சஜித் பிரேமதாஸவின் தோல்வி: புதிய கோட்பாட்டுக்கான காத்திருப்பு !! (கட்டுரை)

Read Time:23 Minute, 33 Second

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றி குறித்தும், அது சார்ந்த செயற்பாடுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், முன்னேற்றமான இலங்கை என்றெல்லாம் பேச்சுகள், பரப்புரைகள், கருத்துகள் வந்த வண்ணமிருக்கின்றன. அதேநேரத்தில், தோல்வியடைந்த அணி பற்றியும் பல கருத்துகளும் அலசல்களும் இல்லாமலில்லை. அதுவே அதிகமானதாகவும் இருக்கின்றது. இப்போது வெற்றி, தோல்விகளைப் பற்றிப் பேச வேண்டிய காலமா, வெற்றி பெற்றவரைப் பற்றிப் பேசும் வேளையா என்பது வேறு கேள்வி. தோற்றவர் தோல்வியை ஏற்றுக் கொண்டாலும் விடுவார்கள்தான் இல்லை.

இவ்வேளையில், தேர்தல் வெற்றிகளைக் குறித்த ஒரு சமூகம் மாத்திரம், உரிமை கோரிக் கொண்டாடுவது, எதிர்கால சமூக ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானதாகும் என்றவாறான கருத்துகளும் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கின்ற கோட்டாபய ராஜபக்‌ஷ இனி வரப்போகும் காலத்தில், எவற்றைச் செய்தாக வேண்டும் என்ற வகையிலான ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் கூட, வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் அவர், கணக்கில் எடுப்பாரா என்பதற்குப் பதிலாக, இதுவும் ஓர் அரசியல் பித்தலாட்டமா என்றும் எண்ணத் தோன்றுகிறது. இது கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் கருத்துகளால்தான் ஏற்படுகிறது.

ஜனநாயக நாடொன்றில், தமக்கு விருப்பமான ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கான உரிமை, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ளது. நாட்டிலுள்ள எல்லா இன மக்களுமே, வெற்றியின் பக்கம் நின்றால், தோற்கின்றவருக்குரிய வாக்குகள் எங்கிருந்து கிடைக்கும்? அவருக்கு யார்தான் வாக்களிப்பது என்பதுதான் பொதுவான வினா.

அந்த வகையில்தான், 35 வேட்பாளர்கள் போட்டியிட்டும் குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் (30) தெரிவில் முன்னுரிமைக்கு உட்படுத்தப்பட்டாலும் பிரதான வேட்பாளர்கள் இருவரை மாத்திரம், வெற்றி தோல்விக்கு உரியவர்களாக மக்கள் தெரிவு செய்தனர்.

இரண்டாவது வாக்கெண்ணல், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, இம்முறை கையாளப்படப்போகிறது என்றுதான், எல்லோரும், எண்ணம் கொண்டிருந்தனர். அதற்கான தேவையை மக்கள் கொடுக்கவில்லை. இதிலிருந்து மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

எதிர்காலத்தில், இவ்வாறான தேவையற்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் தம் பாட்டுக்கு இருப்பது சிறப்பு என்ற ஒரு செய்தியைச் சொல்லியும் இருக்கின்றனர். இதுவும் ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் உரிமை குறித்த உறுதிப்படுத்தல்தான். இது போன்று, பல்வேறு வரலாறுகள் இத்தேர்தலின் மூலம் பதிவு செய்யப்பட்டன.

கோட்டாபய ராஜபக்‌ஷவைப் புகழ்பவர்களும் சஜித் பிரேமதாஸவைப் பிழையாகப் பேசுபவர்களும் அவர்கள் இருவரதும் பரம்பரைகளைச் சற்று பார்க்க வேண்டும்.

ராஜபக்‌ஷ பரம்பரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, பண்டாரநாயக்காவுடன் இணைந்து உருவாக்கியதில், ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியிருந்தது.

அதேவேளை, சஜித் பிரேமதாஸவின் தந்தை, இலங்கை நாட்டின் ஜனாதிபதியாகப் பதவிவகித்துத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்.

இவ்வாறு இரு வேட்பாளர்களையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது, குறைபாடு இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும், அந்தப் பார்வைகளையும் தாண்டி, சிங்கள மக்களின் மனோபாவத்தில் இருந்த பாதுகாப்பு சார் இடர்பாடுகள், புதிய ஜனாதிபதித் தெரிவில் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.

