சுவரோவியங்கள் கூறும் கதை !! (கட்டுரை)

Read Time:19 Minute, 4 Second

கோட்டாபய ராஜபக்‌ஷ, நவம்பர் 18 ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமானம் செய்யும் போது, தமிழ், முஸ்லிம் மக்களும் தமது வெற்றியில் பங்காளிகளாவர் எனத் தாம் நினைத்ததாகவும் ஆனால், அம்மக்கள் தமக்குப் போதியளவில் வாக்களிக்காததையிட்டு வருந்துவதாகவும் கூறினார்.

அதேவேளை, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கு வாக்களிக்காவிட்டாலும் தாம், தமக்கு வாக்களிக்காத மக்களினதும் ஜனாதிபதி என்றும் அவர் அப்போது கூறினார்.

ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் ஏன் தமக்கு வாக்களிக்வில்லை என்பதை, அவர் உணர்ந்திருந்ததாக, அவரது அந்த உரையின் மூலம் விளங்கவில்லை.

தாம், சகல இன மக்களினதும் ஜனாதிபதி என, அவர் கூறிய போதிலும், அவ்வாறு அவர் நடந்து கொள்வாரா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை. அவரது கட்சியின் ஏனைய தலைவர்களும் ஆதரவாளர்களும், அவர் என்ன கூறினார் என்பதை, உணர்ந்ததாகவும் தெரியவில்லை.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட தேர்தலுக்கு முன்னர், அதாவது கடந்த ஒகஸ்ட் மாதாம் ஐந்தாம் திகதி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ, வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட சில சிறிய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார்.

தமது சகோதரன், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், 2012 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த ‘13 பிளஸ்’ திட்டத்தை அமுலாக்குவதாக, அவர் அப்போது வாக்குறுதியளித்தார். ‘13 பிளஸ்’ திட்டம் என்றால் என்ன என்பதை, முதலாவதாக அதனை முன்வைக்கும் போது, மஹிந்த ராஜபக்‌ஷ கூறவில்லை. உண்மையிலேயே அவரிடம், அது தொடர்பாகத் தெளிவானதோர் அபிப்பிராயம், அப்போது இருந்ததாகவும் தெரியவில்லை.

‘ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது, ‘தான் 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்பதைக் குறிக்கவே, அவர் அந்தப் பதத்தைப் பாவித்தார்.

ஆனால், பின்னர் ‘ஹிந்து’ பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் என். ராமுடன் நடத்திய மற்றொரு பேட்டியின் போது, ராம், “13 பிளஸ் என்றால் என்ன” என்று கேட்டார். அதற்குப் பதிலளித் மஹிந்த, 1972 ஆண்டுக்கு முன்னர், இலங்கையில் இருந்ததைப் போன்றதோர் செனட் சபையொன்றை, நிறுவுவதை மனதில் வைத்தே, தாம் அந்தப் பதத்தைப் பாவித்தாகக் கூறினார்.

அதுவும் அப்போதைக்கு, வாய்க்கு வந்த பதிலேயல்லாது, அதைத் தான் அவர் உண்மையிலேயே கருதினார் என்று கூறக்கூடிய வகையில், அதன் பின்னர், அவர் எங்கும் கருத்து வெளியிடவில்லை.

ஆனால், அவர் அதனை கடந்த ஓகஸ்ட் மாதமும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதியாக வழங்கினார். அந்த நிலையில் தான், கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக, இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.

அங்கு அவர், ‘ஹிந்து’ பத்திரிகையின் சுஹாஷினி ஹைதருடன் நடத்திய பேட்டியின் போது, மஹிந்தவின் கருத்தை அடியோடு மறுத்தார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் செல்வது ஒரு புறமிருக்க, அந்தத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றவும் முடியாது என, அவர் அப்போது சுஹாஷினியிடம் திட்டவட்டமாகவே கூறினார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதே விஜயத்தின் போது கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கூறியிருந்த நிலையிலேயே, அவர் இந்தியாவில் இருந்தே, “அது முடியாது” என்று கூறியிருந்தார்.

