத்தியிலே, நின்ற நிலையில்தான் நெசவாளிகள் வேலை செய்கிறார்கள். நெய்யப்படும் சேலைகளில் புட்டா மற்றும் செக்ட் வேலைப்பாடுகள் இருந்தால் வேலை இன்னும் கூடுதலாக இருக்கும். அதனால்தான் அவைகளின் விலை கூடுதலாக உள்ளது. ஒரு சேலை நெய்தால் 120 கூலி. ஒரு நெசவாளி 3 நெய்கிறார் என்றால் 360 கூலியாகக் கிடைக்கும்.
நாம் உடுத்தும் காட்டன் புடவைகளில் பாரம்பரியம் காக்கப்பட்டாலும், சில லேட்டஸ்ட் டிரென்ட்டுகளையும் இதில் நாங்கள் புகுத்தியுள்ளோம். கேட் டெக்னாலஜியை பயன்படுத்தி டிசைன் செய்யும் அளவுக்கு ்இத்துறையும் வளர்ந்துள்ளது. டிஜிட்டல் பிரிண்டிங், கம்ப்யூட்டரைஸ்டு ஜக்காடு பிரிண்டிங், சுவிஸ்ஸர் என சிலர் நவீனத்தையும் இத்துறை தொட்டுள்ளது. இதில் சுவிஸ்ஸர் மெஷின்களின் விலை அதிகம். அத்தோடு இடத்தையும் அதிகம் பிடிக்கும். இதில் மின்சாரத்தின் பயன்பாடும் கூடுதல்.சுவிஸ்ஸர் பயன்படுத்துபவர்களுக்கு அரசு மின்சாரத்திற்கு மானியம் தருவதில்லை.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நாம் உடுத்தும் உடைகளே நமது தோற்றத்தை முடிவு செய்கிறது.
ரிச் லுக்கையும் சற்று கூடுதல் எடுப்பில் காட்டுவது பெரும்பாலும் காட்டன் உடைகளே. ரிச் லுக் வேண்டாம், புரொஃபஷனல் லுக் வேண்டும் என்றாலும் காட்டனுக்குதான் முதலிடம். காட்டன் சேலையை உடுத்துவது மை பிரைட் என்றவர், காட்டன் புடவைகளில் நம் பாரம்பரியமும் காக்கப்படுகிறது என்கிறார்,வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் காட்டனுக்கு மாறத் தொடங்கிவிட்டார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் என்று மட்டுமல்ல, எல்லாத் தரப்பினருமே காட்டன் சேலைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் அலமாரிகளில் காட்டன் சேலைகளுக்கும் இடத்தை ஒதுக்குங்கள்’’ என்றவர்… ‘‘பண்டிகைக் காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடைசி நேரத்தில் உங்கள் உடைகளைத் தேர்வு செய்யாமல் முன்கூட்டியே தேர்ந்தெடுத்து பணடிகை கலக்கல் தினமாக மாற்றறுங்கள். விவசாயத்திற்கு அடுத்து நலிவடைந்த நிலையில் இருக்கும் நமது நெசவாளிகளை வாழவையுங்கள்’’ என முடித்தார்.
Average Rating