மாசற்ற சருமத்திற்கு மாதுளை!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 15 Second

உணவே மருந்து

அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள மாதுளம் பழம் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளது. மாதுளையின் பூர்வீகம் ஈரான் என்று சொல்லப்பட்டாலும் 5000 ஆண்டுகளாக ஈரானில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளிலும், வெப்ப நாடுகளான சீனா, இந்தியா, கலிபோர்னியா, மெக்ஸிகோ, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் பயிரிடப்பட்டு வருகிறது.

மாதுளை வெப்ப காலங்களிலும், மிதவெப்ப காலங்களிலும் நன்றாகப் பலன் தரும். மாதுளை பழம் தமிழில் பீசபுரம், மாதுளம், மாதுளங்கம், தாடிமம் மற்றும் கழுமுள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் பொமேகிரானட் (Pomegranate) என்று அழைக்கப்படுகிறது.

மாதுளையின் தாவரவியல் பெயர் புனிகா கிரனேட்டம் (Punica granatum). மாதுளைப் பழத்தில் இனிப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என மூன்று வகைச் சுவைகள் உள்ளன. இதனாலேயே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரும் மாதுளையை விரும்பி உண்கின்றனர்.

மாதுளம் பழத்தின் தோல், முத்துக்கள், அதன் உள்ளிருக்கும் விதை என ஒவ்வொரு பகுதியும் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன. இதன் மருத்துவப் பலன்களோ எண்ணற்றவை. வயிற்றுப்போக்கு, ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள், நீரிழிவு நோய், தொண்டைப்புண், அழற்சி வீக்கம் (Inflammation) மற்றும் வாத நோய்க்கு சிகிச்சையளிக்க மாதுளையை பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

மாதுளையில் இருக்கும் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நாட்பட்ட நோய்களால் ஏற்படும் அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் அரணாக செயல்படுகின்றன. மாதுளையில் உள்ள ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் நோயைத் தடுக்கும் காரணிகள் காரணமாக மிகவும் ஆராயப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட பழங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

மேலும் மாதுளைச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், இதய வெப்பத்தை மேம்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துதல், எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் ரத்த அழுத்த அளவைப் பராமரித்தல் போன்று பல்வேறு நன்மைகளை பெற முடியும்.புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களுக்கும், இதய அடைப்பு உள்ளவர்களுக்கும் மிக பயனுள்ள பழமாக மாதுளை இருக்கிறது. மாதுளம் பழத்தில் உள்ள விதைகள் மற்றும் சவ்வு போன்ற பகுதிகளில் எலகிட்டானின்ஸ் (Ellagitannins), ஹைட்ராக்ஸின்னமிக் அமிலங்கள் (Hydroxycinnamic acids), ஹைட்ராக்ஸிபென்சோயிக் அமிலங்கள் (Hydroxybenzoic acids), ஃபிளாவன்கள் (Flavons), ஃபிளாவனோல்-3-ஓல்ஸ் (Flavonol-3-ols), அந்தோசயனிடின்கள் (Anthocyanidins), அந்தோசயினின்கள் (Anthocyanins) போன்ற இணைந்த மற்றும் இணைக்கப்படாத கொழுப்பு அமிலங்கள், மற்றும் பைட்டோஸ்டெரால்கள் (Phytosterols), வைட்டமின்கள் (Vitamins) மற்றும் தாதுப்பொருட்கள் (Minerals) போன்றவை மிகுந்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

ஆரஞ்சு, திராட்சை, கிரேப் ஃப்ரூட், கிரேன்பெர்ரி பழங்களில் இருப்பதைக்காட்டிலும் மாதுளையில் பாலிபினால்கள் கூறுகள் இருப்பதே இதன் மிகுதியான ஆன்டிஆக்ஸிடன்டுகளுக்கு காரணமாகின்றன. நோய்த்தொற்றுகள் மற்றும் இரைப்பை குடல் நோய்களுக்கு எதிரான தீர்வாக மாதுளை இருப்பதாக நவீன ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு விளைவுகள்

இதய நோய், புற்றுநோய், அல்சைமர் நோய் மற்றும் உடல் பருமன் நோய் போன்ற பல கடுமையான நோய்களுக்கு நாள்பட்ட அழற்சி முக்கிய காரணியாகிறது. இத்தகைய நோய் இருப்பவர்களுக்கு மாதுளைச்சாறில் செய்த சிற்றுண்டிகள் ஆரோக்கியமானதாக இருக்கும். மாதுளையில் இருக்கும் பியூனிகலஜின்கள் (Punicalagins) ஆன்டிஆக்ஸிடன்ட் சக்திவாய்ந்த அழற்சி பண்புகள் இருப்பதே இதற்கு காரணம்.கடந்த இருபது ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், மாதுளையின் பழம், பூ, விதைகள் மற்றும் மாதுளையின் தோல் ஆகியவை நுண்ணுயிரியல் மற்றும் ஒட்டுண்ணி நோய்க்கிருமிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அழற்சி மற்றும் நாள்பட்ட தொற்று நோய்களுக்கு எதிராக ஒரு வேதியியல் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறையாக செயல்படுவதற்கும் இயற்கையான உத்தியாகச் சொல்கின்றன.

மாதுளை சாற்றில், ஆற்றல், நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் ஃபோலேட் மூலக்கூறுகளும் உள்ளன. இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ‘K’, வைட்டமின் ‘C’ போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. கொழுப்புச்சத்து அறவே இல்லாத மாதுளை நிச்சயம் நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது.

