இயற்கையின் கோரம்; இன்னும் எதிர்கொள்ளப் பழகவில்லை!! (கட்டுரை)
வெள்ளப் பெருக்குகள், மண்சரிவுகள் என இலங்கையில் தொடர்ந்து இயற்கை அனர்த்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்றுவருகின்றன. இதனால் பல உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன.
பொதுவாக வெள்ளப் பெருக்கானது தலைநகர் கொழும்பு மாநகர் முதல் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களில் ஏற்படுகிறது. ஆனால், மண்சரவுகள் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலேயே தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. இலங்கையில் அதிகளவான மலை பிரதேசங்களை கொண்டவையாக இந்த இரண்டு மாகாணங்களுளே காணப்படுவதால் இங்கு வெள்ளப் பெருக்கையும் காட்டிலும் மண்சரிவுகள்தான் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாண்டில் இரண்டு தடவை மண்சரிவுகளும், வெள்ளப்பெருக்கும் நாட்டை உலுக்கியுள்ளன. வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கு முன்னர் அவை தொடர்பில் மக்கள் அறிந்துள்ளனரா அல்லது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தொடர்சியாக கருத்துகள் முன்வைக்கப்படும் கேள்வியாகவுள்ளது.
இலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் தகவல்களை மக்களுக்கு வழங்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள் உள்ளன. வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவையாகும். இந்த மூன்று நிறுவனங்களுக்கு அப்பாலும் பல நிறுவனங்கள் உள்ளன. தினமும் நாட்டில் ஏற்படும் காலநிலை சீர்கேடுகள் தொடர்பில் மக்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றன.
நாட்டில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் தொடர்பில் வளிண்டலவியல் திணைக்களம் தினமும் மூன்று தடவைகள் தகவல்களை மக்களுக்கு வழங்குகிறது. காலை 6.00 மணி, நண்பகல் 12.00 மணி மற்றும் மாலை 4.00 மணியென்ற அடிப்படையில் வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கிறது. அவை பத்திரிகை, வானொலி, தொலைக்காட்டி இணையமென அனைத்து ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன.
100 மில்லி மீற்றர், 150 மில்லி மீற்றர், 200 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடுமென கூறப்படும் சந்தர்ப்பங்களில் ஆற்றுப்பகுதியை அண்டி மக்கள் பெரும் அவதானமடைய வேண்டும். ஆனால், அவ்வாறு மக்கள் விழிப்புணர்வு அடைகின்றனரா எனக் கேள்வியெழுகிறது. 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி சில தினங்களுக்கு தொடர்ச்சியாக பதிவாகிவந்தால் அடுத்தகட்டமாக நீர்க்தேகங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் கதவுகள் திறக்கப்படும்.
வான் கதவுகள் திறக்கப்படும் போது ஆறுகளின் நீர்மட்ட மேலும் உயர்வடைந்து வெள்ளப் பெருக்கெடுக்கும். இது சாதாரண நடைமுறை இதனை சீரற்ற காலநிலை நிலவும் காலப்பகுதியில் ஆற்றங்கரைகள் மற்றும் ஏனைய நீர்நிலைகளை அண்டி வாழும் மக்கள் அறிந்துக்கொள்வது கட்டாயமாகும்.
மக்களுக்கு தகவல்களை வழங்கவும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது உடனடியாக நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவுமே இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கிளை அலுவலகங்கள் உள்ளன. வெள்ளப் பெருக்கு உட்பட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான தகவல்களை இந்நிறுவனம் மக்களுக்கு வழங்கும்.
குறிப்பாக வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கையுள்ள பகுதிகளுக்கு இந்நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை தொடர்ச்சியாக விடுத்திருக்கும். சீரற்ற காலநிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில்தான் அதிகமாக வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
அதேேபான்று மண்சரிவு தொடர்பிலான எச்சரிக்கைகளை தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவனம் மக்களுக்கு வழங்கும். குறிப்பாக மண்சரிவு அபாய எச்சரிக்கையுள்ள நிலங்கள் மற்றும் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கும். மண்சரிவொன்று ஏற்பட்ட பின்னர் குறித்த பகுதிக்கு தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகளையும் நாம் காண்கிறோம்.
மண்சரிவுகள் தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் மக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை வழங்கி பின்புலத்தில்தான் கடந்த சனிக்கிழமை (30.12.2019) வலப்பனையில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த இடத்தில் மண்சரிவு ஏற்படுமென 2007ஆம் ஆண்டே தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. என்றாலும், குறித்த வீட்டு உரிமையாளர் அந்த இடத்திலிருந்து குடிபெயரவில்லை. அவருக்கு அரசாங்கம் மாற்றுதவி வழங்கியுள்ளதா என்பது ஒருபுறமிருக்க இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த அவர், சீரற்ற காலநிலை காலங்களின் போதாவது குறித்த குடியிருப்பிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும்.
அதேபோன்று மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் மக்கள் அவதானமடைய வேண்டும். 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற மீரியபெத்த மண்சரிவை எவரும் இலகுவாக மறந்துவிட்டு செல்ல முடியாது. மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்த அபாய எச்சரிக்கைகள் தொடர்பில் மக்கள் எப்போதும் அவதானத்துடன்,
செயற்பட வேண்டுமென்பதுடன், அச்சுறுத்தலான இடங்களிலிருந்து அரசாங்கத்தின் மூலம் அல்லது ஏதோ ஒரு முறைமையின் கீழ் குடிபெயர்வதே பொருத்தமானதாக அமையும்.
