தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 35 Second

‘நான் கிராமத்தில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். மதுரை வைகை கையோரமாக இருக்கும் கீழமாத்தூர் என்ற கிராமம் தான் என்னோட ஊர். அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அந்த காலத்தில் பெரிய அளவில் வசதி எல்லாம் கிடையாது. கேஸ் அடுப்பு கூட கிடையாது.மண் அடுப்பு அதில் விறகு கொண்டு தான் சமைப்பாங்க. இரண்டு அடுப்பு. ஒன்று பெரியது மற்றது சிறியது. சின்ன அடுப்பில் தாளித்தம் மற்றும் உணவை சூடு செய்வது செய்வாங்க. பெரிய அடுப்பில் தான் சமையலே நடக்கும்’’ என்று பேசத் துவங்கினார் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.

‘‘அந்த காலத்தில் வீட்டில் பெரிய அளவில் சாப்பாடு எல்லாம் செய்ய மாட்டாங்க. ரொம்ப சிம்பிளான சாதாரண உணவு தான் இருக்கும். பெரும்பாலும் காலை நேர உணவு என்றால் பழைய சாதம், ஊறுகாய், மாவடு, அடை மாங்காய்தான் இருக்கும். அந்த மாங்காயையும் அப்போ அப்போ வெயிலில் குலுக்கி குலுக்கி காய வைப்பாங்க.

கெட்டும் போகாது, நீண்ட நாள் வரை வரும். எங்க கிராமத்தில் ஒரு சின்ன ஓட்டல் இருக்கும். அங்கு காலை நேரத்தில் வடை போடுவாங்க. அதற்கு சட்னி தருவாங்க. அப்பா காலையில் வாங்கி வருவார். பழைய சாதத்துக்கு வடையை சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது ரொம்ப நல்லா இருக்கும். அந்த சட்னி வடை இரண்டுமே அவ்வளவு சுவையா இருக்கும்.

அந்த ஓட்டல் உரிமையாளர் வடை மற்றும் சட்னியை உரலில் தான் ஆட்டுவார். இன்று வரை நான் வேற எங்கேயும் அந்த சுவையை சாப்பிட்டது இல்லை.எங்க வீட்டில் கூட தாழ்வாரத்தில் அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் இருக்கும். நாங்க மொத்தம் நான்கு பேர். நான் தான் வீட்டில மூத்தவன். அதனால அம்மாக்கு சட்னி நான் தான் அரைச்சு தருவேன்.

சட்னிக்கு அம்மா எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு அரைக்க மாட்டாங்க. முதல்ல பச்சை மிளகாய் அப்புறம் இஞ்சி துண்டு போட்டு அரைக்கணும். பிறகு தேங்காய் கடைசியில் உப்பும் ெபாரிக்கடலையும் சேர்த்து அரைக்க சொல்வாங்க. அந்த சட்னி அவ்வளவு சுவையா இருக்கும். இட்லி, தோசை எல்லாம் விடுமுறை அல்லது பண்டிகை நாளில்தான் செய்வாங்க. மற்ற நாட்களில் பழைய சாதம்தான் இருக்கும்.

காலையில் பழையது சாப்பிட்டு பள்ளிக்கு போயிடுவோம். சில சமயம் அப்பா எங்களுக்கு பக்கத்து ஓட்டலில் இருந்து காலை பூரி கிழங்கு வாங்கித் தருவார். அது எங்களுக்கு என்னவோ 5 நட்சத்திர ஓட்டல் உணவு சாப்பிட்டது போல் இருக்கும். அந்த ஒரு நாளுக்காக நாங்க நால்வரும் காத்து இருப்போம். நான் படிச்ச பள்ளிக்கூடம் கிராமத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

ஏழு மணிக்கெல்லாம் பஸ் வந்திடும். அதில் ஏறினா தான் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு போக முடியும். அந்த நேரத்தில் குழம்பு காய் எல்லாம் செய்ய முடியாது. அம்மா பெரும்பாலும் கலந்த சாதம் தான் கொடுப்பாங்க. ஒரு நாள் புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம்னு செய்து தருவாங்க. கிராமம் என்பதால் எல்லாருடைய வீட்டிலும் கோழி, ஆடு, மாடு எல்லாம் இருக்கும். முட்டை நாங்க கடையில் வாங்கினது கிடையாது. மதிய சாப்பாட்டுக்கு தினமும் ஒரு முட்டையை அவிச்சு வச்சிடுவாங்க.

