கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள்!! (கட்டுரை)
சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு.
போராட்ட இயக்கங்கள், சமாதானத்தின் பெயரால், தொடர்ச்சியாகச் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. இந்த அனுபவங்கள், ஆயுதங்களைக் கைவிடுவதன் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
இன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கொலம்பிய அரசாங்கத்துக்கும் ‘பார்க்’ போராளிகளுக்கும் இடையில், சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது.
கடந்தவாரம், ‘பார்க்’ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ரொட்ரிக்கோ லொன்டோனோ, “சமாதான உடன்படிக்கை, மிகவும் மெதுவாகவே நகர்கின்றது. அரசாங்கம் திட்டமிட்டு, எமக்கெதிரான வன்முறையைக் கையிலெடுத்துள்ளது. எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நாம், எமது போராட்டத்தைப் புதிய வடிவில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு ஆயுதங்களும் தவிர்க்கவியலாத கருவிகளாகலாம்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கூற்று, மிகுந்த கவனத்துடன் நோக்கப்பட வேண்டியதொன்றாகும்.
‘பார்க்’ தலைவரின் கூற்று, போராட்ட இயக்கங்கள், சமாதானத்தை எட்டுவதில் ஏற்படும் சிக்கல்களை, எடுத்துக் காட்டுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், சமாதான உடன்படிக்கையை எட்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி யுவான் மனுவல் சான்தோஸுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால், அப்பரிசு, இந்த உடன்படிக்கையை எட்டிய ‘பார்க்’ அமைப்பின் பிரதிநிதிக்கு வழங்கப்படவில்லை. இது, ஒரு வலுவான செய்தியைச் சொல்கிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில், சமாதானப் பேச்சுகள் வெற்றிபெறும் போதெல்லாம், குறித்த நாட்டின் அரசாங்கத்தின் பங்கே மெச்சப்படுகிறது.
குறிப்பாக, 9/11 க்குப் பிந்தைய உலக ஒழுங்கில், போராடும் அமைப்புகள் அனைத்தும், பேச்சு மேசைக்கு வரவேண்டும்; அல்லது, பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படும் என்ற தொனி, வலுவாக ஒலித்தது. இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலப்பகுதியிலும், பேச்சுக்குத் திரும்பாது, தொடர்ந்தும் போராடிய அமைப்பு ‘பார்க்’ இயக்கம் ஆகும்.
கடந்த மூன்று வாரங்களில், கொலம்பிய ஜனாதிபதி இவான் டோக்டோவின் வலதுசாரி நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் வீதியில் இறங்கிப் போராடியுள்ளார்கள். சமூக நல வெட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல போராட்டங்கள் கொலம்பியாவின் தலைநகர் கொகோட்டாவில் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டங்கள் ஒருபுறம், இலத்தீன் அமெரிக்கா எங்கும் விரியும், வலதுசாரி அரசுகளுக்கு எதிரான போராட்டங்களின் பகுதியாகின்றன. மறுபுறம், சமாதான உடன்படிக்கையை ஏற்க மறுக்கும் ஜனாதிபதிக்கு பதிலாகவும் அமைகின்றன.
எட்டப்பட்ட உடன்படிக்கையும் எட்டப்படாத சமாதானமும்
கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையினர் எனப்படும் ‘பார்க் அமைப்பு’, 1964ஆம் ஆண்டு, கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியது. 1959இல், கியூபாவில் பிடல் காஸ்ரோ நிகழ்த்திக் காட்டிய புரட்சி, இலத்தீன் அமெரிக்கா எங்கும் உற்சாகத்தைக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து, இலத்தீன் அமெரிக்கா எங்கும் புரட்சிகர அமைப்புகள் வேகங்கொண்டதோடு, சில நாடுகளில் ஆட்சியையும் பிடித்தன. ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வந்த அமைப்பு என்ற பெருமை, ‘பார்க்’கைச் சாரும்.
