ராஜபக்‌ஷர்களைப் புதிய ஆண்டில் எதிர்கொள்தல் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 49 Second

அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துகள்.

ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசியத் தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கான வாய்ப்புகளைச் சூடுபிடிக்கப்போகும் தேர்தல்களுக்கான களம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் தொடங்கி அனைத்துப் பொதுத் தொடர்பு சாதனங்களும், தேர்தல்களைப் பற்றியே பேசப்போகின்றன.

மைத்திரியின் ‘ஒக்டோபர் 26 சதிப்புரட்சி’யில் இருந்து நாடு மீண்ட தருணத்தில், 2019ஆம் ஆண்டு பிறந்தது. முதல் காலாண்டு, மைத்திரி – ரணில் ஆட்சி இழுபறியில் கடக்க, சித்திரை வருடப் பிறப்புக்குப் பின்னராக சஹ்ரான் குழு நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்கள், நாட்டை ஒட்டுமொத்தமாக உலுக்கின. சுமார் 250 பேரை உயிர்ப்பலி வாங்கியது. அதிலிருந்து மீள்வதற்குள், ஜனாதிபதித் தேர்தல் வந்தது. கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாகத் தந்துவிட்டு, 2019 கடந்து சென்றுவிட்டது.

ஜனாதிபதித் தேர்தலின் சூடு, இன்னமும் தணியவில்லை. அந்தச் சூட்டிலேயே பொதுத் தேர்தல் வெற்றியையும் பெற்றுவிட வேண்டும் என்று, ராஜபக்‌ஷர்கள் விரும்புகிறார்கள். அந்த வெற்றி, 2015ஆம் ஆண்டு தாங்கள் தோற்கடிக்கப்பட்டபோது இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்குரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதாவது, நாாளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான வெற்றியொன்றைப் பெறுவதற்கான முனைப்புகளில் ஈடுபடுகிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் வெற்றிவாதமும் அதனை முன்னிறுத்துவதற்கான ஆர்ப்பரிப்பும், எப்போதுமே மிகப்பெரிதாக இருக்கும். ஆனால், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை, ஓரளவுக்கு மட்டுக்குள் வைத்துக்கொண்டே கொண்டாடினார்கள். மக்களின் முன்னால், ‘ஆர்ப்பரிப்புகளை விரும்பாதவர்கள் ராஜபக்‌ஷர்கள்’ என்கிற புதிய கதையொன்றைச் சொல்ல முனைகிறார்கள். அதனை, பொதுத் தேர்தல் வெற்றிகளுக்கான புதிய யுத்தியாக அவர்கள் கொள்கிறார்கள்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல், இயல்பான – செயற்றிறன்மிக்க- மக்கள் அணுகக்கூடிய தலைவருக்குரிய அடையாளத்தைப் பேணுவதற்கான முனைப்புக்களை, கோட்டாபய ராஜபக்‌ஷ காண்பித்து வருகிறார். அரச நிறுவனங்களுக்கு நேரடியாக விஜயம் செய்கிறார், மக்களின் குறைநிறைகளைக் கேட்கிறார், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளின்றி சாதாரணமாகப் பயணிக்கிறார், இப்படி தென்னிலங்கை ஊடகங்கள், நாளாந்தம் புதிய ஜனாதிபதியின் ‘சிம்பிளிசிட்டி’ கதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றன.

இதனால், ராஜபக்‌ஷர்களின் அமைச்சர்களும் ஆதரவாளர்களும்கூட, தங்களின் ஆடம்பர ஆர்ப்பரிப்புக் காட்சிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. ராஜபக்‌ஷர்களின் இந்த மாற்றம், பாதிக்கிணற்றைத் தாண்டுபவர்களுக்குரியது. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தல் வெற்றியென்பது, அவர்களின் முழுமையான வெற்றியல்ல.

ஆனால், ராஜபக்‌ஷர்களின் முழு வெற்றியை உறுதி செய்யும் காட்சிகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரங்கேற்றி வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ, இவ்வளவு பெரிய பின்னடைவை எதிர்கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கோட்டாவை எப்படியாவது வெற்றியடையச் செய்யவேண்டும் என்று முயற்சித்த தென்னிலங்கையின் முக்கிய ஊடகங்கள்கூட, சஜித் இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்திப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

அது, உள்கட்சி குளறுபடிகளால் நிகழ்ந்தது என்பது சஜித் ஆதரவாளர்களின் போர்க்குரல். அதில், குறிப்பிட்டளவு உண்மையும் உண்டு. அதனால்தான், கட்சித் தலைமைக்கான கோஷத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறார்கள். ரணிலும் சஜித்தும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சந்தித்துப் பேசிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் பெரிய ஆர்வத்தைக் காட்டவில்லை. தங்களது ஆதரவாளர்களைக் கொண்டு விடயங்களைப் பொது வெளியில் பேசி வருகிறார்கள்.

