நாணயக் கயிற்றின் தேவை !! (கட்டுரை)

Read Time:21 Minute, 16 Second

அதிகாரத்தரப்புடன் தேசிய இனமாகத் தன்னைப் பிரகடனப்படுத்தும் சிறுபான்மையினமொன்று, உரிமைகளைப் போராடிப் பெற வேண்டுமாக இருந்தால், அங்கு அடக்குமுறையொன்று பிரயோகிக்கப்படுவதாகவே கொள்ள வேண்டும்.

அந்தவகையில், தெற்காசிய நாடுகளில் மாத்திரமின்றி, பல்வேறு நாடுகளிலும், அடக்குமுறைக்கான கட்டமைப்புகள் காணப்படுகின்றமை, ஓங்கி ஒலிக்கும் சிறுபான்மையினரின் உரிமைக்கான குரல்களின் மூலம், அறிந்துகொள்ள முடிகின்றது.

எனினும், இவ்வாறான உரிமைக் குரல்களுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் அதனுடைய ஆதரவுத்தளமும் அதிகளவாகக் காணப்பட்ட தருணங்கள் பதிவில் உள்ளன. இதன் காரணமாகவே, கொசோவா உட்பட, பல்வேறு நாடுகள், சுதந்திர தேசங்களாகத் தம்மை நிலைப்படுத்திக் கொண்டன.

எனினும், இலங்கை போன்ற சிறிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளும் அவர்களை ஓரங்கட்டும் செயற்பாடுகளும் பலமாக இருக்கின்ற போதிலும், சர்வதேசத்தின் பார்வை கணிசமாகக் காணப்படாமை, சிறுபான்மையினரின் உரிமைக்குரல், நசுங்குண்டு போவதற்கான வாய்ப்பை, அதிகரிக்கின்றது எனலாம்.

இலங்கையில் உள்ள சிறுபான்மையினர் யார் என்பது தொடர்பில் ஆராய்கின்ற போது, தாம் வாழும் நாட்டில் மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், குறைந்த எண்ணிக்கையிலோ, விகிதாசார எண்ணிக்கையிலோ வாழ்பவர்களாக உள்ளனர்.

இவர்கள் தமிழ், முஸ்லிம், பறங்கியர்களாக இருக்கின்ற போதிலும், இத்தேசத்தில் அடக்குமுறைக்குள் அகப்பட்டு, தமது உரிமைக்கான குரலை, அதிகளவில் எழுப்பிய இனமாகத் தமிழர்களைக் கொள்ளலாம்.

இவ்வாறாகச் சிறுபான்மையினத்தின் விடுதலையும் அபிலாசைகளும் இதுவரை ஈடேறாததற்கான காரணங்கள் என்ன என்பதே, முக்கியமான கேள்விகளாக உள்ளன.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து, சுதந்திரத்துக்காகப் போராடிய இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்தியல் முரண்பாடுகள், இன்று உச்சம் தொட்டிருக்கின்றன. சிறுபான்மையினரின் பலமான அரசியல் அதிகார இருப்பின்மையே இதற்கான முக்கிய காரணம் எனப் பார்க்கப்படுகின்றது.

சிறுபான்மையினரிடம் பலமானதும், ஆரோக்கியமானதுமான அரசியல் வகிபாகம் இலங்கை அரசியலில் காணப்படவில்லை. அத்துடன், அரசியல் தலைமைகளுக்கு இடையில், ஒற்றுமையின்மையும் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையிலேயே, மாறிமாறி ஆட்சி அமைத்த இலங்கையின் பெரும்பான்மை –யினரிடம் அதிகாரப்பகிர்வு உட்பட ஏதுவான தீர்வுகளைக் காணமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியே, தற்போது அமைந்துள்ள புதிய அரசாங்கமும் அதனுடைய ஜனாதிபதியும் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துகளும் ஆகும். சிறுபான்மையினருக்கு அதிகாரப்பகிர்வு சாத்தியமன்றது என்ற நிலையில், அபிவிருத்தி ஊடாக அனைத்தையும் சாதித்து விட முடியும் என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார்கள்.

