‘பாவம் தமிழ் மக்கள்’ !! (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கடந்த வாரம் “தமிழ்க் கட்சிகள் அனைத்தும், ஓரணியில் திரளவேண்டும்; இங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள், மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கூட்டமைப்பு எவரையும் வெளியேற்றவில்லை” எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அறிவிப்பானது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடியது தான். ஆயினும், இவ்வறிவிப்பின் உண்மைத் தன்மை குறித்து, சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இந்த அழைப்பு, இதயசுத்தியுடனானதா என்பது தொடர்பாகத் தமிழ் மக்கள், தமக்குள் தாமே கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
ஏனெனில், இந்த அறிவிப்பைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ, செயலாளரோ, மாவை சேனாதிராஜாவோ விடுத்திருக்கவில்லை. இந்தப்பத்தி எழுதப்படும் வரை, கூட்டமைப்பினர் சார்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ எந்த அழைப்பையும் விடப்படவில்லை. எனவே, மேற்குறிப்பிட்ட பகிரங்க அழைப்பு, எந்தளவு தூரம் உண்மைத் தன்மை உடையது எனச் சிந்திக்கத் தூண்டுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், சுமந்திரனால் விடப்பட்ட அழைப்பு, எவ்வளவு தூரம் உண்மைத் தன்மை உடையது என்பதற்கு அப்பால், தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டமைப்பில் இருந்து, ஏனைய கட்சிகள் வெளியேறுவதற்கு அல்லது தானாக வெளியேறும்படியான சூழ்நிலைகளைத் தமிழரசுக் கட்சி தோற்றுவித்திருந்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்குத் காரணம் தமிழரசுக் கட்சி, தன்னை முதன்மைப்படுத்திய போக்கு, என்பதைத் தமிழ்மக்கள் மறப்பதற்கில்லை.
ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாப்பு ஒன்று இதுவரை இல்லை; அதிகாரப் பங்கீடு இல்லை; பன்மைத்துவ ஜனநாயகம் இல்லை; பொதுச் சின்னம் இல்லை; வெறுமனே வாக்குகளைச் சிதறடிக்காமல் வீட்டுச் சின்னத்தில், கூட்டமைப்பு என்ற பெயரில், தமிழரசுக்கட்சி மற்றவர்களின் உழைப்பை அனுபவிக்கும், சுயலாப அரசியல் நடத்தும் எதேச்சதிகாரச் செயற்பாடாகவே, அதன் பங்காளிக் கட்சிகளால் உணரப்பட்டதுடன் சுட்டிக்காட்டவும் முயற்சிக்கப்பட்டது.
இதன் விளைவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன், அனந்தி சசிதரன் எனத் தலைமைகளும் அவர்கள் சார் கட்சிகளும் வெளியேறக் காரணமாக அமைந்தன.
அரசியல் பின்புலம் ஏதுமற்ற, நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியே அறிமுகம் செய்தது. காலப்போக்கில் தமிழரசுக் கட்சியில் நடவடிக்கைகள், ஜனநாயக விரோதப் போக்குகள், செயற்பாடுகள், கொள்கைகள் போன்றவை சி. வி விக்னேஸ்வரனையும் கூட்டமைப்பு என்ற கூடாரத்தில் இருந்து வெளியேறிச் செல்ல வழி சமைத்தது.
இந்த வெளியேற்றங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக உரிமையை அனுபவிக்க முயலும் தமிழரசுக் கட்சிக்கு, பெரியதொரு தலைவலியாக உள்ளது. ஏனெனில், சிதறடிக்கப்படும் வாக்குகள் மூலம், தமது கட்சியின் பிரதிநிதித்துவம், ‘போனஸ்’ ஆசனங்கள் போன்றவற்றை இழக்கும் சூழ்நிலைகள் காணப்படுகின்றன.
‘கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்பதுபோல், எதிர்கடை அற்ற அரசியல், விடுதலைப் போராட்டத்தை வழி நடத்துவதான வாய்ச்சவடால், பத்திரிகை அறிக்கை, முறையான வேலை திட்டம் இல்லாமை, தேசிய இனப் பிரச்சினையைக் காரணம் காட்டி, அரசியல் நடத்தும் முறைமையை போன்றவை, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இனி…?
அண்மையில், ஜனாதிபதித் தேர்தலில், 13 அம்சக் கோரிக்கையை ஆமோதித்து விட்டு, ஐ.தே.க தேர்தல் விஞ்ஞாபனம் இதைத்தான் குறிப்பிடுகிறது என மக்களுக்கு கதை சொன்னது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஆனால், மக்கள் ஐ.தே.கவுக்குச் சார்பாக வாக்களிக்க எடுத்த முடிவு, தமக்குச் சாதகமாகி விட்டதால், அந்த வெற்றியை அனுபவித்தனர். ஆனால், அதிகார ரீதியாகக் கோட்டா வென்றதால், இப்போது அந்தக் கோரிக்கைகளை கைவிட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முனைந்துள்ளனர். இதற்கு இந்த வாரத்தில், தமிழரசுக் கட்சி விடுத்த அறிக்கைகளே சாட்சி.
