தனியே தவிக்கும் நவீன வாழ்க்கை!! (மருத்துவம்)
மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதன் மற்ற விலங்கினங்களை விட சுக துக்கங்களை பிறருடன் உணர்வு ரீதியாக பகிர்ந்து கொள்வதில் ஆர்வமுடையவன். ஆனால், காலத்தின் மாற்றங்களில் இதுவும் ஒன்று என என்னும்படியாக இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலோர் தனிமையை விரும்புவதோடு மற்றவர்களையும், நம் வீட்டு உறுப்பினர்கள் உட்பட நம்மை அறியாமல் தனிமைப்படுத்துகிறோம், உதாசீனப்படுத்திக் கொண்டுமிருக்கிறோம் அல்லது நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்…
நவீன வாழ்க்கையில் புதிதாக ஏற்பட்டிருக்கும் இந்த தனிமை குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் உளவியல் நிபுணர் லீனா ஜஸ்டினிடம் கேட்டோம்… தொழில் சார்ந்து குடும்பத்தை விட்டு பிரிவதால் ஏற்படும் தனிமை, அயல்நாடுகளிலோ வேறு ஊர்களிலோ பிள்ளைகள் வசிப்பதால் பெற்றோர்களுக்கு ஏற்படும் தனிமை, உறவு விரிசல்களால் ஏற்படும் தனிமை அல்லது ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் தனிமை இப்படி ஏதோ ஒரு வகையில் தனித் தனி தீவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு பேசப்படும் பெரும்பாலான சமூக மற்றும் உளவியல் சார்ந்த உறவுச்சிக்கல்களுக்கு இந்த உதாசீனம் மிக முக்கிய காரணம். பெரும்பாலான மனச்சிக்கலின்போது எனக்கான ‘ஸ்பேஸ்’ இல்லை என்ற புலம்பலை கேட்க முடிகிறது. நமக்கென்று ஒரு தனிப்பட்ட வட்டம் தேவைதான். ஆனால், இந்த உணர்வு மேலோங்க துவங்கியதற்கு பிறகுதான் தனிப்பட்ட உறவுகளிலும் சமூக அக்கறையிலும் பிடிப்பற்று போனோம். அக்கம் பக்கத்தாரிடம் வலிய புன்னகைத்து உறவு பாராட்டி வந்த நாட்களெல்லாம் மெல்ல மெல்ல மாறி, இப்போது பக்கத்துக்கு வீட்டினர் யார் என்பது அவர்கள் வீடு குடி வரும்போதும் காலி பண்ணும்போதும் மட்டுமே கவனிக்கப்படுகிறது.
இது தனிப்பட்டவர்களின் பிரச்னை என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தனிமை காரணமாக நால்வரில் ஒருவர் மன உளைச்சலை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தனிமை என்பது தனிப்பட்ட ஒருவரின் பிரச்னை மட்டுமே அல்ல; அது பல நேரங்களில் கூட்டான மனநல பிரச்னைகளின் துவக்கமாக உள்ளது. தனிமை உடல் பருமனுக்கு இணையான ஒரு பொது சுகாதார பிரச்னை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நாம் குடும்பத்துடன் இருக்கும்போது, நம் சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் நன்றாகப் பழகும்போது, சமூக ஊடகங்களில் பல நண்பர்கள் இருக்கும்போது கூட தனிமை ஏற்படலாம்.
தனிமையை உளவியலாளர்கள் இரு விதமாக பிரிக்கின்றனர். திணிக்கப்பட்ட தனிமை ஏற்றுக்கொண்ட தனிமை. பெரும்பாலும் முதியவர்களும்
குழந்தைகளும்தான் திணிக்கப்பட்ட தனிமையில் வாழ்கின்றனர். திருமணம், கல்வி, வேலை நிமித்தம் பெற்றோரை பகல் நேரத்திலோ அல்லது பல நாட்களுக்கோ பிரிய நேரிடுவதால் ஏற்படும் தனிமையை உளவியல் Empty Nest Feeling… அதாவது வெற்று கூடு உணர்வு என குறிப்பிடுகிறது.