இலங்கையில், ஆயுத ரீதியான யுத்தம் நிறைவு பெற்று, பத்து வருடங்கள் கடந்த நிலையிலும், இப்போதும் கட்டியெழுப்பப்பட்டுவிடாத நல்லிணக்கம், எப்போது கட்டியெழுப்பப்படும் என்ற கேள்விக்குச் சில வேளைகளில், டெல்லிக்கான பயணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முடித்த பின்னர் பதில் கிடைக்கலாம்.

இந்நாட்டின் எதிர்காலத்துக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தான விடயங்கள் சார்ந்து, சிங்கள மக்கள் சற்றுச் சிந்திக்க வேண்டிய காலமாகவும் அது மாற்றம் பெறலாம்.

யுத்தம் நடைபெற்ற காலங்களில், சிங்கள மொழிப் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள், தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரைக் ‘கொட்டி’ (புலி) என்று எழுதுகிற வழக்கமே காணப்பட்டது. இது வெறும் ஊடகங்களின் மனோநிலையல்ல. அதில், மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றுதான், இப்போது எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இதனை விடவும் மோசமான எழுத்துகள், சிங்கள ஊடகங்களில் எழுதப்படுகிற நிலைமையும் இருக்கிறதுதான். அதைவிடவும், சமூக ஊடகங்களால் மோசமான பரப்புரைகள் ஏற்பட்டிருக்கிறது; இது ஒருபக்க நிலை.

ஆனால், பங்காளிகள் என்று கோட்டாபயவின் வெற்றிக்காகவும் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காகவும் பாடுபட்டவர்களின் நிலை, வேறுவிதமாக இருக்கிறது.

தோற்றவர் பக்கம் இருப்பவர்கள், கௌரவமாக அமைதி காக்கின்ற அதே வேளையில், வெற்றி பெற்றவர்களது பக்கத்தில் இருப்பவர்கள், தம்முடைய அதிகாரங்களை வெளிப்படுத்தவே, எண்ணம் கொள்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளுக்குக் கட்டியம் கூறுவதாக அரச அதிகாரிகள், அரசியல் ரீதியாக நசுக்கப்படவோ, பழிவாங்கப்படவோ ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம் என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்த கருத்தை, ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவர்கள், கிழக்கில் கோட்டாபயவின் வெற்றிக்காகப் பாடுபட்டு, 13 கட்சிகள் இணைந்து, 38ஆயிரம் வாக்குகளைப் பெற்றனர். ஆனால், ஒவ்வொரு கட்சியும் அந்தத் தொகை தங்களுடையது என்றுதான் சொல்கின்றன. இதில் விசேடம் என்னவென்றால், இதற்குள் தான், முஸ்லிம் மக்களுடைய வாக்குகளும் இருக்கின்றன என்பதுதான்.

தற்போதிருக்கின்ற வெற்றிக்கான கொண்டாட்டம் சார் கருத்தாடல்கள், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவின் போதும் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதனால், இதுவொன்றும் புதிதல்ல; என்றாலும், அப்பொழுது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்குச் ‘சொந்தக்காரர்கள்’ சிறுபான்மை மக்களே என்பதான கருத்துகள் நிலவியிருந்தன. ஆனால், அதற்கான தேவையை இல்லாமல் செய்யும் வண்ணம், இம்முறை தேர்தல் முடிவு இருந்தது. இது சிறுபான்மை மக்களின் கணக்கிடலையும் பொய்ப்பித்திருக்கிறது.

இது ஒருவிதமான அனுபவமே; அதற்காக, தோற்றவருக்கு வாக்களித்தவர்களை ஜனாதிபதி ஒதுக்கமுடியாது. அவர்களுடைய ஜனநாயகப் பங்குபற்றலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதையே அவருடைய முதலாவது உரையின் போதும் செய்திருக்கிறார்; அது தொடர வேண்டும்.

ஆனால், அவரிடமிருந்து அதற்கு எதிரான கருத்துகள் வரவில்லையானாலும், அவர் சார்ந்தவர்களின் கருத்துகள் தவறானதாகவே இருக்கின்றன. இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடாது.

இத்தேர்தலில் சுமார் 133 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் 69 இலட்சம் பேர் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் 64 இலட்சம் பேர், அவர் தவிர்ந்த சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களுக்கும் வாக்களித்துள்ளனர். இந்த 64 இலட்சம் மக்களில், சகல இன மதங்களையும் சேர்ந்த மக்களும் இருக்கிறார்கள். இதிலும் பெரும்பான்மையானவர்கள் பௌத்த மக்களே என்பது, வெளிப்படையான உண்மை.

