குளிர்கால கொண்டாட்டம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 56 Second

அப்பாடா, இன்னும் ஆறு மாதங்களுக்குப் பனியிலிருந்து தப்பலாம் என்று நினைக்கும் சமயம், அனைத்துவிதமான பண்டிகைக் கொண்டாட்டங்களும், கோடைக் கொண்டாட்டங்களாக மாறி விடும். நமக்கு மதங்கள், கலாச்சாரங்கள் இவற்றின் அடிப்படையில் வருடம் முழுவதும் கொண்டாட்டங்கள், பண்டிகைகள் நடைபெறும். தேசிய விழாக்கள் எல்லா நாடுகளிலும் அவரவர் முறைப்படி நடைபெறுகிறது. ‘மினியா போலிஸில்’ – இயற்கையே அனைத்திற்கும், அனைத்து கொண்டாட்டங்களுக்கும் ஏதுவாக அமைத்துத் தருகிறது என்று சொல்லலாம்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விடுகிறது. ‘கோட், சூட், பூட்’ இவை அனைத்தும் மாறி வெயிலுக்கேற்ற ஆடைகளை அணியத் துவங்குகிறார்கள். வீட்டில் அடைந்து கிடந்த குழந்தைகளை தெருக்களில் பார்க்க முடியும். ஓஹோ, ஒவ்வொரு வீட்டிலும் இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்களா என்பது இப்பொழுதுதான் தெரிய வரும்.

நர்சரிகளில்கூட, ‘ஹோம் ஷாப்’ என்பார்கள். இங்கெல்லாம் வீட்டிற்குப் புதிய பொருட்கள், செடிகள் வாங்க கூட்டம் வரும். வீட்டில் புதுப்பிக்க வேண்டிய வேலைகள் ஆரம்பமாகும். உதாரணத்திற்கு, பனிமழையில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்வார்கள். அதிக பனியால், கண்ணாடிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் ‘கரன்ட்’ சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய ஆரம்பித்து விடுவார்கள். வீட்டிற்குள் இருப்பதைவிட தோட்டத்தை விரும்புவார்கள்.

வீட்டின் முன்புற அலங்காரங்கள் போன்று, வீட்டின் பின்புற அலங்காரங்கள் ஆரம்பமாகும். அப்பொழுதுதான் பனியில் முறிந்து விழுந்த மரக்கிளைகள், செடிகள், இவற்றை எரித்து சுத்தப்படுத்துவர். அது ஒரு கலை, விளையாட்டு என்று கூட சொல்லலாம். நிறைய வீடுகளில் கும்பலாக அமர்ந்து கொண்டு ‘காம்ப் ஃபயர்’ என்று கொண்டாடுவார்கள்.

மரங்களிலிருந்தே ஊஞ்சல் போன்றவை கட்டி விளையாடுவார்கள். நிறைய வீடுகளில் பால்கனியிலிருந்துகூட ஊஞ்சல் தொங்குவதை பார்க்கலாம். ஒவ்வொன்றும் குழந்தைகள் நலத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் படிக்கட்டுகளில் விழுந்து விடாமல் தடுக்க சிறிய ‘கேட்’ போன்ற அமைப்பை ரெடிமேடாக வாங்கி பொருத்திக் கொள்கிறார்கள். இதெல்லாம் நமக்கு நிறைய விழிப்புணர்ச்சி தரக்கூடிய விஷயங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘‘இந்த மரங்கள் அவ்வளவுதான், குச்சிக்குச்சிகளாக நிற்கின்றன. இனி இது வேஸ்ட்’’ என்று நினைக்கும் போது, ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கிளையும் அடர்த்தியாக செழித்து, அழகான வண்ணங்களைக்காட்டி, மலர்களையும், மொட்டுக்களையும் தந்து அசர வைத்துவிட்டன. அடுத்த பனி ஆரம்பிக்கும் முன்பு அறுவடை முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், எளிதில் விளையக்கூடிய காய்கறிகளை பயிரிட ஆரம்பித்தார்கள். ‘பீட்ரூட்’, ‘குடை மிளகாய்’ போன்றவைகூட எளிதில் விளைகின்றன.