கியூபப் புரட்சியின் வழித்தடத்தில், தோற்றம்பெற்ற இடதுசாரிப் புரட்சிகர இயக்கங்கள், காலப்போக்கில் உருமாற்றமடைய ‘பார்க்’ மட்டும், தனது கெரில்லாப் போர்முறையில் தொடர்ச்சியாகப் போராடி வந்திருக்கிறது. கொலம்பியாவின் ஒதுக்கப்பட்ட மக்களினதும் பழங்குடியினரினதும் ஆதரவைப் பெற்ற அமைப்பாக, ‘பார்க்’ திகழ்ந்தமை, அவர்களது இருப்புக்கும் நிலைப்புக்கும் பிரதான காரணமாகும்.
அமெரிக்கச் சார்பு அரசாங்கங்களே, தொடர்ச்சியாகக் கொலம்பியாவில் பதவிக்கு வந்த நிலையில், இவ்வளவு காலமும் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தனியான ஒரு திறமையும் கட்டமைப்பும் ஒழுங்கும் அவசியமாகும்.
அரை நூற்றாண்டுக்கு மேல், ஒரு வினைத்திறன் மிக்க போராட்ட அமைப்பாக, இவ்வமைப்பு திகழ்ந்தமைக்கு, கொலம்பியாவின் சமூக பொருளாதார காரணிகளும் மிகப் பிரதானமானவை ஆகும்; அவற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது.
‘பார்க்’ அமைப்பை அழிக்க, கொலம்பிய அரசாங்கம் அமெரிக்க உதவியை நாடியது. இதன் பின்னணியில், அமெரிக்கா முன்னெடுத்த ‘போதைப்பொருளுக்கான போர்’ என்ற போர்வையில், ‘பார்க்’ போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள், குண்டு வீசி அழிக்கப்பட்டன.
ஆனாலும், இவை அனைத்தையும் அவ்வமைப்பு கடந்து வந்தது. 2012ஆம் ஆண்டு, கொலம்பிய அரசாங்கத்துக்கும் ‘பார்க்’ போராளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், கியூபத் தலைநகர் ஹவானாவில் தொடங்கின. நான்கு ஆண்டுகள் இழுபட்ட இப்பேச்சுவார்த்தைகளின் முடிவில், பல விட்டுக்கொடுத்தல்களோடு, உடன்படிக்கைக்கு ‘பார்க்’ அமைப்பு உடன்பட்டது.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி, சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதைச் சட்டபூர்வமாக்குவதற்கு, ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில், 50.2 சதவீதமானவர்கள், இவ்வுடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.
குறிப்பாக, பெருநகரங்களில் வாழ்பவர்கள் உடன்படிக்கைக்கு எதிராகவும், கிராமங்களில் வாழ்பவர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள், சமாதான உடன்படிக்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கின. இதைத்தொடர்ந்து, மீளவரையப்பட்ட உடன்படிக்கையில், பல அம்சங்கள் உடன்படாமல் விடப்பட்டன.
புதிய உடன்படிக்கை, நவம்பர் மாதம் 24ஆம் திகதி கைச்சாத்தாகியது. இன்னொரு மக்கள் வாக்கெடுப்புக்கு அனுப்ப விரும்பாத கொலம்பிய ஜனாதிபதி சான்தோஸ், நாடாளுமன்றின் ஒப்புதலுக்கு அனுப்பினார். நாடாளுமன்ற ஒப்புதலுடன், இவ்வுடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
நடைமுறைக்கு வந்த சில காலத்தில், ஜனாதிபதி சான்தோஸின் பதவிக்காலம் முடிந்து, புதியவர் ஜனாதிபதியானார். அவர், ‘பார்க்’ அமைப்பின் மீது, கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இதனால், உடன்படிக்கையில் உள்ள விடயங்கள், நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாண்டின் நடுப்பகுதியில், ‘பார்க்’ போராளிகள், அரசாங்கத்திடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் மீண்டும், ஆயுதம் தூக்குவார்களேயாயின் துடைத்தழிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சமாதான உடன்படிக்கை, பேச்சளவிலேயே இன்று உள்ளது.