சாதி, மத, இன விவகாரங்கள் முன்வைக்கப்பட்டாலும், தம்முடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தங்களுடைய மனக்கிடக்கைகளுக்கான பதிவாக, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள், தமது வாக்குகளை இன ரீதியாகவோ, மதவாத ரீதியாகவோ வாக்களித்து இருக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் பௌத்த, சிங்களத் தலைவர் ஒருவருக்கே அளித்திருந்தார்கள்.

தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இனரீதியாக இன்று வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ், முஸ்லிம் மக்கள் தனிமைப்படுத்தப்படுவதும் குற்றஞ்சாட்டப்படுவதும் சரியானதொன்றாக இருக்காது. அதனால்தான் இதன் தாற்பரியம் இப்போதும் தமிழ் பேசும் சமூகங்களால் பெறப்படுகின்றன.

‘இனவாதமற்ற, ஒன்றுபட்ட, சுபீட்சமான இலங்கை நாட்டில் அனைத்து இனங்களுடனும் ஒரு புரிந்துணர்வுடன் கூடிய சகஜவாழ்வை வாழ்வதற்கே, நாங்கள் விரும்புகிறோம்’ என்கிற செய்தியை, இம்முறை மாத்திரமல்ல, ஆரம்பக் காலம் முதலே சொல்லி வருகிறார்கள்.

ஆனால், இம்முறை மாத்திரம் தான், ஏதோ புதிதாக அவர்கள் வாக்களித்துள்ளார்கள் போன்றதொரு தோரணை, காண்பிக்கப்படுகின்றது. இது தவறல்ல! ஆனாலும், தமிழ் மக்கள், சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்தின் கீழ் இருக்க விருப்பம் கொள்ளவில்லை என்றால், வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்; ஆசை இருக்கிறது, அதற்காக இழக்கத்தான் ஒன்றுமில்லை. ‘மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை’ என்பது போன்று, இது மிகக் குறைந்த விடயமல்ல; நாட்டின் பிரஜை, உரிமை, எதிர்பார்ப்பு எனத் தொடரும் பட்டியலுக்குரியது.

நாட்டின் ஜனாதிபதிகளாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தனா, சந்திரிகா குமாரதுங்க, பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபயவுக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்துத்தான் இருக்கிறார்கள்; இதுதான் வரலாறு.

இந்த இடத்தில் தான், அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டின் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லுகின்ற ஒருவராக, அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் கருத்தில் கொண்டு, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டி எழுப்புபவராக நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக் கூடியவராக இருப்பதே சிறப்பானதாக இருக்கும்.

அந்தவகையில், வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், கடந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களுக்கு, மருந்திடுபவராக, முதலில் புதிய ஜனாதிபதி மாற்றம் பெறவேண்டும்.

தேர்தல் பிரசார காலத்தில், தமிழ் மக்களின் உரிமை தொடர்பான கோரிக்கைகளுக்கு எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் தேவையில்லை என்றவாறான கருத்துப்படக் கூறிக் கொண்டு ஜனாதிபதியானவர், இவற்றை எப்படிச் செய்ய முடியும் என்று சிந்தித்துப்பார்த்தால் சாத்தியப்படப்போவதில்லைத்தான். ஆனால், அதற்கான வழியை, அவரே திறந்து வைக்க முடியும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், கடந்த காலப் போராட்டத்தின் வலியை உணர்ந்து, தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்ட பௌத்த சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தங்களது உரிமைகளையும் தேவைகளையும் நிலைநாட்டுவதற்காக வாக்களித்து இருக்கின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், இதன்மூலம் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் தமிழர்கள் கொடுத்துள்ள செய்தி முக்கியமானது.

கடந்த 40 வருடத்துக்கு மேலாக வடக்கு, கிழக்கில் நடைபெற்ற ஆயுதரீதியான போராட்டம், சிறுபான்மைச் சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம்; அந்தப் போராட்டத்தில் 2009 தொடக்கம் 2014ஆம் காலப்பகுதிக்குள், வடக்கு, கிழக்கில் மனித உரிமைகள் மீறல்கள், அப்பாவிப் பொதுமக்களின் கொலைகள் என்பன நடைபெற்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மூன்று இனங்களுக்குமான ஜனாதிபதி; நான்கு மதத்துக்குமான ஜனாதிபதியாகச் செயற்படுவதன் மூலமே, எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மையின மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டால் ஒருமித்த நாடு சாத்தியமானதே.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமை சார் பிரச்சினைகளின் மூலமாக, இலங்கையில் உருவான மாகாண சபை முறைமை, பல்வேறு இடர்பாடுகள் கண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதனை ஏற்படுத்தவதற்கு உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தின் மேலான, 13 பிளஸ் தமிழர்களுக்குக் கிடைக்கும் என வாக்குறுதி வழங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அதனைச் செய்து முடிக்கவில்லை.

