சேர்பியாவின் வெளிவிவகார பாதுகாப்புக் கட்டமைப்பு !! (கட்டுரை)
சேர்பியத் தலைநகர் பெல்கிரேட்டில், கடந்த 2014ஆம் ஆண்டில் நடந்த இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொண்டபோது, ரஷ்ய, பெலாரஸ், சேர்பிய படைகளால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் “ஸ்லாவிக் சகோதரத்துவம்” – என்ற இராணுவப் பயிற்சி அது தொடர்பில் அந்நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடங்கியிருந்தது.
அப்போதிருந்து ரஷ்யா, சேர்பிய ஆயுதக் களஞ்சியத்துக்கு ஆயுதங்களை வழங்கத் தொடங்கியிருந்தது. இவ்வாண்டின் தொடக்கத்தில் சேர்பியா ரஷ்யாவிடமிருந்து மூன்று தாக்குதல் ஹெலிகொப்டர்கள் எம்.ஐ-35எம், நான்கு போக்குவரத்து ஹெலிகொப்டர்கள் எம்.ஐ-17பி5ஐ வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.
சேர்பியா, ரஷ்யாவிலிருந்து பல கவச பி.ஆர்.டி.எம்-2 எம்.ஏஸ் BRDM -2 MS வாகனங்களையும், 30 ட -72 தாங்கிகளையும் கொள்வனவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த 2016ஆம் ஆண்டில் சேர்பியா ஆறு மிக் -29 இராணுவ விமானங்களை வாங்கியிருந்தது. ஏற்கெனவே 3PK “Kub” மற்றும் 3PC C-125 “Pečora” ஐ சேர்பியா வைத்திருப்பதால், அவர்கள் ஏற்கெனவே ரஷ்ய விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை நன்கு அறிந்தும் இருந்திருக்கின்றார்கள்.
கடந்த 1999ஆம் ஆண்டில் (கொஸோவோ யுத்தத்தின்போது) ஐக்கிய அமெரிக்க F -117 ஐ வீழ்த்தும் வல்லமையை C-125 “Pečora” கொண்டுள்ளது என்று ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி குறிப்பிடுகின்றது. இதன்படி, இது அழிக்க முடியாத விமானங்கள் இல்லை என்பதை உலகுக்குக் காட்டுகிறது. எஸ்-400ஐ கையகப்படுத்துவது குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் வரவில்லை, எனினும் சேர்பிய அரசாங்கம் இராணுவ வரவு செலவுத் திட்டத்தை 30 சதவீதத்தால் அதிகரித்து, இப்போது 910 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதால், குறித்த ஏவுகணை தொழில்நுட்பத்தை சேர்பியா ஏற்கெனவே கூடியளவிலேயே அதன் இராணுவக் கட்டமைப்பு விருத்தியடைந்துள்ளது என இக்கட்டுரையாளர் கருதுகின்றார்.
சேர்பியா ஒரு வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) நட்பு நாடு என்பது ஒருபுறமிருக்க “ஸ்லாவிக் சகோதரத்துவம்” பயிற்சியில் அதன் பங்களிப்பு கடந்த காலங்களில் விமர்சனங்களை உருவாக்கியிருந்தது. இவ்வாண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி அன்று, றேடியோ பிறீ யூரோப்/ றேடியோ லிபேர்ட்டி நேட்டோவின் அறிவிப்பை வெளியிட்டபோது, மேற்கத்திய கூட்டணி “சேர்பியா பிராந்தியத்தில் பயிற்சிகள் குறித்து இறையாண்மை முடிவுகளை எடுக்கும் சேர்பியாவின் உரிமையை” மதிக்கிறது என்று கூறியது. இவ்வாண்டு ஜூன் மாதத்தில், “ஸ்லாவிக் சகோதரத்துவம் 2019” தொடங்கவிருந்தபோது, சேர்பிய இராணுவ நிபுணர் நிகோலா லூனிக் கூறிய வார்த்தைகளை பால்கன் இன்சைட் பின்வருமாறு அறிவித்திருந்தது: “இதுபோன்ற (இராணுவ) நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கான அறிவைப் பரிமாறிக் கொள்வதற்காகவே மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன” என்று அவர் கூறியிருந்ததாகத் தெரிவித்திருந்தது.