இன்றைய நகரமயமாதலில் இத்தகைய நிலையை உண்மையில் தவிர்க்க முடியாது, குறை கூறவும் முடியாது. முதுமையால் வரும் மறதி, மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் முதியவர்கள் தனிமையும் சேரும்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
இதனால்தான் தனிமையிலிருக்கும் முதியவர்கள் எரிச்சல், படபடப்புடன் இருப்பதோடு எதாவது பேசிக்கொண்டும், மற்றவர்களை குறை சொல்லியும் தங்கள் மன அமைதியின்மையை கையாளத் தெரியாமலும் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் எரிச்சலடையும்போதும் அவர்கள் வயதான குழந்தைகள் என்பதை மறக்க வேண்டாம். பிள்ளைகள் தொலைவிலிருக்கும் தம் பெற்றோரோடு ஒரு நாளில் 2 நிமிடங்களாவது பேச வேண்டும். அவர்களது உடல் நிலை குறித்த நம் அக்கறையான விசாரித்தல் எவ்வளவு விலை மதிப்பற்றது என்பது நமக்கு இப்போது புரியாது, புரிய வரும் நாளில் பலன் இருக்காது.
வீட்டில் தொலைக்காட்சிதான் இருக்கிறதே… வேறென்ன வேண்டும் என்று நினைக்கிறோம். அது மட்டும் தனிமையின் வெறுமையைப் போக்கிவிடாது. அவர்களது விருப்ப பொழுதுபோக்கு என்னவென்பதைக் கேட்டு அதை முடிந்த அளவு நிறைவேற்றலாம். அது சாதாரண வர்ணம் தீட்டும் ஆர்வமாக கூட இருக்கலாம். நம் இந்திய முதியவர்களை பொறுத்தவரையில் பொறுப்புகளை முடித்தால் வாழ்க்கையே முடிந்து போனதாக நினைப்பர்.
ஆயுள் காப்பீடு விளம்பரத்தில் வருவதைப் போல் ஓய்விற்கு பிறகு எத்தனை முதியவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
நம் நிலைக்கேற்றவாறு அவர்களுக்கென்று ஒரு வருடாந்திர சுற்றுலா திட்டமிடலாம். நண்பர்களின் பெற்றோருடன் ஒன்றிணைத்து பக்கத்திலுள்ள புனித தலங்களுக்கு அனுப்பலாம். அதிக செலவில்லாத, சிரமமில்லாத பொழுதுபோக்குகளை அறிமுகம் செய்யலாம். அவர்கள் தன்னுடைய வெற்று கூடுகளில் இன்னும் கொஞ்சம் இனிய நினைவுகளை சேமிப்பார்கள். அடுத்ததாக நாம் தனிமையை திணிப்பது… நம் எதிர்காலம், கனவு என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருக்கும் நம் அன்பு குழந்தைகளிடத்தில் மாலையில் வீடு திரும்பும் பெரும்பாலான குழந்தைகள் அனுபவிக்கும் தனிமையுணர்வுகள் அவர்களது ஆளுமைத்திறனையே மாற்றியமைக்கும் ஆபத்து வாய்ந்தது என்பது வேதனையான விஷயம்.
இந்த தனிமை அவர்களது மன நலத்தை பாதிக்கும் பட்சத்தில் அவர்களது குண நலன்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கேட்ஜெட்டுகள் நம் பிள்ளைகளின் தனிமை தீர்க்கும் துணையாக மாற்றியது நாம்தான். பொருட்களால் பிள்ளைகளின் தனிமையை நிரப்பினால் அவர்களும் வளர்ந்த பிறகு அதைத்தான் நமக்கு செய்வார்கள். நட்பு வட்டத்திலும் குழந்தைகள் தம் சக நண்பர்களால் கேலி கிண்டலுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகள் அனுபவிக்கும் மன வேதனைகளுள் இது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாக உள்ளது. சமூக விரோதிகளாக மாறிய பலரது குழந்தை பருவம் நண்பர்களால் உதாசீனப்படுத்தப்பட்டதாக உள்ளது.
திருமண உறவின் சிக்கல்களுக்கும் இந்த குழந்தை பருவ தனிமை மிக முக்கியமானதொரு காரணமாகும். சிறு வயதிலிருந்தே அவர்களது உணர்வுகளை நம்மிடம் வெளிப்படுத்த கற்றுக்கொடுத்தால் அவர்கள் தனிமையை எப்படி கையாள்கிறார்கள் என்பது நமக்குத் தெரிய வரும். இங்கு தவற விட்டோமானால் கடைசி வரை அவர்களது உலகில் நடப்பவை நமக்குத் தெரியாமலேயே போய்விடும். இதனால் பிள்ளைகளுக்கும் நமக்கும் சரியான புரிதல் என்றுமே இல்லாமல் போய் விடும். குழந்தைகள் சிரித்து மகிழ்ந்திருக்கும் நேரமே அவர்கள் தனிமையற்றிருக்கும் நேரம்.
