பதறவைக்கும் பருவ நிலை மாற்றம்!! (மருத்துவம்)
கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று பக்கமும் கடல் சூழ்ந்துள்ள தீபகற்ப நாடு இந்தியா. இதில் பருவநிலை மாற்றம் காரணமாகவும் கடல்மட்டம் உயர்வாலும் தமிழகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால் நாட்டின் இரண்டு கடல்களின் செல்வாக்கைக் கொண்ட ஒரே மாநிலம் இதுதான். கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் சந்திக்கும் அதிகபட்ச வறட்சி புயல், வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் பெரும்பாலும் காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடே ஆகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காலநிலை மாற்றத்தின் கூடுதல் தாக்கத்தை கடல் கொண்டு வருகிறது என்பதுதான்.
பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடற்கரையில் கடல் நீர் மட்டம் 8.5 செ.மீ உயர்ந்து, சராசரியாக ஆண்டுக்கு 1.7 மிமீ அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் 10 முக்கிய துறைமுகங்களின் தரவுகளை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.பாபுல் சுப்ரியோ தனது எழுத்துப்பூர்வ பதிலில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். உலகளவில் கடல் மட்டம் தற்போது ஆண்டுக்கு 3.6 மிமீ என்ற விகிதத்தில் துரிதமாக உயர்ந்து வருவதை ஐ.நா.வின் சமீபத்திய காலநிலை மாற்றத்திற்கான குழு(ஐபிசிசி) அறிக்கை காட்டுகிறது.
நம் இந்திய கடற்கரையில் கடல் மட்ட உயர்வு ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.7 மி.மீ இருந்தாலும், உலகளாவிய தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்த அளவு கிட்டத்தட்ட பாதியை எட்டிவிட்டது என்றே கூறலாம். இதற்கு உதாரணமாக 2016 டிசம்பரில் ஏற்பட்ட வர்தா புயலைச் சொல்லலாம். தமிழ்நாட்டைத் தாக்கும் சூறாவளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று. கடல் வெப்பநிலையின் மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் பரப்பளவை குறைத்து விடக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
உயர்ந்து வரும் கடல் மட்டங்களும் தமிழ்நாட்டின் கடற்கரையை விரைவான விகிதத்தில் அரிக்கின்றன. இஸ்ரோ மற்றும் நீர்வள அமைச்சகம் நடத்திய 2015 ஆம் ஆண்டு ஆய்வின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையிலிருந்து 281 கிலோமீட்டர் தொலைவில் ஏற்கனவே கடலால் அரிக்கப்பட்டுவிட்டது’ என்று குறிப்பிடுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து மேற்கொண்ட ஆய்வறிக்கை விஞ்ஞான இதழான எல்சேவியர் 2012-ல் வெளியிடப்பட்டது.
அதில் கடலூர் மாவட்டத்தில் கடல் மட்டங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், வெள்ளம் மற்றும் சூறாவளிக்கு ஆளாகக்கூடியதாகவும், அரசாங்கத்தின் உடனடி தலையீட்டை வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக விவசாயம், சதுப்பு நிலங்கள் மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய மூன்று முக்கிய வளங்கள் கடல் மட்ட உயர்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த வளங்களை நம்பியுள்ள சமூகங்கள் வாழும் 20 குக்கிராமங்களில், கிட்டத்தட்ட ஐந்து மீன்பிடி குக்கிராமங்கள் மற்றும் 6 விவசாய குக்கிராமங்கள் மற்றும் ஒரு மீன்பிடி மற்றும் விவசாய குக்கிராமம் கடல்நீர்மட்ட உயர்வால் அதிக ஆபத்தில் இருக்கலாம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முழு தொழிற்துறை ஆதாரங்களும், அதிலும் குறிப்பாக நச்சுக்களை வெளியிடும் தொழிற்சாலைகள் கடற்கரைகளில் அமைந்துள்ளது. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. ஏனெனில் வெள்ளம் அல்லது இயற்கை பேரழிவுகளின்போது, சுற்றுச்சூழலை மேலும் மாசுபடுத்தி மக்களை மிகவும் பாதிக்கும். வெள்ளத்தின்போது, நீரோடு தொழிற்சாலை நச்சு ரசாயனங்கள் கலந்து மக்களுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்கிறது இஸ்ரோவின் ஆய்வறிக்கை.