அண்மையில், சிறுபான்மையிருக்கான தீர்வாக, சமஷ்டி சாத்தியமற்றது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், அபிவிருத்தியினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, ஒரே நாட்டில் வாழ வழிசமைக்க முடியும் என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சமஷ்டியைப் பற்றித் தெரிவித்துள்ளதுடன், அதைப் பெறத் தாம் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

எனவே, இங்கு இரு தரப்புகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட கருத்துகளானவை, தமிழ் மக்களுக்கான ஏற்புடைய தீர்வை, இந்த ஆட்சிக் காலத்தில் வழங்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழர்களின் பூர்வீகம்

இந்தத் தருணத்திலேயே, முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழர்களின் பூர்வீகம் தொடர்பிலான கருத்துகளைத் தற்போது பதிவு செய்து வருகின்றார்.

குறிப்பாக, சிங்களவர்களின் பூர்வீகத்தையும் மகாவம்சத்தையும் கேள்விக்கு உள்ளாகியுள்ளமை, பெரும்பான்மையினப் பௌத்தர்களுக்கும் சிறுபான்மையின தமிழர்களுக்கும் இடையிலான விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

சாதாரணமாக, அரசியல்வாதிகளின் கருத்தாக இதை விட்டுச்செல்ல முடியாத நிலை, சிங்கள ஆட்சியாளர்களிடமும் மக்களிடமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், அவர்களின் முக்கிய ஆவணமான மகாவம்சத்தைப் போலி என்று தெரிவித்துள்ளதானது, பெரும்பான்மையின மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனினும், காலத்துக்குக் காலம், வரலாற்றைப் பதிவு செய்யும் ஓர் ஆவணமானது, திரிவுபடுத்தப்பட்டு எழுதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிப்பதையும் ஏற்றாக வேண்டும் என்பதே, சில நடுநிலையாளர்களின் கருத்தாகவுள்ளது.

எனவே, தற்போது உச்சம் பெற்றுள்ள அரசியல் முரண், தற்போதைய ஆட்சியாளர்களை நோக்கி, சிங்கள பௌத்த மேலாதிக்க வாக்குகளை நகர்த்தும் எனலாம். இதன் காரணமாக, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுன அதிகளவான ஆசனங்களுடன் ஆட்சியில் ஏறும் என்பதிலும், சந்தேகமில்லாத நிலையில், வெறுமனே கருத்தியலால் முட்டி மோதிச் சாதிக்கபோவது ஏதுமில்லை என்பதே, தமிழ் மக்கள் தரப்பில் உள்ள நிலைப்பாடாகும்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரால் முன்வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவு தொடர்பான கருத்தானது, பௌத்த மேலாதிக்கத்தினூடாக ஆட்சிப்பீடத்தில் உள்ள புதிய ஜனாதிபதியைக் குளிர்வித்து, அதனூடாகச் சில அடைவு மட்டங்களைச் சாதகமாக்கிக் கொள்வதற்காக உள்ளது என்ற தோற்றப்பாடு காணப்பட்டாலும் கூட, குறித்த தலைமையும் கட்சியும் கடந்த காலத்தில், தாம் ஆதரவளித்து வந்த ஐ.தே.கவை, ஆட்சியில் அமர்த்த எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை, தற்போதைய ஜனாதிபதி இலகுவில் மறந்துவிட வாய்ப்பில்லை.

எனவே, ஒரு பலமான தளத்தில் அரசியல் தலைமைகள் இல்லாத நிலையில், மாறுபட்ட கருத்தியலை கொண்டு, தமிழ் மக்களிடம் குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்தி, அரசியல் ரீதியான தீர்வுக்கு நகர்த்தல் என்பது, சாத்தியமற்ற விடயமாகும்.

