நோயாளிகள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டியவை!! (மருத்துவம்)
வளர்ச்சியடைந்த நாடுகளில் மருத்துவமனை பராமரிப்பில் 10-க்கு ஒரு நோயாளி ஏதாவதொரு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புள்ளி விவரம். இந்த பாதிப்பு பலவிதமான தவறுகளாலோ, எதிர் நிகழ்வுகளாலோ ஏற்படலாம். ஏராளமான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இதனால் நாம் அனைவரும் மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்த சரியான புரிதலைப் பெற வேண்டியது அவசியம்.
நோயாளியின் பாதுகாப்புப் பிரச்னைகள்
* தவறுதலான, தவறவிட்ட அல்லது அறியாமல் ஏற்படும் தாமதமான நோய் கண்டறிதல்.
* நோயாளிக்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பராமரிப்பின்போது உண்டாகும் தொற்றுகள்.
* நோயாளிகள் தவறான மருந்துகளைப் பெறுதல் அல்லது சரியான மருந்துகளைத் தவறான அளவுகளில் பெறுதல்.
* உள்நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுதல்.
* தவறான உடல் பகுதியில் அல்லது தவறான நபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுதல்.
* மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத நிலை இதுபோன்ற காரணங்களால் நோயாளியின் பாதுகாப்பில் பிரச்னைகள் உண்டாகிறது.
நோயாளியின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு….
* ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான அடையாளம் மற்றும் குறியீட்டை உறுதி செய்வது நல்லது.
* மருந்துச்சீட்டில் சுருக்கக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டாம். கூடியவரையில் பெரிய எழுத்தில் எழுதினால் நோயாளியும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
* சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சியளிப்பதும், அவர்களை குழுவாக இணைத்து பணியாற்றச் செய்வதும் தவறுகளைக் குறைக்க உதவும்.
* தகுந்த சுகாதாரப் பராமரிப்புக் கட்டுமானத்தை உருவாக்கினால் அது நோயாளிகள் அடையும் தீங்கைக் குறைக்க உதவியாக இருக்கும்.
* மருத்துவமனை பராமரிப்பின்போது தெளிவான குறியீடுகள் வழங்குவது தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க உதவும்.
* பணி மாற்றங்களின்போது சரியான பணி ஒப்படைப்பும், பணி ஏற்பும் இருக்க வேண்டும். குறிப்பாக நோயாளி ஒப்படைப்பின்போது அதைப் பின்பற்றுவது அவசியம்.
* நோயாளியை அவருடைய குடும்பத்தார் கவனித்துக் கொள்ளுமாறு வைத்திருக்க வேண்டும். மேலும் நிலையான இயக்க செயல்முறை (Standard Operative Procedure- SOP) அளவுகோல்களைப் பின்பற்றுவதன் மூலம் நோயாளி பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
நோயாளிகள் தங்கள் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை
* உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமை உட்பட அனைத்து சுய விவரங்களையும் அளித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவ வேண்டும்.
* உங்களுக்கு ஏதாவது சந்தேகமோ அல்லது நோய் கண்டறிதலில் நம்பிக்கை இல்லாமலோ இருந்தால், அதற்குரிய பதிலை உடனடியாக கேட்டுப்பெற வேண்டும். அதன்பிறகும் சந்தேகம் இருந்தால் இரண்டாவது மருத்துவரின் கருத்தைப் (Second Opinion) பெறலாம்.
* உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைமுறை பற்றிய அனைத்து தகவலையும் மருத்துவரிடம் கேட்க வேண்டும். பக்க விளைவு ஏதாவது இருக்குமா என்று தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
* நோயாளிக்கு எந்த விதமான பராமரிப்பை அளிக்கும் போதும் உங்கள் கைகளைக் கழுவி அல்லது கிருமிநீக்கம் செய்து சுத்தமாக வைக்க வேண்டும்.
* நோயாளியைக் கையாளும்போது கையுறை அணிய வேண்டும்.
* நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது முகத்திற்கான உறை, கண்களுக்கான கண்ணாடி போன்றவற்றை பாதுகாப்புக்காக அணிய வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் தகுந்த கிருமி நீக்கம் செய்த துணிகளை பயன்படுத்த வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் பயன்பாட்டுக்குப் பின் அசுத்தம் அடைந்த ஊசியை முறையாக அகற்ற வேண்டும்.
* ஒரு நோயாளிக்கு பயன்படுத்திய பாதுகாப்பு சாதனத்தை அடுத்த நோயாளிக்கு பயன்படுத்தும் முன், கிருமிநீக்கம் செய்து சுத்தமாக்க வேண்டும்.
|* இருமல் அல்லது தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை டிஷ்யூ காகிதம் அல்லது கைக்குட்டையால் மூடிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
Average Rating