நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன?! (மருத்துவம்)
நோயாளிகள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து வைத்திருப்பது போலவே, தங்களின் கடமைகள் பற்றியும் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி நோயாளிகளுக்கு பல உரிமைகள் உள்ளன. இதன்படி மருத்துவ அஜாக்கிரதை, அலட்சியம் என்பதின் கீழ் மருத்துவ சேவை குறைபாடுகள் குறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் அல்லது மாநில மற்றும் தேசியஅளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் புகார் மற்றும் மேல்முறையீடு செய்து உரியநிவாரணம் பெறலாம்.
ஒரு மருத்துவரிடம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு, உடல் மற்றும் மனதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும் நோயாளிகளைத் தாக்கவோ, காயப்படுத்தவோ, இழிவான சொற்களால் புண்படுத்திப் பேசவோ கூடாது.
* மருத்துவமனையில் நோயாளியின் தேவைகளுக்கான தண்ணீர், படுக்கை போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* தகுதியில்லாத, போதுமான பயிற்சியில்லாத மருத்துவர்களால் நோயாளிகள் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, மருத்துவ சாதனங்களை இயக்குபவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்றவர்களை வேலையில் திறமை உள்ளவர்களாகவும், சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவும் நியமிக்க வேண்டும்.
* நோயாளிக்கு தங்கள் நோய், அதற்கான சிகிச்சை, சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து பெறும் உரிமை உண்டு.
* சிகிச்சைக்கு சம்மதிப்பதைப் போல சில சிகிச்சைகளுக்கு மறுப்பு தெரிவிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. மாற்று சிகிச்சை பெறவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறவும் அவர்களுக்கு உரிமை உண்டு. நோயாளிகள் மனநிலை குழம்பி இருந்தால் அவரது நெருங்கிய உறவினரை முடிவு எடுக்கச் சொல்லலாம்.
* எக்ஸ்ரே, வீடியோ, சி.டி., பயாப்சி போன்ற தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் ஆவணங்களை இரண்டாவது மருத்துவக்கருத்து(Second opinion)) கேட்பதற்காக, மருத்துவமனையிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை உண்டு.
* மருத்துவ சேவை பற்றிய குறைகளை சொல்வதற்கான அதிகாரிகள் யார், எங்கே இருப்பார்கள் என்பதை மருத்துவமனை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
நோயாளியின் கடமைகள்
* நோயாளிகள் தங்களது பெயர், பிறந்த தேதி, திருமணம், வேலை, உறவினர்கள் பற்றிய உண்மையான, சரியான தகவலை மருத்துவமனைக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடி நேரங்களில் உறவினர்களை அழைக்க முடியும்.
* நோய் தோன்றிய நாள் முதல் சிகிச்சைக்கு வரும் நாள் வரை அவர்கள் உட்கொண்ட மாத்திரைகள் முதல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக் கொண்ட விவரங்கள் வரை முழு விவரமும் கொடுக்க வேண்டும்.
* எக்ஸ்ரே, இ.சி.ஜி. முடிவுகள் மற்றும் மருந்து சீட்டுகள் போன்ற தங்களுடைய முந்தைய மருத்துவ ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
* மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையிடம் இருந்து தங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும், சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவர்களது பொறுப்பாகும்.
* நவீன கருவிகள் மற்றும் நவீன மருந்துகளால் தற்போதைய மருத்துவ செலவுகள் வானளவு உயர்ந்து நிற்கிறது. மருத்துவமனைகள் அதன் செலவுகளை கட்டுக்குள் வைப்பது மிகவும் கடினமாகிவிட்டதால் நோயாளிகள் ஒழுங்காக பணம் கொடுப்பதையே மருத்துவமனைகள் விரும்புகின்றன.
* சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்து கொள்ள வேண்டியது நோயாளிகளின் கடமை. மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்துவது யார் என்றும், அவரால் செலுத்த முடியாவிட்டால் அவர் சார்பாக பணம் செலுத்தப் போவது யார் என்பதையும் சிகிச்சைக்கு முன்னரே தெளிவாக சொல்ல வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கு மேல் அதிகமாக செலவானால், அதை மருத்துவமனைக்கு நோயாளிகள் கட்டாயம் செலுத்த
வேண்டும்.
* நோயாளிகள் மருத்துவமனைகள் ஒழுங்காக இயங்க, அவர்கள் வகுத்துள்ள சில ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் நேரத்தை மதித்து நடக்க வேண்டும். மருத்துவரின் பார்வை நேரத்தை வீணாக்காமல் நோயாளிகள் சரியான நேரத்துக்கு வர வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் மருத்துவரின் உதவியாளருக்கு தகவல் சொல்ல வேண்டும்.
* அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதும் உண்டு. வெளியிலிருந்து வரும் பார்வையாளர்களிடமிருந்து கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதால் இந்த ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டியது நோயாளிகளின் கடமை.
* மருத்துவமனை வளாகம், வார்டுகள், கழிவறைகள், குடிநீர் போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டியதும் நோயாளிகளின் கடமை.
Average Rating