வெப்ப மண்டல நாடுகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக இயல்பைவிட விரைவாக தொற்று நோய்கள் பரவுவதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய வெக்டர் போர்ன் நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (National Vector Borne Disease Control Programme NVBDCP) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது உண்மை என்பதை, சமீபத்திய வெப்பநிலை மாற்றம், ஒழுங்கற்ற பருவமழை மற்றும் வெள்ளத்தால் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதை நாம் அறிவோம். ஏனெனில், நம்மூர்களில், வெப்பமும் ஈரப்பதமும் சேர்ந்தே இருக்கிறது.
மேலும், நகர்ப்புற திட்டமிடல் மிக மோசமாக இருப்பதால் மழைக்காலங்களில் ஆங்காங்கே நிறைய நீர் தேங்கிவிடுகிறது. இப்படி வெள்ளம், நீர்த்தேக்கம், வெப்பநிலை உயர்வு எல்லாம் சேர்ந்து கொசு உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு நோய்கள் வேகமாக பரவுவதற்கான சூழலை அதிகரிக்கின்றன. இன்னும் போகப்போக இதன் பாதிப்பு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர, குறைவதற்கான வழி இல்லை. பருவநிலை மாற்றம் குழந்தைகளின் சுகாதாரத்தில் ஏற்படுத்தும் மோசமாக விளைவுகளைப் பற்றி பிரபல மருத்துவ ஆய்வு இதழான Lancet அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகள் மத்தியில் உள்ள 41 அம்சங்களை 35 நாடுகளைச் சேர்ந்த 120 அறிஞர்கள் கணக்கிட்டு பருவநிலை மாற்றம் குழந்தைகளின் சுகாதாரத்தை மோசமாக பாதிப்பதுடன் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் வரும் சந்ததியினரின் நலமே சீர்கெடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகள் மத்தியில் சத்துக்குறைப்பாடும், உணவு விலை ஏற்றம் காரணமாகவும் இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்கும் என கணக்கிட்டுள்ளது. முக்கிய உணவான அரிசி, சோளம் இவற்றின் உற்பத்தி பருவநிலை மாற்றம் காரணமாக 2% குறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 வயதிற்கு கீழ் உள்ள 2/3 குழந்தைகள் இறப்பிற்கு சத்துக்குறைவே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் Vibrio பாக்டீரியாவின் தாக்கம் வருடத்திற்கு 3% அதிகமாகி வருவதால் குழந்தைகளின் நலம் மோசமாகியுள்ளது.
இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகியுள்ளது. வெயிலின் தாக்கம்(Heat waves) காரணமாகவும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது. இந்தியா உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்காவிடில் 50 ஆண்டுகள் நாம் அடைந்த சுகாதார மேம்பாடு பாழ்படும் என்பதை இந்தியா உணர்ந்து செயல்பட வேண்டும் என இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. வெளிக்காற்று மாசு காரணமாக இந்தியாவில் PM 2.5 மைக்ரான் அளவு அதிகரித்து 5,29,500 பேர் முன்கூட்டியே இறக்கும் அவலம் உள்ளதாகவும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் பிறக்கும்போதே குறைந்த எடை (Low birth weight) உள்ளவர்களாய் பிறப்பது தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சூப்பர் எல் நினோ ஆண்டான கடந்த 2016-ம் ஆண்டிற்கு அடுத்ததாக இரண்டாவது அதிக வெப்ப ஆண்டாக இந்த 2019-ம் ஆண்டு இருப்பதாக நாசா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய மத்திய, மாநில அரசுகள் தரும் தரவுகள் சரியானவை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இது சம்பந்தமாக அரசின் பார்வை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்திக்கப் போகிறோம்.