தக்காளித் தோட்டமே ரொம்பவும் சுலபமாக பயிரிடப்படுகிறது. இதுபோல், இத்தகைய சீசனில் விளையக்கூடிய பூக்கள் அனைத்து வீடுகளிலும் பூக்க ஆரம்பித்து விடுகிறது. பூக்கள் இல்லாத வாயில்களைப் பார்க்கவே முடியாது. பெரிய பெரிய தொட்டிகள் நிறைய டிசைன்களில் காணப்படும். பாதியளவிற்கு வேண்டாதவற்றைப் போட்டு நிரப்பி விடுவர்.

அதற்குமேல் முழுவதும் உரம் கலந்த மண் நிரப்பி செடிகளை நட்டு வைப்பர். வெகு விரைவில் கொத்துக்கொத்தான பூக்கள் மேல்பாகம் முழுவதும் நிரம்பக் காணப்படும். தனி வீடுகளில் முன்புறம் அழகான ‘ஷேப்’ வைத்து செடிகள் வளர்ப்பர். அழகிய கூழாங்கற்கள், சிறிய கருங்கற்கள் இவற்றைக்கொண்டு தடுப்புகள் போன்று அமைத்திடுவர். அனைத்திலும் பசுமைதான். பூக்களில்லாத மரங்களே கிடையாது. கொத்துக் கொத்தாக, பார்க்க முடியாத நிறங்களிலெல்லாம் பூக்கள், நீலம், மஞ்சள், வயலெட், பிரவுன் என பல்வேறு நிறங்கள். தெருவின் இருமருங்கிலும் ஒவ்வொரு வீட்டின் முன்புற அழகை ரசித்துக்கொண்டே நடக்கும்பொழுது, எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பே தெரியாது.

மொத்தத்தில் பனியினால் அனைத்தும் அழிவதும், அவை மறுபடியும் புனர்ஜென்மம் எடுப்பதையும், மீண்டும் இரண்டு மடங்கு அழகை அள்ளித்தருவதையும் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அப்பாடா, என்ன ஒரு ஆவேசத்துடன் அனைவரும் பாடுபடுகின்றனர்! ஒவ்வொரு வீடுகளையும் தங்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கிறார்கள்.

வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் பார்வைக்கு அழகாகத் தெரிந்தன. எவ்வளவு ஆர்வம் தோட்டமிடுவதில் உள்ளதோ, அந்த அளவுக்கு வீட்டிற்குள் செடிகள் வைப்பதும் நல்ல ஒரு பழக்கமாக உள்ளது. பெரிய செடிகள் வைப்பதற்காகவே கூட இடம் ஒதுக்கப்பட்டு, பின் பர்னிச்சர்கள் வடிவமைக்கப்படுகின்றன. சமையலறை உட்பட அனைத்து அறைகளிலும் செடிகள். அதேபோன்று போட்டோக்கள்.

நம் முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட போட்டோக்களை சுவர் முழுவதும் மாட்டி, வருவோருக்கு அறிமுகம் செய்கிறார்கள். இன்றும் அதுமிகப்பெரிய அலங்காரப் பொருளாகத் திகழ்கிறது. எல்லா இடங்களிலும் விதவிதமான போட்டோக்கள். போட்டோ ‘பிரேம்’களை அவர்கள் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரிய கலை. பல்வேறு வேலைப்பாடுகள் கொண்ட போட்டோ பிரேம்கள் மிகுந்த அளவில், நிறைய மால்களில் கிடைக்கின்றன. போட்டோக்கள் பரிசாகத் தருவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். காரணம் அவை என்றுமே பெற்றுக்கொள்பவர்களுக்கும், ஞாபகமாக இருக்கும்.

