ஒற்றையடிப் பாதை !! (கட்டுரை)
சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், மாற்றுத் தெரிவுகள் இல்லாமல், ஒற்றையடிப் பாதையில் பயணித்தல் என்பது, அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல.
திரும்பி வர முடியாத, எந்தப் புள்ளியிலிருந்தும் தமக்கு விருப்பமான இன்னுமொரு பாதைக்குத் திரும்ப முடியாத விதத்தில் உள்ள வீதியொன்றில், பயணிக்கும் சமூகமானது, வழிநெடுகிலும் பல்வேறு திகில் அனுபவங்களையும் கையறுநிலைகளையும் சந்திப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை முஸ்லிம் அரசியல் என்பது, அவ்விதமே பயணிக்கப் பழக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், இரண்டாம் நிலைத் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கு, உண்மையாகவே பதவியாசையும் அதிகார தேவைப்பாடும் இல்லையென்றால், ஒரு குறிப்பிட்ட பெருந்தேசியக் கட்சிக்குள் மூழ்கிக் கிடக்காமல், அமைச்சுப் பதவிகளுக்குள் கட்டுண்டு கிடக்காமல், முஸ்லிம்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக, அரசியல் செய்ய வேண்டும்.
இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்வதை விடவும், காத்திரமானதாக இருத்தல் வேண்டும். ஏனெனில், சமூகம் சார்ந்த அரசியலுக்கு, த.தே.கூ முன்னுதாரணமாகக் குறிப்பிடும் நிலை, இப்போது மாறி வருகின்றது.
முஸ்லிம்கள் எப்போதும், இந்த நாட்டின் பிரஜைகள்தான்! அவர்கள் யாருக்கு வாக்களித்தாலும், இந்த அந்தஸ்தை முஸ்லிம்கள் இழக்க முடியாது.
அந்தவகையில், யார் ஜனாதிபதியாக வந்தாலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஓர் அரசியல் தலைமையை, அணியை முஸ்லிம் சமூகம் இதுவரை உருவாக்கவில்லை.
தாம் ஆதரவளிக்கின்ற, ஆதரவளிக்கும் சாத்தியமுள்ள பெரும்பான்மைக் கட்சியுடன் மட்டும், ‘உப்புக்குச் சப்பாக’ முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசுகின்ற அரசியல் வித்தகர்களையே, நிகழ்கால முஸ்லிம் அரசியல் உருவாக்கியிருக்கின்றது.
இது முஸ்லிம்களின் அரசியல் செயற்பாட்டெல்லையை மட்டுப்படுத்தி, முள் வேலியிட்டுள்ளதைப் போலவே தோன்றுகின்றது.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறும் அணியின் பங்காளராக, முஸ்லிம் கட்சிகள் இருப்பது சாத்திமற்றது. என்றாலும் கூட, பத்தியின் மேற்பகுதியில் குறிப்பிட்டதைப் போல, பிரதான முஸ்லிம் கட்சிகள், அணிகள் எல்லாப் பெருந்தேசியக் கட்சிகளுடனும் உறவுடனும், சமூகத்துக்காகப் பேரம் பேசும் தைரியத்தோடும் தனிப்போக்குடனும் இயங்க வேண்டும்.
ஒரு பெரும்பான்மைக் கட்சியுடனான உறவு, எந்தத் தருணத்திலும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியமற்றதாகும்.
சுருங்கக் கூறின், எந்தவொரு முஸ்லிம் கட்சியும் தம்முடன்தான் இருக்கும், ‘நம்மை விட்டால் அவர்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை’ என்ற மனோநிலையை ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, சுதந்திரக் கட்சிக்கோ, பொதுஜன பெரமுனவுக்கோ, சஜித் பிரேமதாஸ போன்றவர்களுக்கோ, ஏற்படுத்திவிடக் கூடாது.
மாறாக, ‘நாம் ஏதாவது தவறாக நடந்து கொண்டால், அவர்கள், தமது ஆதரவை விலக்கிக் கொண்டு, மறுதரப்புக்கு ஆதரவளித்து விடுவார்களோ’ என்ற பயத்தை உருவாக்கி வைத்திருக்க வேண்டும்; இதுதான் அரசியல்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உட்பட, 99 சதவீதமான முஸ்லிம் கட்சிகள், ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மைக் கட்சிக்கு மட்டும் முட்டுக் கொடுக்கின்ற வேலையைச் செய்கின்றன.
அக்காலத்தில், மறுதரப்புடனான எந்தத் தொடர்பையும் பேணுவதில்லை. இன்னுமொரு தேர்தலின் பின், ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’ என்று முடிவெடுக்கும் வரை, இந்தப் போக்குத் தொடர்கின்றது.