கடந்த அரசாங்களத்தில் அரசமைப்புச் சபையால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பூர்த்தியாக்கப்படவில்லை. இப்பொழுது, புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்கிறார். அவர் அடுத்த வாரத்தில் செய்யும் இந்தியப் பயணம் கொடுக்கப்போகும் பலன் இவற்றை மிஞ்சியதாக இருக்கப் போவதில்லை. இருந்தாலும், தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொடுப்பதற்கு வழியைத் திறக்க வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன, 2015இல் ஜனாதிபதியாவதற்கும் கடந்த அரசாங்கத்தின் உருவாக்கத்துக்கும் காரணமாக இருந்த சிங்கப்பூர் கோட்பாடுகள் போன்று, இம்முறை எதுவும் நடைபெறவில்லையாயினும், அதன் தொடர்ச்சி நிறைவேறவில்லை.

ஆனால், இப்போது புதிய கோட்பாடுகள்தான் செயற்படுத்தப்படவேண்டும்; அது இனிமேல்தான் உருவாக்கப்படும் என்று நம்புவோம்.

அது நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமேயொழிய சர்வதேச மேலாதிக்கத்தின் பாலானதாக இருந்து விடாமல் இருந்தால் நல்லது.

தமிழ், முஸ்லிம் மக்கள் சஜித்துக்கு ஆதரவளிக்க ஏற்கெனவே தீர்மானித்து விட்டார்கள்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில முன்னணி அரசியல்வாதிகள், மாற்று அணியுடன் இரகசியமான வகையில், ‘கள்ள உறவு’ வைத்துக் கொண்டதாக, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியிருந்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு, அமைச்சர் மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவளித்துச் செயற்பட்டது.
இந்தநிலையில், சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்கள் மற்றும், தேர்தலின் போது, நடந்த முக்கியமான சில விடயங்களை, மனோ கணேசன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவிலேயே மேலுள்ள குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.
இவ்வாறு, மாற்று அணியுடன் ‘கள்ள உறவு’ வைத்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களை, ‘வெறுக்கத்தக்க கீழ்த்தர மனித மிருகங்கள்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் ரவி கருணாநாயக்க போன்றோர், ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார பயணத்தில், இலகு பரப்பைத் (Soft Zone) தேடி, தமிழ் – முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்றார்கள்.

“இவர்கள் சொல்லி, தமிழ் – முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் நிலையில் இருக்கவில்லை. உண்மையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அறிவிப்பதற்கு முன்னரே, தமிழ், முஸ்லிம் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தயாராகி விட்டார்கள். இதுதான் உண்மை நிலைவரமாகும்.

“உங்களுக்கு உசிதமான, சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று, சிங்கள வாக்கை தேடுங்கள் என, பலமுறை அவர்களுக்குத் தகவல் அனுப்பினேன்; எவரும் கேட்கவில்லை. இந்த அரசியல்வாதிகளுக்குச் சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாது என்பதுதான், உண்மையான காரணம் என்றால், அவர்கள் இனி அரசியலில் இருக்கவே முடியாது” என்றும் மனோ கணேசன் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை, சஜித் தரப்பு மதிக்கவில்லை என்று பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குத் தனது பதிவில் பதிலளித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், “ரணிலை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, பெரிய விடயம் அல்ல; ரணிலுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது. ஆனால், நின்று, நிதானித்து, சிந்திக்கக் கூட நேரம் இல்லாத தேர்தல் பரபரப்பிலும், சிங்கள வாக்கைத் தேடிய ஓட்டத்திலும், ரணிலுக்கு இயற்கையான இடம் கிடைக்கவில்லை என்பதால், அவர் ஒதுக்கப்பட்டார் அல்லது ஒதுங்கினார்.

“ஐக்கிய தேசியக் கட்சி, தனது வேட்பாளரை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளதோடு, இதற்கு யார் பொறுப்பு? என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கான நிதி, சஜித் அணியிடம் இருக்கவில்லை என்றும், தேர்தலுக்கான நிதி இல்லாமலேயே, சஜித் தரப்பு களத்தில் குதித்து விட்டதாகவும், தனது ‘பேஸ்புக்’ பதிவில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோத்தாபயவின் வெற்றிக்கும் சஜித்தின் தோல்விக்கும் காரணமானது எது?? (வீடியோ)
Next post ஆசைக்கு அடுத்த நிலை!! (அவ்வப்போது கிளாமர்)