காற்றையும் காசு கொடுத்து வாங்கப் போகிறோம்!! (மகளிர் பக்கம்)
தினம் தினம் வாட்ஸ் ஆப்பில் முப்பது நொடிகளுக்கு நேர்மறையான சிந்தனைகள் கொண்ட ஸ்டேட்டஸ். ஒவ்வொரு நாளும் புதுப் புது உத்வேகமான சிந்தனைகள். பலரது மனங்களில் பெரும் மாற்றம் நிகழ்த்தியிருக்கும் இந்த ஸ்டேட்டஸ்களுக்கு சொந்தக்காரர் யார் என்று தேடிய போது முனைவர் மார்சலின் என்ற பெயர் உச்சரிக்கப்பட்டது.
“அம்மா, அப்பா சொந்த ஊர் தஞ்சை. வேலைக்காகச் சென்னையில் செட்டிலானவர்கள். நான் வளர்ந்தது, படித்ததெல்லாம் சென்னை தான். 2010 ஆம் ஆண்டில் எனது முனைவர் பட்டத்தை சுற்றுச்சூழல் நிர்வாகம் (Environment Administration) என்ற தலைப்பில் சமர்ப்பித்தேன். தற்போது ‘தமிழ்குஷி’ என்ற ஆன்லைன் எஃப்எம்மில் ஆர்.ஜேவாக வேலைப் பார்த்து வருகிறேன். ரேடியோ ஜாக்கியாக வேண்டும் என்பது என்னுடைய ஃபேஷன்.மீடியாவில் மற்ற துறைகளை விட ரேடியோவிற்கென்று தனி ரீச் இருக்கு.
எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம். அதனால், எந்த ஒரு விஷயங்களையும் மிக எளிமையாகச் சொல்லி விட முடியும். ரேடியோ ஜாக்கிக்கு அப்டேட்ஸ், பிரசண்ட்ஸ் ஆஃப் மைண்ட் ரொம்ப முக்கியம். இதனோடு மற்றவர்கள் மனதை புண் படுத்தாமல் காமெடியோடு சொல்லும் போது நாம் சொல்லக் கூடிய தகவல் பரவலாகச் சென்றடைகிறது. இது போக சில நிகழ்ச்சிகளுக்கு எம்.சி யும் செய்து வருகிறேன்” என்று கூறும் மார்ஸ் ‘உல்லாச உலகம்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவங்களைப் பகிர்ந்தார்.
“உலகம் முழுவதும் எந்தெந்த இடங்களுக்குப் போகலாம், அந்த இடங்களின் சிறப்பு போன்ற கருப்பொருளில் நூறு நிகழ்ச்சிகளுக்கு மேல் தொகுத்து வழங்கியுள்ளேன். இதில் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களின் சிறப்புகள் பற்றியும் கூறி வருகிறேன். அதிகமாக வேலை வாய்ப்புகள் பற்றிப் பேசுவேன். பொதுவாக எல்லோரும் எஞ்சினியர், மெடிக்கல் துறைகளையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.
அதையும் தாண்டி பல துறைகள் இருக்கிறது.ஜியாலஜியஸ்ட் என்ற படிப்பு பற்றிப் பாதிப் பேருக்குத் தெரியவே இல்லை. இது போன்று பல துறைகளில் வேலைகள் இருக்கிறது. அதே போல் UPSC, குரூப் ேதர்வு, அதற்கு எப்படி தயாராகலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்று கூறும் மார்சலின் சமூக சேவைகளிலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
“பள்ளி படிக்கும் போதே NSS-ல் சேர்ந்து நிறைய இடங்களுக்கும், பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்திருக்கிறேன். இதனால், என் மனதில் பல்வேறு சிந்தனைகள் ஏற்பட்டது. நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அழகான வாழ்க்கை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்கிற எண்ணம் அடிக்கடி என் மனதை ஆட்டிப் பார்க்கும். அதில் குறிப்பாக முதியோர் இல்லங்களுக்குச் செல்லும் போது நிறைவாக உணர்வேன். எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார்கள். இறுதி நாட்களில் அவங்க குழந்தை மாதிரி இருக்கும் போது நாம் பெற்றோராக இருப்பதில்லை. போட்டிப் போட்டு யார் பார்த்துக் கொள்வது என்கிற நிலையில் தான் இன்றையதலைமுறையினர் இருக்கிறார்கள்.