இவ்வாறு, மாற்றுத் தெரிவுகளற்ற ஓர் ஒற்றையடிப் பாதையில், பயணிக்கின்ற ஒரு சமூகத்தின் நிலை, எப்படியிருக்கும் என்பதைத்தான், இலங்கை முஸ்லிம்கள் இன்று அனுபவத்தில் காண்கின்றார்கள் எனலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெற்ற பெருந்தேசியக் கட்சி சார்ந்த ஆட்சியாளர்கள், முஸ்லிம் சமூகம், பெரும்பான்மையாக வாக்களிக்கவில்லை என்று ‘குத்திக்காட்டும்’ பாணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
‘மொட்டு’க்கு விழுந்த சில இலட்சம் முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தவர்களால் கூட, முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளைப் பொதுப்படையாக எடுத்துரைக்க முடியாத சிக்கல் காணப்படுகின்றது. இந்த நிலைமை, இப்படியே இருக்க வேண்டுமெனச் சில முஸ்லிம் விரோத சக்திகள், சூடம் காட்டுகின்றன.
மறுபக்கத்தில், வெற்றிபெறாத தரப்புக்கு இலட்சக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த முஸ்லிம் தலைமைகள், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வந்த மாதிரித் தெரியவில்லை.
அதேபோன்று, ‘இவ்வளவு வாக்குகளையும் நாம்தான் பெற்றுக் கொடுத்தோம்; நமக்கு நல்லது செய்தால், அதை உங்களுக்கு பெற்றுத் தரவும் தயங்கமாட்டோம்’ என்ற கோதாவில், ஆளும் தரப்புடன் பேசுவதற்கு, இந்த முஸ்லிம் தலைமைகள் முன்வந்தாற்போல் அறிய முடியவும் இல்லை.
இதேவேளை, அவ்வாறு இலட்சக்கணக்கான முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சஜித் பிரேமதாஸவும், ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம்கள் விடயத்தில், அவர்களுக்கு இருக்கின்ற தார்மிகப் பொறுப்பை உணர்ந்து, செயற்படுகின்றார்களா என்பது சந்தேகமாக இருக்கின்றது.
ரணிலால் நியமிக்கப்பட்ட சஜித்தை ஆதரித்தமையாலேயே, மொட்டுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, முஸ்லிம்கள் ஆளாக நேரிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடுகளுக்கு, முஸ்லிம்கள் எதிரானவர்கள் போன்று சித்திரிக்கப்படுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
எனவே, இதற்கு வகைசொல்ல வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் ரணில், சஜித் மற்றுமுள்ள ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு இருக்கின்றது. அப்படிச் செய்கின்றவர்கள்தாம், அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கேட்டு வர முடியும். ஆனால், முஸ்லிம்கள் விடயத்தில் சஜித்தோ, ரணிலோ முன்னிற்பதாக அறிந்தவர் யாருமுண்டோ?
முஸ்லிம் அரசியலுக்கு இது வழக்கமான பாணிதான். ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு பெரும்பான்மைக் கட்சியை ஆதரிப்பதும், இன்னுமொரு தரப்புடன் தீண்டாமை பேணுவதும், பழக்க தோசம்தான். இதைக் கடந்த காலங்களிலும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
சந்திரிகா அம்மையார் ஆட்சியில், முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திரக் கட்சியை முழுமையாக ஆதரித்ததுடன், ஐ.தே.கட்சியுடன் 1990இல் இருந்த உறவு தொடரவில்லை. 2000ஆம் ஆண்டும் சந்திரிகாவுக்கு ஆதரவு தொடர்ந்தது. இடையில், ஐ.தே.க தலைவர் ரணில் பிரதமரானபோது, அவரோடு முஸ்லிம் அரசியல்வாதிகள் உறவில் இருந்தனர்.
ஆனால், 2005 தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஆதரவளித்தன. 2010இலும் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட அநேக முஸ்லிம் அரசியல் அணிகள், மஹிந்தவுக்கே துணைநின்றன.
2015இல் மஹிந்தவுடன் உறவைத் துண்டித்துக் கொண்டு, ரணில் – மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர, முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகள் முன்னின்றன.
2015 இனைப் போன்று, 52 நாள் நெருக்கடியிலும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு அதிகாரம் கிடைப்பதற்காக, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் உழைத்தது.