அது, கட்சியின் தொண்டர்களை இன்னும் இன்னும் சலிப்படைய வைப்பதற்கான முயற்சியாகவே தெரிகின்றன. ராஜபக்‌ஷர்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான வெற்றிக்காக, தென்னிலங்கையின் ஒவ்வொரு கிராமமாக, ஒவ்வொரு வீடாகச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அதுவும், தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கோடு. எந்தவொரு தருணத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ சார்ந்திருந்து ஆட்சி நடத்தும் சூழல் உருவாகிவிடக்கூடாது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் வெளியேற்றத்தோடு, மண்ணுக்குள் சுதந்திரக் கட்சி ஒட்டுமொத்தமாக புதைந்துவிட்டிருக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி, அவர்களுக்கு அளித்திருக்கின்ற தெம்பு, அதன் அடுத்த கட்டங்களையும் செய்ய வைத்திருக்கின்றது. பண்டாரநாயக்கர்களின் சுதந்திரக் கட்சியைவிட, ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன, காலங்கள் கடந்து நீடித்ததான வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கடப்பாட்டையும் ஓர்மமாக அவர்கள் கொண்டு நடக்கிறார்கள்.

சர்வாதிகார ஆட்சி முறைக்கு ஒப்பான அதிகாரங்களைக் கொண்டிருக்கின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பை, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான சதியாகவும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாகவும் காட்டிக்கொண்டு விலகிப்போன தென்னிலங்கையின் ஆதரவு அலையை, ராஜபக்‌ஷர்கள் மீட்டெடுத்தார்கள்.

கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார முறைமைக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்த பலரையும், தமக்கான ஆதரவு அலையைக் காட்டி தங்களோடு வளைத்தெடுத்தார்கள்.

நல்லாட்சிக் காலத்தில் (?) நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம், நாட்டின் இறையான்மைக்கு அச்சுறுத்தலானது என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கைக் கிராமங்களில் நம்ப வைத்தார்கள். சுயாதீன ஆணைக்குழுக்களும் நாடாளுமன்ற அதிகாரமும், அதுசார்ந்த ஜனநாயக நெறியும், இலங்கைக்குப் பொருத்தமற்றவை என்று தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆட்சி அதிகாரம் என்பது பங்கிடுவதற்குரியதல்ல. அது, ஒற்றை நபரிடம் தங்கியிருக்க வேண்டியது என்ற மன்னர்காலச் சிந்தனைகளை மீண்டும் மீண்டும் விதைத்தார்கள். சஹ்ரான் குழுவின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, 19ஆவது திருத்தமும் அது ஏற்படுத்திவிட்ட அதிகார ஆட்சிப் பங்கீட்டுக் குளறுபடியும்கூட காரணம் என்று பேசவைக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு தேர்தல் வெற்றியை அறுவடை செய்துவிட்ட ராஜபக்‌ஷர்கள், அதனைத் திருத்துவதற்கான ஆணையை மக்களிடம் மக்களின் நலன் சார்ந்தது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு வாக்குக் கேட்கிறார்கள்.

இந்த இடத்தில்தான், தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தளராத நிலைப்பாடு அவசியமாகின்றது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் வரையில், அபிவிருத்தி அரசியலைச் செய்ய முடியாது என்கிற சிந்தனை, சில சிறுபான்மைக் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் உண்டு.

அது உண்மைதான். ஆனால், ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில், அனைத்து முடிவுகளையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள். ஆட்சியின் பங்காளர்கள் என்று சொல்லப்படுகின்ற தரப்புகளின் குரல்களை, அவர்கள் கேட்பதில்லை. குரல் எழுப்பினாலும், அதிகாரத்தினால் அடக்கிய வரலாறே கடந்த காலத்தில் இருக்கின்றது.

அப்படியான நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அதிகாரத்தையும் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளின் போக்கில், சிறுபான்மைக் கட்சிகள் இயங்குவதற்கு தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். அந்தத் தயார்ப்படுத்தல் என்பது, தேர்தல்களை மாத்திரம் குறிவைத்ததாக இல்லாமல், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளை எவ்வாறு கையாள்வது என்கிற நோக்கில் இருக்க வேண்டும். அதனை மக்கள் மயப்படுத்த வேண்டும்.

ராஜபக்‌ஷர்களால் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையைப் பெற முடியாது போனால், அதனைப் பெறுவதற்காக தற்போது இணைத்துக்கொள்ளாத அனைத்துத் தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் ஆட்சியில் இணைந்துக்கொள்வதற்குத் தயங்க மாட்டார்கள். ஆனால், அந்த இணைப்பு, 19,வது திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கான ஆணையை அந்தக் கட்சிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளுடன் கூடியதாக இருக்கும். அது, ராஜபக்‌ஷர்களின் கடந்தகால யுகங்களை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஏற்பாடுகளின் போக்கிலானது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவுக்கு, தேர்தல் வெற்றி என்கிற இலக்கு தற்போதைக்கு இல்லை. ராஜபக்‌ஷர்களிடம் உடனடியாக மோதும் மனத்தைரியத்தையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. அதனால், பொதுத் தேர்தலிலும் ஏனோதானோ என்கிற ரீதியிலான நிலைப்பாட்டுடனேயே நடந்துகொள்வார்கள்.

அப்படியான நிலையில், 19ஆவது திருத்தத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை முறியடிப்பதற்கான தரப்புகளாக, தமிழ், முஸ்லிம் கட்சிகள் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான், அதிகாரப் பகிர்வுகள் நோக்கிய பயணத்தை ஒரு கட்டம் வரையில் தக்க வைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலைவனத்தில் கிடைத்திருந்த சில குழப்பமான கண்டுபிடிப்புகள்!! (வீடியோ)
Next post ரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்! (மகளிர் பக்கம்)