இந்த முதியோர்கள் ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வோர் அத்தியாயம். எனவே இதை மையமாகக் கொண்டு ‘அன்பென்ற மழையிலே’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இனி முதியோர் இல்லமே இருக்கக் கூடாது என்ற கான்செப்ட்டில் ஒரு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினேன். தற்போதுள்ள மத்திய அரசு முதியோர் இல்லத்திற்காகப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இன்றும் யாருக்கும் தெரியவில்லை.
ஏன் இல்லங்கள் நிர்வகிப்பவர்களுக்கு கூட பரவலாகச் சென்றடையவில்லை என்பது தான் சோகம். அரசு இயற்றும் ஒரு திட்டத்தின் முழுமையான வெற்றி என்பது, அந்த திட்டம் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் போது தான் வெற்றி பெறும்’’ என்றார். தனது பல்வேறு வேலைகளுக்காக ‘தங்க மகள்’, ‘ஹீரோயின் ஆஃப் தமிழ்நாடு’ போன்ற விருதுகள் வாங்கியிருக்கும் மார்சலின், ஆங்கில வார பத்திரிகை ஒன்றில் ‘ரவுண்ட் த கார்னர்’ என்ற தலைப்பில் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
“நல்லா படிக்கிற பசங்களாக இருப்பாங்க. அவங்களுக்கு பொருளாதார ரீதியா அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாத சூழல் இருக்கும். அவங்களுக்கு என் நட்பு வட்டாரத்தில் இருந்து உதவி பெற்று தருகிறேன். பெண்களுக்கு முன்னேற்றம் தேவை. குறிப்பாக கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்.
இவர்களும் மற்றவர்கள் போல் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் அவர்களுக்கான வாழ்வாதாரம் ஏற்பாடு செய்து தருகிறேன். சிலர் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வார்கள். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எப்படி விற்பதுன்னு தெரியாது. அவர்களுக்கு ஒரு கணிசமான தொகையில் பொருட்களை விற்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.
இதே போல் திருநங்கைகளும் நல் வழியில் சம்பாதிப்பதற்காக அவர்களுக்கான பணிசூழல் ஏற்படுத்துகிறேன். இதையெல்லாம் Her Voice Foundation என்கிற அமைப்பின் மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறேன்” என்று கூறும் மார்சலின் சமீபத்தில் டில்லி, சென்னை நகரங்களில் ஏற்பட்ட காற்று மாசு பற்றிக் கூறினார்.
“ஒவ்வொரு நபரும் தனித்தனியே ஒரே வீட்டில் நாலு கார், நாலு பைக் வச்சு இருக்கோம். நாலு காரில் ஒவ்வொருவராகச் செல்லாமல், நாலு பேர் சேர்ந்து ஒரே காரில் பயணிக்கலாம். ஏதாவது சாப்பிட்டு அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு கடக்கிறோம். சுகாதாரம் பற்றி என்னதான் அரசுத் திட்டங்கள் வகுத்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.
ரொம்ப கண்டிப்பா இருந்தால் தான் மக்கள் கேட்கிறார்கள், பின்பற்றுகிறார்கள். இரண்டு சக்கர வாகனம் குறித்து கடுமையான சட்டம் அமைத்து இருப்பது போல் நம் சுற்றுப்புற சூழலை பாதிப்பவர்களுக்கும் பிறப்பிக்க வேண்டும்.
இந்த தலைமுறையிலேயே, போன தலைமுறையிலிருந்த பாதி விஷயங்களைத் தொலைத்து நிற்கிறோம். இதையும் பாதுகாக்காவிட்டால் அடுத்த சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல ஒன்றுமில்லாமல் போய்விடும். தற்போது தண்ணீர் எப்படிக் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோமோ, அதைப்போல் காற்றையும் கூடிய விரைவில் விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் சூழல் உருவாகலாம்” என்றார் மார்சலின்.
Average Rating