ஒரு நாளின் சில நிமிடங்களாவது, நம் குழந்தைகளை நம் செயல்களால் மகிழ்விக்க முயற்சிப்போம். கதைகள் நாம் சந்தித்த அன்றாட நிகழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களும் தங்கள் உணர்வுகளை மகிழ்ச்சி பொங்க நம்மிடம் பகிர்வார்கள் இந்த சந்தோஷ பகிர்தலின் இடையே, குழந்தை தன் மனத்திலுள்ளதை நம்மிடம் இயல்பாக சொல்ல ஆரம்பிக்கும், இது பல சிக்கல்களை அவிழ்க்கும்.
தங்களை தாங்களே தீவுகளாக்கி கொள்பவர்கள் இரண்டாம் வகை. திருமண வாழ்வின் சிக்கல்களுக்கான ஆலோசனைக்காக வரும் பலரும் ஏன்? அனைவரும் சொல்லும் முக்கியமான காரணம், ‘என் கணவர் அல்லது மனைவி அருகிலேயே இருந்தாலும் நான் தனிமையாகத்தான் உணர்கிறேன்’ என்பதுதான்.
காரணம் அவரவர் தங்கள் கைபேசி, மடிக்கணினி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ஒரு புறப்பொருளிடம்தான் தங்கள் தனிமையை செலவழிக்கிறார்கள். இப்படி வலிய நம்மை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் திருமண வாழ்வில் மூன்றாம் நபர் எளிதில் நுழைய நாமே வழி ஏற்படுத்தி கொடுக்கிறோம். ஆண்-பெண் இருவருமே மிஸ்ட் கால் நபர்களிடம் கூட உறவை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு இந்த தனிமை கொண்டு செல்கிறது. புகை, போதை என வேண்டாத பழக்கங்கள் ஏற்படவும் தனிமை மிக முக்கிய காரணியாகிறது. மதுப்பழக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் பலரும் தங்கள் தனிமையை மேற்கொள்ளவே இவ்வாறு செய்ததாக சொல்வர்.
அதீத தனிமை நம்மை அழிப்பதுடன் சில வேளைகளில் பிறரின் அழிவிற்கும் காரணத்தை ஏற்படுத்துகிறது. தனிமை ஒரு வகையில் நல்லதே… அது நம் மன நலத்தை பாதிக்கும்போது அல்லது உறவுச்சிக்கல்களை ஏற்படுத்தும்போது நாம் விழிப்படைய வேண்டும். நம்மால் தீர்க்க இயலாத பிரச்னைகளை தனிமையுணர்வு ஏற்படுத்தும்போதும், தவறான பழக்கங்களுக்கு நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதாக நாம் நினைக்கும்போதும் உளவியல் ஆலோசனை பெறுவது மிக அவசியம். உங்கள் தனிமையின் தீவிரம் குறித்து பரிசோதிக்கும் உளவியல் நிபுணர் அல்லது மருத்துவர் தரும் ஆலோசனை உங்கள் தனிமையை இனிமையாக்க முடியும்.
விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்
உங்கள் தனிமையுடன் சிறிது நேரம் செலவழிப்பது ஒரு வகையில் தேவையானதே. ஆனால், அந்த தனிமை நமக்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துமாயின் அங்கு விழித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை ரசிக்க நாம் எப்போதும் மற்றவர்களுடன் இருக்கத் தேவையில்லை. நாம் தனியாக இருக்கும்போது எழும் உணர்வுகள் பல நேரங்களில் நம் பிரச்னைகளை தீர்க்கும். அந்த நேரம் இனிமையாக அமையும்போது ஒரு சுய பரிசோதனை, சுய பாராட்டுதல், சுய விமர்சனம் என நீளும்போது வாழ்க்கையை மேம்படுத்துவதோடு தனிமையை உணர்வதைப் பற்றி நாம் நினைக்கும் வழியை மாற்றும்.
Average Rating