சமாதானத்தின் விலை
கடந்த மூன்றாண்டுகளில், ‘பார்க்’ அமைப்பும் அது காத்து வந்த மக்களும், சமாதானத்துக்கு உடன்பட்டதற்கான பெரிய விலையைக் கொடுத்துள்ளார். ‘பார்க்’ அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளில், 44 சதவீதமானவை கடந்த மூன்றாண்டுகளில் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், பழங்குடியினரின் வாழ்வாதாரமும் இயல்பு வாழ்க்கையும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ‘பார்க்’ கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளை, இப்போது பல்தேசியக் கம்பெனிகள் ஆக்கிரமித்துள்ளன. அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. அவ்விடங்கள் பாரிய விவசாய நிலங்களாகின்றன.
கடந்த மூன்றாண்டு காலத்தில், நூற்றுக்கணக்கான ‘பார்க்’ போராளிகள் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். போராளிகள் ஆயுதங்களைக் களைந்து, சாதாரண பொதுமக்களாக மாறிய நிலையில், இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை இரண்டும், சமாதானம் குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றன.
சமாதானம் என்பது, எல்லோராலும் விரும்பப்படுகிறது. ஆனால், அது எட்டப்பட்டதன் பின்னர், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கவனம் கொள்ளப்படுவதில்லை.
போராட்ட அமைப்பு, ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சின் ஊடாகச் சமாதானத்தை எட்டுவது, இலகுவான காரியமல்ல; அந்தச் சமாதானத்தை எட்டுவதற்கு, சமாதானம் மீதான விருப்பமும் அதை நடைமுறைப் படுத்துவதற்கான அமைப்பு ரீதியான ஒழுங்கும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்புக்கு அவசியம்.
சமாதானத்துக்கு உடன்படுவது குறித்த மிகப்பெரிய சவால்களை, விடுதலைப் போராட்ட அமைப்புகளே எதிர்கொள்கின்றன. இந்தச் சவால்களை நன்கறிந்த நிலையிலேயே, விடுதலைப் போராட்ட அமைப்புகள், பேச்சு மேசைக்கு வருகிறார்கள்; சமாதானத்துக்கு உடன்படுகிறார்கள்.
எல்லாவற்றிலும் மேலாக, விடுதலைப் போராட்ட அமைப்புகள், சமாதானத்தை எட்டும் நோக்கில், ஆயுதங்களைக் கைவிடத் தயாராகிறார்கள்.
இது, ஆயுதம் ஏந்திப் போராடும் எந்த ஒரு விடுதலை அமைப்புக்கும் சவாலானதாகும். இந்த முடிவை எட்டுவது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.
ஆனால், இந்தச் சவாலையும் ஏற்றே, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு, சமாதான உடன்படிக்கையை எட்டுகிறது என்றால், சமாதானத்தின் மீதான, அதன் விருப்பமும் அதன் கடப்பாடும் மெச்சத்தக்கவையாகும்.
ஆனால், கடந்த சில தசாப்தங்களாக உலகம், விடுதலை அமைப்புகளின் சமாதானத்துக்கான விருப்பமும் அதற்காக அவர்களின் இடையறாததும் தளராததுமான பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடப்பட்டே வந்திருக்கிறது. இதன் இன்னோர் அத்தியாயம், இப்போது கொலம்பியாவில் அரங்கேறுகிறது.
ஆயுதங்களைக் கைவிட்டு, பேச்சு மேசைக்கு வருவதன் ஆபத்துகளை, ‘பார்க்’கின் அனுபவம் தெளிவுபடுத்துகிறது. தமது போராட்டத்தை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு, ‘பார்க்’ அமைப்புத் தயாராக இருக்க வேண்டும்.
உடன்படிக்கை எட்டப்பட்ட சில ஆண்டுகளிலேயே, புதிய வழிகளிலான போராட்டத்தின் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருப்பது நல்ல அறிகுறி.
இந்தக் கொலம்பிய அனுபவமும் சமாதானத்தை விரும்புபவர்கள் யார் என்ற வினாவை, மீண்டும் எழுப்பிச் செல்கிறது.
Average Rating