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களின் விளைவுகள் பற்றிய தகவல்கள் இல்லாதது, கடல் அரிப்பால் ஏற்படும் அபாயங்கள், மாசுபாட்டைத் தவிர பிற ஆபத்துகள், கடற்கரையின் அரிப்பு என எந்த அளவையும் அறிய மாநில அரசு எந்த விரிவான ஆய்வும் மேற்கொள்ளவில்லை. சேதம் மற்றும் எதிர்காலத்திற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் போதுமான திட்டங்கள் அரசின் வசம் இல்லை. சமீபத்தில் டெல்லியில் நடந்த காற்று மாசு தொடர்பான விவாதத்தில் 29 பேர் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பில் வெறும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டது அதிகாரிகளின் மெத்தனத்திற்கு சரியான உதாரணம்.
ரசாயனக் கழிவுகள் மட்டும் இல்லை, மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையும் சரி வர இயங்கவில்லை. நகரங்களிலிருந்து எடுக்கப்படும் குப்பைகளை புறநகரில் கொண்டு கொட்டி எரிக்கிறார்கள். இந்தப் புகையால் அங்கிருக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு, புவி வெப்பமயவாதற்கும் ஒரு காரணமாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேளம்பாக்கம் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடும் திருப்தியாக இல்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
விதிகளை மீறி வெளியிடும் ரசாயனக் கழிவுகளை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளை தண்டிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் நிலையான திட்டமிடல் சாத்தியமில்லை என்றாலும், அடிப்படை திட்டங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதில், ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் அவசரகால முடிவெடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது போன்றவை பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவதற்கான முயற்சிகளின் முதல் படியாக இருக்கும்.
இதில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் வரைபடங்களை உருவாக்குவது மற்றும் பேரிடர் காலங்களில் விரைந்து செயல்படக்கூடியவர்களுக்கான பயிற்சி அளிப்பது போன்றவை மிக முக்கியம் வாய்ந்த திட்டங்களாக இருக்க வேண்டும். மேலும், மருத்துவப் பயிற்சியாளர்கள், துரிதமாக பரவும் நோய்களை கண்டறிந்து விரைந்து சிகிச்சை அளிக்கக்கூடிய உபகரணங்களை கையாளும் திறனுள்ளவர்களாக பயிற்சி எடுத்துக் கொள்வதும் அடங்கும். ஏனெனில் அந்தப் பயிற்சியின் மூலம் அவர்கள் சாத்தியமான அச்சுறுத்தல் களை எதிர்கொள்ளும் முறைகளை அறிந்திருப்பார்கள்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில், சென்னையின் காற்று மாசு முதலில் கடற்கரையோரங்களில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள், அணு மின் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது. புவி வெப்பமயமாவதற்கு தொழிற்சாலை உமிழ்வுகளே மிக முக்கிய காரணமாகின்றன. சில ஆண்டுகளுக்குமுன் மெரினா கடற்கரையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது வாளியில் அகற்றும் தொழில்நுட்பத்தைத்தான் அனைவரும் பார்த்தோமே… இதிலிருந்தே அரசிடம் அவசரகாலத் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
மத்திய அரசும், மாநில அரசும் புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து, அது சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அடுத்து அதைத் தடுப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தினை வகுத்தல் இந்த மூன்று நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தினால் மட்டுமே அடுத்தடுத்து சென்னைக்கு மட்டுமில்லாமல் தமிழகத்துக்கும் வர இருக்கும் பேராபத்தில் இருந்து நம் மக்களைக் காப்பாற்ற முடியும்.
* அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக விரைவாக தொற்று நோய்கள் பரவுகின்றன.
Average Rating