வயதான தோற்றத்தை தடுக்கும்

சிறிது இனிப்பு, சிறிது புளிப்பு என வித்தியாசமான சுவை கொண்ட மாதுளை சாறு நம் சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கிறது. மாதுளை சாற்றினை அடிக்கடி அருந்துவதன் மூலம், சூரியனின் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை தடுத்து, நம் உடலில் வயதான செயல்முறையை மெதுவாக்குவது, முடி உதிர்வதைத் தடுப்பது, சருமத்திற்கு மினுமினுப்பை கொடுப்பது கூந்தல் மற்றும் சருமப் பராமரிப்பை மேம்படுத்த முடியும். பல தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களில் இப்போது மாதுளைச் சாற்றினைச் சேர்க்கிறார்கள்.

மாதுளை விதைகளில் உள்ள மூலக்கூறு சருமத்தில் ஊடுருவி, ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுப்பதால், சருமத்தை எப்போதும் உலரவிடாமல், ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மாதுளையில் உள்ள ஃபைப்ரோபிளஸ்ட்ஸ்கள், எலாஸ்டின் மற்றும் கொலாஜனை உற்பத்தி செய்யும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் பராமரிக்கப்பட்டு, சீக்கிரம் வயதானத் தோற்றத்தை கொடுக்கும் அறிகுறிகளைக் குறைக்கிறது. மாதுளையில் உள்ள வைட்டமின் ‘K’ மற்றும் ‘A’ முடியின் வேர்க்கால்களை வலிமையடையச் செய்கிறது. இளவயதிலேயே இளநரை மற்றும் சாம்பல் நிறம் (Grey hair) இருப்பவர்களுக்கு மாதுளை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

ரத்த சோகையிலிருந்து விடுதலை

வைட்டமின் ‘C’ மிகுந்துள்ள மாதுளைச்சாறு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையின் அறிகுறிகளை மேம்படுத்த உதவும்.
வைட்டமின் ‘K’ மற்றும் ஃபோலேட் இரண்டிற்கும் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும் மாதுளை சாறு ரத்த உறைவைத் தடுப்பதோடு, ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது.

நல்ல செரிமானத்திற்கு…

மாதுளை சாற்றில் அதிக அளவு கரையக்கூடிய மற்றும் கரையாத உணவு நார்ச்சத்து (Dietry fibre) செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் குடல் இயக்கத்தை சீராக்கவும் உதவுகிறது. வயிற்றின் சீரான செயல்பாட்டில். நார்ச்சத்தானது, பசியைக் குறைக்க உதவுகிறது. இதில் கொழுப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், இது உங்கள் வயிறு மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறந்த பானமாகிறது.

எலும்பு உறுதிக்கு…

எலும்பு வீக்கம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற அறிகுறிகளைப் போக்க மாதுளை சாறு உதவுகிறது. ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸுக்கு காரணமான என்சைம்களின் தடுப்பானாக செயல்படுவதால், மூட்டுச்சவ்வு தேய்மானம் போன்ற நாட்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதுளைச்சாறு நன்மை பயக்கும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

ஒரு ஆய்வின்படி, சர்க்கரை சேர்க்காத மாதுளை சாறு உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறனை வெளிப்படுத்துகிறது. மாதுளை சாற்றில் உள்ள பொட்டாசியம் தாது உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க பயன்படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்புத் திறன்

பெருங்குடல், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் மாதுளை சாறுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆய்வுக்கூற்றுப்படி, இந்த சாற்றை தினமும் குடிப்பதால் ஆண்களுக்கு வரக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயின் முன்னேற்றத்தை கணிசமாகக் குறைக்கும். இந்த சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெள்ளை ரத்த அணுக்களைத் தூண்டுவதோடு, உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்குகின்றன.

நினைவாற்றல் அதிகரிக்க…

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூசன் ஒய் புக்ஹைமர் விலங்கு மாதிரிகளில் நடத்திய ஆய்வில், மாதுளை சாறில் உள்ள பாலிபினால்கள் நினைவகத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு மாதிரிகளில் நரம்பணு உருவாக்கம் ஏற்படுவதைத் தடுக்கின்றன என்பதால், மாதுளை சாறு அல்சைமர் நோய் சிகிச்சையில் கண்டிப்பாக பயனளிக்கும் என்று கண்டறிந்துள்ளார்.

பல் ஆரோக்கியத்திற்கு…

மாதுளைப் பழச்சாற்றில் உள்ள அதிக அளவு பாலிபினோல் மற்றும் பிளவனாய்டுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய கலவையாக இருப்பதால் சிறந்த மவுத் வாஷாக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தினை நீக்குகிறது. மேலும், மாதுளைப் பழச்சாற்றினைத் தொடர்ந்து குடித்து வருவதால் பல் தகடு (Dental Plaque) உருவாகுவது தடுக்கப்படுகிறது. பாக்டீரியாவினால் பற்களில் ஏற்படும் துவாரங்கள் மற்றும் ஈறு அழற்சியினை குணப்படுத்தவும் உதவுகிறது.

இருந்தபோதும், மாதுளையில் இனிப்புச்சுவை அதிகம் இருப்பதால், நீரிழிவு நோய், உயர்கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்த நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மிதமாக எடுத்துக் கொள்வது நல்லது. ஆஸ்துமா, கண்அரிப்பு, சுவாசக்கோளாறு போன்ற அலர்ஜி நோய் உள்ளவர்களும் மருத்துவ அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்!! (உலக செய்தி)
Next post மாதவிலக்கு!! (அவ்வப்போது கிளாமர்)