நம் ரசனையைக் காட்டுவதாக நினைப்பார்கள். உதாரணத்திற்கு, குழந்தை பிறந்ததென்றால், ஒவ்வொரு மாதமும் பிறந்த தேதியில் குழந்தையை ‘போட்டோ’ எடுத்து சேர்த்து வருவார்கள். சில சமயங்களில் உறவினருடன் கொண்டாடி மகிழ்வார்கள். பிறப்பு முதல் ஒவ்வொரு புகைப்படமாக சேர்த்துக்கொண்டே வருவார்கள். அதற்கென ‘ஆல்பம்’கூட உண்டு. அதில் குழந்தையின் பிறப்பு சூழல், அதன் வளர்ச்சி, முதலில் பல் முளைத்தல், முதன் முதல் பேச்சு, முதலில் வெட்டும் ‘முடி’கூட ஒட்டி எழுதி வைப்பார்கள்.

ஒருசில வீடுகளில், நாங்கள் சென்றபொழுது பார்வைக்காகத் தந்தார்கள். எங்களுக்கும் அது ஒரு தனி சிறப்பாகத் தெரிந்தது. அது மட்டுமல்லாமல், வந்து சேரும் வாழ்த்து அட்டைகளுக்குத்தான் என்ன ஒரு மதிப்பு தெரியுமா? நமக்கு ஏதேனும் வாழ்த்து அட்டை வந்தால் படித்துவிட்டு வைத்துவிடுவோம். ஆனால் இங்கு நிறைய வீடுகளில், குளிர்சாதனப்பெட்டி மீதும், அலங்கரித்த சுவர்களிலும், அலமாரிக் கதவு ஜன்னல்களிலும், அங்கங்கே போடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு சிலவற்றை படித்தேன்.

மற்றவர் பாராட்டி எழுதிய வார்த்தைகளுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார்கள் என்று நினைத்தேன். வயிற்றிலிருக்கும் குழந்தை ‘ஸ்கேன்’ படத்தைக்கூட தேதியிட்டு, ஒட்டி வைத்திருந்தார்கள். எந்தெந்த தேதிகளில் குழந்தைக்கு என்னென்ன ஊசிகள் போட வேண்டும் என்பதுகூட, நாம் மறக்காமல் இருக்க உதவுவதாக இருந்தது. வாழ்த்து அட்டைகளில் காணும் பொன்மொழிகள், அவர்கள் மனதில் நிற்பதாக நம்பிக்கை.

அதுபோல் வேண்டாத பொருட்களை வீட்டிற்கு வெளியே வைத்து, இது ‘ப்‘ரீ’ அதாவது ‘இலவசம்’ என்று எழுதி விடுகிறார்கள். அப்படியானால், யார் வேண்டுமோ எடுத்துக்கொள்ளலாம் என்று அர்த்தம். கைவினைப் பொருட்கள், ‘பெயிண்டிங்ஸ்’ ஓவியங்கள் என நமக்கு பிடித்த பொருட்களை அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

சுவர் ஓவியங்களும் அவர்கள் விரும்பும் வீட்டுப் பொருளாகும். ஒவ்வொரு வீடும் குறிப்பாக அறைகள் முழுவதும் மரத்தினால் கட்டப்பட்டு இருக்கும். அல்லது முழுவதும் கார்ப்பெட் ஒட்டப்பட்டிருக்கும். ஒரு அறையில் புதுவிதமான ‘கார்ப்பெட்’ போடப்பட்டு இருந்தது. அந்த கார்ப்பெட்கள் இந்தியாவில் இருந்து நெய்யப்பட்டு இருந்தது. நம் கலாச்சாரம், பாரம்பரியம் நமக்குத்தான் புரியும். அனைத்து இடங்களிலும் அது எவ்வளவு மதிக்கப்படுகிறது என்று நினைக்கும் போது ஒவ்வொரு இந்தியனும் பெருமையும், கர்வமும் பட வேண்டிய விஷயம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு? (கட்டுரை)
Next post தேங்காயின் மகத்துவம்!! (மருத்துவம்)