நியூஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 11 Second

ரயிலை துரத்தும் சின்னப் பொண்ணு

சென்னை பார்க் ஸ்டேஷனில், சரியாக ரயில் கிளம்பும் நேரத்தில், சின்னப் பொண்ணு உறுமிக்கொண்டே நான்கு கால்களில் வேகமாக ஓடி வந்து குரைக்கிறது. சின்னப் பொண்ணு வேறு யாரும் இல்லை, அந்த ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஒரு நாய்க் குட்டி. ஒவ்வொரு முறை ரயில் கிளம்பும் போதும் இந்த நாய்க்குட்டி குரைத்துக் கொண்டே ரயிலைத் துரத்திக் கொண்டு வரும்.

ரயில் போன பிறகு அது தன் இருப்பிடம் சென்றுவிடும். ரயில் போகும் போது மட்டும் ஏன் குரைக்கிறது என்று பொதுமக்களும் போலீசாரும் ஆரம்பத்தில் பயந்தாலும், பிறகு அதை கவனிக்க ஆரம்பித்தனர். அப்போது, ரயில் படியில் தொங்கிக்கொண்டு நிற்கும் பயணிகளை உள்ளே போகச் சொல்லித்தான் அந்த நாய் குரைத்துக் கொண்டே ரயிலை துரத்துகிறது என்று தெரிந்த போது, ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். போலீசார் படியில் நிற்கும் பயணிகளை உள்ளே போகச் சொல்லுவதை பார்த்து பழகிய இந்த நாய், இப்போது தன் பாணியில் அவர்களை அதட்டி வருகிறது.

தலைமுடியிலிருந்து உரம்!

கர்நாடகாவில் வசிக்கும் குஷி, ரெமினிக்கா இருவரும் ஒன்பதாவது வகுப்பு மாணவிகள். இவர்கள் மனிதனின் தலைமுடியிலிருந்து உரம் தயாரித்து, அதில் காய்கறிகள் வளர்த்துள்ளனர். பல ஆய்வுக்குப் பின், தலைமுடியில் தாவர வளர்ச்சியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாரம்பரிய உரத்தைவிட, இந்த புது உரத்தை பயன்படுத்தும் போது, நல்ல விளைச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாப்பிள்ளையை மறுக்கும் பெண்கள்

5 ஆண்டுகளில் 6,000 பெண்கள், வெளிநாட்டு மாப்பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2015 ஜனவரி முதல் – 2019 அக்டோபர் வரை), வெளிநாட்டு கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களின் புகார் எண்ணிக்கை 6000ஐ எட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.முரளிதரன், இந்த ஆண்டு மட்டும் அக்டோபர் மாதம் 31 வரை, 991 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆங்கில கால்வாயை கடந்த அமெரிக்க நீச்சல் வீராங்கனை

சாரா தாமஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இவர் இந்தாண்டு ஆங்கில கால்வாயை இடைவேளை இல்லாமல் நான்கு முறை கடந்து சாதனை படைத்துள்ளார். வலுவான அலைகள் காரணமாக 209 கி.மீ தூரத்தை, 54 மணி நேரத்தில் வெறும் நீராகாரம் கொண்டு முடித்துள்ளார் 37 வயது நிரம்பிய சாரா.

இவர் நீந்தும் போது இவரின் குழு உடன் படகில் சென்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இவர் சோர்வடையாமல் இருக்க ஆப்பிள் பழரசம், எலக்ட்ரோலைட், கார்போஹைட்ரேட் மற்றும் கேஃபைன் கலந்த ஹெல்த்தி பானத்தை கொடுத்துள்ளனர். இதுவரை நான்கு பேர் இந்த கால்வாயை மூன்று முறை கடந்துள்ளனர். அந்த சாதனையை முறியடித்து இருக்கும் சாரா மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து ஒரு வருடம் கழித்து இதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பிங்க் காலம்!

இந்தியா முழுக்க பிங்க் சாரதி என பெண்களுக்கான டாக்சிகள் வலம் வந்துகொண்டு இருக்க, சூரத்தில் சத்தமில்லாமல் பிங்க் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது சூரத் நகராட்சி நிறுவனம். பெண்களுக்காக இயக்கப்படும் இந்த ஆட்ேடா சேவையில் ஓட்டுனராக பதிவு செய்துள்ள முதல் பெண்மணி என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் முனிரா பானு.

43 வயதாகும் இவரின் பெயரில் இரண்டு பிங்க் ஆட்டோக்கள் சூரத் நகரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி முதல் லைசென்ஸ் மற்றும் அதற்கான யுனிஃபார்ம், நகராட்சி நிறுவனம் வழங்கியது மட்டுமில்லாமல் ஆட்டோ வாங்குவதற்காக வங்கி கடனும் பெற்றுத்தந்துள்ளது. தனக்கு ஒரு வாழ்வாதாரமாக அமைந்து இருப்பது போல் மற்ற பெண்களுக்கும் அமைய வேண்டும் என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் முனிரா பானு.

பாலியல் துன்புறுத்தலுக்காக ரயிலை நிறுத்தக்கூடாது

28 வயதான பெண் ஒருவர், கொச்சுவேலி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவருடைய நண்பர்கள் இருவரும் அதே ரயிலில் இருந்துள்ளனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணிடம் ஒருவன் அத்துமீறி நடந்துகொண்டு தப்பி ஓட முயன்றுள்ளான். உடனே நண்பர்கள் சேர்ந்து அவனை பிடித்துள்ளனர்.

குற்றவாளியை அதிகாரிகளிடம் ஒப்படைக்க சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கிறார் அவர் நண்பர். அப்போது, ரயிலை நிறுத்த இதெல்லாம் ஒரு காரணமா என்று கூறி, சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நண்பருக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளனர். பின் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததில், அத்துமீறி நடந்துகொண்ட சுனிஷ் (32 வயது) என்பவன் மீது வழக்கு பதித்து, விசாரணை செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு தேடி வரும் பார்லர்கள்!! (மகளிர் பக்கம்)
Next post காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)