கடந்த 2006ஆம் ஆண்டில் நேட்டோவுடன் ஒரு கூட்டணியை சேர்பியா ஏற்படுத்தியதிலிருந்து, ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது மேற்கு கூட்டணியுடன் சேர்பியா மிகவும் ஒத்துழைத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு ஜூன் மாதத்தில் பல்கேரியாவில் ஐக்கிய அமெரிக்கா. பல்கேரியப் படைகளுடன் கூட்டுப் பயிற்சியில் சேர்பியா பங்கேற்றிருந்தது தொடர்பான செய்திகள் இன்னமும் இணையங்களில் இருக்கின்றன.
அது ஒருபுறமிருக்க, பெல்கிரேடிற்கு அருகில் நடத்தப்பட்ட “ஸ்லாவிக் சகோதரத்துவம்” பயிற்சி யூரோசிய பொருளாதார ஒன்றியத்தில் சேர்பியாவின் நுழைவுடன் ஒத்துப்போய் இருந்ததுடன், அக்குறித்த ஒப்பந்தத்தில் இவ்வாண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி அன்று ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் மற்றும் சேர்பியத் தலைவர் கையெழுத்திட்டிருந்தார்.
பிறீ யூரோப்/ றேடியோ லிபேர்ட்டியின் வலைத்தளத்தின்படி, ஒப்பந்தத்தின் உத்தியோகபூர்வ கையொப்பத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மஜா கோசிஜான்சிக், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய – சேர்பிய பேச்சுவார்த்தைகளை கண்காணித்து வருவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது, மொத்தம் ஐரோப்பிய ஒன்றியம் 63 சதவீத வர்த்தகத்துடன் சேர்பியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக இன்னமும் இருக்கின்றது என்றும், ரஷ்யாவுடனான வர்த்தகம் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 10 சதவீதம் என்றும், அது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் கவலைப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்வாறிருக்கவே, ரஷ்ய ஆயுதங்களின் சேர்பிய வருகையைப் பற்றிய செய்தி பால்கன் நாடுகளின் இணைய செய்தித்தாள்களால் பரவலாகப் பதிவாகியுள்ளதுடன், செர்பியர்களிடையே அது கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சில பால்கன் வலைத்தளங்கள் ரஷ்ய-சேர்பிய இராணுவ ஒத்துழைப்பு பால்கன் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருத்துக்களை முன்வைக்கின்றன. மேலும் அவை, சேர்பிய அரசாங்கம் ஒருபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தை அணுகுவதற்காக அரசாங்கம் மேற்கத்திய சார்பு கொள்கைகளை பின்பற்றும் அதேநேரம், சேர்பியா, ரஷ்ய உணர்வுகளை பொதுமக்களுக்கு ஊட்டுகிறது என்றும் இந்நிலை நாட்டின் வெளிவிவகார கொள்கைகளுக்கு சிக்கல் நிலையையே ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றது.
சேர்பிய இராணுவ நிபுணர் லூனிக் நேட்டோவுடன் ஒத்துழைப்பதில் சேர்பியாவுக்கு ஆர்வம் இருப்பதாக அறிவித்த சேர்பிய பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர், அணுகுமுறை அடிப்படையில் முரண்பாடானது என்று விமர்சிக்கிறார். அவரின் கருத்துப்படி ரஷ்யாவுடனான ஒப்பந்தம் உணர்ச்சி ரீதியான உந்துதல்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் இந்த முரண்பாடான கொள்கை பிராந்தியத்தில் உறவுகளை இயல்பாக்குவதைத் தடுக்கிறது என்றும் கூறுகிறார்.
சேர்பிய நேட்டோ உடன்பாடுகள் வுலின் கூறுவது போலவே பிராந்திய சமநிலைக்கு அவசியமானது. குறிப்பாக இது கொஸோவாவுடனான உரையாடலைத் மேற்கொள்வதற்கு அவசியமான ஒன்றாகும். சேர்பியா நேட்டோவில் இணைந்தால், நாடு அதன் 90சதவீத பாதுகாப்புப் பிரச்சினைகளை தீர்க்கும் என்பதை ஜனாதிபதி வுசிக் புரிந்து கொள்வார் என்று லூனிக் நம்புகிறார்.
இவ்வாறாக குழப்பமான வெளிவிவகார, பாதுகாப்பு சிக்கல்களின் மத்தியிலேயே சேர்பியா தனது அடுத்தகட்ட வெளிவிவகார நகர்வை மேற்கொள்ள தயாராகின்றமை, நேட்டோ, மற்றும் ரஷ்யாவை தாண்டிலும்,ஸ்கேண்டிநேவியன் நாடுகளின் பாதுகாப்பு தொடர்பிலேயே இப்போது அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
Average Rating