2019 ஜனாதிபதித் தேர்தலிலும் இந்நிலையே தொடர்ந்தது. இக்காலப் பகுதியில் இரு தரப்பில் இருந்த முஸ்லிம் கட்சிகளும் மறுபக்கத்தில் உள்ள பெருந்தேசியக் கட்சிகளுடன் பகைமை கொண்டாடியதன் மூலம், தமக்கு ஒரு மாற்றுத் தெரிவு இல்லை என்பது போன்ற, தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விட்டன எனலாம்.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சிக்கு, நாடாளுமன்ற உறுப்புரிமை இப்போதைக்கு இல்லை என்றாலும், முஸ்லிம் அரசியலில் அக்கட்சிக்கு ஒரு வகிபாகம் இருக்கின்றது. ஆனால், ‘ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்வதில்லை’ என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்ததன் மூலம், மொட்டுத் தரப்புக்கு ஓர் உயரிய விசுவாசியாக அதாவுல்லாஹ் தெரிந்தாலும், மறுபுறத்தில் ‘இவர் ஐ.தே.க பக்கம் போகமாட்டார்’ என்ற ஒரு முடிவுக்கு ராஜபக்ஷக்கள் வந்திருக்க நிறையவே வாய்ப்பிருந்தது.
அதுபோன்ற போக்கையே, மொத்தமாக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்வசம் வைத்துள்ள இரு கட்சிகளான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சியும் கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது.
ரிஷாட்டையும் ஹக்கீமையும் இணைப்பதில்லை என்ற தொனியிலான, அரசியலைப் பொறுத்தமட்டில், நிரந்தரமில்லாத ஓர் அறிவிப்பு, கெடுபிடிகள் என்பனவும் இந்தப் போக்கை மேலும் தீவிரப்படுத்தி இருக்கலாம் என அனுமானிக்க முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் என்ற ஒற்றையடிப் பாதையில் பயணித்த ஹக்கீம், ரிஷாட் போன்றோர், இப்போது சஜித் பிரேமதாஸவுக்குப் பின்னால் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இலங்கை அரசியலில், மிகவும் சாதுரியமாகக் காய்களை நகர்த்தும் அரசியல்வாதியான ரணிலைப் பகைத்துக் கொண்டு, ஆளும் தரப்பின் ஆசிர்வாதமும் இன்றி, சஜித்துக்குப் பின்னால் போவது பற்றி, ஒன்றுக்கு நூறுமுறை ஹக்கீமும் ரிஷாட்டும் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆகவே, இவ்விரு முஸ்லிம் தலைவர்களும் மொட்டுக் கட்சி, தமது மாற்றுத் தெரிவாக இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தியிராத சூழலில், அவர்கள் ஐ.தே.கட்சியை விட்டு வரமாட்டார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையிலும், இருவருக்கும் ஒரு பாடம்படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலுமே, “நாங்கள் அவர்களைச் சேர்க்க மாட்டோம்” என்ற அறிவிப்பை, ஆளுந்தரப்பு வெளியிட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.
தமிழ்க் கட்சி ஒன்று தொடர்பில், இவ்வாறான ஓர் அறிவிப்பை ஆட்சியாளர்கள் வெளியிடவில்லை. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் அணிகள், ராஜபக்ஷக்கள் ஒரு மாற்றுத் தெரிவு இல்லை என்பது போல, பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளவில்லை. மக்களுக்காக யாருடனும் பேசத் தயார் என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் பாணியை எந்தவொரு முஸ்லிம் கட்சியும் கடைப்பிடிக்காத காரணத்தால், இப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
முஸ்லிம் கட்சிகளால், தனித்துவ அடையாளத்தோடு நின்று அரசியல் செய்வது சாத்திமற்றுப் போய்விட்டது. தனித்துநின்று (பதவிகள் இல்லாமல்) செயற்படுவதன் ஊடாக, மக்களது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் உத்தியை, முஸ்லிம் தலைமைகள் கற்றுக் கொள்ளவில்லை. ஆக, இணக்க அரசியல் ஊடாக, பேரம்பேசல் என்ற பேய்க்காட்டல்களோடே காலத்தைக் கடத்த வேண்டியிருக்கின்றது.
