சிரிப்பதா சிந்திப்பதா? (கட்டுரை)
வரலாற்றில் பல உண்மைகளை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் வாகனத்தின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை யாரையும் ஏறவேண்டாமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அன்று கூறியிருந்தார்.
பதவிகளுக்கும் பணத்துக்கும் துணைபோன எம் செம்மல்கள் நடக்கமுடியாத நிகழ்வுகளை நடைபெறப்போகுதென தீர்க்க தரிசனம் கூறித்திரிவது யாரை முட்டாளாக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் வார்த்தையை ஒரு சதமேனும் கணக்கில் எடுக்காமல் தற்போது சஜித் பிரேமதாஸவின் பின்னால் மக்களை வழிநடாத்த முயல்கின்றனர்.
ஆனால், மக்கள் தற்போது விழித்துவிட்டனர். மக்களை மடையர்களாக்க முடியாது. நினைப்பவர்கள் ஒரு கணம் நின்று சிந்தித்துப்பாருங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் வேத வாக்கு உங்களை எவ்வாறு கொண்டுசெல்லுகிறது என்பதை சிந்தியுங்கள்.
மர்ஹூம் அஷ்ரப் சொன்னவற்றை சிறப்பாக செயற்படுத்தினால் இனவாத வலைவீச்சுக்குள் எமது சமூகம் சிக்கியிருக்காது. இவற்றையெல்லாம் தீர்க்கதரிசனத்துடன் சொன்ன அந்தத் தலைவரின் கீழ் செயற்பட்ட தலைவர்களே உங்கள் சமூகத்தின் பாதுகாப்பு,அபிவிருத்தி, இளைஞர்,யுவதிகளின் வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் எடுக்கும் கால கட்டத்தில் இருக்கின்றோம்.எனவே முஸ்லிம் தலைமைகளே சற்று சிந்தியுங்கள்.
இப்போதைய காலகட்டத்தில் எங்கு சென்றாலும் இனவாதத்தின் நாதஸ்வரம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதை நிறுத்துவது. சமூகத் தலைவர்கள் என்று கும்மாளம் போடும் கூட்டத்தினர் மக்களை வழிநடாத்துவோர் இனவாதத்தைக் கக்கும்போது,பெரும்பான்மையின மக்களின் நாதஸ்வரத்தின் ஓசை உயரத்தில்தான் ஒலிக்கிறது.
இந்த ஓசையுடன் இணைந்து சென்றால், ஆகாயத்துக்குச் செல்லவுள்ள இந்த ஓசையைப் பூமிக்குக் கொண்டுவரும் ஆற்றல் இத்தலைவர்களுக்குண்டு. முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் இவர்களின் முடிவுகளில்தான் தங்கியுள்ளது என்று மட்டும் நினைக்கவும் தேவையில்லை.
அவர்களும் துணிந்துவிட்டார்கள். யாரை ஆதரித்தால் என்ன என்ன பயன்பெறலாம் என்று.
அதிகமாகச் சொந்த நலனில் அக்கறை காட்டும் தலைவர்களிடம் தான் ஒருதலைப்பட்ச செயற்பாடுகள் காணப் படுகின்றன.கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்தத் தலைவர்கள் சமூகத்துக்காக எதைத்தான் செய்துள்ளனர்?
தற்போது இவர்கள் புதுக்கதை விடுகின்றனர். அதாவது முஸ்லிம், தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய ௯ட்டணியொன்றை அமைக்க முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்திருப்பதாகத் தகவலொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் இவர்கள் மக்கள் பிரயோசனம் அடையுமளவுக்கு எதைத்தான் செய்துள்ளனர். தற்போது கோட்டாபய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாட்டின் நிர்வாகம் சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழர்களை விட முஸ்லிம்கள் மிகவும் உன்னிப்பாகச் சிந்திக்கவேண்டிய விடயம்தான் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது, விபத்தொன்றின்போது ஏற்பட்ட விடயம் தொடர்பில் செய்யப்பட்டது. ஆனால், இந்த பாட்டலி சம்பிக ரணவக்க தான் கூறினார் “இன்னும் பல ஆண்டுகாலங்களில் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் பாரிய உயர்வு ஏற்படும்.
இதனால் முஸ்லிம் விடயத்தில் பௌத்தர்களாகிய நாம் மிகவும் கவனம் செலுத்தவேண்டும்” இவ்வாறு கூறி இனவாதமே தெரியாத சில சிங்கள புத்தி ஜீவிகளின் காதுகளுக்கும் சிந்தனைக்கும் ஒரு முடிச்சினை போட்டவர்தான் பாட்டலி சம்பிக ரணவக்க.