அதைப் பற்றி, ராஜபக்‌ஷக்களின் தலைமையிலான பொதுஜன பெரமுனவை இன்னமும் ஆதரிக்கும் வரதராஜப் பெருமாள், கருணா அம்மான், உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். உண்மையிலேயே, பொதுஜன பெரமுனவை ஆட்டிப் படைக்கும் பேரினவாத கொள்கையின் முன், அவர்களாலும் எதையும் செய்ய முடியாது; வாய் திறக்கவும் முடியாது.

அந்தப் பேரினவாத சித்தாந்தம், எந்தளவு பெரும்பான்மை மக்களை ஆட்கொண்டுள்ளது என்பதைத் தற்போது பிரதானமாகத் தென்பகுதியில் இளைஞர், யுவதிகள் மதில் சுவர்களில் வரையும் ஓவியங்கள் மூலம் தெரியவிருக்கிறது.

அரசாங்கமே, இந்த ஓவிய அலையின் பின்னால் இருப்பதாக நினைக்கக் காரணங்களும் உள்ளன. வடபகுதியில் இராணுவமே, இந்த விடயத்தில் இளைஞர்களைத் தூண்டுகிறது என அரச தொலைக்காட்சியே கூறுகிறது.

தென்பகுதியில் காணப்படும் சுவர் ஓவியங்களில் பெரும்பாலானவை, எவ்வாறு பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங்களை, குறிப்பாகத் தமிழ் மக்களைத் தோல்வியுறச் செய்தன என்ற வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. இராவனனைப் பற்றிய சித்திரங்கள், துட்டகைமுனு, எல்லாளன் போர் பற்றிய சித்திரங்கள், அண்மைக் கால வடக்கு, கிழக்குப் போரைக் குறிக்கும் இராணுவத்தினரின் சித்திரங்கள் ஆகியனவே, அனேகமாக எங்கும் காணக் கூடியதாக இருக்கின்றன.

சில ஓவியங்கள், அண்மைக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொளளப்பட்ட பிரசாரத்தின் சில அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த ஓவியங்களின் மூலம், பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மையே தெரிகிறது. இந்த மனப்பான்மை, பெரும்பான்மை சமூகம் தாமாக உருவாக்கிக் கொண்டதல்ல.

மாறாக, அது பெரும்பான்மையின அரசியல்வாதிகள், குறுகிய அரசியல் இலாபத்துக்காக, நீண்ட காலமாக அம் மக்களின் மனதில் ஊட்டியதே ஆகும். இந்த நிலையில் தான், சுஹாஷினியுடனான பேட்டியில் ஓரிடத்தில், அதிகாரப் பரவலாக்கலைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, “பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்துக்கு மாறாக, எந்தவோர் அரசாங்கத்தாலும் எதையும் செய்ய முடியாது” என ஜனாதிபதி கூறியிருந்தமையாகும்.

அதற்குப் பதிலாக, பொருளாதார அபிவிருத்தியே, இனப் பிரச்சினைக்குத் தீர்வாகும் என, ஜனாதிபதி அந்தப் பேட்டியின் போதும் ‘பாரத் சக்தி’யின் ஆசிரியர் நத்தின் ஏ. கொக்கலேயுடன் கொழும்பில் நடத்திய பேட்டியின் போதும் கூறியிருந்தார்.

பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்துக்கு மாறாக, எந்தவோர் அரசாங்கத்தாலும் எதையும் செய்ய முடியாது என்ற ஜனாதிபதியின் கருத்து, கசப்பாக இருந்த போதும், வரலாறு முழுவதிலும் அதுவே யதார்த்தமாக இருந்து வந்துள்ளது.

இலங்கை வரலாற்றில், ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே, இனப்பிரச்சினை விடயத்தில், ஓர் அரசாங்கம், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சந்தர்ப்பமே அதுவாகும். அதுவும், இந்திய அரசாங்கத்தின் நெருக்குதலால் இடம்பெற்றது.