இந்த நிலையில், சர்வதேசத்தின் வருகை அல்லது ஆதரவுத்தளம் என்பது, எதிர்பார்க்க முடியாத துர்ப்பாகிய நிலையில் உள்ளது என்பதையும் உணரத்தலைப்பட வேண்டும்.

எப்போது, தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து, தமக்கான அரசியல் ரீதியான நகர்வில் ஆரோக்கியம் பெறுகின்றனரோ, அன்றே சர்வதேசத்தின் வரவை அல்லது ஆதரவுத்தளத்தை எதிர்பார்க்க முடியும் என்பதே உண்மை.

இவ்வாறான சூழலில் முன்னாள் போராளிகளாக இருந்து, தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியாக உருவகம் பெற்றுள்ளவர்களின் கருத்தின் பிரகாரம், ஒரு தேசிய தலைமையால், போரியலையும் சமதளத்தில் அரசியல் செல்நெறி போக்கையும் சிறப்புறக் கொண்டு சென்றிட முடியுமானால், ஏன் இப்போது தமிழர் அரசியலில், இத்தனை அரசியல் தலைவர்கள் இருந்தும் முடியாதுள்ளது?

இனம் தத்துவார்த்த தளமின்றி, பயணிப்போமேயானால் எமக்குள் நாமே சிதைவுறுவோம் என்பதில் ஐயமில்லை. போருக்கு பின்னரான தமிழர் அரசியல் தலைமைத்துவம், மிதவாத தலைமைகளிடம் விட்டுச்செல்லப்பட்டிருக்கிறது.

அதனைத் தவிரவும் மாற்று வழிகள் ஏதுமிருக்கவுமில்லை. ஆனால், தற்போதைய தமிழர் தரப்பு அரசியல், புலிகளை வசைபாடுவதும், மறுதரப்பைப் புகழ்பாடுவதாகவுமே செல்கிறது.

எனவே, கருத்தியல் மாறுபாடுகளும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான பிரிவுகளும் மேலும் மேலும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் அதனோடிணைந்த செயற்பாடுகளையும் மந்தகதிக்குள்ளாக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் புதிய கட்சிகளும் மாற்று அணிகளும் தம்மை சிறந்தவர்களாக வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்களின் மறுபக்கங்களும் ஆராயப்பட்டு மக்களுக்கான தெளிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டிய தேவையுள்ள நிலையில், அதனை எவர் முன்னகர்த்துவது என்பது கேள்வி.

எனவே, அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பில், ஆராய வேண்டிய தளத்தில் தமிழர்கள் உள்ளதுடன், அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையை எவர் முன்னெடுப்பது என்ற கேள்வியுமுள்ளது.

கிராம மட்ட அமைப்புகளை அண்மையில் சந்தித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன், “கூட்டமைப்பின் தலைமை செயலிழந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை” என்ற கருத்தை முன்வைத்துள்ளதுடன் எதிர்வருகின்ற ஐந்துஆண்டுகள் காலம், தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு உட்பட, ஏனைய விடயங்களைக் கையாள்வதற்கு, நாங்கள் ஒரு மாற்று வழியைக் கையாள வேண்டியவர்களாக உள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரத் தோல்வி காரணமாக, நாங்கள் மாற்று வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கான விடயம் தொடர்பில் பகிர்ந்து கொண்டோம். தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவை என்பதை இங்கு வந்தவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆகவே, அதை நோக்கிச் செல்வதன் ஊடாகத்தான், நாங்கள் எதிர்காலத்தில் எங்களுடைய சகல விதமான பிரச்சினைகளையும் அரசாங்கத்துடனும், இராஜதந்திரிகளுடனும் பேசிக் கையாளக் கூடிய நிலைமை ஏற்படும். இன்றைக்கு இருக்கக் கூடிய கூட்டமைப்பு தலைமை, செயலிழந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், இவ்வாறான மாற்று தலைமை என்பது, எங்கிருந்து உருவாக்கம் பெற வேண்டும் என்ற அடிப்படை உள்ளது. அந்தத் தலைமை, அரசியலால் நிராகரிக்கப்பட்டவர்களில் இருந்து புதிய அத்தியாயத்துக்காக உருவாக்கப்பட வேண்டுமா, அல்லது, மக்கள் மத்தியில் இருந்து அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியுள்ளது.