அல்லது கரண்டி ஆம்லெட் மாதிரி போட்டு தருவாங்க. அந்த காலத்தில் தாளிப்பதற்குன்னு ஒரு கரண்டி இருக்கும். நீளமான கைப்பிடிக் கொண்டு குழியா இருக்கும். அதில் கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து முட்டையை செய்து தருவாங்க’’ என்றவர் தங்கள் வீட்டு அருகில் உள்ள கோயில் பிரசாதம் பற்றி குறிப்பிட்டார்.

‘‘எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஈஸ்வரன் கோயில் இருக்கு. அதில் நீலகண்டன் என்பவர் தான் பூசாரியா இருந்தார். அவர் வீட்டை விட்டு வந்து இங்கு துறவியா மாறிட்டார். ேகாயிலில் தினமும் சாமிக்கு பொங்கல் படைத்து நெய்வேத்தியம் செய்வாங்க. எங்களுக்காக தனியா எடுத்து வைத்து தருவார். அந்த பிரசாதத்தை சாப்பிட குழந்தைகள் எல்லாம் கைநீட்டி நிப்பாங்க. அப்பா திட்டுவார்ன்னு நாங்க போக மாட்டோம். அதனால எங்களுக்காக இவர் தனியா கொண்டு வந்து தருவார். ஒரு பெரிய ஸ்பூன் அளவுதான் கிடைக்கும். அவ்வளவு சுவையா இருக்கும்.

வீட்டில் பெரும்பாலும் உணவு எல்லாம் எங்க வீட்டில் விளைவித்த காய்கறிகள் கொண்டு தான் செய்வாங்க. வீட்டை சுற்றி தோட்டம் போட்டு இருப்பாங்க. அவரை, புடலை, கத்தரிக்காய், பாகற்காய், கீரைன்னு அந்தந்த சீசனுக்கு ஏற்ப காய்கறிகளை பயிர் செய்வாங்க. அதைக் கொண்டு தான் அம்மா சமைப்பாங்க. சாப்பாடும் ரொம்ப சிம்பிளா தான் இருக்கும். ஒரு குழம்பு ஒரு கூட்டு அல்லது பொரியல்.

இரவு ேநரமும் சாப்பாடு தான். நான் எல்லா காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவேன். அதில் கீரை உணவுகள் ரொம்பவே பிடிக்கும். குறிப்பா முருங்கைகீரை அப்புறம் குப்பைக் கீரையில் அம்மா பொரியல் செய்வாங்க. குப்பையில் தான் அந்த கீரை வளரும். மண்சட்டியில் வெங்காயத்தை வதக்கி அதில் அந்த கீரை, தேங்காய்ப்பூ போட்டு செய்து தருவாங்க. இப்ப நினைச்சாலுமே எனக்கு எச்சில் ஊறுது. அதே போல எங்க பாட்டி செய்யும் தக்காளி சட்னி ெராம்ப பிடிக்கும். அவங்க பெயர் மங்களமணி. எப்போவாவது எங்க வீட்டுக்கு வருவாங்க.

