தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள்!! (மருத்துவம்)
ஆகஸ்ட் 1-7 உலக தாய்ப்பால் வாரம்
தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலால் தாய் -சேய் இருவருக்கும் ஏற்படும் பலவிதமான நன்மைகள், தாய்ப்பாலூட்டுவதற்கு வசதியான பணியிடங்கள் மற்றும் சூழலை அமைத்துக்கொள்வதில் பெண்களுக்குரிய உரிமை போன்றவை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இந்தச் சிறப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
* தாய்மை அடைந்த பெண்கள் குழந்தை பெற்றவுடன் வெளிப்படும் சீம்பால் உட்பட, அதனைத் தொடர்ந்து சுரக்கும் பாலைச் சிசுவிற்குக் கொடுப்பது அவசியம். சுகப்பிரவசம் என்றால் அரைமணி நேரம் கழித்தும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்து இருந்தால் இரண்டு மணிநேரத்துக்குப் பின்னரும் பால் தரலாம்.
* தாய்ப்பால்தான் மனிதனின் முழு உடல் ஆரோக்கியத்தை இறுதி காலக்கட்டம் வரை தீர்மானிக்கிறது.
* உலக சுகாதார மையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக திகழும் குழந்தைகள் நல கூட்டமைப்பு ஆகியவை ஒன்றாக இணைந்து வெளியிட்ட ஆய்வு முடிவுப்படி, இளம் தாய்மார்களின் பால் சுரப்பு தன்மையின் அடிப்படையில் மூன்று மணிநேர இடைவெளியில் பால்
புகட்டலாம்.
* குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுத்து வரலாம். பின்னர், மெல்லமெல்ல எளிதில் செரிக்கக்கூடிய உணவுப்பண்டங்களான இட்லி, இடியாப்பம் போன்றவற்றைத் தரலாம்.
* தாய்ப்பால் கொடுப்பதால், தாய்-சேய் இடையே உறவுப்பிணைப்பு பலப்படுகிறது. பால் புகட்டும் நேரங்களில், குழந்தைகளை நெருக்கமாக அணைப்பதால் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாகிறது; இதன் காரணமாக, தாய்ப்பால் சுரப்பும்
தூண்டப்படுகிறது.
* தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
* மழலைச் செல்வங்களுக்குச் சீரான இடைவெளியில் பால் புகட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்று பால் கொடுக்கும்போது கையாளப்படும் முறையிலும் கவனமாக இருக்க வேண்டும். இளம் தாய்மார்கள் ஒரு பக்கம் ஒருக்களித்த நிலையில் படுத்தவாறும் அல்லது தங்களுடைய இரண்டு கால்களையும் மடித்தவாறு, சம்மண நிலையில் உட்கார்ந்து, மடிமீது குழந்தையைப் படுக்க வைத்தும் பால் புகட்டலாம்.
* பால் புகட்டுவதால் உடல் ஆரோக்கியம், அழகு குறைந்துவிடும் என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான எண்ணம்.
* மனச்சோர்வு, இதயம் தொடர்பான பிரச்னைகள், மார்பகப் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளில் இருந்து தாய்ப்பால் வழங்கும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பிரசவத்துக்குப்பின், உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கவும் ‘மதர் ஃபீடிங் உதவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.
Average Rating