இந்த வகையில், தமிழரசுக் கட்சி கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் தவறாக வழிநடத்த முனைகிறதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக, பல்வேறுபட்ட முயற்சிகள் அண்மைக் காலங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமசந்திரனின் கூட்டு முயற்சி, கஜேந்திரகுமாரது சுயநல அரசியல் காரணமாகக் கானல் நீரானது.
இத்தகைய சூழலில், தமிழ் மக்கள் பேரவை, ஈ.பி.ஆர்.எல்.எப், கஜேந்திரகுமார், ஜனநாயகப் போராளிகள், ஆனந்தசங்கரி ஆகியோரின் கூட்டு என முனைந்த போதும், இறுதியில் ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டாக அமைந்ததுடன், உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமாரது கட்சியும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கூட்டும் தனித்தனியே வாக்குகளை பங்கு போட்டதும் ஆனந்தசங்கரியாால் ஈ.பி.ஆர்.எல்.எப் வஞ்சிக்கப்பட்டதும் வரலாறு.
இத்தகைய சூழலில், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், கடந்த அரசியல் நிலைவரங்களினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் நகர்வுகளினதும் அதன் செயற்றிறன் தூரநோக்கற்ற நடவடிக்கைகள் தொடர்பில் விரக்தியுற்று வெளியேறிய பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய அரசியலைச் சரியானதோர் இலக்கு நோக்கி நகர்த்த, ‘கீரைக் கடைக்கும் எதிர்க்கடை’ என்ற தத்துவத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுகளிலிருந்து, அதனை திருத்திக் கொள்வதற்கும், தமிழ்த் தேசிய அரசியலைச் சரியானதொரு தெளிவான பாதையில் தடம் புரளாமல் இட்டுச் செல்வதற்கும் மாற்று தலைமையை வேண்டி நிற்கின்றன.
இந்தவகையில் மாற்றுத் தலைமை அரசியல் என்பது, காலத்தின் தேவையாக இருந்த போதும், இந்த மாற்றுத் தலைமை அரசியல் மோதலானது, ஆரோக்கியமான அரசியல் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்.
மாறாகத் தமிழர் தம் வாக்குப் பலத்தை இழந்து, தீர்வை இழந்து, தியாகங்களை இழந்து, அவற்றை மறந்து எமது இருப்புகளைக் கேள்விக்குறியாக்குவதுடன் தமிழர் பிரதிநித்துவத்தைச் சிதைப்பதாக அமையக்கூடாது.
ஆரோக்கியமான அரசியல் நகர்வுகள், ஜனநாயகப் பண்புடன் மீட்சிபெறவேண்டும். கால, தேச வர்த்தமானங்களுக்கு அமைவாக, வடக்கிலும் கிழக்கிலும் நிலைபெறும் மாற்றுத் தலைமை அரசியல் என்பது, கிழக்கின் அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுப்பு, இணக்கப்பாடு என்ற அடிப்படையில் இரு தரப்பும் ஓர் அணியாகவே செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படத் தவறும் பட்சத்தில், இவை அர்த்தமற்ற அரசியல் பிரிவுகளாகவும் தமிழர் விடுதலைப் போராட்ட சிதைப்புகளாகவுமே அமையும்.
எனவே, மாற்று அரசியலில் ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமை என்பவை வளர்க்கப்பட வேண்டும்.
சரியானதொரு விமர்சன அரசியலை முன்னெடுக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அந்தவகையில், மாற்று அணியை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர, கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.
அதற்குரிய பொதுச் சின்னம், யாப்பு, அதிகாரப்பகிர்வு, ஜனநாயகப் பன்முகத்தன்மை பேணப்பட வேண்டும்.
அவ்வாறு பேணப்படும் போது தான், தமிழர் அரசியலில் மாற்றுத் தலைமை அரசியலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலோ, ஒரு நேர்கோட்டுப் பாதையில், தமிழரது விடுதலைப் பயணம் நோக்கி, ஒரு நேரிய வழியில் பயணிக்க முடியும்.
அந்த பயணிப்பே நீதியானதும், நியாயமானதுமான ஒரு தீர்வைத் தமிழ்த் தேசிய இனத்துக்குப் பெற்றுக் கொடுக்கும்.
இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் தம் மாற்றுத் தலைமை அணியும் தயாரா என்பதே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கேள்வி.
ஏனெனில், தமிழினம் தொடர்ந்தும் இழப்புகளைச் சந்திக்கவும் ஏமாறவும் தயாரில்லை. தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள் எத்தனை அணியாகப் பிரிந்து செயற்பட்டாலும் முறையானதொரு கொள்கை, அதிகாரப் பகிர்வு அடிப்படையில் கட்சிகளிடையே புரிந்துணர்வுடன் ஒற்றுமைப்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படாவிட்டால், அத்தகைய சூழ்நிலையில் பாவப்பட்ட ஜென்மங்களாகக் கருதப்படக்கூடிய தமிழ் மக்கள், உப்புச்சப்பற்ற, முடிவற்ற, ஒற்றுமையற்ற இந்தப் பயணத்தைக் கைவிட்டு, மாற்று வழியை நாட முனைவதைத் தவிர வேறுவழியில்லை.
Average Rating