மனதை உறுத்தும் ஒரு சோகம் !! (கட்டுரை)
இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள பல்வேறு அருட்கொடைகளில் எதையும் நன்றியுணர்வோடு மனிதன் நினைவு கூர்வது குறைவு என்பதை விட இல்லையென்றே கூறலாம். ஆனால், இயற்கையின் சீற்றம் வந்ததும் மனிதன் அப்போது தான் இறை சிந்தனையோடும் அவனை நினைக்கின்றான்.
ஆனால் எது எவ்வாறாக இருந்தாலும் இயற்கையின் மண்டல அமைப்பை மனிதன் அறியவில்லையென்பதை நாம் உணரத்தான்வேண்டும். 2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி எவ்வாறு உருவானதென்பதை நாம் அவதானிப்போம்.
நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றன. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுகளின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது.
மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது.
ஆனால், கண்டங்களாகப் பிரியப், பிரிய அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுகள் உருவாகின. இந்தத் தட்டுகளின் மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிலத்தை அடையும்போது அலைகள் மேலும் வேகமிழந்து அதிக உயரம் எழும்புகின்றன. 2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது.
அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு – இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது.
உலக வரலாற்றில் காலத்துக்கு காலம் ஏதாவதோர் இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்குக் கொண்டு செல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது.
இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 6.58 மணிக்கு 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது.இது இலங்கையின் கிழக்கு கல்முனைப் பகுதியை முதலில் தாக்கிய சுனாமி அலையினால் பெரியநீலாவணையிலிருந்து பொத்துவில் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பகுதிகளே பெருமளவு பாதிப்பை கண்டுள்ளன.
திருக்கோவில் தம்பட்டை மற்றும் அக்பர் கிராமம் முழுமையாக அழிந்துள்ளன. 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இலங்கையின் பாரிய மனித உயிர்சேதம் அம்பாறை மாவட்டத்திலேயே ஏற்பட்டிருக்கின்றது.
இங்கு சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிக மக்களை கடல் காவுகொண்டுள்ளது. இதற்கு அடுத்ததாக சுமார் 4,500 பேர் ஹம்பாந்தோட்டையிலும். சுமார் 3,774 பேர் காலியிலும், மட்டக்களப்பில் 2,975 பேரும், முல்லைத்தீவில் 2,902 பேரும் பலியானதாக ஆரம்ப அறிக்கை கூறியபோதிலும் பின்னர் மாற்றம் ஏற்பட்டது.
அதேசமயம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற ரயில், அதாவது மிகுந்த சனநெரிசல் மிக்க பயணிகள் ரயில் கடலலையின் சீரற்றத்துக்கு இரையானது.
இதில் மிக மகிழ்வுடன் வீடு நோக்கிப் பயணித்தவர்களில் 1,700 இற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போனார்கள். இது ஆசியாவின் ரயில் விபத்துகளில் முக்கியமானதாகவும் உள்ளது.
இதேவேளை,தேசிய பாதுகாப்பு தினம் டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு சுனாமி என்ற பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும் மத அனுஷ்டானங்களும் நடைபெறுகின்றன.
மத அனுஷ்டானங்களுக்கும் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குமே முன்னுரிமை அளிக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சகல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளமை குறிப்பிடத்தது.
Average Rating