அதற்கு முன்னர், பெரும்பான்மையினரின் பிரசாரத்தை மதியாது, பண்டா-செல்வா ஒப்பந்தமும் டட்லி-செல்வா ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்ட போதும், அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

ஜனாதிபதியின் இந்தக் கருத்தின் காரணமாகவே, தமிழ், முஸ்லிம் தலைவர்கள், கடந்த அரசாங்கத்தின் காலத்தில், புதிய அரசமைப்பு வரைதலின் போது, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையிலேயே, சிறுபான்மையினர் உரிமைகளைக் கோர வேண்டியுள்ளது. அத்தோடு, இந்த நிலையிலேயே, ஜனாதிபதி சகல இன மக்களுக்கும் ஜனாதிபதியாகச் செயற்பட வேண்டியுள்ளது.
உண்மையலேயே, ராஜபக்‌ஷக்களுக்குப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் கருத்தில் கொள்ளும் போது, தேவையிருந்தால் அவர்களால் ஓரளவுக்குப் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பாதிக்காது, அவர்களின் இனவாத கருத்துகளுக்கு முரணாகச் செயற்படவும் முடியும்; பெரும்பான்மையினரின் கருத்துகளை மாற்றவும் முடியும்.

அவர்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்களைத் தடுத்தனர். தேர்தல் காலத்தில், ‘அமெரிக்க மிலேனியம் சலேன்ஜ்’ உதவித் திட்டத்தை நிராகரித்த பொதுஜன பெரமுனவினர், இப்போது அதை இரத்துச் செய்வதாகக் கூறுவதில்லை. இப்போது, அதையும் அவர்களது ஆதரவாளர்கள் சகித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கில் புலிகளின் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்ட போது, அதை மிக மோசமாகச் சித்திரித்த பொதுஜன பெரமுனவினர், இம்முறை அதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. அதனால், தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை என்றே, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியிருந்தார்.

இவ்வாறு, அரசியல் நோக்கங்களுக்காக ஒருசில காரணங்களில், அரசாங்கம் பெரும்பான்மை அபிப்பிராயங்களுக்கு எதிராகச் செயற்பட்டாலும், அரசியல் உரிமைகள் என்று வரும் போது, “நான் சகல இனங்களினதும் ஜனாதிபதி” என்ற ஜனாதிபதியின் கருத்து, வெல்லுமா, சுவரோவியங்களில் பிரதிபலிக்கும் கருத்து வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அபிவிருத்தி தீர்வாகுமா?

இனப் பிரச்சினைக்கு அபிவிருத்தியே தீர்வு என்று, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ, இரண்டு இந்திய ஊடகவியலாளர்களுடன் நடத்திய பேட்டிகளின் போது கூறியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு வேண்டியது, அதிகாரப் பரவலாக்கல் அல்ல; தொழில் வாய்ப்புகள், நல்லதொரு கல்வி, விவசாயத்துக்கான வசதிகள் என்பவையே ஆகும் என்பதையே, அவர் அந்தப் பேட்டிகளின் போது வலியுறுத்தியிருந்தார்.

போரால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குப், ஏனைய பகுதிகளை விட, பொருளாதார அபிவிருத்தி முக்கியம் என்பதில், எவ்வித விவாதமும் இருக்க முடியாது.

உண்மையிலேயே அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்று, எதைக் கோரினாலும் இறுதியில், பொருளாதார ரீதியாக வேற்றுமைக்கு உள்ளாக்கப்படாதிருத்தலே, அவற்றின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால், நாட்டில் அரசியல் உரிமைகளுக்காக, 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டமொன்று இடம்பெற்ற ஒரு பகுதியில், தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக மதிக்கப்படுகிறோம் என்ற கருத்து, ஆழமாக மக்கள் மனதில் ஊன்றியிருக்கும் நிலையில், பொருளாதார அபிவிருத்தியால் மட்டும், மக்கள் திருப்பதியடைவார்களா என்பதே கேள்வியாகும்.