எனவே, இவ்வாறான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, சிவில் அமைப்புகளையே சாரும். தமிழர் அரசியல் பரப்பில், பலமான சிவில் அமைப்புகளின் கட்டமைப்பு இல்லாமை, இன்று அரசியல் தளத்தில் பாரிய பிரழ்வுகளுக்கும் பிரிவுகளுக்கும் காரணமாகியுள்ளது.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகள் பலம் பொருந்தியதாகத் தம்மைப் பறைசாற்றிக்கொண்டு வருகை தந்தபோதிலும், அவை பின்னரான காலத்தில் அரசியல் சாயத்துக்குள் தம்மை மூழ்கடித்தமையும் அல்லது அதில் அங்கத்துவம் பெற்றவர்கள் தமக்கான அரசியல் தளமாக, சிவில் அமைப்பை பயன்படுத்தியமையும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த சிவில் அமைப்புகள் பலமிழந்துபோகக் காரணமாகின.

இந்த வகையிலேயே, தற்போது ஆங்காங்கே புதிதாக உருவாக்கப்படும் சில அமைப்புகள் தம்மைச் சிவில் அமைப்புகளாக வெளிப்படுத்த எத்தனித்த போதிலும், அவை தமது அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகளினதும் நலன் சார்ந்ததாக உருவாக்கப்படுவதால், ‘தமிழ் மக்கள் சிவில் அமைப்பு’ என்ற கட்டமைப்புக்குள் தம்மை ஆட்படுத்திக்கொள்ள தயக்கம் காட்டியும் வருகின்றனர்.

எனவே, ஆக்கபூர்வமான ஒரு சிவில் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகத் தற்போது செயற்பாடில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளைச் சீரான செயல்வடிவத்தில் நகர்த்த வழிசமைக்க முடியும் என்பதே உண்மை.

“மாற்று அணி உருவாகும் போது, கூட்டமைப்பை பாதிக்கச் செய்யும்”

நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் கருத்து:

கடந்த காலங்களைப் போல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தலும், அதிகளவான ஆசனங்களைப்பெறும் என நம்பிக்கை வெளியிட்ட புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாறு த. சித்தார்த்தன், மாற்று அணியின் பிரவேசம், கூட்டமைப்பைப் பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் புளொட் அமைப்பின் மத்தியகுழு கூடியதன் பின்னர், ஊடகங்களுக்குதக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;
ஜனாதிபதித் தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள், தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக, இன்று கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்துவரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு செல்லப்போகின்றோம் என்று, என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாடே உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். சில வேளைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அந்த ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.

எதிர்வரும் 27 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடும். அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.

மாற்று அணி ஒன்று உருவாகும் போது, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பாதிக்க செய்யும். போட்டிகள் கூடுகின்ற போது, கட்டாயமாகப் பாதிப்பு இருக்கும். அது தொடர்பில் நாங்கள் பேசுகின்றபோது, கூடிய வரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைக் கூட்ட முடியுமாயின், இன்னும் கூட்டவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கின்றது. அது எவ்வளவு சாத்தியமென்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில், அந்தப் பிளவு இன்று கூடுதலாகவே இருக்கின்றது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட, இரண்டு, மூன்று அணிகளாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. எனவே மக்களே, இனித் தீர்மானிக்க வேண்டும்.

எனினும், எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குவீதமே கூடுதலாக இருக்கும் என்றே நம்புகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும். கடந்த காலங்களைப்போல், 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட, அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.

தற்போதுள்ள கள நிலைவரங்கள் எப்படி, சாதக பாதகமாக மாறும் என்று கூற முடியாது விட்டாலும் கூட, தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அவசர நடவடிக்கை தேவை !! (உலக செய்தி)