இச்சூழலில், ஏதாவது ஒரு பெருந்தேசியக் கட்சியுடன் சேர்ந்தே, முஸ்லிம் கட்சிகள் பயணிக்கப் போகின்றன என்றால், இந்தச் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்பக் கூடிய எந்தத் தரப்பினருடனும், நாம் கைகோர்த்து நடக்க, ஆயத்தமாக இருக்கின்றோம் என்பதை, அவர்கள் புரியும் விதத்தில் வெளிப்படுத்த வேண்டும். எல்லாக் காலத்திலும் எல்லா முஸ்லிம் கட்சிகளுக்கும் ஒரு மாற்றுத் தெரிவு இருக்க வேண்டும். ‘இந்தக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கும். ‘இந்தக் கட்சிகள் ஐ.தே.கவுக்கு பின்னாலேயே போகும்’, ‘இவர் சுதந்திரக் கட்சியை விட்டு வரமாட்டார்’ என்ற நிலைப்பாடுகளைப் பெருந்தேசிய கட்சித் தலைமைகளை எடுக்கும் விதத்தில், நமது அரசியலை அமைத்துக் கொள்ளக் கூடாது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நலனுக்காக, அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக, முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் எந்தப் பெருந்தேசியக் கட்சியுடனும் பேசுவதற்கு, இணக்க அரசியலுக்கான சாத்தியவளத்தை ஆராய்வதற்கு சித்தமாக இருக்க வேண்டும்.
ஒரு பாதை மூடப்பட்டால், இன்னுமொரு பக்கம் திரும்பிச் செல்ல வேண்டுமென்று நினைப்போமென்றால், முஸ்லிம்களின் அரசியல் ஒற்றையடிப் பாதையில் பயணப்படக் கூடாது.
இரும்பு கரங்களும் சப்பாத்து கால்களும்
தென்னாசியப் பிராந்தியத்தில், சிறுபான்மைச் சமூகங்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்ற ஒரு போக்கைக் கடந்த பல வருடங்களாக அவதானிக்க முடிகின்றது.
முன்னொரு காலத்தில் விளிம்புநிலை, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு நேர்ந்த கதி, இப்போது இந்தியா, மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில், முஸ்லிம்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது.
‘இஸ்லாபோபியா’ என்பதற்கு மேலதிகமாக, இப்பிராந்தியத்தில் பல்வேறுபட்ட இனவாத, மதவாத அமைப்புகள் திரைமறைவில் கைகோர்த்துச் செயற்படுவதாக, அவதானிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தியா, மியன்மார், இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும், முஸ்லிம்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, இனத்துவ, மதவாத ஒடுக்குமுறைகளின் பின்னால், ஓர் இடைத்தொடர்புள்ள நிகழ்ச்சி நிரல் இருப்பதாக, அபிப்பிராயப்படுவோரும் உள்ளனர்.
பொதுவாக, எந்தவோர் இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவினர் மீதும், இனவாத அமைப்புகள், குண்டர்கள் மேற்கொள்கின்ற தாக்குதல்கள், வன்முறைகளை விடச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் மேற்கொள்ளும் தாக்குதல்கள், பாரபட்சங்கள், அத்துமீறல்கள் பாரதூரமானவையாகவும் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குபவையாகவும் இருக்கும்.
இலங்கையில், இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புத் தரப்பினர் பார்த்துக் கொண்டிருக்க, சிறுபான்மை முஸ்லிம்களின் சொத்துகள் அழிக்கப்பட்ட சம்பவங்களும் சட்டமும் ஒழுங்கும் மெத்தனமாகச் செயற்பட்ட போது, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமன்றி, அரசாங்கங்களுக்கு எதிராக, நீதி கேட்டுப் போராடிய மக்கள், தாக்கப்பட்ட சம்பவங்களும் ரதுபஸ்வல போன்ற இடங்களில் பதிவாகியுள்ளன. அதுமட்டுமன்றி, ஆர்ப்பாட்டங்கள் மிகக் கடுமையான முறையில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதையும் கண்டிருக்கின்றோம்.
இந்தச் சந்தர்ப்பங்களில், நமது அயல்நாடான இந்தியா நமக்குப் பெரிய முன்னுதாரணமாக இருந்தது. இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் மிகப் பெரிய ஜனநாயக நாடென்ற பெருமையைக் கொண்டாடும் இந்தியாவில், அண்மைக் காலமாக நடைபெற்று வருகின்ற முஸ்லிம்களுக்கு எதிரானதும் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான சம்பவங்கள், சந்தோசப்படக் கூடியவையல்ல.
இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ‘ஹிஜாப்’ அணிந்து போராடிய மாணவர்களைப் பொலிஸார் இரும்புக் கர
இவை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். முஸ்லிம்கள் மட்டுமல்ல, எந்தச் சிறுபான்மையினமோ, பெரும்பான்மையினமோ தார்மிக அடிப்படையில் போராடுகின்ற போது, சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் சட்டப்படி நடக்க வேண்டும். அவ்வாறில்லாமல், சண்டித்தனமாக மக்களைக் கட்டுப்படுத்தக் கூடாது; அது மனித குலத்துக்கு விரோதமானதும் கூட.
Average Rating