அவங்க வந்தாங்கன்னா தக்காளி சட்னி செய்து தரச் சொல்வோம். சுடச்சுட இட்லிக்கு அந்த தக்காளி சட்னி வச்சு சாப்பிட்டா தேவா
மிருதமா இருக்கும். பொதுவா ஆப்பம் தேங்காய்ப்பால் தான் சாப்பிடுவாங்க. ஆனா அம்மா ஆப்ப மாவில் கருப்பட்டி சேர்த்து செய்வாங்க. அதையே புளிக்கவச்சு பணியாரம் செய்வாங்க. இதுக்கு காய்ந்த மிளகாய் கொண்டு தேங்காய் சட்னி நல்லா இருக்கும். சட்னி கொஞ்சம் காரமா இருக்கணும். அப்பதான் அந்த இனிப்புக்கு காரமா சாப்பிடும் போது அது வேறு ஒரு சுவை தரும்.

எங்க கிராமத்தில் பெரிய அளவில் ஓட்டல் எல்லாம் கிடையாது. நான் முன்பு சொன்ன அந்த சின்ன ஓட்டல் தான். காலையில் அங்க இட்லி, பூரி, தோசை… மதியம் பொங்கல், தயிர்சாதம், மாலை நேரம் காபி லட்டு, மிக்சர், பொறி உருண்டை, முறுக்கு தான் கிடைக்கும். அதைத் தாண்டி வேறு எந்த உணவும் இருக்காது. அதையே நாங்க அவ்வளவு விரும்பி சாப்பிடுவோம்.

அப்பா சில சமயம் மதுரை டவுனுக்கு போனா எங்களுக்கு பிரியாணி வாங்கி வருவார். அம்மா டீச்சர் என்பதால் பள்ளி நாட்களில் சிம்பிளா தான் செய்வார். விடுமுறை நாளில் சில சமயம் அவங்க வைக்கும் விறால் மீன் குழம்பு மற்றும் மட்டன் கோலா உருண்டைக்கு நான் அடிமை. கோலா உருண்டையை அம்மா வித்தியாசமா செய்வாங்க. முட்டையை தனியா வேகவச்சு நாலு துண்டா வெட்டுவாங்க. அதன் பிறகு கோலா உருண்டைக்குள் ஒரு துண்டு முட்டையை வச்சு மறுபடியும் வேகவைப்பாங்க. இது சாப்பிடவே நாங்க வரிசைக்கட்டி கிச்சன்ல உட்கார்ந்திடுவோம்’’ என்றவர் தன் பயண அனுபவம் பற்றி குறிப்பிட்டார்.

‘‘எனக்கு தயிர் சாதம்னா ரொம்ப பிடிக்கும். அது இருந்தா போதும் உலகத்தையே சுற்றி வந்திடுவேன். தயிர் சாதம் ஜில்லுன்னு தான் சாப்பிடுவாங்க. எனக்கு சூடா இருந்தா பிடிக்கும். ஒரு முறை தாய்லாந்து போய் இருந்தேன். அங்கு லாப்ஸ்டர் பெரிய வகை இறாலை சமைச்சு வச்சிருந்தாங்க. அப்புறம் நத்தை மாதிரி ஒரு உணவு. பார்க்கும் போது சாப்பிடலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா என்னவோ எனக்கு அந்த உணவுகள் சாப்பிட பிடிக்கல. துபாய் போன போது அங்கு பல வகையான கபாப் வச்சு இருந்தாங்க.

இலங்கையில் புட்டு, இடியாப்பம்ன்னு சுவைத்து இருக்கேன். ஒரு முறை ஜப்பான் போன போது சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். அங்கு டோக்கியோவில் பச்சை மீனை அப்படியே பதப்படுத்தி வச்சிருந்தாங்க. நான் அசைவ உணவை சாப்பிட்டு தான் வளர்ந்தேன். ஆனால் நமக்கு மீனாகவே இருந்தாலும் அதை நல்லா சமைச்சோ அல்லது வறுத்தோ சாப்பிட்டு தான் பழக்கம்.

இப்படி பச்சையா சாப்பிட்டு பழக்கமில்லை. காலை நேர உணவு பிரட்ன்னு சமாளிச்சிடுவோம். மதியம் மற்றும் இரவு நேரம் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அந்த சமயத்தில் பழங்கள் மற்றும் பழச்சாறு சாப்பிட்டு சமாளிச்சிடுவேன்.