பெரும்பான்மையின மக்கள், அரசியல் காரணங்களுக்காக, இன உணர்வைப் பாவித்து, அவர்களது தலைவர்கள், அவர்களது மனங்களில் ஊட்டிய கருத்துகள் காரணமாகவே, அதிகாரப் பரவலாக்கல் போன்றவற்றை எதிர்க்கிறார்கள்.

உண்மையிலேயே, ஆரம்பத்தில் பெரும்பான்மையினத் தலைவர்களே, அதிகாரப் பரவலாக்கலை மட்டுமன்றி, சமஷ்டி முறையையும் கோரினார்கள். அதாவது, வெறும் இன உணர்வாலேயே அவர்கள் அதை எதிர்க்கிறார்கள்.

இதே இன உணர்வு, ஏனைய சமூகங்கள் மனதிலும் இருக்கிறது என்பதை, எந்தவொரு சமூகத்தவரும் சிந்திப்பதில்லை. இதுவே, பிரச்சினையாக இருக்கிறது.

சில சமயங்களில், மக்களின் சுதந்திர தாகமும் இன உணர்வும் அபிவிருத்தியை விஞ்சுகிறது. சில சமயங்களில், அபிவிருத்தி, சுதந்திரப் போராட்டங்களையே மழுங்கடித்து மறக்கச் செய்கிறது.

உதாரணமாக, ஸ்பெய்னில் கட்டலோனியப் பிரதேசம் என்பது, அபிவிருத்தியடைந்த மாநிலமாகும். ஆனால், அந்த மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் போது, மாநிலத்தின் மக்கள் ஸ்பெய்னிலிருந்து பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்தனர். ஸ்பெய்ன் அரசாங்கம், அந்தச் சர்வஜன வாக்கெடுப்பு, சட்ட விரோதமானது எனக் கூறி, கட்டலோனியத் தலைவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தது. இன்னமும் அந்தப் பிரச்சினை இழுபறியாகவே இருக்கிறது.

கடாபியின் காலத்தில் லிபியா மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடாகவே இருந்தது. ஆனால், கடாபியின் கடும் போக்கை, மக்கள் விரும்பவில்லை. அமெரிக்கா, அம்மக்களைத் தூண்டி, அவரது அரசாங்கத்துக்கு எதிராகப் போரிடச் செய்தது.

எனினும் மக்களின் சுதந்திர வேட்கை, இன்று அந்த நாட்டின் அழிவுக்கு வழி வகுத்துள்ளது. சதாம் ஹுசைனின் ஈராக்குக்கும் அதுவே நடந்தது.

இருந்த போதிலும் இன உணர்வும் சுதந்திர உணர்வும் சிலவேளைகளில் பொருளாதார அபிவிருத்தியைப் பொருட்படுத்தாது தலைதூக்குகிறது என்பதற்கு இவை உதாரணங்களாகும்.

கனடாவில், கியூபெக் மாநிலத்தின் கதை, இதைவிட மாறுபட்டதாகும். பிரெஞ்சு மொழிப் பேசும் அம்மாநில மக்களும், 1970களில் சுதந்திரத்தைக் கோரினார்கள். ஆனால், பொருளாதார அபிவிருத்தியோடு அந்தக்குரல் மங்கிப் போய்விட்டது.

ஒருபுறம், இலங்கையில் பெரும்பான்மையினத் தலைவர்கள், அரசியல் தீர்வு அல்ல; அபிவிருத்தியே தீர்வு என்கிறார்கள். மறுபுறம், அபிவிருத்தியல்ல, அரசியல் தீர்வே வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கூறுகிறார்கள்.

அபிவிருத்தி என்பது, ஒரு மரணப் பொறியென்று 2012ஆம் ஆண்டு, மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14ஆவது மாநாட்டின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தார்.

இலங்கையில் இன்றைய நிலையில், நாட்டுக்குத் தீங்கிழைக்காத அரசியல் தீர்வை நிராகரிப்பதும் அரசியல் தீர்வுக்காக பொருளாதார அபிவிருத்தியை நிராகரிப்பதும் பொருத்தமற்றதாகவே தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஜின் பள்ளத்தாக்கு!! (வீடியோ)