இவரின் கைது தண்டிக்கப்படவேண்டுமென சில முஸ்லிம் தலைவர்கள் கூறுவதைக்கேட்டால் இவர்கள் யார் என்பதை நாம் கேட்கத்தேவையில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில போன்ற எத்தனையோ பேர் இனவாதம் பேசியது யாருக்குத்தான் ஞாபகமில்லை?.
ஆனால்,நாடு தொடர்ந்து செழிப்பாகச் செல்லவேண்டுமென்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தி நாட்டை அபிவிருத்தியடையச் செய்து சகல இனமக்களும் பாதுகாப்பாக வாழ வழிஏற்படுத்தப் படவேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் தற்போது சிறப்பாகச் செல்வதை அவதானிக்கமுடியும்.
இவை அனைத்தும் இவ்வாறிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குப் புதிய தலைவர் ஒருவரை முன்கொண்டுவரத் தயாரென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இப்போதைய காலகட்டத்தில் கூறித்திரிவது சிறுபிள்ளைத் தனம்மென்று கூறுவதா?குள்ளத் தனம் என்று கூறுவதா?
அன்று ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படப்போகின்றதென அறிவிப்பு வந்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தான் போட்டியிட வேண்டும்.
தலைமைத்துவம் எனக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறும் போது வாய்க்குள் அவலை மென்றதுபோல் இருந்துவிட்டு இப்போது கதை அளக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் வசைப்பாடிக் கொண்டிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.அதுமட்டுமா நான்தான் போட்டியிட வேண்டும்.வேறுயாருக்கும் இடமில்லை என்றெல்லாம் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவின்போது அடம்பிடித்த பின்னர்,தற்போது கூறும் கதைதான் சிறுபிள்ளைத்தனம்.
“ நான் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கமாட்டேன். தற்போது புதிய தலைவர் ஒருவரைக் கொண்டுவருவதே எனது தேவையாக உள்ளது.
அனைவரும் வேறுபாடுகளைப் புறந்தள்ளித் திட்டம் ஒன்றைக் கொண்டுவருமாறு ஆலோசனை வழங்கியுள் ளேன்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுவது “மொடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதுபோல்” தான் ஆசைப்பட்டார்.
ஆனால்,அதுகிடைக்கவில்லை.அதனை மாற்றுவதற்கு இன்னுமொரு திட்டம்.தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சி வேகம்பாரிய பிளவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது.
இதுமட்டுமல்ல இன்னும் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப்பீடமேறுவதற்கு. இதற்கான முழுப்பொறுப்பையும் ரணில் விக்கிரமசிங்கவேதான் பொறுப்பெடுக்கவேண்டும்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கெட்டித்தனத்தையும் புத்தி சாதுர்யத்தையும் நன்கு அறிந்தவர்தான் இலங்கையின் முதல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன.
அவரின் ஆட்சிக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார்.
அந்தக்கால கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவினால் மறைமுகமாக சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் முக்கியக் கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியுள்ளதாவது: “ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவே வழிகாட்டும் ஒரு சிறந்த தலைவராகச் செயற்படக்கூடியவர்.
இவருக்கு மற்றவர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்”என்ற தொனியில் கூறியுள்ளார். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க போன்றோரும் அதற்கு பிரசன்யமாகியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அன்று ஏன் அவ்வாறு கூறினாரென்று அப்போதைய பிரதமராக இருந்த ஆர். பிரேமதாஸ துளியேனும் விளங்கிக் கொள்ள வில்லையாம்.
ஆனால், லலித் அத்துலத்முதலி,காமினி திஸாநாயக்க ஆகியோர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் இதுபற்றி கேட்கவு மில்லலையாம். (பின்னர்,நாள்களும் ஆட்சியும் நகர்ந்தன.)
ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க ஆகியோரிடம் நிதி அமைச்சின் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து “அன்று நான் ஏன் அவ்வாறு கூறினேன் என்றால், ரணில் விக்கிரமசிங்க கெட்டிக்காரனாலும் பிரதமர் பிரேமதாஸவின் தலைமைத்துவ பசியை திசை திருப்பும் நோக்கிலேயே கூறியதாக” ஜே.ஆர்.கூறியுள்ளார்.
ஆனால்,அன்றைய அந்தப்பழிவாங்கலுக்கு மத்தியில் இப்போது, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர் த்தனவின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸவுக்கும் இன்று தலைமைத்துவப் பிரச்சினை தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நேரத்தில் “பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அடுத்துவரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் கிடையாதெனவும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் வகையில், முன்னின்று செயற்படத்தீர்மானித்திருப்பதாகவும்” அவர் தெரிவித்திருப்பதானது ஐக்கிய தேசியக் கட்சியின் நலனும் கெடுதியும் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
Average Rating