பெண் போராளி அன்னை மீனாம்பாள்!! (மகளிர் பக்கம்)
பெண் இனம், சிறைப்பட்டதும் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் இந்திய வரலாற்றில் மாறிமாறி நிகழ்ந்த ஒன்றுதான்… வரலாற்று காலம் தொட்டே பெண்கள் போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் வாழப் பழக்கப்படுத்தப்பட்டனர். இந்நிலையிலிருந்து, படிப்
படியாக மீண்ட பெண்கள் பலர் போராட்டக் களங்களையும், உயர் பதவிகளையும் வகித்தனர்.
ஒரு ஆண் கல்வி கற்றால், அது குடும்பத்திற்கு மட்டும். அதுவே பெண் கல்வி கற்றால் குடும்பம் மட்டுமல்ல நாட்டிற்கும் பயனாகும். அந்த வகையில் பெண் விடுதலைக்காகவும் தலித் விடுதலைக்காகவும் போராடிய அன்னை மீனாம்பாள் ரங்கூனில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிகுலேசன் கல்வி பயின்று. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பன்மொழி புலமை பெற்றவராகத்
திகழ்ந்தார்.
தனது தாத்தாவான மதுரைப்பிள்ளைக்கும், தன் இணையர் சிவராஜ்க்கும் சிறிதும் சளைக்காமல் கொள்கையிலும், படிப்பிலும், பதவிகளிலும் சிறந்து விளங்கினார். பெண் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு மக்களின் மேம்பாட்டிற்காகவும் களம் பல கண்டார். பட்டியலின மக்கள் விடுதலைக்காக போராடுவததைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதினார்.
இந்தியாவில், தேசிய விடுதலை இயக்கத்தில் பெண்கள் துணிந்து பங்கெடுத்த பின்னர்தான், தங்களுடைய சமூக கவுரவத்தை பற்றி ஆழமாக சிந்திக்கவே தொடங்கினர். அந்த வகையில் சைமன் குழு வருகையை ஆதரித்து மேடை ஏறி 1928ல் தம் பொது வாழ்வை துவங்கினார் அன்னை மீனாம்பாள். ராஜாஜி பிரதமராக இருந்த சமயம் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க ஏற்பாடுகள் நடந்தது. அப்போது சென்னை தியாகராயர் நகரில் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அன்னை மீனாம்பாள் இந்தி திணிப்பை எதிர்த்து உரையாற்றி, இந்தி திணிப்புக்கு எதிரான போரையும் தொடங்கி வைத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தில் முன் நின்று பெண் படைத்தலைவியாக கர்ஜித்தார்.
1938-ம் ஆண்டு நவம்பர் 13-ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிக்கு, ‘பெரியார்’ என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார். இந்த நிகழ்வைப் பற்றி பின்னாள் நினைவுகூர்ந்தவர், “நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள். நாம் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்று முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்தோம்.
அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக என் வாழ்நாளில் கருதுகின்றேன்” என்றார். அதேபோல் அண்ணல் அம்பேத்கரும் அன்னை மீனாம்பாளை எப்போதும் தன் தங்கையாகவே கருதி அவரை தங்கை என்றே அழைத்து வந்திருக்கிறார். சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயராகப் பொறுப்பு வகித்த அன்னை மீனாம்பாள் வகித்த பதவிகள் ஏராளம்…
* பதினாறு ஆண்டுகள் கௌரவ மாகாண நீதிபதி பதவி
* பதிமூன்று ஆண்டுகள் சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் பதவி
* ஆறு ஆண்டுகள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் பதவி
* ஒன்பது ஆண்டுகள் சென்னை மாகாண ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி
* ஆறு ஆண்டுகள் அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்
* லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்
* ஆறு ஆண்டுகள் மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர்
* தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
* சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
* போருக்குப்பின் புனரமைப்புக் குழு உறுப்பினர்
* S.P.C.A உறுப்பினர்
* நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
* தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
* சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
* விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
* காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
* சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
* அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
மிகச் சீரிய பெண்ணியவாதியாக திகழ்ந்த அன்னை மீனாம்பாள் வகித்த பதவிகளைப் படிக்கும்போதே அவர் எத்தகைய ஆளுமையோடு இருந்தார் என்பது நமக்கு விளங்கும்.
1938ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிக்கு, ‘பெரியார்’ என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார்.
Average Rating