வெள்ள அனர்த்தம் தொடர்ச்சியாக ஏற்படும் இடங்களில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களையும், இழப்பீடுகளையும் புதிய வீடுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது. குறிப்பாக கொழும்பில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகளையும் மாற்று குடித்திட்டங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. அவ்வாறு புதிய வீடுகளையும் பெற்றுக்கொண்டவர்கள் அவ்வீடுகளை வாடகைக்கு கொடுத்துவிட்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பழைய இடத்திலேயே வசிக்கின்றனர். ஒருபுறத்தில் மக்கள் அரசாங்கத்தை ஏமாற்றுவதுடன், மறுபுறம் மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது பாரிய அளவில் அரசாங்கம் நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது.
வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு முதல்கட்டமாக வீடுகளையோ அல்லது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லை. அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் வீடுகளை கொடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் நிதியில் அரை பங்குக்கும் அதிகமான நிதியை ஊழல் செய்வதாலும் இந்த அவலங்கள் தொடர்கதையாகவுள்ளன.
2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது சர்வதேச ரீதியில் பாரிய நிதியுதவிகள் இலங்கைக்குக் கிடைத்தன. அந்நிதியை கொண்டு ஒட்டுமொத்தமாக கடற்கரைகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர செய்திருக்க முடியும். ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் கடற்கரையோரங்களிலேயே இன்றும் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றதாக ஒவ்வொரு தேர்தல் மேடைகளில் குரல்கள் ஒலித்த வண்ணம்தான் உள்ளன.
அரச இயந்திரம் அல்லது பொறிமுறைகள் முறையாக இல்லாமையின் காரணமாகவே இயற்கை இடர்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாதுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன. 1975ஆம் ஆண்டுவரை 2018ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிவரை 150வரையான மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் இவையனைத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பின்புலத்திலேயே இடம்பெற்றதாகவும் தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் கூறுகிறது.
மண்சரிவுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் நீண்டகாலமாக மக்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர். மண்சரிவு எச்சரிக்கையை விடுத்து மக்களை குறித்த பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறும் அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளை அமைத்துக்கொள்வதற்கு உதவிகளை செய்ததில்லை.
வறுமையான மக்கள் உடனடியாக மாற்றுக் குடியிருப்புகளை நோக்கி நகர்வது மிகவும் கடினமானது.
அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுப்பதைப் போன்றே, அனர்த்தம் ஏற்படவுள்ள பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றுவதும் அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அனர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஒரு பகுதியில் அனர்த்தம் ஏற்படுகின்றது என்றால் அங்கிருந்து வெளியேறுகின்ற மக்கள் எங்கு செல்வார்கள்? அவர்களது வாழ்விடங்களுக்கான உறுதிகள் என்ன? என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதனால்தான் மீரியபெத்த பேரவலம் இடம்பெற்றது.
இன்னமும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீரியபெத்தவை அண்டிய சில பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பெருந்தோட்ட மக்கள் வாழும் பல பகுதிகள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டவையாகும்.
ஆனால், அவர்கள் உடனடியாக எவ்வாறு வெளியேறுவது?. தோட்டத் தொழில் ஈடுபடும் அந்த மக்களின் மாத வருமானமோ 15ஆயிரத்தை தாண்டாது. அவ்வாறான பின்புலத்தில் உடனடியாக குடியிருப்பொன்றை அவர்களால் அமைத்துவிட முடியாது.
இயற்கை அனர்த்தங்களை எவராலும் தடுக்க முடியாதென கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாயினும், இலங்கையில் சுனாமியை தவிர்ந்து ஏனைய அனர்த்தங்கள் தொடர்பில் பெரும்பாலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டே வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தில் சுனாமி ஏற்படுவதைகூட கண்டறிய கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டன. ஆகவே, அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள அரசாங்கம் ஒரு நிலையான பொறிமுறையொன்றை வகுத்துச் செயற்படுவது கட்டாயமாகும்.
கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை 50ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக இம்முறை வடக்கு, கிழக்கு பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.
பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேபோன்று தென் மாவட்டங்களான காலி, மாத்தறை, மொனராகலை, களுத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்குகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது.
இயற்கை சீற்றங்கள் இலங்கை போன்ற வளரும் நாடுகளுக்கு பெரிய சவாலாகும். 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டு இரண்டுமுறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தேசிய பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பாகும். புதிய அரசாங்கமாவது வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமையளித்து அரசாங்கம் வீடுகளை வழங்க வேண்டும். அதேபோன்று மக்களும் சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை இடர்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் நடந்துக்கொள்வதன் மூலமே ஆபத்துகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.
குறைந்தப்பட்சம் உயிரிழப்புகளையாவது தவிர்த்துக்கொள்ள அனர்த்தங்கள் தொடர்பில் அரச நிறுவனங்கள் வழங்கும் தகவல்களின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
Average Rating