இப்பதான் எல்லா நாட்டுலேயும் நம்மூர் சரவண பவன், ஆனந்த பவன், அஞ்சப்பர் எல்லாம் வந்துடுச்சே. அதனால அங்கேயும் நம்மூர் உணவு கிடைக்கும்ன்னு ஒரு தைரியம் இருக்கு. இதுவே 20 வருஷத்துக்கு முன், கிடைக்கும் உணவை சாப்பிட்டு தான் சமாளிப்போம்’’ என்றவர் பஜ்ஜி, வடை கடைப் பார்த்தா அப்படியே வண்டியை நிறுத்திடுவாராம்.

‘‘தயிர்சாதம் பிடிச்சாலும், ஸ்னாக்ஸ் வகையில் பஜ்ஜி குறிப்பா வாழைக்காய் பஜ்ஜி மற்றும் தவளை வடைன்னா ரொம்ப பிடிக்கும். எங்க அந்த கடை பார்த்தாலும் என்னோட வண்டி ஆட்டோமெட்டிக்கா அப்படியே ஸ்தம்பித்து நின்றிடும். இப்பதான் கொஞ்சம் எண்ணை பலகாரம் சாப்பிடுவதை குறைச்சிருக்கேன். ஒவ்ெவாரு ஊருக்கும் ஒரு உணவு ஸ்பெஷல். மதுரை நகரத்தை ஃபுட் ஹப்ன்னு சொல்லலாம். அங்க தெருவோரறக் கடைகளிலுமே சாப்பாடு நல்லா இருக்கும். மதுரையில் சைவம்ன்னா மார்டர்ன் ெரஸ்டாரன்ட்.

80 ஆண்டுகள் பழமையான உணவகம். இட்லி சட்னி சாம்பார் அவ்வளவு சுவையா இருக்கும். அசைவம்ன்னா குமார் மெஸ். அங்கு எனக்கு பிடிச்சது விறால் மீன் மற்றும் ஐரை மீன் குழம்பு, அப்புறம் பிரியாணி. சென்னையை பொறுத்தவரை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சங்கீதா உணவகம். அங்க அடை அவியல், வெந்தய தோசை பிடிக்கும்.

சென்னை வந்தா இங்க சாப்பிடாம வரமாட்டேன். திருநெல்வேலியில் விஞ்சை விலாஸ். அங்க இட்லி ரொம்ப ஃபேமஸ். காபின்னா ஸ்ரீரங்கம் கோயில் வாசலுக்கு அருகே இருக்கும் முரளி கஃபே. செங்கோட்டையில் பார்டர் சிக்கன் கடை, அங்கு பரோட்டா சிக்கன் சால்னா நல்லா இருக்கும். விருதுநகரில் ஒரு வகை பரோட்டா செய்வாங்க. அவங்க பரோட்டாவை வடை மாதிரி எண்ணையில் பொரிச்சு தருவாங்க. திண்டுக்கல்ன்னா வேணு பிரியாணி…. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு வாசம் இருக்கு.

நான் நிகழ்ச்சிக்காக பல வெளிநாடுகளுக்கு சென்று இருக்கேன். அங்குள்ள உணவினை சுவைக்கணும்ன்னு ஆசை தான். ஆனால் என்னவோ இது நாள் வரை அந்த உணவுகளை நான் சாப்பிட்டது கிடையாது. சிங்கப்பூர், மலேசியாவில் சீனா உணவகங்கள் இருக்கும். அங்கு சாப்பிடலாம்ன்னு தான் போவேன். ஆனா என்னவோ ஒரு தயக்கம் ஏற்படும். அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பா சாப்பிடணும்ன்னு நினைக்கிறேன்’’ என்றார் தன் டிரேட் மார்க் சிரிப்புடன் ராஜா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருந்தே…!! (மருத்துவம்)
Next post பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (மருத்துவம்)